Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | முன்னோடி | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | கவிதைப் பந்தல் | நூல் அறிமுகம் | சின்ன கதை
Tamil Unicode / English Search
அலமாரி
'கம்பை உடைய யானே கம்பன்'
- அரவிந்த்|மே 2025|
Share:
'கண்டது கற்கப் பண்டிதனாவான்' என்று ஒரு பழமொழி உண்டு. இதற்கு மாறாக விளங்கியவர் பண்டிதமணி. இவர் கண்டவற்றைப் படியாமல் சில சிறந்த நூல்களை மட்டுமே ஊன்றிப் படித்துப் புலமை அடைந்தவர். சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம், திருவாசகம், அகநானூறு, புறநானூறு, கம்பராமாயணம், திருக்குறள் (பரிமேலழகர் உரை) ஆகிய நூல்களையே இவர் பயின்றார்.

வகுப்பு அறைக் காட்சி
எப்போதும் பண்டிதமணி நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே இருப்பார். காண வருவோர், எதிரிலுள்ள நாற்காலிகளில் அமர்வர். இடையில் ஒரு மேசை இருக்கும். நூல்கள் திறந்த வண்ணம் எப்போதும் மேசைமீது இருப்பதுண்டு. பேராசிரியர் ஒருவர் மாணவர்க்குப் பாடஞ் சொல்லும் வகுப்பு அறையின் காட்சியை அவர்கள் இருக்கும் இடத்தில் காணலாம்.

வண்டிப் பயண நிகழ்ச்சி
சிறிது தொலைவிலுள்ள இடங்களுக்கும் பண்டிதமணி அவர்கள் மாட்டு வண்டியிலேயே செல்ல நேர்ந்தது. எனவே அண்ணாமலை நகரில் இருந்தபோது, அவரிடம் ஓர் ஒற்றைமாட்டு வண்டி இருந்தது. அதில் அவர் ஏறிக்கொண்டு நாள்தோறும் மாலைநேரத்தில் உலாவி வரச் செல்வார். ஒருநாள் நண்பர் ஒருவரையும் வண்டியில் உடனழைத்துச் சென்றார். வண்டி. போகும்போது, முன்பக்கமாக உட்கார்ந்துகொண்டு, 'இப்படிப் போ, அப்படிப் போ' என்றுகூறி, வண்டிக்காரனுக்கு வழி காட்டிக்கொண்டே சென்றார். உடன் வந்தவரோடு ஒரு சிறிதும் பேசவில்லை. அதனால், அந்த நண்பரின் மனம் புண்பட்டது.

அப்போது பண்டிதமணி, "வண்டியில் பூட்டப்பட்டிருக்கும் மாடு புதிது, வண்டிக்காரனும் புதிய ஆள்; அவன் மாட்டை ஓட்டுகிறான்; நான் அவனை ஓட்டுகிறேன். எனவே, என் கருத்தனைத்தும் அப்பக்கமே திரும்பி விட்டது" என்றார்.

மனோவேகமும் ஊர்தியின் வேகமும்
ஒரு தடவை, ஒரு சொற்பொழிவுக்குப் பண்டிதமணி காலங்கடந்து சென்றார்; அவ்வமயம் "யான் இன்று குறித்த காலங்கடந்து வந்தது பற்றி மன்னிக்க வேண்டுகிறேன். என் மனோவேகம் அதிகமாக இருந்தும், இரதவேதம் குறைவு பட்டமையின் தாமதித்து வர நேர்ந்தது" என்று வண்டி மெல்ல நகர்ந்ததைக் குறிப்பிட்டார்கள்.

திருவாவடுதுறை மடத்தில்...
திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக இருந்த அம்பலவாண தேசிகர் அவர்களும் பண்டிதமணி அவர்களும் இனிய நண்பர்களாக இருந்தனர். முதல்முறை அவர்களைக் காண நேர்ந்தபோது, பண்டிதமணி அவர்கள் மகா சன்னிதானம் அவர்களுடைய பாதத்தில் விழுந்து வணங்கினார்கள்.

அப்போது, அவர்களுடைய கைப்பிரம்பு வழுக்கியதால் பண்டிதமணி கீழே விழுந்துவிட்டார். மகா சன்னிதானம் உடனே எழுந்து வந்து பண்டிதமணியைத் தாங்கினார்.

அப்போது பண்டிதமணி, "பக்தர்களாகிய நாங்கள் தவறுவதும் சன்னிதானங்கள் தாங்குவதும் இயல்புதானே" என்று சிலேடை நயத்தோடு குறிப்பிட்டனர்.

இனி, ஆதினத்திற்கு வரும்போது, கீழே விழுந்து வணங்க வேண்டாம் என்று மகா சன்னிதானம் பண்டிதமணியைக் கேட்டுக் கொண்டாராம்.

படி அளப்பவன்
திருச்சிராப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் ஒருமுறை பண்டிதமணி அவர்களைத் திருச்சிக்கு மேற்கே மூன்றாவது மைலில் உள்ள திருக்கற்குடி கோவிலுக்கு அழைத்துச் சென்றாராம். அப்போது கோவிலில் ஒவ்வோர் இடத்திலும் பண்டிதமணியை வழிகாட்டி அழைத்துச் சென்றமையால் இடையிடையே 'படி இல்லை' என்று சொல்லிக்கொண்டே வந்தார்களாம். அப்போது, பண்டிதமணி, "இறைவன் சன்னிதிக்கு வந்து படி இல்லை என்று சொல்லாதீர்கள்; இறைவன்தானே எல்லோருக்கும் படி அளப்பவன்" என்று கூறினார்களாம்.

தலைவருக்கும் தலைவர்
பண்டிதமணி அவர்கள் தலைமை தாங்காமல், சொற்பொழிவாளராக மட்டும் கலந்து கொண்ட கூட்டங்களிலும் ஏனைய சொற்பொழிவாளர்கள் யாவரும் தரையில் உட்கார்ந்திருக்க, இவர்கள் மட்டும் தலைவருக்கு அருகே நாற்காலியில் இருந்து வந்தார்கள். ஆகையால் விழாத்தலைவர்களும் மெய்ம்மறந்து. இவர்களையே *தலைவர் ' என்று குறிப்பிடுவது வழக்கமாக இருந்தது.

யானே கம்பன்
'கம்பர் யார்?!' என்ற கிளர்ச்சி தமிழகத்தில் நடைபெற்றபோது, "கம்பை உடையவன் கம்பன்; அவ்வகையில் பார்க்கும்போது யானே கம்பன்" என்று பண்டிதமணி வேடிக்கையாகச் சொன்னார்கள்.

மேன்மாடி வேண்டாம்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டக் குழுவுக்குப் பண்டிதமணி தலைவராக நியமிக்கப் பெற்றார். அக்குழுவின் கூட்டம் வழக்கம்போல் கடற்கரையிலுள்ள பல்கலைக்கழக மாளிகையில் மேன்மாடியில் நிகழுமென்று அறிவிக்கப் பட்டிருந்தது. சிலகாலம் கவர்னராக இருந்த சர். மகமது உஸ்மான் அப்போது துணைவேந்தராக இருந்தார்கள். அவரது இல்லத்திற்குச் சென்று பண்டிதமணி கூட்ட அறிக்கையைக் காண்பித்தார்கள். உடனே, அவர், "பண்டிதமணி அவர்கள் தலைவராகவோ உறுப்பினராகவோ கலந்துகொள்ளும் எல்லாக் கூட்டங்களும் கீழ் இடங்களிலேயே நிகழவேண்டும்" என்று ஆணை பிறப்பித்தார்.

வருக! வருக!... தருக தருக!
பண்டிதமணியிடம் பெருமதிப்புடைய ஒரு செல்வர் தம் வீட்டுக்கு அவரை அழைத்தார். மோட்டார் தம் வீட்டு வாயிலில் நின்றதும், அச்செல்வர் பெருமகிழ்ச்சி அடைந்து, விரைந்து சென்று மோட்டார் கதவைத் திறந்தார்; ஊன்றுகோல் முதலிய பொருள்களைத் தாமே வேகமாக வீட்டுக்குள் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்து, பண்டிதமணியை "வருக, வருக" என அன்பொழுக அழைத்தார்.

சிறிதும் பதறாமல், பண்டிதமணி, "அந்த ஊன்றுகோலைத் தருக; இன்றேல் என்னால் அங்கு வர இயலாது!" என்றார்.

பணிவிடை செய்த பழுத்த புலவர்
பண்டிதமணி அவர்களின் அறிவை வியந்து, அவருடைய அரிய நட்பைப் பெற விரும்பியவர் பலர். அவ்வறிஞர்கள், அவர்களது உடற்குறையைக் கண்டு உள்ளம் உருகிப் பணிபுரிவார்கள். ஒருகால், பண்டிதமணி அவர்கள் சிகிச்சை செய்துகொள்ளப் பொன்னமராவதி மருத்துவ நிலையத்திற்குச் சென்றிருந்தார்கள். அப்போது டாக்டர் வெளியே போயிருந்தார். பணியாள் போலக் காட்சி தந்து சட்டையின்றியும் குடுமியோடும் ஒருவர் மருத்துவ நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். பண்டிதமணி, அவரைப் பார்த்து, "ஐயா, கொஞ்சம் தண்ணீர் கொண்டுவர முடியுமா?" என்றார்.

அவர், உடனே சென்று, தண்ணீர் கொண்டுவந்து பணிவுடன் கொடுத்தார். பிறகு, அவரை, "இட்டிலி கொண்டு வருக' என்றார் பண்டிதமணி. அவர் உடனே சென்று இட்டிலியும் கொண்டுவந்து கொடுத்தார். இந்நிலையில் டாக்டர் வேணுகோபால் நாயுடு அவர்கள் மருத்துவ நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்கள். "யான் அறிமுகப்படுத்தி வைக்கு முன்னரே பெரும் புலவர்களாகிய நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் தெரிந்துகொண்டுவிட்டீர்களே!" என்று அவர் சொன்ன பிறகே, தமக்குப் பரிவுடன் பணிவிடை செய்த அந்த அடக்கமான அன்பர்தான், சோழவந்தானூர் மகாவித்துவான் அரசஞ் சண்முகனார் என்பதைப் பண்டிதமணி அவர்கள் அறிந்து கொண்டார்கள். அன்று தொடங்கி, இருவரும் மிக நெருங்கிய நண்பராயினர்.

அரசஞ் சண்முகனார்
சோழவந்தானூர் மகாவித்துவான் அரசஞ் சண்முகனார் பேரறிஞராகவும், பெரும்புலவராகவும் அக்காலத்தில் திகழ்ந்தார். இலக்கியப் பயிற்சியில் தமக்கு ஒப்பாரும் மிக்காருமில்லை என்று சொல்லும்படி அவர் சிறப்புடன் இருந்தார். இலக்கணக்கடல் என்று அவரை அறிஞர் பாராட்டினர். இலக்கியங்களைப் பிறர் உதவியின்றிப் பண்டிதமணி தாமே படித்துணர்ந்த போதிலும், அவர் சேனாவரையம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களை அரசஞ் சண்முகனாரிடமே பாடங் கேட்டார். சண்முகனார் சொல்லிக் கொடுத்ததைவிட, பண்டிதமணி தாமே ஆராய்ந்து கேட்ட வினாக்களுக்கு விடையும், ஐயங்களுக்குத் தெளிவுரையும் கூறியதே பெரும்பகுதி எனலாம். சண்முகனாரைப் பண்டிதமணி தம் ஆசிரியராகவே கருதினார்; ஆனால், சண்முகனார் பண்டிதமணியை நண்பராகவே மதித்தார். கதிரேசனாருடைய இயற்கையறிவும் திறனும் அவரைப் பெரிதும் வியப்படையச் செய்தன. சண்முகனார் பல நாட்கள் மகிபாலன்பட்டியிலேயே தங்கி இலக்கண, இலக்கியக் கடலில் தாமும் மூழ்கி, பண்டிதமணி அவர்களையும் மூழ்குவித்தார்.

அந்நாட்களில் பண்டிதமணியின் அருமைத் தாயார் சிவப்பி ஆச்சி அவர்கள் சண்முகனாரைத் தம் பிள்ளைகளில் ஒருவராகவே கொண்டு அவரை அன்புடன் உபசரித்து வந்தார்கள்.
தொகுப்பு: அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline