|
|
|
 |
முன்கதை: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலுத்துகிறான். ஷாலினி ஸ்டான்போர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
இதுவரை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்ட்டம் ஒளிக் கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென ஒரு பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் பெர்க்கலி, கலிஃபோர்னியாவில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைகின்றனர். மேரி குவான்ட்டம் கணினி எப்படி வேலை செய்கிறது, அதன் இடையூறுகள் என்னென்ன, அவற்றை தங்களுடைய தனிச்சிறப்பு நுட்பங்களால் எப்படி நிவர்த்தித்தனர் என்பதை விவரித்தாள். ஆனால் நுட்பங்களை நன்கு அறிந்த உள்நபர் உதவியால் நுட்ப வன்பொருட்கள் திருடப்பட்டன என்றாள். மேலாண்மைக் குழுவினரை விசாரித்து வரும் சூர்யா, குவான்ட்டம் கணினியின் குழப்பத்தை எப்படி நிவர்த்திக்கிறார் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள்!
★★★★★
குவான்ட்டம் கலையலால் (decoherence) உயர்வு போய் சில முறை குறைவாகிவிட வாய்ப்புள்ளதாக மேரி கூறிவிட்டு, தங்களின் நுட்பத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று மிக தனித்துவமுள்ள அபூர்வ பூமிக் கலவையால் க்யூபிட்கள் உருவாக்குவதால் கலையல் குறைப்பு என்றும் கணினிக்குள்ளேயே வயலட் நிற லேஸர் கதிரை மிகக் குறைந்த சக்தியில் மிக அதிக அளவு வேகத்தில் தகவல் துளிகளை நகர்த்துவது மற்றொரு தனிச்சிறப்பு என்றும் கூறிய மேரி, கடந்த இரண்டு வாரங்களாக அந்தத் தனிச்சிறப்பு நுட்பங்கள் ஏன் சரியாகப் பலனளிக்கவில்லை என்று நிறுவன நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டிருந்த போது முந்தைய தினம் திடீரெனத் திருட்டு நடந்து விட்டதால் ஷாலினிக்கு அவசரச் செய்தி அனுப்பியதாகவும் விளக்கினாள்.
சூர்யா, மேரியின் மேலாண்மைக் குழுவினரை ஒவ்வொருவராகச் சந்தித்து விசாரித்து வருகையில் அடுத்து யாரைச் சந்திக்க வேண்டும் என்று மேரியை விசாரித்தார். மேரி, "அடுத்து பீட்டர் பார்க்கரைச் சந்திக்கலாம். அவர் கணினி மின்வலை நிபுணர். எங்கள் குவான்ட்டம் நுட்பத்தின் தனித்துவத்துக்கு அவரும் ஒரு முக்கியப் பங்களிப்பாளர்," என்று பதிலளித்துவிட்டு மூவரையும் பீட்டர் பார்க்கரின் அலுவலறைக்கு அழைத்துச் சென்றாள்.
மேரி, பீட்டரின் அலுவலறையின் மூடியிருந்த கதவை மெல்லத் தட்டினாள். பதிலே இல்லை!
குழப்பத்துடன், "ஹூம்! நாம் வருவதாகப் பீட்டருக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தேன். அலுவலறையில்தான் இருக்கிறேன், வரலாம் என்றுகூட பதிலனுப்பினாரே! சரி, இன்னொரு முறை சற்று பலமாகத் தட்டிப் பார்க்கலாம்" என்று கூறியவள் பலமாகத் தட்டவும், சில நொடிகளில், "ஹே! கதவு உடைஞ்சிடப் போகுது மெல்லத் தட்டறதுதானே? நான் ஒண்ணும் செவிடில்லை" என்று சீறிக்கொண்டே கதவைத் திறந்தார் பீட்டர்! முதலில் மெல்லத் தட்டியதைப் பற்றி மேரி விளக்கியவுடன் தணிந்து, "ஓ! ஸாரி நான் எதோ மும்முரமாக செய்து கொண்டிருந்ததால் கவனிக்கவில்லை போலிருக்கிறது! வாங்க உள்ளே" என்றார்.
அனைவரும் உள்ளே சென்றதும் மேரி நம் மூவரையும் பீட்டருக்கு அறிமுகம் செய்து, திருட்டைத் துப்பறிய வந்திருக்கிறார்கள் என்றும் விளக்கினாள். பீட்டர் மூவரிடமும் கைகுலுக்கிவிட்டு மேஜைக்குப் பின் சென்று தொப்பென்று அமர்ந்தார். மேஜைமேல் நிறையக் காகிதங்கள் பரப்பப் பட்டிருந்தன. அவற்றையெல்லாம் அவசரமாக மேஜையின் உள்ளறைக்குள் தள்ளி மூடிவிட்டு, தலையசைத்துக் கொண்டு பீட்டர், "ஓகே மேரி, இவங்களால சீக்கிரமா கண்டுபிடிக்க முடிஞ்சா சரி, நல்லதுதான். ஆனா அதுல எனக்கு அவ்வளவா நம்பிக்கை இல்லை!" என்றார்.
அவரது அவநம்பிக்கையைத் தகர்க்க சூர்யா ஓர் அதிவேட்டை வீசினார்! "எங்கமேல நம்பிக்கை இல்லன்னா பரவாயில்லை பீட்டர். உங்க பங்குச் சந்தை பெருங்கடனைத் கூடிய சீக்கிரமே தீர்த்துட முடியும்னு நான் நம்பறேன்!"
