|  | 
											
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  சுமார் பத்தாண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் ரம்யா நாகேஸ்வரன் எடுத்த வேலையை ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்வதில் கெட்டிக்காரர். 1970ல் பிறந்த இவர் இந்தியாவில் தனது வழக்கறிஞர் பயிற்சியை முடித்த பிறகு அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர் என்று பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து பணியாற்றினார். குழந்தைகளுக்காக வேலையை விட்டுவிட்டு முழுநேர இல்லத்தரசியாகி விட்டார். 
 ரம்யாவைப் பொருத்தவரை இலக்கியம் என்பது மனிதனை மேலும் ஆழமானதும் உயரமானதுமான ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியது. மனித இயல்புகளையும், இசை போன்ற கலைகளையும் உலகின் அனைத்தையுமே முன்பைவிட நெருக்கமாகவும் தெளிவாகவும் அறிய இலக்கியம் பயன்பட வேண்டும். வாசகனை உற்சாகப்படுத்தியும் பண்படுத்தியும் அவனை மேம்பட்ட மனிதனாக்க வேண்டும். வாசித்த பிறகு, ஒரு விஷயத்தைக் குறித்த அவனின் பார்வை வேறொரு பரிமாணத்தை அடைதல் வேண்டும். சிறுகதைகளில், முகத்தில் அறைவது போல 'நீதி'யைச் சொல்வது கூடாது. இருப்பினும், வாசித்த பிறகு, ஒருவரைச் சில நொடிகளேனும் நிதானித்து யோசிக்கச் செய்தல் சிறப்பு என்பார்.
 
 
 எழுத்தின் மொழிக்கோ கருவுக்கோ படைப்பாளியைப் பொறுப்பாக்குதல் சரில்லையென்று என்று கருதும் இவர், சொல்ல நினைக்கும் விஷயத்தை உளப்பூர்வமாகச் சொல்லி வாசகனை வாசிப்பதில் முழுமையாக ஈடுபடச்செய்வது படைப்பாளிக்கு இருக்கும் முக்கியப் பொறுப்பு என்பார். தன் கருத்துக்கும் கொள்கைக்கும் புறம்பானவற்றை வாசகனில் ஒரு வெற்றுப் பரபரப்பை ஏற்படுத்தவென்றே படைப்பாளி எழுதுவது கூடாது என்றெண்ணும் இவர் இன்னொன்றையும் சொல்வார். நேரத்தையும் உழைப்பையும் செலவழிக்கிற ஒரு படைப்பாளி கண்டிப்பாக பகிரக் கூடியவற்றை மட்டுமே ஈடுபாட்டுடனும் ஆத்மார்த்தமாகவும் எழுதுதல் வேண்டும்.|  |  | ரம்யாவுக்கு எழுதுவதற்கான உந்துதலைக் கொடுத்தது - பெருநகரங்களின் மேல்த்தட்டு மத்திய வர்க்கத்தினரைக் குறித்து அதிகமும் எழுதி மறைந்த எழுத்தாளர் ஆதவனின் எழுத்துக்கள். |  |  | 
 ரம்யாவுக்குச் சிறுவயதாக இருந்தபோது அவரது தொந்தரவு தாங்காமல், அவரது தந்தை சென்னையில் புத்தகக் கடைகளுக்குக் கூட்டிக்கொண்டு போய் விடுவாராம். நூறு இருநூறு என்று அவர் கையில் பணத்தைக் கொடுத்து, உனக்குப் பிடித்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள் என்று சொல்வாராம். அப்படித்தான் இவருக்கு வாசிப்பிலும் அது தரும் மகிழ்ச்சியிலும் ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது.
 
 ரம்யாவுக்கு எழுதுவதற்கான உந்துதலைக் கொடுத்தது - பெருநகரங்களின் மேல்த்தட்டு மத்திய வர்க்கத்தினரைக் குறித்து அதிகமும் எழுதி மறைந்த எழுத்தாளர் ஆதவனின் எழுத்துக்கள். மிகச் சாதாரண மனிதர்களையும், விஷயங்களையும், நடவடிக்கைகளையும் குறித்து எழுதிட விரும்பும் ரம்யா, வாசகனை முன்பைவிட ஆழமாகச் சிந்திக்க வைக்கவே முயல்கிறார். பாத்திரங்களின் மனங்களில் ஊடுருவி, பாத்திரத்தின் சிந்தனைத் திசைகளையும் முறைமைகளையும் கற்பனை செய்து எழுத இவருக்குப் பிடிக்கும். தனக்குப் புரிந்ததும் தோன்றியதுமான சிறுதுளியைத் தன் வாசகனுடன் பகிர்ந்து கொள்ளும் விழைவு இவரிடம் உண்டு.
 
