Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
குவான்ட்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-17)
- கதிரவன் எழில்மன்னன்|பிப்ரவரி 2026|
Share:
முன்கதை: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலுத்துகிறான். ஷாலினி ஸ்டான்போர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இதுவரை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்ட்டம் ஒளிக்கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென ஒரு பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் பெர்க்கலி, கலிஃபோர்னியாவில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைகின்றனர். மேரி குவான்ட்டம் கணினி எப்படி வேலை செய்கிறது, அதன் இடையூறுகள் என்னென்ன, அவற்றைத் தங்களுடைய தனிச்சிறப்பு நுட்பங்களால் எப்படி நிவர்த்தித்தனர் என்று விவரித்தாள். ஆனால் நுட்பங்களை நன்கு அறிந்த உள்நபர் ஒருவரின் உதவியால் நுட்ப வன்பொருட்கள் திருடப்பட்டன என்றாள். மேலாண்மைக் குழுவினரை விசாரித்து வரும் சூர்யா, குவான்ட்டம் கணினியின் குழப்பத்தை எப்படி நிவர்த்திக்கிறார் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள்!

★★★★★


குவான்ட்டம் கலையலால் (decoherence) உயர்வு போய் சிலமுறை குறைவாகிவிட வாய்ப்புள்ளதாக மேரி கூறிவிட்டு, தங்களின் நுட்பத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று மிக தனித்துவமுள்ள அபூர்வ பூமிக் கலவையால் க்யூபிட்களை உருவாக்குவதால் கலையல் குறைவாகிறது என்றும் கணினிக்குள்ளேயே வயலட் நிற லேஸர் கதிரை மிகக் குறைந்த சக்தியில் மிக அதிக வேகத்தில் தகவல் துளிகளை நகர்த்துவது மற்றொரு தனிச்சிறப்பு என்றும் கூறினார் மேரி. கடந்த இரண்டு வாரங்களாக அந்தத் தனிச்சிறப்பு நுட்பங்கள் ஏன் சரியாகப் பலனளிக்கவில்லை என்று நிறுவன நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டிருந்த போது முந்தைய தினம் திடீரெனத் திருட்டு நடந்து விட்டதால் ஷாலினிக்கு அவசர செய்தி அனுப்பியதாகவும் விளக்கினாள்.

சூர்யா, மேரியின் மேலாண்மைக் குழுவினரை ஒவ்வொருவராகச் சந்தித்து விசாரித்து வருகையில், அடுத்து கணினி மின்வலை நிபுணர் பீட்டரை விசாரிக்கிறார். பீட்டரின் பங்கு வர்த்தகக் கடனைப் பற்றி யூகித்த சூர்யா, பீட்டரின் சீற்றத்தைத் தணித்து, அவரது குவான்ட்டம் மின்வலை நுட்பச் சாதனையப் பற்றி விவரிக்குமாறு கேட்டுக் கொள்ளவே, பீட்டரும், அதைப்பற்றிப் பெருமிதத்துடன் விவரிக்கலானார்.

"முதலில் குவான்ட்டம் கணினிக்குச் சாதாரண கணினிகளின் மின்வலை ஏன் சரிப்படுவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். குவான்ட்டம் கணினி தகவல் துளிகளை சாதாரணக் கணினிகளைக் காட்டிலும் பன்மடங்கு அதிக வேகத்தில் பயன்படுத்திக் கணிக்கும்.

அதனால், மின்வலை அதிவேகத்தில் தகவல் துளிகளை சேமிப்பகத்திலிருந்து கணினியின் நினைவகத்துக்குக் கொண்டு வரவேண்டியுள்ளது. மேலும் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கும் அதே அதிவேகத்தில் செலுத்தத் தேவையுள்ளது. அதற்கு வேறு வகையான மின்வலை நுட்பம் தேவைப்படுகிறது."

கிரண் ஆவலுடன், "என் பங்கு வர்த்தகத் தொழிலில் கணினி நுட்ப நிறுவனங்களை நிறைய ஆராய்ச்சி செய்யறோம். அதுல மின்வலை நுட்பங்கள் மிக முக்கியம். நீங்க சொல்றது எனக்கு மிகவும் சுவாரஸ்யமான விஷயமாக இருக்கு! சொல்லுங்க!" என்றான்.

பீட்டரும் உற்சாகமாகத் தொடர்ந்தார். "சாதாரணமாக, கணினி மின்வலைகள் வேகமாக தகவல் செலுத்துவதற்காக மின்தகவல் துளிகளை, ஒளித்தகவல் துளிகளாக (photonic data) மாற்றி ஒளிக்கயிறுகளின் (Fiber optics) மூலம் அனுப்புகின்றன. அவற்றை மீண்டும் மின்துளிகளாக மாற்றித்தான் நினைவகத்தில் சேமிக்க முடியும். மேலும் ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு அனுப்பணும்னா முதல்ல அது ஒரு தகவல் பாக்கெட்டுகளை வெவ்வேறு கணினிகளுக்கு மாற்றி அனுப்பும் மையச் சாதனத்துக்கு முதலில் அனுப்பப் பட்டு, அங்கிருந்து, சென்றுசேர வேண்டிய கணினிக்கு அனுப்பப்பட்டு, அந்தக் கணினியில் மின் துளிகளாக மாற்றப்படும்."

