|
| ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் (நிறைவுப்பகுதி) |
   |
- பா.சு. ரமணன் | ஜனவரி 2026 |![]() |
|
|
|
|
 |
ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்தார். சேந்தமங்கலத்திற்கு வந்து அங்குள்ள குகையிலேயே வசிக்கத் தொடங்கினார்.
தத்தாத்ரேயர் ஆலயம் சுயம்பிரகாச சுவாமிகளின் லட்சியம், தத்தாத்ரேயருக்குச் சேந்தமங்கலத்தில் கோயில் எழுப்புவது என்பதாக இருந்தது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என முப்பெருந் தெய்வங்கள் ஒருமித்த வடிவாகத் தோன்றிய தத்தாத்ரேயருக்கு மிகச் சிறப்பான கோயிலை அமைக்க வேண்டும் என்பதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தினார். தான் வசித்து வந்த குன்றின் உச்சியிலேயே தத்தாத்ரேயருக்குக் கோயில் எழுப்ப சுவாமிகள் விரும்பினார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
இறைவனின் ஆக்ஞை அல்லவா அது. முயற்சி பலனளிக்காமல் போகுமா? பலனளித்தது. ஈகைக் குணமுள்ள மக்கள் பலரும் நாடி வந்து உதவினர். ஆலய நிர்மாணத்திற்குச் சேலம் சுந்தரம் செட்டியார், முத்தகாபட்டி மிட்டாதார் முத்தாலம்மாள், ஐயம்பாளையம் தாண்டவராய பிள்ளை, திருச்சி டவுன் முன்சீப் கிருஷ்ணசாமிப் பிள்ளை, திருச்சி சேஷசாயி, சேலம் ஐயாசாமி அய்யா, ஆர். ராமய்யர் உள்ளிட்ட அன்பர்கள் பலர் உதவினர். அடியவர்களின் உதவியால், தத்தாத்ரேயருக்குத் தென்னகத்தில் அற்புதமான ஆலயம் ஒன்று ஒருவானது. பொதுவாக எல்லா இடங்களிலும், தத்தாத்ரேயரின் மையமுகம் விஷ்ணுவாக இருக்கும். ஆனால் இங்கே அது சிவனின் முகமாக அமைந்தது. மே 29, 1931 அன்று, மிகச்சரியாகச் சுயம்பிரகாச சுவாமிகளின் அறுபதாம் வயதில் அந்த ஆலய கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தத்தாத்ரேயரைப் பெருமைப்படுத்தும் வகையில் அது முதல் அவ்விடம் 'தத்தகிரி' என அழைக்கப்பட்டது.
சீடர்கள் சுயம்பிரகாச சுவாமிகளின் தவ வாழ்க்கை தத்தகிரியில் தொடர்ந்தது. பல இடங்களிலிருந்தும் சுவாமிகளின் பெருமையைக் கேள்விப்பட்ட அடியவர்கள், திரளாக வந்து சுவாமிகளைத் தரிசித்துச் செல்லத் தொடங்கினர். சிலர் சுவாமிகளின் அணுக்கத் தொண்டராகிப் பின் சீடராகினர். அவர்களுள் சங்கரானந்தர் என்பவர் சுவாமிகளின் அத்யந்த சீடரானார். சுவாமிகளிடம் தீக்ஷை பெற்ற மற்ற சீடர்கள்: ஸ்ரீ நிஜானந்தர், ஸ்ரீ துரியசிவம், ஸ்ரீ நிரஞ்சனானந்தர் (கோவை), ஸ்ரீ வெங்கிடராமய்யர், ஸ்ரீ சுகானந்தர் (திருச்செங்கோடு), ஸ்ரீ அபயானந்தர் (மோகனூர்), ஸ்ரீ சிவானந்தர் ஆகியோராவர். இவர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவர் ஸ்ரீ சாந்தாநந்தர். இவர், பிற்காலத்தில் சேலத்தில் 'கந்தகிரி' ஆலயத்தை நிர்மாணித்தார் ஸ்ரீ சாந்தாநந்த சுவாமிகள் என்று போற்றப்பட்டார்.
ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம் இக்காலகட்டத்தில் தனது குரு ஜட்ஜ் சுவாமிகள் சமாதி ஆனதையும், அவரது சமாதி குப்பை மேடாக இருப்பதையும் சுயம்பிரகாச சுவாமிகள் தியானத்தில் உணர்ந்தார். சுவாமிகள் அவ்வாலயத்தைப் புதுப்பிக்க விரும்பினார். அதைச் செய்வதற்குத் தன் மனதில் சங்கல்பித்தார். சான்றோர் சங்கல்பம் பலிக்காமல் போகுமா? பலித்தது. இதை அறிந்த சக நீதிபதியான, முன்னாள் நீதிபதி புதுக்கோட்டை ரகுநாதய்யா் தலைமையில் குழு ஒன்று சேந்தமங்கலம் வந்து சேர்ந்தது. ஸ்ரீ ஜட்ஜ் சுவாமிகள் புதுக்கோட்டையில் மகாசமாதி ஆனதையும், அந்த இடம் மறைந்து நிற்பதையும் வருத்தத்துடன் தெரிவித்தது. சரியான இடத்தைக் காட்டி, ஜட்ஜ் சுவாமிகளுக்கு அதிஷ்டானம் உருவாக்க, ஜட்ஜ் சுவாமிகளின் சீடரான சுயம்பிரகாச சுவாமிகள் உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டது.

சுயம்பிரகாச சுவாமிகளும் அதற்கு உடன்பட்டார். எந்த இடம் என்பதை ஞான திருஷ்டியால் உணர்ந்து, புதுக்கோட்டை வரைபடத்தில் எது எங்குள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார். தனது சீடர்களையும் அதிஷ்டான நிர்மாணப் பணிக்காகப் புதுக்கோட்டைக்கு அனுப்பினார். ஜட்ஜ் சுவாமிகள் சமாதி ஆன இடம் கண்டறியப்பட்டு, அதனைப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதிஷ்டானக் கும்பாபிஷேகம் மே 31, 1936 அன்று நடந்தது. சுயம்பிரகாச சுவாமிகள் அதில் கலந்துகொண்டார். விழாவில் சுவாமிகள், பக்தர்களிடம், "என் குருநாதர் மகா சமாதி ஆயிருக்கும் இவ்விடத்தில் பரிசுத்த மனதோடு நிஷ்டையில் இருப்போருக்கு சனகாதி முனிவர்களுக்கு மௌனமாக இருந்து சின்முத்திரை காட்டி உணர்த்திய தக்ஷிணாமூர்த்தமே வந்து மெளனம் கலைத்து உபதேசம் புரிவார்" என்று உறுதி கூறினார். சில நாட்களுக்குப் பின் சேந்தமங்கலம் திரும்பினார்.
புவனேஸ்வரி அம்மன் ஆலயம் புதுக்கோட்டை அதிஷ்டானத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்காகத் தனது அத்யந்த சீடரான சாந்தானந்த சுவாமிகளை புதுக்கோட்டை அனுப்பி வைத்தார் சுயம்பிரகாசர். சாந்தானந்தர் புதுக்கோட்டைக்கு வந்தார். அங்கு ஒரு வருடம் மௌன விரதம் மேற்கொண்டார். வேப்பிலையை மட்டுமே சாப்பிட்டுக் கடுந்தவம் செய்தார். அன்னை புவனேஸ்வரி தேவி அவரது கனவில் தோன்றி, அந்த இடத்தில் தனக்கு ஒரு கோயில் கட்டும்படி கேட்டுக் கொண்டார். சாந்தானந்த சுவாமிகளின் முயற்சியால் ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்துடன் இணைந்து அன்னை புவனேஸ்வரிக்கு அங்கு ஒரு கோயில் எழுப்பப்பட்டது. அதுவே புதுக்கோட்டையின் இன்றைய புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றான ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயம்.
மஹாசமாதி சுயம்பிரகாச சுவாமிகள் தனது குருவுக்கு அதிஷ்டானம் அமைத்தார். அவதூத பரம்பரையின் தெய்வமான ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு ஆலயம் அமைத்தார். அத்துடன் பூமியில் தனது ஆன்மிகக் கடமைகளை நிறைவேற்றி விட்டதாகக் கருதினார். அது முதல் தனக்குள்ளேயே ஆழ்ந்திருப்பது வழக்கமானது. தீவிரமான தியானத்திலும் தவத்திலும் இருந்தார். அதே சமயம் முதுமை காரணமாக அவரது உடல் தளர்ச்சியுற்றுப் பல உபாதைகளுக்கு ஆளானது. உடல்நலம் சீர்கெட்டது.
ஒருநாள், வாழ்வின் இறுதியை தியானத்தில் உணர்ந்த சுயம்பிரகாச சுவாமிகள், தான் விரைவில் சமாதியில் ஆழவிருப்பதை முன்கூட்டியே அடியவர்களுக்குக் கூறினார். தத்தாத்ரேயர் சிலைக்கு முன்னால் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கேயே தனது உடல் சமாதி செய்விக்கப்பட வேண்டும் என்று அவர்களிடம் தெரிவித்தார்.
டிசம்பர் 29, 1948 அன்று சுவாமிகள் நிஷ்டையில் ஆழ்ந்தார். மூச்சுக்களை ஒன்றன்பின் ஒன்றாக ஆழமாக உள் இழுத்தார். ஆனால் வெளியே விடவில்லை. அது உந்திச் சுழியிலேயே அடங்கியது. சுவாமிகள் மஹாசமாதி ஆனார். அவரது உடல், அவரது ஆக்ஞைப்படி தத்தாத்ரேயர் சமாதிக்கு முன்னால் உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு சமாதி ஆலயம் எழுப்பப்பட்டது. ஜனவரி 8, 1949 அன்று மஹாபூஜை நடத்தப்பட்டது, மறுநாளே ஆராதனை நடந்தது. ஒவ்வோர் ஆண்டும் சேர்ந்தமங்கலத்தில் சுயம்பிரகாச சுவாமிகளின் குருபூஜை விழா மிகச்சிறப்பாக நடந்து வருகிறது.
தத்தகிரி முருகன் குகாலயம் பிற்காலத்தில் சாந்தானந்த சுவாமிகள் இவ்வாலயத்தை விரிவுபடுத்தினார். முருகப் பெருமான் விக்கிரத்தைப் பிரதிஷ்டை செய்தார். அது, 'தத்தகிரி முருகன் குகாலயம்' என்று அழைக்கப்பட்டது. சுவாமிகள் பின்னர் சபா மண்டபம் ஒன்றை அமைத்தார். சபா மண்டபத்தில் பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, ஐயப்பன், கருப்பண்ண சுவாமி, தட்சிணாமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், சனீஸ்வரர், வனதுர்கை ஆகிய விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்தார்.
சபா மண்டபத்திற்கு வலப்புறம் சுயம்பிரகாச சுவாமிகள் பல மாதங்கள் தவம் புரிந்த குகை அமைந்துள்ளது.
இன்றும் தன்னை நாடி வருபவர்களுப் பலவிதங்களிலும் அருள் புரிந்து, பொருளியல் வாழ்க்கையிலும், ஆன்மிக வாழ்க்கையிலும் உயர்வடைய ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் உதவி வருகிறார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. |
|
|
| பா.சு. ரமணன் |
|
|
|
|
|
|
|
|
|
|