Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
யாரே அறிவார்
- கஜமுகன்|டிசம்பர் 2025|
Share:
நாடகம் முடிந்ததும் முதலாளி, சக நடிக நடிகைகள் எல்லோரும் சித்ரகலாவைச் சூழ்ந்துகொண்டு, ஒரு பாட்டம் புகழ்ந்தார்கள். எல்லோருடைய புகழுரைகளையும் பாராட்டுரைகளையும் ஒரு சோகப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு அரிதாரத்தைக் கூடக் கலைக்காமல் வீடு நோக்கிப் பறந்தாள் அவள்.

வீட்டிலே பெரிய பெண் மட்டும் கொட்டுக் கொட்டென்று விழித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பத்து வயது இருக்கும். நிர்ப்பந்தம் காரணமாகப் பயந்து நடுங்கிக் கொண்டே தனியாக வாழக் கற்றுக்கொண்டு வந்த அவளுக்குக் கீழே எட்டு வயதிலும் மூன்று வயதிலும் இரண்டு தம்பிகள். பத்து வயதுப் பெண்ணிடம் எவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் செல்கிறாள். அவளுக்குத்தான் என்ன நெஞ்சுத் துணிச்சல், இந்த விவரமறியாக் குழந்தைகளைத் தனியே விட்டுச் செல்வதற்கு?

அக்கம்பக்கத்தார் ஏதேதோ தூற்றினார்கள்: பேசினார்கள். சித்ரகலா ஒன்றையும் லட்சியம் செய்யவில்லை. குழந்தை முதல் அவள் உள்ளத்தில் ஊறிவந்த ஒரு கலை ஆர்வத்தை ஈடேற்றிக் கொள்ளுவதற்குச் சந்தர்ப்பம் வாய்ப்பளித்தது. கனவாகிப் போன லட்சியம் நனவாகும் என்று நினைக்கவே இல்லை.

பன்னிரண்டு வருடங்களுக்கு முன் அவள் பதினாறு வயது இளம் சித்ரகலா. அழகுடன் கலைத்திறனும் படைத்திருந்தாள். பள்ளிக்கூடங்களில் நடித்துப் புகழ்பெற்ற பெருமையில் பொது அரங்கிலும் ஏறுவதற்குத் துடித்துக் கொண்டிருந்தாள். தகப்பனார் இல்லாத பெண். தாய்க்கு மகள் நடிப்பதில் அவ்வளவாக இஷ்டமில்லாவிடிலும் ஒரே பெண் அவள் என்ற வாஞ்சையால் உந்தப்பட்டு ஓரளவு சம்மதம் கொடுத்தாள்.

பிரபல நாடகக் கம்பெனி ஒன்றுக்கு நடிகைகள் தேவையெனக் கேள்விப்பட்டுச் சித்ரகலா அங்கு ஆஜரானாள். அந்தக் கம்பெனியின் நிர்வாகி குமரன் சித்ரகலாவைப் பார்த்த மாத்திரத்திலேயே வேறுவிதமான முடிவு செய்து விட்டான். ஆனால் அதை வெளிக் காட்டாமல் அவளது கலை ஆர்வத்துக்குத் தூண்டுகோலாக இருப்பது போல் பாவனை செய்து அவளை நாடக ஒத்திகைகளுக்கு வரச் செய்து, தனது வாழ்க்கை மேடையில் ஏற்றிக்கொண்டு விட்டான். அவளை அவன் அரங்கில் ஏறவிடவில்லை. குமரனின் அழகிலும், சாமர்த்தியத்திலும் மயங்கிச் சித்ரகலா தனது நாடக லட்சியத்தைத் துறந்து இல்லறத்தை மேற்கொண்டாள். சித்ரகலாவின் தாயாருக்கு இந்த ஏற்பாட்டில் பரம திருப்தி.

குமரனுடன் பத்து வருட காலம் வாழ்க்கை நடத்தினாள் சித்ரகலா. மூன்று குழந்தைகளுக்குத் தாயானாள். நடுவே சித்ரகலாவின் தாயார் மண்ணுலகை நீத்தாள். குமரன் சித்ரகலாவை நாடகத்தில் ஈடுபடுத்தாமல் இருந்ததுடன் தானும் அந்தத் துறைக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டு வடநாட்டில் ஓர் உத்தியோகத்துக்குப் போய் விட்டான்.

பத்து வருடங்கள் இன்பமாக இருந்த வாழ்க்கை திடீரென்று இருளடைந்து விட்டது. சித்ரகலாவையும் அவளது மூன்று குழந்தைகளையும் தனியே நிறுத்திவிட்டுக் குமரன் இறந்து விட்டான்.

சித்ரகலா தீவிரமாக யோசித்தாள். திக்கற்றுப் போன சித்ரகலா முதலில் ஒன்றுமே தோன்றாமல் தவித்துப் போனாள். குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று புரியவில்லை. குமரன் சம்பாதித்த பணமெல்லாம் அவ்வப்போது செலவுக்கே சரியாக இருந்ததே தவிர மிச்சப்படுத்தி வைக்கும்படியாக எதுவும் இல்லை. ஓரிரண்டு மாதங்கள் மனத்திலே அமுங்கிப் போயிருந்த நாடக ஆசை மெல்லத் துளிர்க்க ஆரம்பித்தது. முன்பு கலை ஆர்வமாக இருந்ததை இப்போது வாழ்க்கைக்கு வேண்டிய தொழிலாகப் பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று தோன்றியது. கையிலிருந்த சொற்பத் தொகையை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பினாள்.

மங்கலமாகச் சென்றவள் அமங்கலமாகத் திரும்பி வந்ததைப் பார்த்த ஊரார் அனுதாபத்தைக் காட்டினார்கள். அவளது வருங்கால வாழ்க்கையைப் பற்றிக் கவலையுடன் விசாரித்தார்கள். சித்ரகலா எல்லாரிடமும் சொல்லி விட்டாள், தான் நாடகத்தில் சேரப் போவதாக. அனுதாபமும் பரிவும் காட்டியவர்களெல்லாம் என்னத்தையோ வேண்டாதனவற்றைக் கண்டது போல் விலகிச் சென்றார்கள். சித்ரகலா அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

முன் குமரன் இருந்த நாடகக் கம்பெனிக்கே போனாள். முதலாளி அவளைத் தடை ஏதுமின்றி வரவேற்றார். சித்ரகலா இப்போது கதாநாயகி வேடத்துக்குரிய வயதுடையவளாக இல்லாவிடினும் துணைப் பாத்திரங்களில் நடிப்பதற்கு ஏற்ற முகவெட்டும் திறமையும் அவளிடம் இருந்ததை முதலாளி உணர்ந்து கொண்டார்.

அன்று முதல்நாளாக மேடை ஏறியதுமே எல்லாருடைய பாராட்டையும் பெற்று விட்டாள். அவள் குமரனை மட்டும் தன் வாழ்வில் சந்திக்காமல் இருந்திருந்தால் விதவைக் கோலத்தில் வயிற்றுக்காக நடிப்பை ஏற்க வேண்டி வந்திருக்காது. இத்தனை காலத்தில் அவள் பெரியதொரு நட்சத்திரமாக உருவாயிருப்பாள். பத்து வருஷ மண வாழ்க்கை பாலைவனச் சோலையாக இருந்துவிட்டுப் போய்விட்டது. நாடகத்தை விட்டு வந்ததும் விழித்து கொண்டிருந்த பெண், "என்னம்மா நல்லா நடிச்சியா?" என்று ஆவலுடன் கேட்டாள். மகளை அன்புடன் அணைத்துக் கொண்டாள். "நடிச்சேன்" என்று கண்களில் நீர்மல்கக் கூறினாள்.

''ஏனம்மா அழுகிறே? உனக்குப் பிடிக்கல்லையா?''

"பிடிக்காமல் என்ன? உன் அப்பா இருந்திருந்தால் நமக்கு இந்தக் கதி வந்திருக்காது. அதை நினைச்சுத்தான் அழறேன்" என்றாள் சித்ரகலா.

"நல்லா யோசிச்சுத்தானே அம்மா நடிக்கப் போனே? வேறே ஏதாச்சும் வேலை செய்திருக்கலாமே அம்மா."

"வேறு வேலை எனக்கு ஒண்ணுமே தெரியாது. அதனாலேதான் இதிலே புகுந்தேன் நீ படுத்துக்க."

மகள் படுத்து உறங்கி விட்டாள். சித்ரகலாவுக்கு உறக்கம் வரவில்லை. உண்மையிலேயே அவளுக்கு வேறு வேலையே தெரியாதா? வீட்டுக்குள் இருந்தவாறே எவ்வளவோ வேலை செய்ய முடியாதா? முடியும். முடியும்! பத்து வருஷங்களுக்கு முன் குமரன் அணை போட்ட ஒரு நடிப்பு ஆர்வம் அவள் மனத்தில் படியாமலே கரைந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் அவளை வேறு எதிலும் நாட்டம் கொள்ளச் செய்யாமல் நாடகத்துக்கே இழுத்து விட்டது.

மறுநாள் பத்திரிகைகள் கலாவின் நடிப்பைப் பற்றி உயர்வாக எழுதியிருந்தன. ஆனால் அண்டை அயலார் அவளை வாயில் வந்தபடி நிந்தனை செய்தார்கள். "கட்டிய கணவன் எப்படா சாகப் போகிறான் என்று காத்திருந்தவள் போல் ஓடிவந்து விட்டாளே நடிக்க! பச்சைக் குழந்தைகளைத் தனியாகத் தவிக்க விட்டு விட்டு நாடகம் என்ன வேண்டிக் கிடக்கு!" என்று பழித்தார்கள்.

ஆனால் இதையெல்லாம் சித்ரகலா பொருட்படுத்தவில்லை. குமரனுக்குத் தூரத்து உறவு என்று சொல்லிக் கொண்டு ஒரு கிழவி அவளைப் பார்க்க வந்தாள்.

"ஏம்மா, நீ குமரன் பெண்சாதி தானே!"

"ஆமாம், பாட்டி."

"உனக்கு இது அழகாக இருக்கா? புருசன் செத்துப்போனப்புறம் வீட்டுக்குள்ளாற இருக்கிறதை விட்டு, நாலுபேர் முன்னே போய் நாடகமாடலாமா?"

"பாட்டி, எனக்குச் சாப்பாடு நீ போடறியா?"

"அதுக்காக வேற வழி இல்லையா?"

"எனக்குத் தெரியல்லியே பாட்டி. பாட்டி, இன்னொண்ணு சொல்றேன். நான் எனக்காக மட்டும் இதைச் செய்யல்லை. இன்னொரு மூணு உயிரைக் காப்பாத்தற பொறுப்பும் என்னைச் சேர்ந்திருக்கு."

"அதென்ன கதை?" என்று கிழவி காதைத் தீட்டிக் கொண்டாள்.

"என் புருசனுக்கு இன்னொரு பெண்டாட்டி இருக்கான்னு உனக்குத் தெரியுமா பாட்டி?"

"அடப்பாவி!' கெடுத்தானே. மகாலட்சுமி மாதிரி உன்னை விட்டா இன்னொருத்தியைக் கட்டிக்கிட்டான்?"

"அவளை விட்டுத்தான் பாட்டி என்னைக் கட்டிக்கிட்டாரு. அவருக்கு முன்னமேயே கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறபோதுதான் என்னை மணந்தாரு. அவருக்குப் பெண்டாட்டி இருக்கிற செய்தி இந்த ஊரிலே ஒருத்தருக்கும் தெரியல்லே. அதனாலேதான் நான் ஏமாந்துட்டேன் பாட்டி. அதுக்காக நான் அவரை வெறுக்கல்லை. என்பேரில் அவர் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார். முதல் மனைவி பேரிலேயும் பிரியம்தான் வைத்திருந்தார்.

நாங்க வடக்கே போனதும் எங்களோட வந்து இருக்கும்படி கூப்பிட்டார். அந்த அக்கா வர மறுத்து ஜீவனாம்ச வழக்கும் போட்டு மாதா மாதம் அவர் சம்பளத்திலே பணம் கொடுக்கும்படியாகச் செஞ்சிட்டுதுங்க. அதனாலே எங்களுக்கு வந்த பணம் பத்தல்லே. அவர் போன பிறகு என்னைப் போலத்தானே அவளும் தவிப்பாள்! அவர் கொடுத்து வந்த வாழ்க்கைப் பணத்தை நானும் அந்த அக்காவுக்கு அவ பிள்ளைகள் முன்னுக்கு வருகிறவரை கொடுத்துக் கொண்டு வரதுங்கற முடிவிலேதான் நாடகத்திலே சேர்ந்தேன். வேறே தொழில்லே எனக்கு இவ்வளவு பணம் கிடைக்காதுன்னு தோணிச்சு. நாடகத்திலேயிருந்து சினிமாவுக்குத் தொத்திக்கிட்டால் எங்கள் கஷ்டம் விடிஞ்சுடும். ஒரு தொழில் செய்து ஒரு குடும்பத்தைக் காப்பாத்தறதுலே என்ன கெட்ட பேர் வந்தாலும் பரவாயில்லேன்னுதான் இதில் துணிந்து இறங்கினேன்."

கிழவி சித்ரகலாவைக் கண்ணீர் ததும்ப வியப்புடன் பார்த்தாள். அவள் நடிகையானாலும் அவளுடைய இந்தத் தியாகம் நடிப்பில்லை என்பது புரிந்தது. அவளது பெரிய உள்ளத்தைக் கிழவி புரிந்து கொண்டாள். மற்றவர்களும் இப்படியே அவளை அறிந்து கொண்டால் மேடையில் நடிக்காத மெய்க்குணம் ஒன்றும் அவளிடமிருப்பது உலகத்துக்கு விளங்கும்.
கஜமுகன்
Share: 




© Copyright 2020 Tamilonline