கிரண் உற்சாகமானான். "ரைட், ரைட், அதுக்குத்தான் வேக வேகமான தகவல் மாற்றச் சாதனங்களை உருவாக்கறாங்களே? உங்க நுட்பம் எப்படி வித்தியாசம்?"

பீட்டர் முறுவலுடன் தொடர்ந்தார். "அந்த வேக அதிகரிப்பு செயற்கை அறிவு நுட்பத்துக்கு வேண்டுமானால் போதுமானதாக இருக்கலாம். குவான்ட்டம் கணினி வலைக்குப் போதாது. ஆனால் என் நுட்பத்தில், ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, ஒளித் துளிகளாகவே ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு அனுப்ப முடிகிறது. நடுவில் ஒரு தகவல் பாக்கெட் மாற்றச் சாதனமும் தேவையில்லை. இதனால் மொத்த தகவல் அனுப்பும் வேகம் பல மடங்காக அதிகரிக்கிறது!"

சூர்யா வினாவினார். "இதைப்பத்தி மேரி மேலோட்டமா குறிப்பிட்டாங்க. அப்போ இணையத்துல கொஞ்சம் தேடி ஆராய்ஞ்சு பார்த்தேன். கூகிள் நிறுவனம் இந்த மாதிரி நுட்பம் எதோ பயன்படுத்தி ஆராய்ச்சி செஞ்சதா படிச்சேனே? உங்க நுட்பத்தில் என்ன விசேட வித்தியாசம்?"

பீட்டர் பாராட்டினார். "வெரி குட், வெரி குட்! ஆனா அவங்க ஒரே ஒரு தகவல் மையத்தில சிறிய அளவுக்குத்தான் செஞ்சாங்க, அதுவும் வேகம் இந்த அளவுக்கு இல்லை. நான் அமைத்திருக்கும் நேர்க்கணினி மின்வலைகள் அதைப் போலப் பன்மடங்கு வேகத்தில் தகவல் அனுப்பும்."

கிரண் வாய் பிளந்தான். "வாவ்! பிரமாதம். இதை எந்த நிறுவனம் தயாரிக்குது?! அதை என் நிதி நிறுவனம் அணுகி பங்கு வர்த்தகம் செய்ய வேண்டும்!" என்றான்.

ஷாலினி அவனைக் கடிந்தாள். "ஹே கிரண்! பங்குமாச்சு வர்த்தகமுமாச்சு! பிளந்த வாயை மூடிக்கிட்டு வந்த வேலையைக் கவனி!"

பீட்டர் சிரித்தார். "கிரண் இது இன்னும் எந்த நிறுவனமும் தயாரிக்கலை. எங்க நிறுவனத்தின் ரகசிய நுட்பம் இது! பேட்டன்ட்டுக்கு விண்ணப்பித்திருக்கோம். அது கிடைச்சப்புறம் நாங்களே தயாரிக்கறதா, இல்லைன்னா எதாவது நிறுவனத்துக்கு நுட்ப லைசன்ஸ் கொடுத்து பெருமளவு தயாரிக்கறதான்னு யோசிப்போம்! ஆனா மத்த குவான்ட்டம் கணினி நிறுவனங்களுக்கு இது கிடைக்காம இருக்கற மாதிரி செஞ்சுக்கணும்!"

ஷாலினி குழப்பத்தோடு "ஆனா எதோ திருடு போயிருக்கே?! அப்போ இந்த நுட்பம் கிடைச்சிருக்கும் இல்லையா?"

பீட்டர் முறுவலித்தார்! "ஆனா நான் திருடு போகலையே?! இன்னும் இங்கதானே இருக்கேன். இந்த நுட்பத்தை வெறும் திருடிய பொருட்களிலிருந்து உருவாக்க முடியாது. நாங்க உருவாக்கிய மென்பொருள் நுட்பமும் அத்தியாவசியம்."

சூர்யா ஒரு அதிர்வேட்டு வீசினார். "ஓ! அப்படியா?! ஆனால் திருடிய நிறுவனம் உங்கள் உதவியால் பேட்டன்ட் தொல்லையில்லாமல் வேறு மின்வலை நுட்பம் உருவாக்கிக் கொள்ளலாம் அல்லவா?! உங்களுக்கும் பங்குக்கடன் தொல்லை தீருமே?!"

ஒரு கணம் வெடித்து விடுவது போன்று முகம் சிவந்து கொந்தளித்த பீட்டர் மிகக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு இகழ்ச்சியாகச் சிரித்தார்.

"ஹா! உங்க வேலையை நீங்க செய்யறீங்க! போகட்டும்! இதே வழியில இன்னும் போனீங்கன்னா என்னால மேலும் அடக்கிக்க முடியாது! எதாவது அசம்பாவிதம் நடக்கும்! கெட் அவுட்!"

மற்ற அனைவரும் பீட்டரின் அலுவலறையிலிருந்து வெளியேறி அடுத்த நேர்காணலுக்குச் சென்றனர்.

சூர்யா குவான்ட்டம் கணினியின் குழப்பத்தை எவ்வாறு மேற்கொண்டு துப்பறிகிறார் என்பதையும் இனிவரும் பகுதிகளில் காண்போம்!

(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline