Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப்பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
மஹராஜ் நீம் கரோலி பாபா
- பா.சு. ரமணன்|அக்டோபர் 2026|
Share:
டாக்டர் ரிச்சர்ட் ஆல்பர்ட், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர், பேராசிரியர். இவற்றோடு உளவியல் கற்பித்தல், சிகிச்சை, உளப்பகுப்பாய்வு ஆகியவற்றிலும் ஈடுபட்டிருந்தார். அத்தகைய சிகிச்சைகளின் போது ஒருமுறை, ஆய்வுக்காகத் தனது நண்பர்களுடன் இணைந்து சைலோசைபின் என்ற மனமயக்க மருந்துகளில் ஒன்றைப் பயன்படுத்தினார். அது அவருள் தாக்கத்தை ஏற்படுத்தியது. உளவியல் குறித்த சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. மாயத்தோற்றங்கள் பற்றிய அனுபவங்களைப் பெற்றார். அடுத்து எல்.எஸ்.டி. எனப்படும் போதை மருந்தை உட்கொண்டார். அது அவரது வாழ்க்கையிலும், சிந்தனையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தின. அம்மருந்தை உட்கொண்டது முதல் புலன்களின் அறிதல் திறன் மேம்பட்டதாகக் கருதினார். சிந்தனை மற்றும் செயல்முறையையும் அது வேகப்படுத்தியது. கூடவே வேறு ஒரு உலகத்தில் இருப்பதைப் போன்ற தோற்றத்தை அது உருவாக்கியது. இவை அவரது சிகிச்சைகளுக்கும் ஆய்வுகளுக்கும் உதவின.

ரிச்சர்ட் ஆல்பர்ட், இவ்வகை மருந்துகளைப் பயன்படுத்தியது பல்கலைக்கழகத்திற்குத் தெரிய வந்தது. அவர் ஹார்வர்ட் பல்கலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் தனது சிகிச்சை முறைகளையும் ஆய்வுகளையும் தொடர்ந்தார். எல்.எஸ்.டி.யைப் பலருக்கு அளித்து அதன் விளைவுகளை, அதனால் ஏற்படும் தாக்கங்களை, பரிசோதித்தார். உளவியல் பேராசிரியர் மற்றும் ஆலோசகராக அது அவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அவரது நண்பர்கள் சிலர் இந்தியாவுக்குச் சென்று வந்தனர். ரிச்சர்டும் இந்தியா செல்ல விரும்பினார். ஆனால், அவரது மனதில் வேறு வகை எண்ணங்கள் இருந்தன. "இந்திய ஞானிகளையும், மகான்களையும் சந்திக்க வேண்டும். அவர்களுக்கு எல்.எஸ்.டி. கொடுக்க வேண்டும். அவர்கள் அடையும் மாற்றங்களை அவதானிக்க வேண்டும். அவர்களது அனுபவங்களைப் பதிவுசெய்ய வேண்டும். அதன்மூலம் கீழைத் தேசங்களில், புலன் கடந்தவர்களாக அறியப்படுபவர்களிடம் எல்.எஸ்.டி. என்ன வகை மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை அறியலாம்" என்று எண்ணினார்.

அவர் இந்தியாவுக்குப் புறப்பட்டார். அமெரிக்காவிலிருந்து ஈரானுக்கு சென்றார். அங்கிருந்து நேபாளத்திற்குச் சென்றார். இறுதியாக ஒரு நண்பருடன் காரில் இந்தியா வந்தடைந்தார். அவரது முதல் மூன்று மாதங்கள் ஆப்கானிஸ்தானில் கழிந்தன. தலாய் லாமாவைச் சந்தித்தார். காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக்குச் சென்றார். காத்மாண்டு மற்றும் காசிக்குப் பயணப்பட்டார்.

வட இந்தியாவின் பல பகுதிகளில் பயணம் செய்தார். ஆய்வின் நிமித்தம் இந்தியாவில் பலருக்கு எல்.எஸ்.டி. கொடுத்தார். அவர்களிடம் பெற்ற பதில்கள் அமெரிக்காவில் அவருக்குக் கிடைத்த பதில்களைப் போலவே இருந்தன. பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.

இந்நிலையில் அவர் நேபாளத்தில் பகவான் தாஸ் என்பவரைச் சந்தித்தார். பகவான் தாஸ் ஓர் அமெரிக்கர். ஞானத் தேடலின் விளைவாக இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்று வந்தார். அவர்மூலம் இந்துத் தத்துவங்கள் மீது ரிச்சர்ட் ஆல்பர்ட்டுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதே சமயம் பௌத்தமும் அவரை ஈர்த்தது.

இந்தியாவில் வசித்து வந்த காலத்தில் ரிச்சர்டுக்கு ஒருநாள் இரவு ஒரு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது. அவர் தாயார் காலமாகி ஒன்பது மாதங்கள் ஆகி இருந்தன. மண்ணீரல் நோயால் பாதிக்கப்பட்டு அவர் அமெரிக்காவில் காலமாகியிருந்தார். ரிச்சர்டு இரவில் சிறுநீர் கழிக்க வெளியில் வந்தார். எங்கும் கடும் இருள் சூழ்ந்திருந்தது. வானத்தையே உற்றுப் பார்த்தார். கும்மிருட்டாக இருந்ததால் நட்சத்திரங்கள் மிக அருகில் இருப்பது போல் தோன்றின. அப்போது அவர் திடீரென்று தன் அன்னையின் பிரசன்னத்தை உணர்ந்தார். அவர் அங்கே அருகில் இருப்பது போலவும், தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போலுமான உணர்வு தோன்றியது. அது சிறிது நேரத்திற்கு நீடித்தது. ரிச்சர்டிற்கு எதுவும் புரியவில்லை. அவர் தனது விடுதிக்குள் சென்று மீண்டும் படுக்கையில் விழுந்தார். அதை அவர் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.

பகவான் தாஸ், தனது தேடலின் காரணமாக பல மகான்களை, ஞானிகளைச் சந்தித்தவர். அப்படிச் சந்தித்த பல ஞானிகளுள் முக்கியமானவராகவும், மறக்க முடியாதவராகவும், தனது குருவாகவும் கருதிய ஒரு ஞானியைப் பற்றி மறுநாள் காலை ரிச்சர்டிடம் விவரித்தார். ரிச்சர்ட் அதனை முக்கியமாகக் கருதவில்லை. பகவான் தாஸ் அன்று ரிச்சர்டை அந்த ஞானியின் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார். ரிச்சர்டின் விசா பிரச்சனை அந்த ஞானியின் ஆசியால் தீர்க்கப்பட்ட வேண்டும் என்பது பகவான் தாஸின் நோக்கமாக இருந்தது. இருவரும் அவரைப் பார்க்கப் புறப்பட்டனர்.



அது 1967ஆம் ஆண்டு. அந்தச் சந்திப்பைத் தன் வாழ்க்கை வரலாற்றில் பின் வருமாறு விவரித்திருக்கிறார் ஆல்பர்ட் ரிச்சர்ட்:

"ஒரு நண்பரிடம் இரவல் வாங்கிய லேண்ட் ரோவரில் நாங்கள் குரு தங்கியிருந்த மலைப்பகுதிக்குச் சென்றோம். நான் அதிகப்படியான கஞ்சா புகைத்ததாலும், இந்தியாவில் மிக நீண்ட காலமாக இருந்து வந்ததாலும், ஒரு குருவைச் சந்திக்கப் பெரிதாக ஆர்வம் இல்லாததாலும் ஒரு மோசமான மனநிலையில் இருந்தேன். குரு குன்றின்மீது இருக்கிறார் என்பதை அறிந்து அங்கே சென்றோம். என் நண்பர் பகவான் தாஸ் வேகமாக அங்கே ஓடினார். நான் அவரை மெல்லப் பின் தொடர்ந்தேன். எங்களைப் பின்தொடர்ந்து பலரும் அங்கு வந்து கொண்டிருந்தனர். என் நண்பர் குருவின் கால்களில் வீழ்ந்து வணங்கினார். குருவைக் காண முடிந்ததில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக எனக்குத் தோன்றியது.

குரு ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்திருந்தார். ஒரு சால்வை போர்த்தியிருந்தார். அவரைச் சுற்றி ஏழெட்டுப் பேர் அமர்ந்திருந்தனர். குரு என்னைப் பார்த்தார். 'இங்கே வா. உட்கார்' என்றார். நான் அவரைப் பார்த்தவாறு அமர்ந்தேன், அவர் என்னை உற்றுப் பார்த்துச் சில கேள்விகளைக் கேட்டார். அது பயணம் குறித்ததாகவும், எனது கொடைத்தன்மை, அமெரிக்காவில் எனக்குக் கிடைத்த வருவாய் ஆகியவை குறித்ததாகவும் இருந்தது. பின் குரு என்னிடம், "நேற்று இரவு நீ நட்சத்திரங்களுக்குக் கீழே இருந்தாய்" என்றார்.

நான் ஆச்சரியப்பட்டேன்.

"நீ உன் அம்மாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாய்."

"ஆம்."

"அவள் கடந்த வருடம் இறந்துவிட்டாள்."

"ஆம்"

"இறப்பதற்கு முன்பு அவள் வயிறு மிகவும் பெரிதாகிவிட்டது."

"ஆம்."

அவர் பின்னால் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு சொன்னார், "மண்ணீரல், அவள் மண்ணீரல் பிரச்சனையால் இறந்தாள்."

நான் திகைத்துப் போனேன். நேற்று நடந்த அந்த விஷயம் என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. யாரிடமும் நான் கூறியிருக்கவில்லை. குருவின் முன்னிலையில் அந்தத் தருணத்தில் எனக்கு என்ன நடந்தது என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அவர் என்னை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பார்த்தார். அப்போது இரண்டு விஷயங்கள் நடந்தன. அவை காரணமும் விளைவும் போலத் தெரியவில்லை, மாறாக ஒரே நேரத்தில் நிகழ்வதுபோலத் தோன்றின. என் நெஞ்சில் ஒரு கடுமையான வலியையும், ஒரு பயங்கரமான பிசையும் உணர்வையும் நான் உணர்ந்தேன். எனக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. என்னையுமறியாமல் நான் அழத் தொடங்கினேன். அழுதுகொண்டே இருந்தேன். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை; அதே சமயம் சோகமாகவும் இல்லை. அது நான் இதற்கு முன் அனுபவிக்காத ஒரு வகையான அழுகை. அது சில நாட்களுக்குத் தொடர்ந்தது. அதைப்பற்றி நான் சொல்லக்கூடிய ஒரே விஷயம், நான் எதையோ முடித்துவிட்டதைப் போல உணர்ந்தேன் என்பதுதான். என் பயணம் முடிந்துவிட்டது."

ஆனால், இதோடு ஆல்பர்ட் ரிச்சர்டின் அனுபவங்கள் முடிந்து போகவில்லை. அவர் சில நாட்கள் அந்த மலையிலேயே வேறொரு சீடரின் இல்லத்தில் சில நாட்கள் தங்க நேர்ந்தது. அதே சமயம் அவரது அறிவியல் மனம் சும்மா இருக்கவில்லை. அவர் ஓர் உளவியல் பேராசிரியர் என்பதா, தனக்கு நடந்தவை எப்படி ஏற்பட்டிருக்கும், குரு எப்படி எல்லாவற்றையும் தான் கூறாமலேயே உணர்ந்தார் என்றெல்லாம் யோசித்தவாறு இருந்தார். எல்.எஸ்.டி. போன்ற போதைப் பொருளை இதுபோன்ற ஞானிகளுக்கு அளித்தால் அவர்கள் நிலையில் என்ன வகை மாற்றம் ஏற்படும் என்று அறிவதில் ஆர்வம் கொண்டார். ஆனால், அதை வெளிப்படையாக குருவிடம் கேட்கவும் அவருக்குத் தயக்கமாக இருந்தது.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் தன்னுடன் புதிய எல்.எஸ்.டி. போதை மருந்து அடங்கிய பாட்டில் ஒன்றை எடுத்துகொண்டு குருவைக் காணச் சென்றார். ரிச்சர்டை வரவேற்ற குரு, பின் ரிச்சர்டைப் பார்த்து, "உங்களுக்கு என்னிடம் ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?" என்று கேட்டார். ரிச்சர்ட் பதில் கூறாமல் இருந்ததைக் கண்ட குரு, "உங்கள் கையில் இருப்பது என்ன?" என்று கேட்டார். பின் எல்.எஸ்.டி. போதை மாத்திரைகள் அடங்கிய அந்த பாட்டிலை ரிச்சர்டிடம் இருந்து வாங்கி, பாட்டிலைத் திறந்தார். அதில் சில மாத்திரைகள் இருந்தன. அதைத் தனது கையில் கொட்டினார். அதில் உள்ள ஒவ்வொரு மாத்திரையும் 305 மைக்ரோகிராம் எடை கொண்டது. அறுபது வயதுடைய ஒருவருக்கு 50-70 மைக்ரோகிராம் போதுமானது என்பது ரிச்சர்டின் ஆய்வு முடிவு. ரிச்சர்ட் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, முதல் மாத்திரையை விழுங்கினார் குரு. பின் தொடர்ந்து இரண்டு மாத்திரைகள் என மொத்தம் மூன்று மாத்திரைகளை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துக் கொண்டார். அதன் மொத்த எடை 915 மைக்ரோகிராம். அது ஒரு வலிமையான குதிரையைக்கூட வீழ்த்துவதற்குப் போதுமானது. அதனால் அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலுடன் ரிச்சர்ட் குருவையே பார்த்துக் கொண்டிருந்தார்.

வெகு நேரமாயிற்று. ஒன்றுமே நடக்கவில்லை. குரு வழக்கம்போல் அமர்ந்து சீடர்களுடன் பேசிக் கொண்டுதான் இருந்தார்.

ரிச்சர்டிற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நீண்ட நேரம் ஆகியும் ஒன்றும் நிகழவில்லை. பின் குரு, ரிச்சர்டை நோக்கிக் கண் சிமிட்டினார். பின் "ஒன்றும் நடக்கவில்லை! ஒன்றுமே நடக்கவில்லை" என்றார்.

ரிச்சடிற்கு அது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. குருவின் உடலில் எந்த விளைவும் ஏற்படவில்லை என்பது ஆச்சரியத்தோடு அவருக்கு அதிர்ச்சியையும் தந்தது. மெய்யறிவு பெற்ற ஞானிகள் யோகிகளின் உடலில் போதை மருந்துகள் வேலை செய்யாது என்பதையும், எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதையும் ஓர் உளவியல் பேராசிரியராக, அறிவியலாளராகக் கண்கூடாக உணர்ந்து கொண்டார். அவர்கள் சாதாரண மானுடர்களின் அளவுகோல்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதையும், அளவுகோல்களுக்குள் அடங்காதவர்கள், அளவுகோல்களால் அளக்க முடியாதவர்கள்; அவற்றையெல்லாம் கடந்தவர்கள் என்பதையும் அந்தத் தருணம் அவருக்கு உணர்த்தியது. அதுவே அவரது வாழ்க்கையை மாற்றிய தருணமாயிற்று.

ஆல்பர்ட் ரிச்சர்ட் என்ற பெயர் கொண்ட அவ்வுளவியல் பேராசிரியர் பிற்காலத்தில் அந்த குருவின் சீடராக மாறினார். குருவாலேயே 'ராமதாஸ்' என்று பெயர் சூட்டப்பட்டார். குருவின் பெருமையை, சிறப்பை அமெரிக்கா தொடங்கி பல நாடுகளிலும் பரப்பினார்.

இப்படி இந்த அதிசய அற்புதத்தை நிகழ்த்திய அந்த குரு தான் மகாஞானி மஹராஜ் நீம் கரோலி பாபா.

(தொடரும்)
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline