Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | பொது
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
தாமரை செந்தூர்பாண்டி
- அரவிந்த்|ஜூலை 2025|
Share:
தாமரை செந்தூர்பாண்டி அடிப்படையில் பள்ளி ஆசிரியர். (இயற்பெயர்: ஆர். செந்தூர்பாண்டி). இலக்கிய ஆர்வத்தால் எழுத்தாளராக வளர்ச்சி கண்டவர். திரைப்பட ஆர்வத்தால் இயக்குநராகப் பரிணமித்தவர். செப்டம்பர் 3, 1946 அன்று, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரியில், அ. ரத்தினசாமி - சிவகாமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இடையான்குடியில் பள்ளிக் கல்வி கற்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்வியியலில் பி.எட். பட்டம் பெற்றார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

தாமரை செந்தூர்பாண்டி எழுத்தார்வத்தால் பல நூல்களை வாசித்து இலக்கிய ஆர்வமுற்றார். முதல் சிறுகதை 'திருமண பரிசு', 1965-ல், மாலை முரசு இதழில் வெளியானது. தனது மனைவி பெயருடன் தன்னுடைய இயற்பெயரான செந்தூர்பாண்டி என்பதையும் இணைத்து 'தாமரை செந்தூர்பாண்டி' என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். குமுதம், ஆனந்தவிகடன், ராணி, தினத்தந்தி, தினமணி கதிர், மாலைமலர் உள்ளிட்ட பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின. மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகின. நாவல்களையும் எழுதிப் புகழ்பெற்றார். கிராமத்துப் பின்புலத்தில் பல படைப்புகளை எழுதினார். காட்சிச் சித்திரிப்புடன் கூடிய பல சிறுகதைகளை எழுதியவர்.



இவரது சிறுகதைகளில் சில பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகளில் சில சென்னை ராணி மேரி கல்லூரியிலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் பாடமாக வைக்கப்பட்டன. தனது படைப்புகளுக்காக சு. சமுத்திரம், பொன்னீலன், காவ்யா சண்முகசுந்தரம், நெல்லை கவிநேசன் உள்ளிட்ட பலரது பாராட்டுதல்களைப் பெற்றவர்.

தாமரை செந்தூர்பாண்டியின் கவனம் திரைப்படத்துறைப் பக்கம் சென்றது. இளவயதிலேயே பல நாடகங்களை எழுதி மேடையேற்றிய அனுபவம் அதற்கு உதவியது. இவரது 'குடிப்பிறப்பு', 'கடல்புரத்தில்' போன்ற படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாக வெளியாகின. இவரது 'வடலிவிளை செம்புலிங்கம்' நாவல், வசந்த் தொலைக்காட்சியில் தொடராக வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. வானொலியிலும் இவரது நாடகங்கள், உரைகள் ஒலிபரப்பாகின.

தாமரை செந்தூர்பாண்டி நூல்கள்
சிறுகதைத் தொகுப்பு: தாமரை செந்தூர்பாண்டி கதைகள் (இரண்டு பாகங்கள்); குடிப்பிறப்பு; இதோ ஒரு மனுஷி; ராசாத்தியும் ஒரு பக்கிரியும்; எண்ணங்கள் ஓய்வதில்லை; வண்ணங்கள் மாறுவதில்லை.
நாவல்கள்: வடலிவிளை செம்புலிங்கம் (வரலாற்று நாவல்); வீர வெங்கலராஜா (வரலாற்று நாவல்); அலைகள் ஓய்வதில்லை; நெஞ்சில் நிறைந்த முகம்; கண் வரைந்த ஓவியம்; பிரளயம்; நர்சம்மா; ஒளி நான் ஒளி நீ; பூங்கொடிதான் பூத்ததம்மா; சாமந்திப்பூவே சௌக்யமா; பனைமரத்துப் பூக்கள்; கிராம தேவதை; விட்டு விடுதலையாகி; அந்தரங்க வேள்வி; கனவுகளே கனவுகளே; ஒரு மெழுகுவர்த்தி உருகியபோது...; தாமரை செந்தூர்பாண்டி நாவல்கள்.
பயண நூல்கள்: எனது இமாலயப் பயணம்; எனது வடகிழக்குப் பயணம்; கதை இல்லாத கதை (சுயசரிதை)


தாமரை செந்தூர்பாண்டி எழுதிய 'அலைகள் ஓய்வதில்லை' என்ற புதினம், 'ஆனந்தராகம்' என்ற பெயரில் திரைப்படமானது. இவர் இயக்கிய 'ஏலேலங்கிளியே' என்ற படம் உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 'மகனே மகனே' என்ற படத்திற்கு இந்தியன் பனோரமா விருது கிடைத்தது. 'குருவம்மா' என்ற திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்கினார். இப்படம், 2002-ல் பெண்களைச் சிறப்பாகச் சித்திரிக்கும் திரைப்படத்திற்கான தமிழக அரசின் திரைப்பட விருதினைப் பெற்றது. 'தொடக்கப்பள்ளி' இவர் இயக்கிய மற்றொரு திரைப்படம்.



அறுநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியிருக்கும் தாமரை செந்தூர்பாண்டி, தமிழக அரசின் கலைமாமணி விருது உட்படப் பல்வேறு விருதுகள் பெற்றவர். ஆனந்தவிகடன் நடத்திய சிறுகதைப் போட்டி, தினமணி கதிர் சிறுகதைப் போட்டி, அமரர் சி.பா. ஆதித்தனார் நினைவு நாவல் போட்டி போன்றவற்றில் பரிசுகள் பெற்றவர். இவரது 'வடலிவிளை செம்புலிங்கம்' நாவல், சிறந்த நாவலுக்கான அமரர் சி.பா. ஆதித்தனார் விருது பெற்றது. இவரது சிறுகதை, இலக்கியச் சிந்தனை அமைப்பால் சிறந்த சிறுகதையாகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. வி.ஜி.பி. அறக்கட்டளை பரிசு, கலைச்செம்மல் விருது போன்ற பல பரிசுகளை இவர் பெற்றிருக்கிறார். எண்பது வயதை நெருங்கியும் இலக்கிய ஆர்வம் குன்றாமல் செயல்பட்டு வருகிறார்.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline