|
| ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் |
   |
- பா.சு. ரமணன் | நவம்பர் 2025 |![]() |
|
|
|
|
 |
தோற்றம் மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல, புதிரானதும் கூட. அப்படிப்பட்ட புனித வாழ்க்கை வாழ்ந்த மகான்களுள் ஒருவர் ஸ்ரீ சுயம்பிரகாச சுவாமிகள். இவர், நவம்பர் 28, 1871ல், விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டில், ஸ்ரீ ராம சாஸ்திரிகள் - ஜானகி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். கிருஷ்ணமூர்த்தியின் குழந்தைப் பருவத்தில், குடும்பம், தஞ்சாவூர் அருகே உள்ள ஆடுதுறைக்குக் குடிபெயர்ந்தது.
கல்வி கிருஷ்ணமூர்த்தியின் பள்ளிப் பருவம் திருவிடைமருதூரிலும், கும்பகோணத்திலும் கழிந்தது. ஆங்கிலவழிக் கல்வி பயின்றார். சமஸ்கிருதமும் கற்றார். வேதம், புராணம், இதிகாசங்களைப் பயின்று தேர்ச்சி அடைந்தார்.
ஆன்மிக ஆர்வம் சிறு வயதிலேயே கிருஷ்ணமூர்த்தி ஆன்மிகத்தின்பால் ஈர்க்கப்பட்டார். எப்போதும் தனித்திருப்பதும், சிந்தனையில் லயித்திருப்பதும் வழக்கமானது. துறவில் விருப்பம் உண்டானது. ஆனால், பெற்றோர் அதனை அறியாமல் மகனுக்கு பிரிட்டிஷ் அரசில் வேலை அமைய வேண்டும் என்றும், நல்ல பெண்ணாகப் பார்த்து மணமுடிக்க வேண்டும் என்றும் விரும்பினர். ஆனால், கிருஷ்ணமூர்த்தியின் மனமோ துறவறத்தை நாடியது.
பணி கிருஷ்ணமூர்த்தி குடும்பச் சூழலால் தனக்குக் கிடைத்த அரசாங்க வேலையை ஏற்றுக் கொண்டார். சேலம் நகரத்தில், ஆயத்தீர்வுத் துறையில் அவருக்கு வேலை கிடைத்தது. உடன் குடும்பத்தில் அவருக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்தனர். கிருஷ்ணமூர்த்திக்கு அதில் விருப்பமில்லை என்பதால் மறுத்தார். துறவியாக விரும்புவதாகக் கூறினார். கோபமுற்ற குடும்பத்தினர், கிருஷ்ணமூர்த்தியின் கல்விக்காகச் செலவழித்த ரூ. 3000-ஐத் திருப்பித் தருமாறு கூறினர். அக்காலத்தில் இது மிகப்பெரிய தொகை. அவ்வளவு பெரிய தொகையைச் சேர்க்கப் பல ஆண்டுகள் ஆகும். அதனால் கிருஷ்ணமூர்த்தி திருமணத்திற்கு ஒப்புக்கொள்வார் எனக் குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாக, கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டார். பணத்தைத் திருப்பிச் செலுத்தும்வரை அவரைத் திருமணத்திற்குத் தூண்டக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்தார். குடும்பத்தினர் அதனை ஏற்காமல் நிபந்தனைக்கு எதிராகச் செயல்பட்டனர். அவருக்குப் பெண் பார்க்க முற்பட்டனர். அதனால், தனது கையிருப்பையெல்லாம் குடும்பத்தாரிடம் கொடுத்துவிட்டுக் குடும்பத்தை விட்டு வெளியேறினார் கிருஷ்ணமூர்த்தி.
காசியில்... கிருஷ்ணமூர்த்தி வேலையை ராஜினாமா செய்தார். புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான காசிக்குப் புறப்பட்டார். அங்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளிடம் சீடரானார். அவரிடம் குருகுல வாசம் செய்து ஆன்மிகத் தத்துவங்களை, வேதங்களை நன்கு கற்றுக் கொண்டார். இந்நிலையில் சூழல் மாறுபாட்டால் நோய்வாய்ப்பட்டார். உடல்நிலை வெகுவாக மோசமடைந்தது. ஆசிரமத்தினர் இச்செய்தியை அவரது பெற்றோருக்குக் கடிதம் மூலம் தெரிவித்தனர். அவர்கள் உடனே காசிக்கு விரைந்தனர். கிருஷ்ணமூர்த்தியைத் தம்முடன் வருமாறு கேட்டுக்கொண்டனர். கிருஷ்ணமூர்த்தி, அன்றிருந்து 96-வது நாளில், தான் கிராமத்திற்கு நிச்சயம் திரும்பி வருவதாக வாக்களித்தார்.
உடல்நிலை சற்றுத் தேறியதும் குருவிடம் தனக்கு 'சந்யாச தீட்சை' அளிக்குமாறு வேண்டிக் கொண்டார். குருவோ, பெற்றோரின் அனுமதி இல்லாமல், அவர்கள் ஆசி இல்லாமல், சந்யாச தீட்சை அளிக்க முடியாது என்ற விதிமுறையைக் கூறி, தீட்சை அளிக்க மறுத்தார். அதனால் கிருஷ்ணமூர்த்தி தனது பெற்றோருக்கு சந்யாசி ஆகத் தேவையான அனுமதியை வழங்குமாறு கடிதம் எழுதினார். ஆனால் அவரது பெற்றோர் அவரைச் சொந்த ஊருக்கு வருமாறு பதில் எழுதினர். எனவே கிருஷ்ணமூர்த்தி கிராமத்திற்கு நேரில் சென்று அனுமதி பெற முடிவு செய்தார்.

சந்யாச வேட்கை கிருஷ்ணமூர்த்தி சொந்த ஊரான ஆடுதுறைக்குத் திரும்பினார். அந்த நாள் அவர் முன்பே பெற்றோரிடம் கூறியிருந்தபடி 96-வது நாளாக இருந்தது. ஆனால், அன்று காலை அவரது தந்தை அவர் சென்று சேரும் முன்பே இறந்துவிட்டிருந்தார். இடுகாட்டிற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அதனால் அங்கே விரைந்தார் கிருஷ்ணமூர்த்தி. அங்கும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க மறுத்துவிட்டார். தனக்குப் பற்றற்ற மனம் இருப்பதாகவும், உறவுகள் மீதான தனது பற்றுதலை வெளிப்படுத்தும் எந்தச் செயலிலும் ஈடுபட முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கிருஷ்ணமூர்த்தியின் மனவுறுதியைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர்.
தந்தைக்கான 13 நாள் சடங்குக்குப் பின்னர் கிருஷ்ணமூர்த்தி தாயிடமும், குடும்பத்தாரிடமும் சந்யாசம் பெறுவதற்கான அனுமதியைக் கோரினார். ஆனால், மூத்த மகனான அவர் சந்யாசி ஆக அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் அவரது சகோதரர்களுக்குப் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வேத பண்டிதர்களாக வேலை கிடைத்தது. அதனால் குடும்பம் புதுக்கோட்டைக்குக் குடிபெயர்ந்தது. கிருஷ்ணமூர்த்தி மனதளவில் தன்னை சந்யாசியாக உணர்ந்திருந்ததால் நடந்தே புதுக்கோட்டைக்குச் சென்றார். அங்கு குடும்பத்தினருடன் இல்லாது தனித்திருந்து, உணவுக்காக பிக்ஷை ஏற்று வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தார். ஒரு சன்யாசி தனது உணவைப் பெறுவதற்காக வேலை செய்யவோ சம்பாதிக்கவோ கூடாது. பிட்சை எடுத்துதான் உண்ண வேண்டும். உப்புகூட இல்லாமல் ஒரு சிறிய அளவு பிரதான உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இதனைக் கிருஷ்ணமூர்த்தி பின்பற்றினார்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழிந்தும் கிருஷ்ணமூர்த்தி தனது முடிவில் உறுதியாக இருந்ததால், தாயாரும், பிற குடும்ப உறுப்பினர்களும், அவரது வைராக்கிய நிலையை உணர்ந்து அவர் சந்யாசம் எடுத்துக்கொள்ள அனுமதித்தனர். ஆனால், காசிக்குச் செல்லக் கூடாது என்றும், தமிழ்நாட்டிலேயே சந்யாச தீட்சை பெற வேண்டும் என்றும் திட்டவட்டமாகக் கூறினர்.
கிருஷ்ணமூர்த்தி அதனை ஏற்றுக் கொண்டார். தனக்கு சந்யாச தீட்சை வழங்கும் குருவைத் தேடத் தொடங்கினார்.
ஜட்ஜ் சுவாமிகள் அந்தக் காலகட்டத்தில்தான் மதுரையில் தங்கியிருந்த ஜட்ஜ் சுவாமிகளைப் பற்றிக் கிருஷ்ணமூர்த்தி கேள்விப்பட்டார். மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். ஜட்ஜ் சுவாமிகளைச் சந்தித்து தான் சந்யாசம் பெறத் தயாராக இருப்பதை விவரித்தார். தன்னைச் சீடராக ஏற்றுக்கொண்டு தீட்சை அளிக்குமாறு ஜட்ஜ் சுவாமிகளிடம் வேண்டிக் கொண்டார்.
கிருஷ்ணமூர்த்தியின் தவிப்பையும், தாகத்தையும் ஜட்ஜ் சுவாமிகள் உணர்ந்தார். தீட்சைக்குத் தகுதியானவர் என்பதையும் சில சோதனைகள் மூலம் அறிந்தார். தாயாருக்கு முன்பாக மட்டுமே சந்யாசத்தை மேற்கொள்ள முடியும் என்றும், சந்யாசம் மேற்கொள்வதற்கு முன்னும் பின்னும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் கூறினார்.
கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டையை அடைய 70 மைல் தொலைவுக்கு மேல் நடந்து சென்றார். அந்நேரத்தில், அவர் ஒரு இடுப்புத் துணியை மட்டுமே அணிந்திருந்தார். அவர் தனது தாயாரை அடைந்து நடந்ததைக் கூறினார். பின் தாயாரை மூன்று முறை வலம் வந்து நமஸ்காரம் செய்தார். அவர் எழுந்ததும், குருவின் ஆசிர்வாதத்தால் அவரது இடுப்புத் துணி அவிழ்ந்து கீழே விழுந்தது. கிருஷ்ணமூர்த்தி அங்கே அவதூதராய் (பரிசுத்த நிர்வாணம்) காட்சி அளித்தார்.
கிருஷ்ணமூர்த்தி, குருவின் ஆசி பெற்றார். 'சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள்' என்ற தீட்சா நாமம் பெற்றார். தொடர்ந்து அவதூதராகவே பல தலங்களுக்கும் பயணப்பட்டார். முதல் தலமாக நெரூர் சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானம் சென்று வழிபட்டார்.
அவதூதராய்ப் பயணப்பட்ட சுவாமிகள் பொதுமக்களிடம் பலவிதமான எதிர்ப்புகளைச் சந்தித்தார். 'அவதூதர்' பற்றியோ, 'புனித நிர்வாணம்' பற்றியோ அறியாத பொதுமக்களால் அவர் பலவித இன்னல்களுக்கு ஆளானார். அவதூதர்கள் மற்ற துறவிகளைப் போல தினமும் குளித்து பூஜை செய்ய வேண்டியதில்லை, எனவே சுவாமிகளின் உடல் முழுவதும் சேறும் அழுக்குமாக இருந்தது, பல இடங்களில் பொதுமக்களால் அவர் ஒரு பைத்தியக்காரராகக் கருதப்பட்டார். சில இடங்களில் சிலர் அவரைத் தொந்தரவு செய்யும் நபராகக் கருதினர், எனவே அவர்மீது கற்களை எறிந்தனர். சுவாமிகளுக்குத் தனது உடல் மற்றும் காயங்கள் பற்றிய உணர்வு இல்லை, எல்லா ஒடுக்குமுறைகளையும் புறக்கணித்து நடந்து சென்றார். உணவு யாரேனும் அளித்தால் உண்பார். வழியில் கிடைக்கும் பழங்களை உண்பார். எதுவும் கிடைக்காவிட்டால் பட்டினியாகவே இருப்பார். இப்படியே அவரது ஆன்மிகச் சுற்றுப்பயணம் தொடர்ந்தது.
(தொடரும்) |
|
|
| பா.சு. ரமணன் |
|
|
|
|
|
|
|
|
|
|