Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப்பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | பொது
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
எல்லார்வி
- அரவிந்த்|அக்டோபர் 2026|
Share:
ல.ரா. விஸ்வநாத சர்மா என்னும் இயற்பெயரைக் கொண்ட 'எல்லார்வி', தஞ்சாவூர் மாவட்டத்தின் கீரனூரில், டிசம்பர் 24, 1915 அன்று பிறந்தார். தனது பத்தாம் வயது முதலே வாசிப்பார்வம் கொண்டு விளங்கினார். ஜே.ஆர். ரங்கராஜு, வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு. கோதைநாயகி அம்மாளின் நாவல்களை விரும்பி வாசித்தார். தனது சகோதரி மகன் நடனபாதனை உறங்க வைக்கப் பல்வேறு கதைகளைக் கூறி, கற்பனை ஆற்றலை வளர்த்துக் கொண்டார். இருபதாம் வயதில் தந்தையை இழந்தார். தஞ்சாவூர், கும்பகோணத்திற்கு வரும் இசைக் கலைஞர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களிடம் உரையாடிப் பல தகவல்களைப் பெற்றார். அதுவே அவரது பிற்கால வாழ்க்கையில் இசை சார்ந்த பல சம்பவங்களை, நிகழ்ச்சிகளை விரிவாக எழுத உறுதுணையானது.

எல்லார்வி, தொடர்ந்து வாசித்தும், சகோதரி மகனுக்குக் கதை சொல்லியும் கதை எழுதும் ஆற்றல் கைவரப் பெற்றார். 1936-ல், துப்பறியும் நாவல் ஒன்றை எழுதினார். ஆனால், அதைப் பிரசுரிக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் அதனை வெளியிடவில்லை. எழுத்தாளர் கல்கியினுடைய மனைவியின் தம்பி உறவு முறைதான் எல்லார்வி. அந்த வகையில், கல்கிக்குத் தனது சிறுகதை முயற்சிகள் குறித்துக் கடிதம் ஒன்றை எழுதினார். "உறவுக்கும் தொழிலுக்கும் கூட்டுறவு வைக்காமல், நட்பையும் உறவையும் ஒதுக்கி வைத்து, தனி முயற்சியில் முன்னுக்கு வருவதுதான் மேல்" என்று பதில் எழுதினார் கல்கி.

அதனால் எல்லார்வி, தனது படைப்புகளைப் பிற இதழ்களுக்கு அனுப்ப ஆரம்பித்தார். 'விஸ்வநாத சர்மா' என்ற இயற்பெயரைத் தவிர்த்து, 'எல்லார்வி' என்ற புனைபெயரில் எழுதலானார். முதல் சிறுகதை 1938-ல், 'ஹநுமான்' இதழில் வெளிவந்தது. அது தந்த ஊக்கத்தில் இரண்டாவது சிறுகதையை எழுத, அது 1939-ல், 'காவேரி' இதழில் பிரசுரமானது. தொடர்ந்து பல சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதினார்.



'எல்லார்வி' யாரென்று தெரியாமலேயே கல்கி அவரது சில படைப்புகளைப் பிரசுரித்தார். சுதேசமித்திரன் இதழில், 'இரு சகோதரிகள்' என்ற தொடரை எழுதினார். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. தொடர்ந்து 'அன்பே அமுதம்' என்ற தொடர் தினகரனில் வெளியானது. இளம்விதவையின்மீது அன்பு கொண்ட மற்றொரு பெண்ணின் காதலனை, அந்த இளம்விதவை அறிவுரை கூறித் திருத்துவதாக அந்தத் தொடரை எழுதியிருந்தார். அதற்கும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. குமுதத்தில் 'பனித்துளி' தொடரை எழுதி வாசக வரவேற்பைப் பெற்றார். குமுதத்தில் எல்லார்வி எழுதிய 'கலீர் கலீர்' என்ற தொடர்நாவல், 'ஆடவந்த தெய்வம்' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.

'வெற்றிலைச் சுருள்' கலைமகளில் வெளியான தொடர். தன் குடும்பத்தில் வாழ்ந்த, தன் வளர்ப்பு மகளாக வளர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையையே அத்தொடரில் புனைவாக்கியிருந்தார் எல்லார்வி. அதுவும் பரவலான கவனம் பெற்றது. 1950-ல், முதன்முதலில் எழுதிய துப்பறியும் நாவலை விரிவாக்கி 'லோசனா' என்ற தலைப்பில் வெளியிட்டார்.

எல்லார்வி, பாரதமணி, மயூரம், மிராசுதர் முதலிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். கி.வா. ஜகந்நாதனை குருவாகக் கருதினார். இசை சார்ந்த பல கட்டுரைகளை கலைமகளில் எழுதினார். இசைக் கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதினார். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மைசூர் சௌடையா, பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை, செம்பை வைத்தியநாத பாகவதர், பிடாரம் கிருஷ்ணப்பா போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியிருக்கிறார். இசை தொடர்பான வரலாறு மற்றும் நிகழ்ச்சிக் குறிப்புகள் என 300-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். சில மரபுக் கவிதைகளையும், நாடகங்களையும், சிறார்க்கான படைப்புகளையும் எல்லார்வி எழுதியிருக்கிறார்.

எல்லார்வி படைப்புகள்
நாவல்கள்: இதயக்கமலம், அன்பே அமுதம், வெற்றிலைச் சுருள், டாக்டர் அருணா, நீர்க்குமிழி, பவானியின் கணவன், மைத்துனி, பனித்துளி, லோசனா, வனஜா, தேன்நிலவு, மலரும் வண்டும், மணப்பெண், புஷ்ப பாணம், ஆனந்த பைரவி, நவநீதம், புது மோகம், தாலி, வாழ்க்கைச் சுழல், அழகி, சுகந்தி, நீலாம்பரி.
சிறுகதைத் தொகுப்புகள்: மணி ஓசை, சபதம், அபவாதம், ஆசை முகம்.
சிறார் படைப்புகள்: அஞ்சாத சிங்கம், வளரும் தலைமுறை, பிறந்தநாள் பரிசு.
இசை நூல்கள்: எங்கே அண்ணா எங்கே?, அரியக்குடி, மைசூர் சௌடையா, ராஜமாணிக்கம் பிள்ளை, கலைமணிகள், செம்பைச் செல்வம், பிடாரம் கிருஷ்ணப்பா, சுவையான சங்கீத சம்பவங்கள், தோற்றவருக்குப் பரிசு, குறித்த நேரம், தோடி அடகு, கலைச் செல்வர், இசைமணிகள் மற்றும் பல
நாடகம்: பூங்குளம் பண்ணையார்


1976ல் நிகழ்ந்த இவரது மணிவிழாவிற்குக் கலைமகளும், கல்கியும் நிதி திரட்டி அளித்துக் கௌரவித்தன. 1979ல், எல்லார்வி காலமானார்.

அந்தக் காலத்து இசைக் கலைஞர்கள் பற்றியும், இசை குறித்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியும் மிக அதிகமாக எழுதியுள்ள முன்னோடி எழுத்தாளர் எல்லார்வி.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline