Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது...
- |ஜூன் 2026|
Share:
ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக இருக்கும், அமெரிக்க அரசின் ஒரு துறைமீதே அமெரிக்க அதிபர் நஷ்ட ஈடு கேட்டு, அதுவும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தொகையைக் கேட்டு வழக்குத் தொடர்ந்ததும், அது தள்ளுபடி செய்யப்பட்ட பின் நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு பெரிய தொகைக்குச் சமரசம் செய்ய முயன்றதும் ஏதோ ஹாலிவுட் படத்தின் அபத்தக் கதையைப் போலத் தோன்றலாம். இல்லை, இது கண்முன்னே அரங்கேறியதுதான். மக்களின் வரிப்பணம் 2020 தேர்தல் முடிவை ஏற்க மறுத்த கலகக்காரர்களின் கஜானாவுக்குப் போகக் கூடாதென்று, அதிபரின் ஆதரவாளர்களில் பலர் அதை எதிர்த்ததையும் பார்த்தோம். இன்றைய நிர்வாகத்தின் எத்தனையோ கூத்துக்களில் இதுவும் ஒன்று.

"இரான் போரை நிறுத்திவிட்டோம்", "நிறுத்தவில்லை", "மோதி என் நண்பர்", "இந்தியா ஒரு நரகக் குழி" என்பது போல மாற்றி மாற்றிப் பேசி உலக மார்க்கெட்டுகளையும், பெட்ரோலிய விலையையும் ஏற்றி இறக்கி, உலகத்தைத் தத்தளிக்க விட்டு லாபம் பார்த்துக் கொண்டிருப்பது இன்னொரு சோகக் கதை. இத்தனைக்கும் நடுவே, 'ஸ்பெல்லிங் தேனீ' போட்டியில் இந்திய அமெரிக்கச் சிறுவன் 19 விநாடிகளில் 32 சொற்களைப் பலுக்கிப் பரிசை வென்றிருப்பது நமக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது.

★★★★★


பிரக்ஞானந்தா நான்கு தொடர் வெற்றிகளைச் சாதித்து, நார்வே கிளாசிகல் சதுரங்கச் சாம்பியன்ஷிப்பை வென்றது பெரும் சாதனை. பி.ஜே.பி.யை விட்டு அண்ணாமலை விலகிப் புதிய கட்சி தொடங்கியது, தமிழகத் தேர்தலில் த.வெ.க. வென்று ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்தது எனப் பல ஆச்சரியங்கள் இந்தியாவிலும் அடுக்கடுக்காக நடந்து வருகின்றன. 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' போன்ற கலகக்காரர்கள் டெல்லியில் நடத்திய அதிரடிப் பேரணியும் காணக் கிடைக்கிறது. மோதி ஆட்சியை ஆட்டம் காணச் செய்ய எண்ணும் பன்னாட்டுச் சதியின் அடையாளம் இதற்குப் பின்னாலும் இருப்பது தெரியாமல் இல்லை.

★★★★★


நூலக சாதனையாளர் பத்மஸ்ரீ அங்கே கௌடாவின் புத்தக ஆர்வம் மலைக்க வைப்பது. நகைச்சுவை எழுத்தாளர் துமிலன், மொழிபெயர்ப்புக் கலைஞர் மதனகல்யாணி ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள், அலமாரியில் தூசுதட்டி எடுத்த டி.கே. பட்டம்மாளின் அரிய கட்டுரை, திகைக்க வைக்கும் அமானுஷ்யக் கதை ஒன்று, வியக்க வைக்கும் வெற்றிக் கதை ஒன்று என இரண்டு அருமையான சிறுகதைகள் - எல்லாமே வாசகருக்குப் பல்சுவை விருந்துதான்.

பன்னாட்டு யோகா தினம், உலக சுற்றுச்சூழல் நாள் ஆகியவை சிறக்க வாழ்த்துகள்.
தென்றல்
ஜூன் 2026
Share: 




© Copyright 2020 Tamilonline