| 
											
											
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												 ஈழத்துத் தமிழ் எழுத்தாளார்களுள் தனித்து நோக்குவதற்கான பண்பு களைக் கொண்டவர் செ.கணேசலிங்கன். இவரது பன்முக ஆளுமை முற்போக்கு இடதுசாரி கருத்து நிலையின் நிலை பேறாக்கத்துக்கு தடம் அமைத்தது எனலாம். குறிப்பாக 1950, 60களில் முற்போக்கு இலக்கிய இயக்க வழிவந்தோர்களில் செ.க. மாத்திரமே தனக்கான தடங்களை ஆழமாக வும் அகலமாகவும் நிகழ்த்தியுள்ளார். இவற்றின் மட்டுப்பாடான அழகியல் அரசியல் ஒருபுறமிருந்தாலும் தொடர்ந்த வாசிப்பு, தேடல், படைப்பாக்க முயற்சி, நூலாக்கம் போன்றவை சந்தேகத்துக்குரியவை அல்ல. செ.க. விடம் இழையோடும் சமூக சிந்தனை யும் அனைத்தையும் முன்னோக்கி நகர்த்தும் தீவிரமும் இவரது பலமும் பலவீனமும் எனக்கூறலாம்.
  சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு, கடித இலக்கியம், சிறுவர் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என விரிந்த பல்வேறு களங்களில் தொடர்ந்து இயங்கும் ஆற்றல் கொண்டவர் இவர் ஈழத்துத் தமிழ்ச் சூழலில் மட்டுமின்றி தமிழகச் சூழலிலும் நன்கு அறியப்பட்டவர். தமிழ்நாட்டில் வாழ்ந்து பதிப்புத்துறையில் முழுமையாக ஈடுபட்டு வருபவர்.
  செ.க. யாழ்ப்பாணம் உரும்பிராய் கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் 1928ல் பிறந்தவர் இவர் அரசுப் பணியில் சேவையாற்றி 1981ல் ஓய்வு பெற்றவர். 1950களில் இருந்து எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். 1958ல் தனது நல்லவன் எனும் முதலாவது சிறுகதைத் தொகுதியையும் 1966 இல் தனது முதலாவது நாவலையும் வெளியிட்டார். இத்தொகுப்புகள் மூலம் செ.க. முற்போக்கு இடதுசாரி எழுத்தாளர்கள் பரம்பரையில் தனித்து நோக்கக் கூடியவராகப் பரிணமித்தார். இடதுசாரி இலக்கியத்தை சாதாரண வாசகர் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் 'குமரன்' எனும் இதழையும் நடத்தி வந்தார். 1971-1990 வரையிலான காலங்களில் 'குமரன்' தொடர்ந்து வெளிவந்தது. அதன் முதல் இதழில் ஆசிரியர் செ.க. பின்வருமாறு குறிப்பிடுவது கவனத்துக்குரியது: 'பெற்றோ ராலும் பெரியோராலும் ஆசிரியராலும் மேய்க்கப்படும் மந்தையல்ல மாணவர்கள். சரியான சிந்தனையின் துணைகொண்டு நாட்டின் முன்னேற்றத்தை எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்லும் தீர்க்கமான பொறுப்பு அவர்களுக்கு உண்டு. அந்தப் பெரும்பணிக்கு வழிகாட்டியாக குமரன் அமைய வேண்டும் என்பதே குறிக்கோள்... இலட்சியம் ஒன்றையே மூலதனமாகக் கொண்டு ஈழத்து இளம் மாணவர்களின் ஓரே குரலாக ஓரே சொத்தாக குமரன் வெளிவருகிறான்.' (குமரன், ஜனவரி 1971)
  இவ்வாறு தெளிவாகக் குமரன் குறிக்கோளை வரையறுத்துக் கொண்டு வெளிவந்தது. மாணவர்கள் மத்தியில் குமரன் முற்போக்குக் கருத்துகளைக் கொண்டு செல்வதில் முதன்மையான இடம் வகித்தது. இதுமட்டு மல்ல, ஏனைய முற்போக்கு இதழ்களிலிருந்து வித்தியாசப்பட்டும் இருந்தது. இவையெல்லாம் செ.க. வின் ஆளுமைக்கு எடுத்துக் காட்டு. | 
											
											
												| 
 | 
											
											
											
												புனைக்கதைத் துறையில் செ.க வின் ஆளுமை தனித்து நோக்கப்படவேண்டும். குறிப்பாக சமூக விமரிசனப்பாங்கான நாவல் முயற்சிகளுக்கு ஒரு திட்டமான வடி வமைப்பைத் தரும் வகையில் செயற்பட்டார். அதாவது நாவல் இலக்கியப் பரப்பில் செ.க. எழுதிய 'நீண்ட பயணம்' (1965), 'சடங்கு'  (1966), 'செவ்வானம்' (1967), 'தரையும் தாரகையும்' (1968), 'போர்க்கோலம்' (1969), 'மண்ணும் மக்களும்' (1970) போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆக்கங்களைத் தந்தார். இந்த ஆறு படைப்புகளும் ஈழத்தின் சமகால அரசியல் குறைபாடுகள் மற்றும் அரசியல் அணுகுமுறைகள் தொடர்பான விமரிசனங்களாக அமைந்தன. இந்த மரபு ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றில் முக்கிய வளர்ச்சிக் கட்டத்தை அடையாளப்படுத்தின.
  ஆரம்பத்தில் செ.க. சிறுகதைகள் பல எழுதியிருந்தாலும் நாவல் வடிவத்தில் தான் அவர் அதிகம் அக்கறை காட்டியது. 1950களில் செ.க. எழுதிய சிறுகதைகள் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கான கூறுகள் வெளிப்பட்ட காலத்தில் வெளிவந்தவை. அந்த வகையில் செ.க. கணிக்கப்பட வேண்டியவர். ஆனால் ஆரம்ப நாவல்கள் பேசப்படுமளவுக்கு இவரது சிறுகதைகள் பேசப்படவில்லை. இதற்கு இவரது படைப்பாளுமையே காரணம் எனலாம். ஆரம்பச் சிறுகதைகளில் ஓரளவு வெளிப்பட்ட படைப்புச் செழுமையும் அழகியலும் பின்னர் எழுதிய புனைவுகளில் காணாமல் போய்விட்டது. 'கட்டுரைக் கதைகள்' என்று தனியாக வகைப்படுத்தக் கூடிய அளவுக்குப் புனைகதையில் ஒரு பாய்ச்சல் நிகழ்த்தத் தொடங்கினார். இதனால் பல்வேறு புதிய புதிய விடயங்களுக்கும் இவரது 'நடை' கைகொடுத்தது. இன்றுவரை தொடர்ந்து தீவிரமாக எழுதிக் கொண் டிருக்கும் எழுத்தாளராக செ. கணேசலிங்கம் தமிழ்ச் சூழலில் இயங்க முடிகின்றது.
  முற்போக்கு இடதுசாரிச் சிந்தனைகளுடன் பரிச்சயம் கொள்ளும் இளந்தலைமுறை யினருக்கு இவரது எழுத்துக்கள் சிறந்த ஊக்கியாக இருக்க முடியும். படைப்பாக்கத் திறன், சிந்தனைத் திறன், கலைத்திறன் யாவும் ஒருங்கே நிரம்பப் பெற்றவர்கள் செ.க.வின் வழி சென்றாலும் விரைவில் தமக்கான அடையாளங்களுடன் தனித்துச் சென்று விடுவர். இதுபோன்ற உள்முகப் பயணம் செ.க.விடம் காணமுடியவில்லை. மு. வரத ராசனிடம் காணப்பட்ட சீர்திருத்தப் பண்பு செ.க.விடம் புரட்சிப் பண்பாக தடமாற்றம் பெற்றுள்ளது. அவ்வளவுதான் இதற்கு மேல் இவரிடம் படைப்பாக்கப் பண்புமாற்றங்கள் எவையும் துளிர்விட வில்லை.
  தெ. மதுசூதனன் | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |