| 
                                            
												|  |  
												|  |  
	|  |  
												| எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர், சமூகசேவகர் எனப் பல தளங்களில் இயங்கியவர் சேலம் பகடால நரசிம்மலு நாயுடு. இவர், ஏப்ரல் 12, 1854 அன்று, ஈரோட்டில், அரங்கசாமி நாயுடு-லட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் பாலகிருஷ்ணன். தாத்தா நரசப்ப நாயுடு மிகவும் புகழ்பெற்று விளங்கியதால் இவரது இயற்பெயர் மறைந்து தாத்தாவின் பெயரே நிலைத்து நரசிம்மலு நாயுடு ஆனார். திண்ணைப் பள்ளியில் துவக்கக்கல்வி பயின்றார். தாய்மொழியான தெலுங்கை முதற்பாடமாகப் படித்தார். பின்னர் மாவட்ட அரசுப்பள்ளியில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் வல்லவரானார். நூலகங்களுக்குச் சென்று படித்து சமயம், தத்துவம், வரலாறு, இலக்கியம், யாப்பு என அனைத்திலும் தேர்ந்தார். அந்தச் சிறுவயதிலேயே கட்டுரை எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்ப அவை தினவர்த்தமானி, அமிர்தவசனி, கஜன மனோரஞ்சனி, பிரமதீபிகை போன்ற அக்காலத்தின் புகழ்பெற்ற இதழ்களில் வெளியாகின. எட்டு வயது எதிராஜம்மாளுடன் 14 வயது நரசிம்மலு நாயுடுவிற்குத் திருமணம் நிகழ்ந்தது. 
 சிலகாலம் மருத்துவ உதவியாளர், மக்கள்தொகை கணக்கெடுப்பாளர், ஆசிரியர் போன்ற பணிகளைச் செய்து வந்தார். 1877ல் சேலத்தில் 'சுதேசாபிமானி' என்னும் இதழைத் துவக்கினார். "சேலம் மாவட்ட பூமி சாஸ்திர கிரந்தம்" என்பது இவரது முதல் நூலாகும். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மாணவர்களின் கணித அறிவு மேம்படும் பொருட்டு 'சிறந்த கணிதம்' என்னும் நூலை எழுதினார். நகராட்சி ஆணையராக இருந்த ஸ்மால் துரை சேலம் பகடால நரசிம்ம நாயுடுவின் உயர்வில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். அவரது திறமையறிந்து ஊக்குவித்த துரையின் ஆதரவுடன் சேலம் பெண்கள் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார். அப்பள்ளி மாணவிகளுக்காக 'நீதிக் கொம்மி' என்னும் நூலை எழுதினார். நடுவில் சில மாதங்கள் ஸ்ரீரங்கத்தில் வசிக்க நேர்ந்ததால் அக்காலகட்டத்தில் 'ஸ்ரீரங்க ஸ்தல பூஷணி' என்ற இதழைத் துவங்கி நடத்தினார். 1879ல் சேலத்திலிருந்து கோவைக்குக் குடிபெயர்ந்த போது 'கோயமுத்தூர் அபிமானி' என்னும் இதழைத் துவங்கினார். ஒரே காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களிலிருந்து மூன்று இதழ்களை நடத்திய பெருமை இவருக்குண்டு. இவர் தனது இதழ்களில் தயவு, தாட்சண்யம் இல்லாமல், தவறு செய்பவர்களைப் பற்றி ஆதாரத்துடன் எழுதினார். இதனால் மக்கள் ஆதரவு பெருகியது. ஆனால், அதிகாரிகளின் எதிர்ப்பு உண்டானது. அவர்களால் எதிர்ப்பு, வழக்கு, விற்பனையில் நஷ்டம் வந்தபோதும் அஞ்சாது நடத்தினார். ஆனாலும் தொடர் நஷ்டம் உள்ளிட்ட சில காரணங்களால் இதழ்களை நிறுத்த வேண்டியதாயிற்று. அதனால் கோவையில் 'கலாநிதி' என்னும் பெயரில் சொந்தமாக ஓர் அச்சுக்கூடத்தை நிறுவினார். 1881ல் 'கோயமுத்தூர் கலாநிதி' என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழிலும் மக்களின் இடர்களைக் கண்டும் காணாத அதிகாரிகளின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். மதமாற்ற அக்கிரமங்களையும், அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்பட்டதையும் ஆதாரத்துடன் எழுதினார். அதனால் அதிகாரிகள் இவருக்கு எதிராயினர். ஆனாலும், மக்கள் ஆதரவு இருந்தது. வாரம் இருமுறை வெளிவந்த முதல் பத்திரிகை இவரது கலாநிதிதான். அதில் பெண் முன்னேற்றம், சமூக விடுதலை, பெண் கல்வி, சமயம் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலுமாகத் தொடர்ந்து பல விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கோவையில் பிரம்ம சமாஜக் கிளையைத் தோற்றுவித்தார். அதன்மூலம் சமூக நற்பணிகளைச் செய்தார். இவர் எழுதியிருக்கும் 'கோயமுத்தூர் ஜில்லா பூமி சாஸ்திர கிரந்தம்' என்ற நூல் குறிப்பிடத்தக்க ஒன்று.
 
