Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | பொது
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
வாண்டுமாமா
- அரவிந்த்|ஜனவரி 2011|
Share:
குழந்தைக் கவிஞர் கவிமணி தொடங்கி 'கல்வி' கோபாலகிருஷ்ணன், அழ. வள்ளியப்பா, ஆர்வி, டாக்டர் பூவண்ணன், ஆர். வாசுதேவன், ரேவதி என்று தொடரும் குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் "வாண்டுமாமா" குறிப்பிடத்தகுந்தவர். புதுக்கோட்டை மாவட்டத்தின் அரிமழம் என்ற ஊரில் ஏப்ரல் 21, 1925 அன்று வாண்டுமாமா பிறந்தார். இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இரண்டு வயதில் தந்தையை இழந்த இவர் திருச்சியில் உள்ள தனது அத்தை வீட்டில் வளர்ந்தார். ஆரம்பக் கல்வி திண்ணைப் பள்ளிக்கூடத்தில். வறுமையால் கல்வி தடைப்பட்டது. 1944ல் பள்ளி இறுதித் தேர்வை முடித்தார். மேலே படிக்க முடியாத காரணத்தால் குட்வின் பிக்சர்ஸ் என்ற படக் கம்பெனியில் சிறிது காலம் பிரதிநிதியாகப் பணியாற்றினார்.

சிறுவயது முதலே சித்திரங்கள் வரைவதில் வாண்டுமாமாவுக்கு ஆர்வம். பிரபல பத்திரிகைகளில் வரும் ஓவியங்களைப் பார்த்து அதேபோல வரைவார். பள்ளிக் காலத்தில் கரும்பலகையில் ஓவியங்களைத் தீட்டியதுண்டு. திருச்சியில் இருந்த பல பிரபல நகைக் கடைகளுக்கு லேபிள்கள், விளம்பரப் படங்கள், வாசகங்கள் வரைந்து தரத் தொடங்கினார். தொடர்ந்து பாடப் புத்தகங்களுக்கு படம் போடும் வாய்ப்பு கிடைத்தது. பிரபல பதிப்பகங்களுக்கு அட்டைப் படம் தயாரிக்கவும், அதற்கு ஓவியம் வரையவும் வாய்ப்பு வந்தது. மீ.ப. சோமுவின் ஐந்தருவி, பிள்ளையார் சுழி போன்ற புத்தகங்களின் அட்டைகளை வடிவமைத்தார். மாலியின் மூலம் ஆனந்த விகடனில் சேர்ந்தார். ஆனால் 'லெட்டரிங் ஆர்ட்டிஸ்ட்' வேலைகள் மட்டுமே அவருக்குத் தரப்பட்டதால் விகடனில் நீடிக்கவில்லை.

கதை எழுதுவதிலும் வாண்டுமாமாவுக்கு ஆர்வம் அதிகம். பள்ளியில் படிக்கும்போது அவர் எழுதிய 'குல்ருக்' என்ற சிறுகதை, கலைமகளில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது. 'பாரதி' என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தியிருக்கிறார். திருலோக சீதாராம் ஆசிரியராக இருந்த 'சிவாஜி' இதழில் துணையாசிரியர் வேலை கிடைத்தது. அது வாண்டுமாமாவின் பத்திரிகை வாழ்க்கைக்கு அடித்தளமானது. அச்சுக் கோர்ப்பது முதல் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்புவது வரை சகல துறைகளிலும் நல்ல அனுபவம் பெற்றார். அதுவரை 'கௌசிகன்' என்ற பெயரில் பிரபல இதழ்களில் எழுதிக் கொண்டிருந்தவருக்கு, ஓவியர் மாலி "வாண்டுமாமா" என்ற பெயரைச் சூட்டி சிறுவர்களுக்கு எழுதுமாறு தூண்டினார். சிவாஜியைத் தொடர்ந்து 'வானவில்' என்ற குழந்தைகள் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று அதைத் திறம்பட நடத்தினார். 'மின்னல்' என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் திகழ்ந்தார். சிறிதுகாலம் நண்பருடன் இணைந்து 'கிண்கிணி' என்ற சிறுவர் இதழை நடத்தினார். தொடர்ந்து அரு. ராமநாதனின் காதல், கலைமணி போன்ற இதழ்களிலும், ராஜா என்பவரின் 'சுதந்திரம்' இதழிலும் பணியாற்றினார். சுதந்திரம் திடீரென நிறுத்தப்படவே, திருச்சியில் உள்ள இ.ஆர். உயர்நிலைப்பள்ளியில் நூலகராகப் பணியில் சேர்ந்தார்.

அந்நிலையில் கல்கியில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. முதலில் சர்குலேஷன் பிரிவில் பணியாற்றியவர், பின்னர் ஆசிரியர் குழுவில் இணைந்தார். 'பாப்பா மலர்' சிறுவர் பகுதியைத் திறம்பட நடத்தினார். அது 'கோகுலம்' என்ற சிறுவர் இதழைத் தொடங்க வழி வகுத்தது. 23 ஆண்டுகள் கல்கி குழுமத்தில் வாண்டுமாமா பணியாற்றிக் கதை, கட்டுரைகளுக்காகச் சிறுவர் முதல் பெரியவர்வரை அனைவராலும் பாராட்டப்பட்டார். 'கோகுலம்' இதழ் வழியே சிறுவர்களிடம் எழுத்தார்வத்தைத் தூண்டினார். பல போட்டிகள் நடத்தி வாசக எழுத்தாளர்களை உருவாக்கினார். திடீரென கோகுலம் நின்று போகவே, குங்குமம் இதழில் சேர்ந்தார். பின் நா.பா.வின் அழைப்பை ஏற்று தினமணி கதிரில் சேர்ந்தவர், நான்கு ஆண்டுகள் அங்கு பணியாற்றி ஓய்வு பெற்றார். தொடர்ந்து பத்திரிகைகளுக்குக் கதை, சிறுகதை, கட்டுரைகளை எழுதி வந்தார்.
1984ல் பைகோ பிரசுரத்தால் தொடங்கப்பட்ட பூந்தளிர் இதழில் வாண்டுமாமா ஆசிரியர் பொறுப்பேற்றார். அது அவரது வாழ்வின் திருப்புமுனையானது. பூந்தளிரில் பல படக்கதைகளை, நீதிக் கதைகளை, அறிவியல் தொழில் நுட்பங்களை, பொது அறிவுச் செய்திகளை குழந்தைகள் விரும்பும் வண்ணம் எளிய தமிழில், அழகான படங்களுடன் கொடுத்தார். அவர் அடிப்படையில் ஓவியராகவும், இதழ் வடிவமைப்பாளராகவும் இருந்ததால் பல்வேறு புதுமைகளை அவரால் அதில் செய்ய முடிந்தது. அவர் பொறுப்பில் வெளிவந்த "அமர்சித்திர கதைகள்" சிறுவர் மனங்களைக் கொள்ளை கொண்டன. வாண்டுமாமா, ஓவியர் செல்லம் கூட்டணியாக இணைந்து நல்ல பல படைப்புகளைத் தந்தனர். வேட்டைக்கார வேம்பு, சுப்பாண்டி, கபீஷ், காளி போன்ற கதாபாத்திரங்கள் அன்றைய குழந்தைகளான இன்றைய முது இளைஞர்களால் என்றும் மறக்க முடியாதவை.

அயல்நாட்டு இலக்கியங்களை தமிழில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதில் தீராத ஆர்வம் கொண்டிருந்த வாண்டுமாமா, அவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டார். தமது 77ம் வயதில் உடல்நிலை காரணமாகப் பூந்தளிரில் இருந்து ஓய்வு பெற்றார். கௌசிகன், மூர்த்தி, வி.கே.மூர்த்தி எனப் பல புனைபெயர்களிலும் அவர் படைப்புகளைத் தந்திருக்கிறார். 160க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் 150க்கும் மேல் குழந்தைகளுக்கானவை. ஓநாய்க் கோட்டை, மூன்று மந்திரவாதிகள், சிலையைத் தேடி, மர்ம மாளிகையில் பலே பாலு, சர்க்கஸ் சங்கர், கரடிக் கோட்டை, ரத்தினபுரி ரகசியம் போன்ற படக்கதைகள் மெய்மறக்கச் செய்பவை. பச்சைப் புகை, புலிவளர்த்த பிள்ளை, மாஜிக் மாலினி, கரடி மனிதன், மந்திரக் குளம், மூன்று விரல்கள் போன்ற கதைகள் பெரியவர்களும் ரசித்து இன்புறத் தக்கவை. கௌசிகன் என்ற பெயரில் இவர் எழுதிய வீணையின் நாதம், அடிமையின் தியாகம், அழகி, பண்பு தந்த பரிசு போன்ற சிறுகதைகள் சிறப்பானவை. அது போல பாமினிப் பாவை, ஜூலேகா போன்ற சரித்திர நாவல்களையும், சுழிக்காற்று, சந்திரனே சாட்சி, உயிர்ச் சிரிப்பு போன்ற சமூக நாவல்களையும் எழுதியிருக்கிறார். ராஜாஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது வாழ்க்கைச் சம்பவங்களையும் ஆவணப்படுத்தியுள்ளார்.

வாண்டுமாமா எழுதிய ஏழு நூல்களுக்கு தமிழக அரசின் பரிசுகள் கிடைத்துள்ளன. குழந்தை எழுத்தாளர் சங்கம், வி.ஜி.பி. அறக்கட்டளை, திருப்பூர் தமிழ்ச் சங்கம், திருச்சி தமிழ்ச் சங்கம், வள்ளியப்பா அறக்கட்டளை போன்ற அமைப்பினர் வாண்டுமாமாவை கௌரவித்துள்ளனர். இவர் எழுதிய 'நமது உடலின் மர்மங்கள்' என்ற மருத்துவ நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு கிடைத்துள்ளது. குழந்தைக் கதைகளைப் பெரியவர்களும் விரும்பிப் படிக்கச் செய்தவர் வாண்டுமாமா. அவரது நூல்கள் பலவும் இன்றும் விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன.

அறுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிகைத் துறையில் பணியாற்றி வந்துள்ள வாண்டுமாமா, தமிழில் குழந்தை இலக்கியத்தின் மூத்த, முக்கியமான முன்னோடிகளுள் ஒருவர். குழந்தை இலக்கியப் பிதாமகராக மதிப்பிடத்தக்கவர்.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline