Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
துமிலன்
- அரவிந்த்|ஜூன் 2026|
Share:
தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவர் துமிலன் என்ற புனைபெயர் கொண்ட என். ராமஸ்வாமி. ஆகஸ்ட் 15, 1904 அன்று கும்பகோணத்தில் பிறந்தார். மயிலாடுதுறை முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் கற்றார். பள்ளியில் படிக்கும்போதே இலக்கிய ஆர்வம் உடையவராக இருந்தார். திருச்சி தேசியக் கல்லூரியில் பட்டக் கல்வி கற்றார். கல்லூரிக் காலத்தில் பஞ்ச், ஸ்டிராண்ட் மேகஸின், டிட்பிட்ஸ், ஹ்யூமரிஸ்ட் போன்ற ஆங்கில இதழ்களை வாசித்து இலக்கிய ஆர்வம் கைவரப் பெற்றார். பி.ஜி. உட்ஹவுஸின் எழுத்தால் ஈர்க்கப்பட்டார். சிறு சிறு எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டார்.

கல்விக்குப் பின் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் பணி கிடைக்க ஏற்றுக்கொண்டு ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். திருமணம் ஆயிற்று. மகள்: பத்மா. மருமகன்: மணக்கால் ரங்கராஜன். மிகுந்த தன்னுணர்ச்சி கொண்டிருந்த துமிலன், தலைமை அதிகாரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அரசுப் பணியிலிருந்து விலகினார். பணி வாய்ப்புக்காகச் சென்னைக்குச் சென்றார்.



எழுத்துத் திறனும், மொழிபெயர்ப்புத் திறனும் கொண்டிருந்த துமிலனுக்கு பா. தாவூத் ஷா நடத்தி வந்த 'தாருல் இஸ்லாம்' வார இதழில் உதவி ஆசிரியர் பணி கிடைத்தது. 1928ல் கிடைத்த அவ்வாய்ப்பை ஏற்றுக் கொண்டார். 'ஊர்வம்பு' என்ற தொடரை அவ்விதழில் எழுதினார். பல கட்டுரைகளையும் பல புனைபெயர்களில் எழுதினார். 1929ம் ஆண்டில் ஆனந்த விகடனில், 'பி.ஏ. தேவை' எனும் துமிலனின் கட்டுரை வெளியானது. கல்கியின் பரிந்துரையின் பேரில் கல்கி ஆசிரியராகச் சேர்வதற்கு முன்பே ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் துமிலன். விகடனில் 'பூரி', 'நமது நிருபர்' எனப் பல்வேறு புனைபெயர்களில் கட்டுரை, சிறுகதை, அரசியல் நையாண்டிகளை எழுதினார். கல்கி விகடனிலிருந்து விலகி 'கல்கி' இதழைத் தொடங்கியதும், துமிலனும் கல்கியில் சேர்ந்தார். அதில் பல நகைச்சுவைக் கட்டுரை, சிறுகதைகளையும், மொழிபெயர்ப்புச் சிறுகதைகளையும் எழுதினார். ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர்களால் கவரப்பட்டு அந்தப் பாணியில் பல படைப்புகளை எழுதினார். ஆங்கில நகைச்சுவைப் படைப்புகளைப் பின்பற்றி தமிழ் நகைச்சுவை எழுத்தில் பல புதுமைகளைக் கையாண்டார்.

துமிலனின் படைப்பாற்றல் பற்றி கல்கி, "துமிலன் நாம் எல்லோரும் அற்பம் என்று தள்ளிவிடும் சின்னஞ்சிறு விஷயங்களிலிருந்து அவர் இவ்வளவு நகைச்சுவையை எப்படித் தேடிப் பிடித்துக் கொண்டு வருகிறார் என்பது மிக ஆச்சரியமாகும். சின்னஞ்சிறு விஷயங்களில் உள்ள விசேஷ அம்சங்களைப் பிழிந்தெடுத்து நாம் சற்றும் எதிர்பாராத முறையில் எடுத்துக் கூறி நம்மைத் திடுக்கிடச் செய்வதுதான் அவர் கையாளும் வித்தை" என்று குறிப்பிட்டார்.

துமிலனின் நூல்கள்
பஞ்சுவின் பட்டினப்பிரவேசம், பகவதி எம்.எல்.ஏ., வனிதா பி.ஏ., பந்தயத்துக்குப் போனாள், பம்பாய்க் குடித்தனம், புனர் ஜன்மம், தேவி, குதிரைகள் ௐடுகின்றன, உலக ஒளி விளக்குகள், சின்னஞ்சிறு கிளியே, தர்மபத்தினி, மாப்பிள்ளை வந்தார், சுகபவனம், லேடி மானேஜிங் டைரக்டர், ஸ்ரீமதி கண்டக்டர், மூன்று சகோதரிகள், அரிசி முனை, கிராம மோகினி, நாதசுரச் சக்கரவர்த்தி டி.என். ராஜரத்தினம் பிள்ளை, விஞ்ஞான உலகம், கதாமணி, யுத்தக்கலை, கல்யாண மண்டபம், குடும்பக் களஞ்சியம், சம்ஸார சாகரம், சி.ஐ.டி. சிறுவர்கள், சிறுவர் நகைச்சுவைக் கதைகள், சிறுவர்களுக்கு நேருஜி, செவ்வாய்க் கிரகம் சலோ, அறிவூட்டும் புதிர்க் கதைகள், விந்தையான புத்தகங்கள், டாக்டரின் கணவன், துப்பறியும் சந்தர், அறிவியல் கதைகள், பையன் யார்?, மிஸ்டர் சுப்பு, பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் மற்றும் பல.


துமிலன், கல்கிக்குப் பின் தினமணி கதிர் இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். அவ்விதழில் துமிலன் எழுதிய 'கிராம மோகினி' தொடர் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றது. சரஸ்வதி ராம்நாத், எம்.எஸ். உதயமூர்த்தி, ஜோதிர்லதா கிரிஜா போன்றோரை தினமணி கதிரில் எழுத ஊக்குவித்தார். 'சுதந்திரச் சங்கு' என்ற பெயரில் மீண்டும் தொடங்கப்பட்ட காங்கிரஸ் சார்பு இதழில் சில மாதங்கள் ஆசிரியராகப் பணியாற்றினார். 'மாலதி' என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். பல்வேறு இதழ்களில் நகைச்சுவை, அரசியல், சமூகம், குடும்பம் எனப் பல்வேறு வகைமைகளில் கட்டுரை, சிறுகதை, தொடர்களை எழுதினார். சிறார்களுக்காகவும் பல நூல்களை எழுதினார். 'என்.ஆர். காசி', 'அனுசூயை' போன்ற புனைபெயர்களிலும் எழுதினார். சிறுகதை நூல்கள், நாவல்கள், சிறார் நூல்கள், கட்டுரை நூல்கள் என 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். துமிலன் எழுதிய 'புனர்ஜென்மம்' என்னும் கதை, 'போன மச்சான் திரும்பி வந்தான்' என்ற தலைப்பில், 1954ல் திரைப்படமாக வெளிவந்தது.

தமிழ் நகைச்சுவை எழுத்தின் முன்னோடியாகச் செயல்பட்ட துமிலன் எப்போது காலமானார் என்ற விவரம் கிடைக்கவில்லை. எஸ்.வி,.வி., கல்கி வரிசையில் தமிழின் முக்கியமான முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர் துமிலன்.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline