|
| கீழை. அ. கதிர்வேல் |
   |
- அரவிந்த் | ஜனவரி 2026 |![]() |
|
|
|
|
 |
நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளராகவும், சிறுகதை ஆசிரியராகவும் அறியப்படும் கீழை அ. கதிர்வேல், ஏப்ரல் 1, 1962-ல், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கீழைப் பெருமழை என்னும் சிற்றூரில் பிறந்தார். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், கல்வியியலிலும், இதழியலிலும் பட்டயம் பெற்றார். உரக்கடை, அடகுக்கடை, டெலிபோன் பூத், மீன்வளர்ப்பு, தனியார் நிதி நிறுவன முகவர், பாரத வங்கியின் இன்சூரன்ஸ் முகவர் எனப் பல பணிகளைச் செய்தார். விவசாயத்தையும் தனது முக்கியப் பணியாகக் கொண்டிருந்தார்.
எழுத்து மற்றும் இதழியல் மீதான ஆர்வத்தால் 'இதயம் பேசுகிறது' இதழின் தஞ்சை மாவட்ட நிருபராகப் பணியாற்றினார். பாக்கியம் ராமசாமியின் 'சிரிப்பே சிறப்பு' மாத இதழில் சில ஆண்டுகள் துணையாசிரியராகப் பணியாற்றினார். 'வாதினி' இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். கதிர்வேலின் திருமணம், பாக்கியம் ராமசாமியின் தலைமையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. மனைவி: விண்ணரசி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்.

தொழில் நிமித்தம் சிங்கப்பூர் சென்ற கதிர்வேல், அங்கு ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். இலக்கிய ஆர்வத்தால் இதழ்களுக்கு எழுதத் தொடங்கினார். இவர் எழுத வந்த காலத்தில், சிறுகதை ஆசிரியர்கள் பலர் இருந்தாலும், நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளர்கள் மிகவும் குறைவாகவே இருந்ததால், அதனையே தனது துறையாகத் தேர்வு செய்தார். நகைச்சுவைப் படைப்புகளுக்கு பாக்கியம் ராமசாமியையும், துணுக்கு எழுத்தாளர் உ. ராஜாஜியையும் முன்னோடிகளாகக் கொண்டார். முதல் நகைச்சுவைப் படைப்பு 23-11-1978 தேதியிட்ட 'குமுதம்' இதழில் வெளியானது. தொடர்ந்து ஆனந்த விகடன், குங்குமம், கல்கி, இதயம் பேசுகிறது, சாவி, பூவாளி, கல்கி, கலைமகள், தினமலர் வாரமலர் எனத் தமிழின் முன்னணி இதழ்கள் பலவற்றிலும் கீழை. அ. கதிர்வேலின் நகைச்சுவைத் துணுக்குகள் வெளியாகின. பின்னர் கவிதை, கதைகளையும் எழுதத் தொடங்கினார். சிங்கப்பூரில் வெளிவந்த 'தமிழ் முரசு' போன்ற இதழ்களிலும் கதிர்வேலின் படைப்புகள் பிரசுரமாகின.
கதிர்வேல், 5000-த்திற்கும் மேற்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட புதுக்கவிதைகளை எழுதியுள்ளார். சிங்கப்பூர் கலை இலக்கியவட்டத்தின் சார்பாக வெளியான கவிதைத் தொகுப்புகளில் இவரது பல கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 'சிங்கப்பூர் கவிமாலை' நிகழ்வு உள்படப் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'நம்பர் விளையாட்டு' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. கல்கி, சாவி, தினமலர் உட்படப் பல முன்னணி இதழ்களில் இவரது நேர்காணல்கள், கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இவரது நகைச்சுவைகளின் தொகுப்பான 'அசத்தலான அதிரடி ஜோக்ஸ்' நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

கதிர்வேலின் படைப்புகள் இயல்பான மொழியில், எளிய நடையில் அமைந்தவை. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவலங்கள், அவமானங்கள், குடும்பத்தினர் மீதான அவர்களது அன்பு, ஏக்கம், குடும்பத்தினர் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் விதம் எனப் பல செய்திகளை இவரது படைப்புகள் பேசுகின்றன.
சிங்கப்பூரில் வசிக்கும் கீழை அ. கதிர்வேல், நகைச்சுவைத் துணுக்குகளை எழுதுவதில் உச்சம் தொட்டவர். 45 வருடங்களுக்கும் மேலாக இதழ்களுக்கு நகைச்சுவைத் துணுக்குகள் எழுதி வருவது ஒரு சாதனையாகப் பார்க்கப்படத் தக்கது.
நூல்கள் சிறுகதைத் தொகுப்பு: நம்பர் விளையாட்டு, சின்னஞ்சிறு சிந்தனைக் கதைகள், அன்புடன் ஆசைத்தம்பி நகைச்சுவைத் தொகுப்பு: நகைச்சுவை நானூறு, அசத்தலான அதிரடி ஜோக்ஸ்
(தகவல் உதவி: வெ. ராம்குமார் எழுதிய எழுத்தாள்பவர்கள் நூல்; புஸ்தகா வெளீயீடு) |
|
|
| அரவிந்த் |
|
|
|
|
|
|
|
|
|
|