 விவசாயம்பற்றி ஆராய்ந்து சில நூல்களை இவர் எழுதியிருக்கிறார், அதுவும் 1900த்திலேயே. விவசாயம்பற்றி முதன்முதலில் நூல் எழுதிய முன்னோடி இவர்தான். 'விவசாய சாஸ்திரம்' என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் கொண்ட நூலை இவர் எழுதியிருக்கிறார். 'குடியானவர் கஷ்ட தசை', 'எருவைக் காக்கும்விதம்', 'விவசாயப் பழமொழிகள்' போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. பெண் விடுதலைக்காகப் பாடுபட்ட முன்னோடியான இவர், அவர்களுக்காகப் பல்வேறு நலத்திட்டப் பணிகளைச் செய்தார். பிரம்ம சமாஜக் கொள்கைகளைப் பின்பற்றியவர் என்பதால் அச்சமாஜத்தின் மூலம், பெண்கல்வி மற்றும் வாழ்க்கை நலனுக்காகப் பணிகள் செய்தார். சென்னை மகாஜன சபாவின் செயலாளராக பணியாற்றிய இவர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மேல்நிலை அடைய உதவினார். அவர்களுக்காக உண்டு-உறைவிடப் பள்ளி ஒன்றையும் அமைத்து நடத்தினார்.
 
 சிறந்த சமூக சீர்த்திருத்தவாதியாகத் திகழ்ந்தவர் நரசிம்மலு நாயுடு. கோவை நகரை நிர்மாணித்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. தமிழகத்தின் மான்சென்ஸ்டராகக் கோவை உருவாக இவரே முழுமுதற் காரணம். கோவையின் முதல் பஞ்சாலை அமைந்தது இவரது முயற்சியால்தான். அதற்காகத் தனது நிலத்தின் ஒரு பகுதியைத் தந்துதவினார். கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் முதல் ஆலையைப் போத்தனூரில் அமைத்ததும் இவரே! கோவையின் புகழ்பெற்ற விக்டோரியா ஹால் எனப்படும் டவுன் ஹாலைக் கட்டியவர் இவர்தான். விக்டோரியா மகாராணியின் ஐம்பதாம் ஆண்டு ஆட்சி விழாவை முன்னிட்டு இவர் கட்டியது அந்த மண்டபம். காங்கிரஸ்மீது அபிமானம் கொண்டிருந்தார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் கிளையை ஏற்படுத்தி, அதன் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். அக்காலத்தில் அங்கே தண்ணீர் பிரச்சனை அதிகம் இருந்தது. அதனைத் தீர்க்க, வெள்ளியங்கிரி மலை அருகே உள்ள எலிவால் மலைச்சாரலிலிருந்து பாயும் முத்திக்குளம் நீரை நொய்யல் ஆற்றில் திருப்பி விடுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். அங்கிலேய அதிகாரிகளால் பாராட்டப்பட்ட அத்திட்டமே பிற்காலத்தில் சிறுவாணித் திட்டம் உருவாக வழிவகுத்தது. கோவை மக்களின் நீண்டகாலத் தண்ணீர்ப் பஞ்சமும் நீங்கியது. அந்தவகையில் கோவையின் வளர்ச்சிக்கு வித்திட்ட மேதைகளுள் ஒருவர் நரசிம்ம நாயுடு என்பதில் ஐயமில்லை.
 |  
												|  |  
	|  |  
												| இதழியல்பணி, சமூகப்பணி இவற்றோடு நரசிம்மலு நாயுடு செய்த எழுத்துப் பணியையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சமயம், தத்துவம், வரலாறு, இசை என்று பல தலைப்புகளில் இவர் நூல்கள் எழுதியிருக்கிறார். சேலம் டவுன் ஸ்கூல் சிந்து, பிரம்ம சமய சரித்திரக் கீர்த்தனைகள், கோயமுத்தூர் கோதையர் கொம்மிகள் உள்ளிட்ட நூல்கள் அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை. இசைபற்றி விரிவாக ஆராய்ந்து 'சரித்திர சங்கிரகம்' என்ற நூலை எழுதினார். தென்னிந்திய சரிதம், பலிஜவாரு புராணம் (பலிஜா நாயுடு சமூக வரலாற்று நூல்), ஆரிய தருமம், இந்து பைபில் உள்பட 90க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தமிழில் பயண இலக்கியம் பற்றி எழுதிய முன்னோடி எழுத்தாளர். இவர் எழுதியிருக்கும் 'ஆரியர் திவ்விய தேச யாத்திரை' என்னும் நூல் குறிப்பிடத்தகுந்தது. 1889ல் வெளியான இந்நூலில் காசி, கயா, கல்கத்தா, பூரி, அயோத்தி, டெல்லி, அமிர்தசரஸ், ஆஜ்மீர், உஜ்ஜயனி போன்ற நகரங்களுக்குத் தான் மேற்கொண்ட யாத்திரையின் பயணத் தடம், தங்குமிடம், ரயில் வசதி, உணவு போன்ற வசதிகள் குறித்து மிக விரிவாக அந்நூலில் விளக்கி இருக்கிறார். அங்குள்ள மனிதர்கள், சந்தித்த நபர்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் எனப் பல செய்திகளை சுவாரஸ்யமாக இதில் விளக்கியிருக்கிறார். காசி பற்றிய வர்ணனை இது. "அசி முதல் வருணை வரைக்கும் மத்தியில் ஆயிரம் இரண்டாயிரம் பிராமணர்கள் வரையில் அந்தக் கட்டங்களில் விசுப்பலகையைப் போட்டுக் கொண்டும், குடைகளின் நிழலிலிருந்து கொண்டும், உபசார திரவியங்களான சந்தன, புஷ்ப விபூதி, கோபி சந்தனங்களை வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். இவர்களன்னியில் கெங்காபுத்திரர்கள், காட்டியர்கள், டானியர் என்ற பஞ்சதிராவிட பஞ்ச கெவுடாள் முதலான பிராம்மண யாசகர்கள், பத்துப் பதினையாயிரம் பெயர்கள் வரையில் இருக்கிறார்கள். இந்தக் கட்டங்களில் எங்கு பார்த்தபோதிலும் ஆயிரக்கணக்கான ஸ்நானம் செய்கிறவர்களும், சுவாமி தரிசனத்திற்கு உயர்ந்திருக்கும் படிக்கட்டுகளில் ஏறிப்போகப்பட்டவர்களுமான ஜனங்களின் காக்ஷி வெகுவினோதமாக இருக்கிறது..." என்கிறார். 
 இந்த நூலின் இரண்டாம் பாகமாக தக்ஷிண இந்தியா சரித்திரத்தில் (1919) தென்னாட்டு யாத்திரை அனுபவங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார். சென்னையின் வரலாறு, அப்பெயர் வரக் காரணம், மதராஸ் என்ற பெயர் பெறக் காரணம், சென்னையின் புகழ்பெற்ற இடங்கள், மக்கள்தொகை, ஆலயங்களின் சிறப்புக்கள் போன்றவற்றையும் நூல் பேசுகிறது. சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல நகரங்களின் ஆலயப் பெருமைகளை இந்நூலில் விளக்கியிருக்கிறார். சான்றாக இன்றைய திருவள்ளூரின் அக்காலப் பெயர் திரு எவ்வுளூர். அதுபோல திருத்தணியின் பழைய பெயர் 'செருத்தணி'. முருகன் சூரபத்மனோடு நடத்திய யுத்தம் முடிந்து 'செரு' தணிந்து ஓய்வெடுத்ததால் இப்பெயர் என்று குறிப்பிடுகிறார். பெங்களூருக்கு அப்பெயர் வரக் காரணம் மொச்சை மிகுதியாக விளைந்ததுதான் என்கிறார். (மொச்சை = பேங்கில்) கோனிமுத்தூரே கோயமுத்தூர் ஆகியிருகிறது என்கிறார். வரலாற்றுக் கருவூலங்களாக இவரது நூல்கள் அமைந்துள்ளன.
 
 நரசிம்மலு நாயுடுவிற்கு பெருமையையும் எதிர்ப்பையும் ஒரே சமயத்தில் தந்த நூல் 'இந்து பைபில் என்னும் ஆரியர் சத்திய வேதம்'. 'பைபில்' என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதற்காக எதிர்ப்பையும், வேதம், வேதாந்தம், உபநிஷத் ஆகியவற்றிலிருந்து தொகுத்துத் தந்திருப்பதால் பாராட்டையும் பெற்ற நூல் இது. திவான் பகதூர் எஸ். சுப்பிரமணிய ஐயர், தமிழறிஞர் சி.வை, தாமோதரம் பிள்ளை, ஜெயராம் பிள்ளை, வெங்கட்ராம ஐயங்கார் உள்ளிட்ட அறிஞர்களால் பாராட்டப்பட்ட இந்த நூலை தி ஹிந்து, இந்தியன் சோஷியல் ரிஃபார்மர், சித்தாந்த தீபிகை, த மெட்ராஸ் ஸ்டாண்டர்டு உள்ளிட்ட இதழ்களும் பாராட்டியிருக்கின்றன. வேதங்களில் இருந்து சிறந்த கருத்துக்களை எடுத்து அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பையும் கூடவே நீண்ட விளக்கத்தையும் இந்த நூலில் அளித்திருக்கிறார். வேதங்கள், வேதங்களின் பிரிவுகள், உபநிஷத்துக்கள், அவற்றின் பிரிவுகள், சிறப்புகள் போன்றவற்றை விளக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. நூலில் 'அத்வைத சித்தாந்த ஸார வினா விடை' என்னும் பகுதியில் அத்வைதம் பற்றி, பிரபஞ்ச மாயை பற்றி, உலகம் பற்றி, உலகைப் படைத்தவனான ஈஸ்வரன்பற்றி பல கேள்விகள் எழுப்பப்பட்டு விடை காணப்பட்டிருக்கின்றன. கூடவே விசிஷ்டாத்வைதம், த்வைதம் குறித்தும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது. பல்வேறு சமயங்களையும், மதங்களையும் ஆராய்ந்து அவர் எழுதியிருக்கும் 'மதவிருட்சம்' குறிப்பிடத் தகுந்ததாகும். பல்வேறு மதங்களை ஆராய்ந்து மிக விரிவாக எழுதப்பெற்ற முதல் சமய தத்துவ நூல் அதுதான்.
 
 மகன், மகள் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தது இவரை வெகுவாகப் பாதித்தது. மெள்ள அதிலிருந்து மீண்டு, நூல்கள் எழுதுவதிலும், சமூகப்பணிகளிலும் கவனம் செலுத்தினார். தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான மேடைகளில் உரையாற்றிய பெருமையுடையவர் இவர். 'பிரசங்க சாரகம்' என்று போற்றப்பட்டவர். தமிழ் இதழியலின் முன்னோடி என்றும் இவரைச் சொல்லலாம். இவர் வாழும்போதே இவரது வாழ்க்கை வரலாற்றை ஜீ.எம். வெங்கட்ராம நாயுடு எழுதி வெளியிட்டார். பிரம்ம சமாஜக் கொள்கைகளில் இவருக்கிருந்த பற்று அளவிடற்கரியது. தனது உயிலில் இவர், "அடியிற்கண்ட எனது சொத்துக்களையும் அவற்றின் வருமானத்தையும் கொண்டு கல்கத்தா சாதாரண சமாஜ சாதனாச்சிரமத்தைப் போல 'கோயமுத்தூர் நரசிம்மலு நாயுடு பிர்ம சாதனாச்சிரமம்' என்ற பெயரால் ஒரு தர்மத்தை எனது தோட்ட பங்களாவில் ஸ்தாபிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். வாழ்வாங்கு வாழ்ந்த இவர், ஜனவரி 21, 1922 அன்று காலமானார். இன்றளவும் இவர் பெயரால் கல்வி நிறுவனங்களும், சேவை அமைப்புகளும், அறக்கட்டளைகளும் சிறப்புடன் கோவையில் இயங்கி வருகின்றன. தமிழர்கள் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய முன்னோடி சேலம் பகடால நரசிம்மலு நாயுடு.
 
 (தகவல் உதவி: நரசிம்மலு நாயுடு எழுதிய 'இந்து பைபில்' மற்றும் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய இந்திய இலக்கியச் சிற்பிகள்: சே.ப. நரசிம்மலு நாயுடு.)
 
 பா.சு. ரமணன்
 |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  |