பீட்டரின் முகம் அதிர்ச்சியில் வெளுத்தது. ஒரு நிமிடம் பேச முடியாமல் திணறிய அவர், சுதாரித்துக் கொண்டு பொங்கி வந்த சீற்றத்துடன் மேரியைப் பார்த்து வெடித்தார், "என்ன இது மேரி?! திருட்டைப் பத்தி விசாரிக்க அழைச்சீங்கன்னு பாத்தா என் சொந்த நிதிநிலைமை விஷயத்தைக் குடாய வச்சீங்களா? இது நீசத்தனம்!"
மேரி இரண்டு கைகளையும் தூக்கிக் காட்டி, "சே சே! அப்படியெல்லாம் நான் செய்வேனா? சூர்யாவுக்கும் இப்பவரைக்கும் நீங்க யார்னுகூடத் தெரியாது! ஆனா அவர் மிகத் திறமையான யூகஸ்தர்! இப்போ எதையோ கவனிச்சுத்தான் உங்க விவரத்தைப் பற்றி யூகிச்சிருக்கணும்!"
சற்றே அமைதியான பீட்டர் இன்னும் விலகாத அவநம்பிக்கையுடன், "அப்படி என்ன சில நொடிகளில கவனிச்சு யூகிக்க முடியும்? விளக்குங்களேன், பார்க்கலாம்" என்று சவால் விடுத்தார்!
சூர்யா முறுவலுடன் பதிலளித்தார். "என் விளக்கத்தைக் கேட்டுட்டு, சே இவ்வளவுதானாங்கப் போறீங்க பீட்டர்! ரொம்ப சர்வ சாதாரணமான விஷயம். நாங்க உள்ள நுழையறச்சே உங்க மேஜை மேல பல காகிதங்களைப் பரப்பியிருந்தீங்க. எதையோ முக்கியமா செஞ்சுகிட்டிருந்ததால கதவு தட்டினது கவனிக்கலைன்னு சொன்னீங்க. ரொம்பக் கவலையா இருக்கறதை கவனிச்சேன். நான்தான் முதலில் உள்ள வந்து உங்களைக் கடந்து மேஜைகிட்ட நின்னு நோட்டம் விட்டேன். மேரி அறிமுகம் செஞ்சு எல்லாரிடமும் கை குலுக்கினப்புறந்தான் நீங்க மேஜைக்குப் பின்னால போய் எல்லா காகிதத்தையும் அவசரமா உள்ள தள்ளினீங்க. ஆனா அதுக்குள்ள நான் பல விவரங்களைக் கவனிச்சு கிரகிச்சுட்டேன்."
பீட்டர் இன்னும் சற்றுத் தணிந்தார். "ஓ! வாவ்! அந்த குறுகிய நேரத்துக்குள்ள அப்படி என்ன கிரகிக்க முடிஞ்சுது? அந்தக் காகிதங்களிலயும் பொதுவா என்னோட பங்கு வர்த்தக விவரங்கள் தானே இருந்தது? அத வச்சு எப்படி கடன் பத்தியெல்லாம்...?" சூர்யா விளக்கினார். "காகிதங்களில இருந்த வர்த்தக விவரங்களைப் பாத்ததுல பல தடவை அதிக நஷ்டங்கள் அடைஞ்சிருக்கறது தெரிஞ்சுது. மேலும் வங்கியிலிருந்து அதிக அளவு நிதியை அனுப்பியிருப்பதும் வெளிப்படையாவே இருந்தது. அதெல்லாத்தையும் உங்க கவலை, பரபரப்பு எல்லாம் சேர்த்துப் பாத்து கடனை அடைக்கறது பத்தி ஒரு யூகமா கணிச்சேன் அவ்வளவுதான்!"
பீட்டர் வாய்விட்டுச் சிரித்தார். "சரியாப் போச்சு! நீங்க ஏற்கனவே சொன்னபடி இவ்வளவுதானான்னு தோணுது. ஆனா உங்க துப்பறியும் திறமையையும் உணர முடியுது. எங்க பிரச்சைனையை நிவர்த்திப்பீங்கன்னு நம்பிக்கை துளிர் விடுது!"
அதைக் கேட்டு மேரியின் முகம் மலர்ந்தது!
சூர்யா கேட்டார், "பீட்டர், உங்க நிறுவனத்தின் குவான்ட்டம் நுட்பத்தின் திறனுக்கு உங்கள் மின்வலை நுட்பத்தில் பெரும் திருப்புமுனைக் கண்டுபிடிப்புக்கள் என்று மேரி சொன்னாங்க! அதைப் பற்றிக் கொஞ்சம் விவரித்தால் மேலும் விசாரிக்க உதவியாக இருக்கும்!"
பீட்டரின் முகம் மலர்ந்து பெருமிதத்தால் பிரகாசமடைந்தது.
அவர் தன் மின்வலை நுட்ப சாதனையைப் பற்றி விவரிக்கலானார்.
பீட்டர் விவரித்த சாதனைகள் என்ன, சூர்யா குவான்ட்டம் கணினியின் குழப்பத்தை எவ்வாறு மேற்கொண்டு துப்பறிகிறார் என்பதையும் இனிவரும் பகுதிகளில் காண்போம்!
(தொடரும்) |
|
|
| கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|
|
|
|