 சம்பவம் சார்ந்தும் காட்சிப்படுத்துதல் சார்ந்தும் எழுதுவதையும் விட உணர்வுகள் மற்றும் அவை சார்ந்த சிந்தனையோட்டங்களைக் கொண்டு சிறுகதை புனையும் முறையில் இவர் அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். இவரது திறன் முழுமையாக வெளிப்படாதிருக்கின்றது என்பதை இவர் அறிவாரா என்று தெரியவில்லை. தொடர்ந்து எழுத்து முயற்சிகளில் இறங்காமலிருக்கும் இவர் இடைவெளி இல்லாமல் எழுதினால் எழுத்தில் மேலும் மேம்படலாம்.
 | 
											
												|  | 
											
											
												| இதுவரை பல்வேறு தமிழக சிங்கப்பூர் இதழ்களில் பிரசுரமாகியுள்ள 22 சிறுகதைகளை எழுதியுள்ளார். அதில் ஐந்து கதைகள் பரிசு பெற்றவை. சிங்கப்பூரின் தேசியக் கலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்க்ஸ் இணைந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் 'தங்கமுனைப் பேனா விருது' போட்டியில் 'முகவரிப் புத்தகம்' எனும் சிறுகதைக்கு மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறார். கல்கி இதழ் வருடந்தோறும் நடத்தும் அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதைகள் பரிசுக்கும் பிரசுரத்துக்கும் தேர்வாகியுள்ளன. தவிர, ஆனந்த விகடன் ஏற்பாடு செய்து நடத்திய 'தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு' தொடர்பான சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் நடந்த சிறுகதைப் போட்டியில் பரிசும் பெற்றுள்ளார். 
 தாய்நாட்டை விட்டு வெளியே பல வருடங்களாக வாழ்ந்து வந்தாலும், தன் நாட்டு மக்களுக்குத் தம்மால் முடிந்த அளவில் உதவும் நல்லெண்ணம் கொண்டவர் ரம்யா. இதற்கு இவருக்கு இவரது கணவரது தொடர்ந்த ஊக்கமும் நல்லாதரவும் கூடக் காரணம். சிங்கப்பூரில், 'Focus India Forum' எனும் அமைப்பை நிறுவி ஐந்தாண்டுகளாக நடத்தும் ரம்யா இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நல்ல நோக்குள்ள பல நடவடிக்கைகளுக்கு வித்திட்டவர். நிதி திரட்டிப் பங்கீடு செய்வதுடன் நன்கொடையாளருக்கும் பயன்பெறுவோருக்குமான பாலமாகவும் இயங்கி வருகிறார். அத்துடன் முறையாகச் செயல்படும் நன்கொடை நிறுவனங்களைக் குறித்த விழிப்புணர்வையும் கொணர விரும்புகிறார். இதன் நீட்சியாக இந்தியாவிலிருந்து இவ்வாறான நிறுவனத் தலைவர்களைச் சிங்கப்பூருக்கு வரவழைத்து உள்ளூர் இந்தியர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதன் முதல் கட்டமாக 'Goonj'ன் நிறுவனர் திரு. அன்ஷு குப்தாவை 2008ம் ஆண்டு வரவழைத்திருந்தார்.
 
 தமிழகத்தில் பிறந்து வளர்ந்த ரம்யாவின் வாழ்க்கைத் துணைவர் முனைவர் அனந்த நாகேஸ்வரன் பன்னாட்டு வங்கி ஒன்றின் உயரதிகாரி. இவர் ஒரு பொருளாதார நிபுணர் மட்டுமின்றி 'Mint' போன்ற இதழ்களின் பத்தி எழுத்தாளரும் ஆவார். இவரை BBC போன்ற பல்வேறு ஊடகங்களின் நேர்காணல்களில் அடிக்கடி காணலாம். இவர்களுக்கு ஒன்பது வயதில் தன்யா என்ற மகளும் ஏழு வயதில் வ்யாஸ் என்ற மகனும் உள்ளனர்.
 
 என்னுடன் இணைந்து விகடன் பிரசுரத்தின் வெளியீடாக 'சிங்கப்பூர் வாங்க' என்ற நூலை எழுதியுள்ளார். அது தவிர, புது தில்லியைச் சேர்ந்த ரோலி புக்ஸ் பதிப்பகம் வெளியிட்ட 'Pregnancy Care Made Easy' என்ற ஆங்கில நூலையும் தன் தோழியுடன் சேர்ந்து எழுதியுள்ளார்.
 
 ஜெயந்தி சங்கர்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |