| 
                                            
												|  |  
												| 
                                                        
	                                                        | பேரா. அ. சீனிவாசராகவன் |    |  
	                                                        | - பா.சு. ரமணன், கவிமாமணி இலந்தை ராமசாமி ![]() | ![]() மே 2010 ![]() | ![]() |  |  
	                                                        |  |  |  
	|  |  
	|  |  
												| "அ. சீனிவாசராகவன், ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். சிறந்த கவிஞர், கட்டுரையாளர். அவர் பேசுவதை கேட்டுக் கொண்டேஇருக்கலாம். எம்.எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரியைக் கேட்பது போல அ.சீ.ரா. பேசுவது அவ்வளவு இனிமையாக இருக்கும். அவர் ஞானபீட விருது பெறத் தகுதியானவர். அவருக்கு அதைக் கொடுத்திருக்க வேண்டும்" சொன்னவர் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் மட்டுமல்ல; கி.வா. ஜகந்நாதன், கல்கி, ராஜாஜி, புதுமைப்பித்தன், ரா.பி. சேதுப்பிள்ளை, டி.கே.சி. போன்ற அறிஞர் பெருமக்களால் பெரிதும் போற்றப்ப்பட்டவர் 'அசீரா' என அன்போடு அழைக்கப்பட்ட பேராசிரியர் அ. சீனிவாசராகவன். 
 
  ஒலி வடிவத்தில் கேட்க
 - Audio Readings by Saraswathi Thiagarajan
 
   
 தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகே உள்ள கண்டியூரில் 1905ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று, அண்ணாதுரை ஐயங்காருக்கும், ரங்கநாயகி அம்மாளுக்கும் மகவாகத் தோன்றினார் சீனிவாச ராகவன். தந்தையார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர். சூழ்நிலை கருதி நாகப்பட்டினத்திற்குக் குடும்பம் பெயர்ந்தது. அசீராவின் பள்ளிப்படிப்பு நாகப்பட்டினத்தில் கழிந்தது. தந்தை பாசுரங்களிலும், வில்லி பாரதத்திலும் தேர்ந்த பயிற்சியுடையவர். தந்தையிடமிருந்து அவற்றைக் கற்ற அசீரா, இளவதிலேயே பாரதம் முழுமையையும் ஒப்பிக்கும் அளவுக்கு நினைவாற்றல் மிக்குத் திகழ்ந்தார். பள்ளியிலும் முதல் மாணவர். பள்ளிப்பாடங்கள் மட்டுமல்லாது நூலகத்தில் இருந்த பல தமிழ், ஆங்கில, உலக இலக்கிய நூல்களையும் ஆர்வத்துடன் படித்து வரலானார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து இரசாயனத்தில் பட்டம் பெற்றார்.
 
 
 ஆங்கில மொழியில் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்த அசீராவின் புலமையால் கவரப்பட்ட பேராசிரியர் ஃபாதர் லீ, அசீரா ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற உதவினார். படிப்பை முடித்ததும் அங்கேயே ஆங்கில ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் அசீரா. பாடப்புத்தகங்களைத் திறக்காமலேயே பாடங்களை மிகவும் சுவாரஸ்யமாக நடத்தி மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். இந்நிலையில் ராஜம் என்பாருடன் அசீராவுக்குத் திருமணம் நிகழ்ந்தது.|  |  | தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே அதிபுலமை பெற்ற அசீரா, நல்ல பல மாணவர்களை உருவாக்கியதுடன், அவர்கள் வாழ்க்கை வளத்திற்கு ஆதாரமாகவும், உந்துசக்தியாகவும் திகழ்ந்தார். |  |  | 
 வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தால் உயர்வுக்கும், வளத்திற்கும் வழிவகுக்கும் என்று கருதிய பேராசிரியர் லீ, அசீராவை பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியில் ஆங்கில ஆசிரியர் பணிக்கு அனுப்பி வைத்தார். அப்போது அசீராவுக்கு 26 வயது. தனது தனித்திறமையால் மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்ற அசீரா, பிற வகுப்பு மாணவர்களும் வந்து பாடம் கேட்கும் அளவுக்குத் திறமையாகப் பாடங்களை நடத்தி அவர்களது உள்ளத்தைக் கவர்ந்தார். பிற்காலத்தே நீதியரசராக விளங்கிய எஸ். மஹராஜன் அக்கல்லூரியில் அசீராவிடம் பயின்றவரே. பிரபல எழுத்தாளரும், கல்கியின் வரலாற்றை 'பொன்னியின் புதல்வர்' என்ற பெயரில் நூலாக்கி வெளியிட்டவருமான 'சுந்தா'வும் அசீராவிடம் பயின்ற மாணவரே! அவர்கள் மட்டுமல்ல; துறைவன், மீ.ப. சோமு, சிதம்பர ரகுநாதன், ஆர். திருமலை போன்றோரும் அவரால் பட்டை தீட்டப் பெற்றவர்களே.
 
 அப்போது, நெல்லை இந்துக் கல்லூரியில் பணியாற்றும்படி அசீராவுக்கு அழைப்பு வந்தது. அவர் பேராசிரியராக அக்கல்லூரியில் சேர்ந்தார். உடன் பணியாற்றிய பேராசிரியர் முத்துசிவன், தலைமைப் பேராசிரியர், முதல்வர் ஞானமுத்து ஆகியோருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். மாணவர்களுக்கு ஆங்கிலம் போதித்தது மட்டுமில்லாமல் அவர்களது தமிழார்வத்தையும் தூண்டினார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே அதிபுலமை பெற்ற அசீரா, நல்ல பல மாணவர்களை உருவாக்கியதுடன், அவர்கள் வாழ்க்கை வளத்திற்கு ஆதாரமாகவும், உந்துசக்தியாகவும் திகழ்ந்தார்.
 
 திடீரென மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அசீரா சென்னைக்குச் சென்று வசிக்க நேர்ந்தது. சென்னையில் விவேகானந்தர் கல்லூரியில் சிறிதுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது, 'சிந்தனை' என்ற தமிழ் மாத இதழை வெளியிட்டார். சிந்தனை மூலம் அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டு அளவிடற்கரியது. அதில் அரசியல், விஞ்ஞானம், இலக்கியம் என்று அனைத்து வகையான கட்டுரைகளும் வெளிவந்தன. 1947ல் தொடங்கி 49 வரை வெளிவந்த சிந்தனை தூரன், வையாபுரிப் பிள்ளை, ராஜாஜி, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கரிச்சான்குஞ்சு, சிட்டி, பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், தி. ஜானகிராமன், ரா.ஸ்ரீ.தேசிகன், பி.ஸ்ரீ போன்ற பல அறிஞர்களது காத்திரமான பல கட்டுரைகளைத் தாங்கி வந்தது. அசீராவே வகுளாபரணன், நாணல், இலக்கிய மதுகரம் போன்ற பல புனைபெயர்களைத் தாங்கி சிந்தனைச் சிறப்புமிக்க பல கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதினார். 'நாணல்' என்ற புனைபெயரில் இவர் இயற்றிய கவிதைகள் கவிநயமும், சொற்சிறப்பும் வாய்ந்தவை.
 
 1951-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் வ.உ.சி. கல்லூரி புதிதாகத் தொடங்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவராக இருந்த ஏ.பி.சி. வீரபாகு, அக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்கும்படி அசீராவைக் கேட்டுக் கொண்டார். அவ்வழைப்பை ஏற்று முதல்வர் பணியில் சேர்ந்தார் அசீரா. கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் அங்கு அவர் பணியாற்றிய காலம் இலக்கிய உலகுக்கும், மாணவர்களுக்கும் பொற்காலமாக அமைந்தது. ஏழை மாணவர் சிலரைத் தனது இல்லத்திலேயே தங்க வைத்துப் படிக்க வைத்ததுடன், ஒரு தந்தைபோல் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு வாழ்க்கைக் கல்வியுடன், இலக்கியக் கல்வியையும் போதித்தார்.
 
 "அசீரா ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதச் சொல்வார். முதலடி கொடுத்து, இவ்வாறு முடிய வேண்டும் என்று குறிப்புக் கொடுத்து எழுதச் சொல்வார். தினந்தோறும் இரவு உணவின் போது கவிதை, இலக்கிய உரையாடல் நடக்கும். அவர் கொடுத்த பயிற்சிகளால் எனது இலக்கிய ஆற்றல் மேம்பட்டது. வறுமையில் வாடும் மாணவர்கள் விடுதிக்கோ, கல்லூரிக்கோ பணம் கட்ட முடியவில்லை என்றால், அவர்களுக்குத் தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து அந்தச் சம்பளத்தொகையைச் செலுத்தி, அவர்களது கல்வி தடைப்படாமல் பார்த்துக் கொள்வார். மாணவர்களை ஊக்குவிப்பதில் அவரைப் போன்ற திறன் கொண்டவர்களைப் பார்ப்பது மிகவும் அரிது" என்கிறார் அவரது இல்லத்தில் தங்கிப் படித்தவரும், ஆசிராவின் முக்கியமான மாணவர்களில் ஒருவருமான எழுத்தாளர் 'கவிமாமணி' இலந்தை சு. ராமசாமி.
 |  
												|  |  
												| நெல்லை சங்கீத சபா நிறுவப்பட மிக முக்கிய காரணமாக அமைந்தவர் அசீரா. பாரதியாரின் பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று பாரதி விடுதலைக் கழகத்தார் அப்போதைய முதல்வர் ஓமந்தூர் ரெட்டியாரைச் சந்தித்து விண்ணப்பம் அளித்தனர். பாரதி குடும்பத்தாரை நன்கறிந்த பேராசிரியர் அசீரா, அந்த முயற்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தார்.|  |  | டெல்லியில் நடைபெற்ற மொழிகளுக்கான மாநாட்டில், தமிழ் மொழியின் சார்பாகக் கலந்து கொண்டு ஹிந்தி ஆர்வலர்களே மெச்சும் வண்ணம் பேசி, நேருவை வியப்படைய வைத்ததுடன் அவரது பாராட்டையும் பெற்றார். |  |  | 
 அசீரா சிறந்த பேச்சாளர். சொற்பொழிவாளர். நாவன்மையால் சபையோரை மெய்மறக்கச் செய்யும் வல்லமை மிக்கவர். "அவருடைய பேச்சு ஒரு காவியம். அவருடைய உரையாடலோ அனுபவக் களஞ்சியம்" என்கிறார் வாகீச கலாநிதி கி.வா.ஜ. பெ.நா.அப்புசாமி, பாஸ்கரத் தொண்டைமான், ரசிகமணி டி.கே.சிதம்பரநாதன், சீனிவாச ஐயங்கார், கம்பனடிப்பொடி சா. கணேசன், தி.ஜ. ரங்கநாதன், வ.ரா உட்பட பல இலக்கிய ஜாம்பவான்கள் அசீராவின் நண்பர்களாக இருந்தனர்.
 
 அசீரா, இலக்கியத்தில் மட்டும்மல்ல; இசையிலும் தேர்ந்தவராக இருந்தார். நன்கு பாடக் கூடிய அவர், வயலின் வாசிப்பார். தனது தங்கை கமலாவுக்குத் தானே இசை ஆசிரியராகத் திகழ்ந்தார், நெல்லையிலும், தூத்துக்குடியிலும் பல இசை விழாக்களை நடத்தினார். முத்துசாமி தீட்சிதர் இசையின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததுடன், தமிழிசையின் மீதும் பாரதி கவிதைகள் மீதும் தீராக் காதல் கொண்டிருந்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களில் செனட் உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும் பணியாற்றிய அசீரா, முதன்முதலாகத் தமிழ்நாட்டில் மேனாட்டு ரீதியில், அதேசமயம் தமிழின் தனித்தன்மையோடு கூடிய திறனாய்வுக் கட்டுரைகளை எழுதிய பெருமைக்குரியவர். இலக்கிய விமர்சனத்தைப் பொறுத்தவரை தன் கொள்கைகளை எதற்கும் விட்டுக் கொடுக்காதவராக, தன் கருத்தில் பின்வாங்காத மன உறுதி கொண்டவராக விளங்கினார்.
 
 நாடகத்திலும் அசீராவுக்கு ஈடுபாடு அதிகம். பல மொழிகளிலிருந்து தரமான கவிதை, நாடகம், சிறுகதைகளைத் தமிழில் பெயர்த்திருக்கிறார். 'கவியரசர் கண்ட கவிதை' என்ற தலைப்பிலான தாகூரின் கவிதை மொழிபெயர்ப்பு நூல் அதில் முக்கியமானது. காளிதாசனின் மேக சந்தேசம், குலசேகரரின் முகுந்தமாலை, ஆதிசங்கரரின் மநீஷா பஞ்சகம், பஜகோவிந்தம், உமர்கய்யாம் பாடல்கள், ராபர்ட் பிரௌனிங், டென்னிசன், வால்ட் விட்மன், ஃப்ராஸ்ட் போன்றோரது படைப்புகளை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். இவரது 'வெள்ளைப் பறவை' என்னும் கவிதை நூலுக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது. உதயகன்னி (நாடகம்), இலக்கிய மலர்கள், காவிய அரங்கில், குருதேவரின் குரல், அவன் அமரன், கௌதமி, மேல்காற்று, திருப்பாவை, திருவெம்பாவை, நம்மாழ்வார், பாரதியின் குரல், கம்பனிலிருந்து சில இதழ்கள் போன்ற இவரது படைப்புகள் அக்காலத்தில் பெரும் வரவேற்புப் பெற்றன. 'திரிவேணி' என்ற ஆங்கில மாத இதழையும் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்திய அசீரா, நம்மாழ்வார், பாரதி, கம்பன், சங்கப்பாடல்கள் எனப் பலவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.
 
 டிகேசி நடத்திய இலக்கிய வட்டத்தொட்டியில் பங்கு கொண்டார். நெல்லையில் நடந்த பல்வேறு இலக்கிய விழாக்களிலும், சொற்பொழிவுக் கருத்தரங்குகளிலும் தவறாது கலந்து கொண்ட அசீரா, கம்பன், பாரதி, ஆழ்வார்கள், சைவ இலக்கியங்களில் மட்டும் அல்லாமல், திருக்குறள், அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற பல தமிழ் இலக்கியங்களிலும் தேர்ச்சி கொண்டிருந்தார். இவரது பல்துறைத் திறமையைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதினம், 'செந்தமிழ்ச் செம்மல்' என்னும் பட்டத்தை அளித்து கௌரவப்படுத்தியது.
 
 கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு, இந்தோனேஷியாவில் நடைபெற்ற பன்னாட்டு ராமாயண மாநாடு போன்றவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியிருக்கும் அசீரா, ஆழ்வார் திருநகரியில் நடைபெற்ற மாறன் செந்தமிழ் மாநாட்டில் பிற மதத் தலைவர்களைப் பங்குபெற அழைத்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினார். இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி, 1967-ஆம் ஆண்டு போப்பாண்டவர் இவரை கௌரவித்தது ஒவ்வொரு தமிழரும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும். கருமுத்து தியாகராஜன் செட்டியார் தலைமையில் நடந்த மதுரை தொழில் வளர்ச்சிக் கூட்டத்தில் தமிழ் பயிற்றுமொழி அவசியம் தேவையென்று குரல் கொடுத்தவர்களுள் முதன்மையானவர் அசீரா. டெல்லியில் நடைபெற்ற மொழிகளுக்கான மாநாட்டில், தமிழ் மொழியின் சார்பாகக் கலந்து கொண்டு ஹிந்தி ஆர்வலர்களே மெச்சும் வண்ணம் பேசி, நேருவை வியப்படைய வைத்ததுடன் அவரது பாராட்டையும் பெற்றார்.
 
 மனைவியைப் பிரிந்த துயரம், உடல் அடிக்கடி நலிவுற்றது போன்ற காரணங்களால், தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் 1975-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி அசீரா காலமானார். 2005-ஆம் ஆண்டில் நடந்த இவருடைய நூற்றாண்டு விழாவின் போது இவருடைய படைப்புகள் அனைத்தும் முழுமையாக அல்லயன்ஸ் நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு ஏழு தொகுதிகளாக வெளியிடப் பெற்றன.
 
 பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர்,  சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர், இசை ஆர்வலர் என பன்முகங்கள் கொண்டு விளங்கிய அசீரா, தமிழ் கலை, இலக்கிய முன்னோடிகளில் ஒருவராகத் தனிக் கவனம் பெறுகிறார்.
 
 பா.சு. ரமணன்
 படம் உதவி: கவிமாமணி இலந்தை ராமசாமி
 |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  |