இந்தியா சுதந்திரம் பெறுவதற்குமுன், சென்னை - ஹைதராபாத் - நாகபுரி தில்லி விமானப் போக்குவரத்து, டெக்கான் ஏர்வேஸ் என்ற கம்பெனியாரால் நடத்தப்பட்டு வந்தது. அந்தக் கம்பெனி, ஹைதராபாத் சமஸ்தான அரசாங்கத்திற்குச் சொந்தமானது.
1948-இல் ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்தது. எனவே சென்னையிலிருந்து நேரடியாக தில்லிக்கு விமானப் பயண வசதி இருக்கவேண்டும் என்று ஓ.பி.ஆர். கருதினார். சென்னை அரசாங்கத்துக்கு ஒரு விமானம் வாங்குவது நல்லது என்று எண்ணினார். இதுதொடர்பாக, காப்டன் சுந்தரம் என்பவரோடு ஓமந்தூரார் தொடர்பு கொண்டார்.
காப்டன் சுந்தரம் காப்டன் சுந்தரம் 1936 முதல் விமானம் ஓட்டுபவராக 36 ஆண்டுகள் பணிபுரிந்து 1972இல் ஒய்வுபெற்றார். இவர் பெங்களூரில் விமானம் ஓட்டப் பயிலும் பள்ளியில் பயிற்சியாளராக இருந்து, 1946 முதல் 1952 வரை மைசூர் அரசாங்கத்தின் விமானப் போக்குவரத்து இயக்குநராகச் செயல்பட்டார். சர்தார் வல்லபபாய் பட்டேலின் நம்பிக்கைக்கும் நட்புக்கும் உரிய விமானியாக விளங்கினார். இவருடைய மனைவி திருமதி உஷா சுந்தரம் என்பவரும் விமானம் ஓட்ட வல்லவர். கணவன் விமானம் ஓட்டும்போது, வானொலிக் கருவியை இயக்கி, விண் நிலையங்களுக்குச் செய்தி அனுப்பியும் அங்கிருந்து செய்தி வாங்கியும் பணிபுரிபவர். (ரேடியோ ஆபீசர்)!
ஓ.பி.ஆரும் சுந்தரமும் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் சீடரான ஓமந்தூராருக்கு விமானம் ஒட்டிய இவர் யார்? தெருவில் நசுக்கப்பட்ட நாய்கள், குறும்புக்காரர்களால் துன்புறுத்தப்பட்ட பூனைகள், அடிபட்ட ஆடுகள், காயப்படுத்தப்பட்ட மாடுகள் ஆகியவற்றுக்கு வாழ்வளிக்கும் கருணைமிக்கவராகவும் உள்ளவரான சுந்தரம் இப்பணிகளுக்காக சென்னை அடையாற்றில் 'புளூ கிராஸ் ஆப் இந்தியா' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
விமானம் வாங்க ஏற்பாடு அந்தக் காலத்தில் இந்தியாவில் விமானங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. லண்டனில் விமானம் கிடைத்தால் வாங்க ஏற்பாடு செய்யும்படி ஓமந்தூரார், காப்டன் சுந்தரத்திடம் கூறியிருந்தார்.
காப்டன் சுந்தரம், டி ஹாவிலண்டு என்ற விமான உற்பத்தியாளர்களுக்குத் தகவல் கொடுத்தார். ஒருநாள் இரவு 8 மணிக்கு காப்டன் சுந்தரத்துக்கு ஒரு. தந்தி வந்தது. "மேன்மை தங்கிய ஆகா கான் ஒரு விமானத்துக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். அதைச் செய்து தயாராக வைத்திருக்கிறோம். ஆனால் அந்தக் கோடீசுவரர் இன்னும் வசதிகள் நிறைந்த விமானம் தேவை என்கிறார். ஆகையால் ஏற்கெனவே அவர் ஆர்டர் கொடுத்தபடி செய்யப்பட்ட விமானம் இப்போது விற்பனைக்குக் கிடைக்கும்" என்பது தந்தியின் வாசகம்.
இரவு 8.30க்கு பெங்களூரிலிருந்து காப்டன் சுந்தரம், சென்னை முதலமைச்சருடன் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, தந்தியில் தெரிவிக்கப்பட்ட தகவலைச் சொன்னார்.
"மேற்கொண்டு ஆக வேண்டியதை செய்" என்றார் ஓமந்தூரார்.
மறுநாள், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. நிதி அமைச்சர் கோபால ரெட்டியின் எதிர்ப்பைப் புறக்கணித்து விமானம் வாங்குவதென்று அமைச்சரவை முடிவுசெய்தது.
விமானத்தின் விலை மூன்று லட்சம் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
'அநுமான்' என்று அந்த விமானத்திற்குப் பெயரிடும்படி ஓமந்தூரார் காப்டன் சுந்தரத்துக்கு யோசனை கூறினார்!
அநுமானுக்கு முன் அநுமான் விமானம் வாங்குவதற்குமுன், தில்லிக்குப் போக வேண்டிய தேவை ஏற்பட்டபோது, ஓ.பி.ஆர். பெங்களூருக்குத் தகவல் கொடுத்து, காப்டன் சுந்தரம் மூலம் விமானம் ஏற்பாடு செய்து சென்னைக்கு அதை வரவழைத்துக் கொண்டார். முதல் தடவையாக அவர் காப்டன் சுந்தரம் ஓட்டிய விமானத்தில் பயணம் செய்த போது, இருவருக்கும் மன ஒருமைப்பாடு ஏற்பட்டு விட்டது. சிறந்த முறையில் சான்றிதழ் ஒன்றையும் ஓமந்தூரார் வழங்கிவிட்டார்.
மைசூர், திருவாங்கூர், கொச்சி ஆகிய சமஸ்தானங்களின் முதலமைச்சர்களும் ஓ.பி.ஆரைப் பின்பற்றி, தனி விமானங்களில் நேரே தில்லிக்குப் பறப்பது என்பதைப் பழக்கமாகக் கொண்டனர்.
1948 மே மாதத்திற்குப் பிறகு எந்த இந்திய அரசியல்வாதியும் ஹைதராபாத் வழியாகப் பயணம் செய்யவில்லை,
அநுமான் அநுமான், "டவ்" என்ற விமானவகையைச் சேர்ந்தது. எட்டுப் பேரை ஏற்றிச் செல்லக்கூடியது. ஒரு மணிநேரத்தில் 180 மைல் தூரம் பறக்கக்கூடியது, ஒரு மணிநேரம் பறப்பதற்கு 28 காலன் (ஒரு காலன் என்பது 4.546 லிட்டருக்குச் சமம்) பெட்ரோல் மட்டுமே தேவைப்படும். பிரிட்டிஷ் விமானக் கம்பெனிகளும் ஐரோப்பாவில் பல நாடுகளின் விமானக் கம்பெனிகளும் இந்த வகை விமானங்களையே அப்போது பயன்படுத்தி வந்தன.
விமானத்தை உடனே சென்னைக்குக் கொண்டு வந்து சேர்க்க, காப்டன் சுந்தரம் லண்டனுக்குப் போகவேண்டும் என்று ஓ.பி.ஆர். விரும்பினார். காப்டன் சுந்தரம், மைசூர் அரசின் ஊழியராக இருந்ததால், முதலமைச்சர் திரு ரெட்டியிடம் தகவலைச் சொல்லி இசைவு பெற்று லண்டனுக்குப் புறப்பட்டார்.
காப்டன் சுந்தரம் டி-ஹாவிலண்டு தொழிற்சாலைக்குப் போய்ச் சேர்ந்ததும், விமானத்தைச் சரிபார்த்து சென்னை அரசாங்கம் என்ற பெயரை விமானத்தின் இருபக்கங்களிலும் எழுத ஏற்பாடு செய்தார், சுதந்தர இந்திய அரசாங்கத்தின் கொடி, விமானத்தின் வலது இடது பக்கங்களிலும் இறக்கைகளின்மேல் Sips பகுதிகளிலும் வரையப்பட்டது.
அநுமான் என்ற பெயர் விமானத்தின் மூக்கில் தீட்டபட்டது. 1948 ஜூன் 4-ல் விமானம் விலைக்கு வாங்கப்பட்டது. விமானம் சென்னைக்கு வந்துசேர்ந்த மறுநாள் ஓமந்தூராரும் வேறு சில அமைச்சர்களும் அதைப் பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்தனர். விமானம் பெங்களூரில் வைத்துப் பேணப்பட வேண்டும் என்றும், தேவையான போது சென்னைக்குக் கொண்டு வரப்படவேண்டும் என்றும் முடிவாயிற்று.
மாகாண அரசாங்கத்துக்குச் சொந்தமாக ஓரு விமானம் வாங்கப்பட்டிருப்பது மக்களுக்கு ஒரு பெருமையாக இருந்தது,
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சென்னைவாசிகள் அநுமானைப் பார்க்க, மீனம்பாக்கம் விமானநிலையத்துக்குச் சென்றனர்.
இந்த விமானத்தில் எட்டுப்பேர் தில்லிக்குப் போவதற்குப் பெட்ரோல் (100 காலன்) உள்பட. மொத்தச் செலவு ரூ. 420/- தான் ஆகும் என்பது மிகவும் சிக்கனமான செலவு என்பதை அறிந்து அரசாங்க வட்டாரங்கள் திருப்தியடைந்தன.
பின் தூங்கி முன் எழுந்த கதை 1948 ஜூலை 25 இல் காரைக்குடியில் மத்திய மின்சார இரசாயன ஆராய்ச்சிக்கூடத்தை, ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார், பிரதமர் திரு, ஜவஹர்லால் நேரு அன்று காலையில் விமானப்படை விமானத்தில் மீனம்பாக்கத்திலிருந்து செட்டிநாடு விமான நிலையத்திற்குப் புறப்பட்டார். முதலமைச்சர் ஓ.பி.ஆர். அவரை அன்புடன் வழியனுப்பினார்.
வழியனுப்பிய ஐந்து மணித்துளிகளில், அநுமான் விமானத்தில் புறப்பட்டு செட்டிநாடு விமான நிலையத்துக்குப் பறந்தார் ஓமந்தூரார். 280 மைல் தூரத்தை 75 நிமிஷங்களில் பறந்து, ஓமந்தூரார் செட்டிநாடு விமானநிலையத்தை அடைந்தார். அங்கு வந்து இறங்கிய பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு, தம்மை ஓமந்தூரார் வரவேற்றதைக் கண்டு வியப்படைந்து அநுமானின் வேகத்தைப் பாராட்டினார்.
விமான விபத்து 1948 செப்டம்பர் 16இல் ஒரு முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை முதலமைச்சர் ஓமந்தூராரும் மைசூர் முதலமைச்சர் திரு ரெட்டியும், திருவாங்கூர் முதலமைச்சர், கொச்சி முதலமைச்சர் ஆகியோரும் அநுமான் விமானத்தில் சென்னையிலிருந்து டில்லிக்குப் புறப்பட்டனர். அமைச்சர் டி.எஸ்.எஸ். இராஜனும் சென்னை அரசாங்கத்தின் அலுவலர் இருவரும் ஏனைய பயணிகள் ஆவர்.
காப்டன் சுந்தரம் அன்று விமானம் ஒட்டவில்லை. பல்லாண்டுகள் சென்னை-டில்லி விமானங்களை ஓட்டி அந்தப்பாதையை நன்கு அறிந்த காப்டன் ஹெல்லட் அன்று அநுமானை ஓட்டிச் சென்றார்.
இரவு 8 மணிக்கு, காப்டன் சுந்தரத்துக்கு டில்லியிலிருந்து வானொலிச் செய்தி வந்தது. "ஆக்ராவிலிருந்து 20 மைல் தொலைவில் அநுமான் விமானம் இறங்கிவிட்டது. பயணம் செய்தவர்கள், விமானிகள் ஆகியோர் நிலைபற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை" என்பது செய்தி.
இரவு உணவு அருந்தத் தயாராகக் கொண்டிருந்த காப்டன் சுந்தரத்தின் பசியெல்லாம் பறந்துவிட்டது. பறந்து சென்றவர்களின் நிலை, அழகான அநுமான் விமானத்தின் காட்சி ஆகியவை அவர் மனத்தை ஆட்டின.
இரவு 11 மணிக்கு தொலைபேசி ஒலித்தது, "பயணம் செய்தவர்களும் விமானிகளும் பத்திரமாக இருக்கிறார்கள்" என்று அறிந்து பெருமூச்சு விட்டார் காப்டன்.
மறுநாள் செப்டம்பர் 17, அதிகாலையில் காப்டன் சுந்தரம் பெங்களூரிலிருந்து பறந்து ஐந்துமணி நேரத்தில் ஆக்ராவுக்குப் போய்ச் சேர்ந்தார்.
"கெரலி' என்ற சின்னஞ்சிறு இரயில் நிலையத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் ஓர் இடத்தில் அநுமான் இறங்கி விட்டது. இரயில் நிலையத்திற்கும் அந்த இடத்திற்கும் இடையே ஒரு காட்டாறு ஓடிற்று. சேறும் சகதியும் நிறைந்திருந்தது.
காப்டன் சுந்தரம் ஆக்ராவில் பரத்பூர் மஹாராஜாவின் அரண்மனைக்குச் சென்று அவர்களுடைய ஜீப்பில் அநுமான் நின்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.
விமானத்திற்கு ஒரு பழுதும் ஏற்படவில்லை என்று அறிந்து சுந்தரம் மகிழ்ந்தார், நாகபுரியைத் தாண்டியபோது, விமானம் எந்த இடத்தில் இருந்தது என்று தெரியாமல், டில்லி விமான நிலையத்திலிருந்து தகவல் பெறும்படி. காப்டன் ஹெல்லட் தன்னுடைய வானொலி அதிகாரியைகச் கேட்டிருந்தார். விமானம் அப்போது 2,000 அடி உயரத்தில் மட்டுமே சென்று கொண்டிருந்ததால், வானொலித் தகவல்களைப் பெற முடியவில்லை. வானொலி அலுவலர் டில்லியுடன் தொடர்பு கொள்ளவே இல்லை. இதனால் காப்டன் ஹெல்லட் நிலை தடுமாறினார். அவர் மூளை வேலை செய்யவில்லை; பயம் அவரை வாட்டியது. விமானம் அதன் போக்கில் போய்க் கொண்டிருந்தது. பெட்ரோல் தீர்ந்துவிட்டதாக எல்லோரும் நினைத்தார்கள். ஆக்ராவிலிருந்து 20 மைல் தொலைவில் ஒரு இரயில் தண்டவாளத்தில் விமானம் மோதிக்கொண்டு, வயல்வெளியில் இறங்கியது. மரத்துடனோ மலைமீதோ மோதாதது இறைவனின் அருள் என்றுதான் சொல்லவேண்டும். சூரியன் அஸ்தமனமாகி இருள் சூழும் நேரம். விமானம் தலைகீழாக விழாமல், அதிலுள்ள ஏர் பிரேக்கர் அதைக் காப்பாற்றிவிட்டது.
மீண்டும் பறந்தது! காப்டன் சுந்தரம் மறுநாள் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்த சமயம் அங்கு மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருந்தன.
மழை பெய்து விட்டால் அந்த இடத்திலிருந்து விமானத்தை எடுக்க முடியாது. பகுதி பகுதியாகக் கழற்றி ஆக்ராவுக்கு லாரியில் கொண்டுபோய் மீண்டும் ஒன்றுசேர்க்க ஒரு மாதம், இரண்டு மாதம் கூட ஆகலாம். ஆகையால் அடுத்த சில நிமிடங்களுக்குள் பறந்தாக வேண்டும். 50 கெஜமாவது தரையில் ஓட்டித்தான் விமானத்தை மேலே ஏற்ற முடியும். ஆகையால் வேடிக்கை பார்க்கவந்த கிராமவாசிகள் உதவியால் வயல் வரப்புகளை அப்புறப்படுத்தி, முதலில் ஜீப்பை ஓட்டிப் பார்த்தார், ஆங்காங்கு இருந்த குழிகளை அடைத்துவிட்டு விமானத்தை ஓட்டிப் பார்க்க முடிவு செய்தார். விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக, திரு. சுந்தரம் மட்டுமே விமானத்தில் சென்றார். மேலும் தேவையில்லாத பொருள்கள் கருவிகளையெல்லாம் இறக்கிக் கீழே போட்டார். பெட்ரோல் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தார். 40 காலன் இருந்தது. டில்லிக்குப் போவதற்குக்கூட இதுபோதும்.
விமானத்துக்குள் குதித்தார். பிரேக்குகளை நீக்கினார். இயந்திரங்களை முடுக்கிவிட்டார்! இறக்கைகளை உயர்த்தினார்! பத்து நிமிஷங்களில் விமானம் பத்திரமாக.ஆக்ரா விமான நிலையத்தில் இறங்கியது!
காப்டன் சுந்தரம் விரைவாகவும், சமயோசிதமாகவும் செய்த முடிவை ஆக்ரா விமான நிலையத்தில் அனைவரும் பாராட்டினர். விமானத்தை முற்றிலும் சரிபார்த்த பிறகு, பயணம் டில்லிக்குத் தொடர்ந்தது. |