Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | முன்னோடி | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
இசைக் கலைஞர் சுக. பாவலன்
- அரவிந்த் சுவாமிநாதன்|ஆகஸ்டு 2021||(1 Comment)
Share:
'இன்னிசை இளவல்', 'கலைவளர் மாமணி', 'சப்தஸ்வர மாமணி' 'வில்லிசை வேந்தன்', 'சங்கீத சக்கரவர்த்தி' உட்படப் பல பட்டங்களைப் பெற்றிருப்பவர் சுக. பாவலன். காரைக்காலில் வசிக்கும் இவர், எட்டு வயதில் இசையுலகில் நுழைந்தார். இளவயதிலேயே மத்திய அரசின் கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தால் (Centre for Cultural Resources and Training) சிறந்த இசைக்கலைஞராக அங்கீகரிக்கப்பட்டார். கணினித் தொழில்நுட்பக் கல்வியில் பட்டயமும், இசையில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் பெற்றிருக்கும் சுக. பாவலன், இசையாசிரியர் பயிற்சி பெற்றவரும்கூட. இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலராலும் வரவேற்கப்படுவன. இவரது யூட்யூப் பக்கம் இசை மாணவர்கள் விரும்பிப் பார்க்கும் ஒன்று. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இசைப்பயணத்தைத் தொடர்ந்து வருகிறார் சுக.பாவலன், வாருங்கள், அவரோடு பேசிக்கொண்டே நடப்போம்...

★★★★★


கே: வணக்கம். உங்களுக்கு இசையார்வம் எப்போது வந்தது என்பதை நினைவு கூருங்கள்...
ப: எங்களது குடும்பம் இசைக்குடும்பம் அல்ல. என் முன்னோர்கள் விவசாயம், ஜோதிடம், வைத்தியம் போன்றவற்றைச் செய்தவர்கள். குறிப்பாக, ஜோதிடத்தில் சிறந்து விளங்கியவர்கள். என் அப்பா திரு. சுப்பிரமணியன் அவர்களுக்குச் சிறு வயதிலேயே இசை கற்கும் ஆர்வம் இருந்தது. ஆனால், சூழ்நிலை அப்படி அமையவில்லை. அதனால் நான் பிறப்பதற்கு முன்பே, அப்பா 'எனக்கு ஒரு பையன் பிறப்பான்; அவனை இசைத்துறையில் கொண்டு வருவேன்' என்று தீர்மானித்திருக்கிறார். அப்படியே, என்னை ஆறு வயதில் இசை வகுப்பில் சேர்த்துவிட்டார். அப்பா என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டுத்தான் நாங்கள் நடப்போம். அப்பா செய்தது மிக நல்ல விஷயம் என்பது பின்னாளில் புரிந்தது. எல்லாமே அப்பாவின் முயற்சிதான்.



கே: அரங்கேற்றம் எப்போது நிகழ்ந்தது?
ப: காரைக்காலில் 'சப்தஸ்வரம் இசைப்பேரவை' என்ற இசைப் பயிற்சிப் பள்ளி இருந்தது. தெய்வத்திரு சந்தானம் ஐயா அவர்கள் திருவாரூரில் இருந்து காரைக்கால் வந்து எனக்குச் சொல்லிக் கொடுத்தார். எனது முதல் குருநாதர் அவர்தான். தொடர்ந்து நெல்லை ஈ. சண்முகநாதன் ஐயா அவர்களிடம் பயின்றேன்.

அரங்கேற்றம் எனது எட்டாவது வயதில், 1990ல், மாசிமகம் நாளில் நடந்தது. காரைக்காலருகில் உள்ள திருமலைராயன் பட்டினம் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயத்தில், அவர் சன்னதியில் அரங்கேற்றம் நடந்தது. சண்முகநாதன் ஐயா அவர்கள்தான் எனக்கு அரங்கேற்றம் செய்து வைத்தார்.

இசைக் குயிலின் பாராட்டு
திருமணம் ஒன்றில் எனது இசை நிகழ்ச்சி. அதற்கு ஜானகி அம்மா வந்திருந்தார். மணப்பெண்ணின் பெயரும் ஜானகிதான். ஜானகி அம்மா சிறுவயதில் எடுத்து வளர்த்த பெண் இவர். இசை நிகழ்ச்சி தொடங்கும் முன்பே அம்மா வந்துவிட்டார். நிகழ்ச்சி ஆரம்பித்த போது பின்வரிசையில் இருந்தவர், நான் வாசிக்க வாசிக்க முன்வரிசைக்கு வந்துவிட்டார். வந்து, எனக்கு நேரெதிரில் அமர்ந்துவிட்டார். நிகழ்ச்சி முழுக்க இருந்து ரசித்துக் கேட்டார். நடுவில் மணமேடைக்குச் செல்லவேண்டி இருந்தபோதும், அவரது கவனம் இசையிலேயே இருந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் என்னைப் பாராட்டிக் கொண்டே இருந்தார். மிகவும் ரசித்தார். நிகழ்ச்சி முடிந்தது. நேராக மேடைக்கு வந்தார். எனது இரண்டு கைகளையும் எடுத்து முத்தம் கொடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார். என்னைக் கட்டிக் கொண்டார். "என்னுடைய பாடல்களை வயலினில் இப்படி நான் கேட்டதே இல்லை. நீ ரொம்ப நல்லா வாசிக்கிறே" என்று சொல்லி என்னை வாழ்த்தி ஆசிர்வதித்தார். இசைக் கலைஞர்கள் எல்லோரையும் கையெடுத்துக் கும்பிட்டார்.

"நான் உனக்காகத்தான் சாப்பிடாம இருக்கேன். வா" என்று சொல்லி, தன்னுடன் என்னைச் சாப்பிட அழைத்துச் சென்றார். இதைவிட எது உயர்ந்தது? ஜானகி அம்மாவின் ஆசி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

சுக. பாவலன்


கே: உங்கள் குருநாதர்கள் பற்றி, அவர்களிடம் நீங்கள் கற்றதும் பெற்றதும் பற்றி...
ப: சண்முகநாதன் ஐயாவைத் தொடர்ந்து நான் மாயவரம் திரு. எஸ் சிவசாமி ஐயா அவர்களிடம் பயின்றேன். அவர் குடந்தை ராஜமாணிக்கம் பிள்ளை ஐயா அவர்களின் நேரடி மாணவர். அவரிடம் நான் நிறைய வருடங்கள் இசை கற்றுக்கொண்டேன். முதலில் பாடலைப் பாடி, பின்னர்தான் வாசிக்க வேண்டும் என்ற அணுகுமுறை அவருடையது. அதனால் நான் வயலின் இசையோடு பாடவும் நன்கு கற்றுக் கொண்டேன். அவரிடம் பயில ஆரம்பித்த பிறகு என்னுடைய வாசிப்பு முறையே மாறியது. அதன் பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர், டாக்டர் வி.எல்.வி. சுதர்சன் அவர்களிடம் மேல்நிலை இசை பயின்றேன்.

அமெரிக்காவில் ஓர் இசை நிகழ்ச்சிக்கு வாசிக்கச் சென்றிருந்தபோது, அங்கு வயலின் கணேஷ்-குமரேஷ் வந்திருந்தனர். அவர்களது அறிமுகம் கிடைத்தது. திரு. குமரேஷ் அவர்களிடம் உயர்நிலை இசைப்பயிற்சி பெற்றேன். வயலினில் மேற்கத்திய இசையையும் நான் கற்றுக்கொண்டேன். பொறையாரைச் சேர்ந்த அதிசயம் அருமைராஜ் அவர்கள் எனக்கு அதனைச் சொல்லிக் கொடுத்தார். கணினி வழி இசையை முதன்முதலில் எனக்குச் சொல்லிக் கொடுத்தது அவர்தான். மென்பொருளைப் பயன்படுத்தி நான் இன்றைக்கு ஆன்லைன் வழியே கற்பிக்கிறேன், இசையும் பாடங்களும் ஒலிப்பதிவு செய்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் மூலகாரணம். அதன் தொழில்நுட்பங்களை எனக்கு அவர்தான் விரிவாகச் சொல்லிக் கொடுத்தார். பொதுவாகச் சில கலைஞர்கள், தமக்குத் தெரிந்த சில ரகசியங்களை, நுணுக்கங்களை சொல்லித்தர மாட்டார்கள். இவர் மிகவும் திறந்த மனதுடையவர்.

என் குருநாதர்கள் அனைவருமே தங்களிடம் இருந்த உச்சபட்சத் திறமைகளைப் பரிபூரணமான உள்ளன்போடு எனக்குப் போதித்தார்கள். நிறைய மாணவர்கள் பயின்றாலும் என்மீது இவர்கள் அனைவருக்குமே ஒரு தனிப்பட்ட அன்பு இருந்தது. நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் அவர்களின் பரிபூரண ஆசிதான்.

முதல் குரு சந்தானம் அவர்களுடன்



கே: கச்சேரிகளில் உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்?
ப: அரங்கேற்றத்துக்குப் பின்னர் எனக்கு நிறையக் கச்சேரி வாய்ப்புகள், சபா வாய்ப்புகள் வந்தன. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றேன். திருவையாறு தியாகராஜ ஆராதனையிலும் வாசித்திருக்கிறேன்.எனக்கு 12 வயது இருக்கும்போது ஒரு வாய்ப்பு வந்தது. டாக்டர் ராமதாஸ் அவர்கள் பூம்புகாரில் ஒரு மாநாடு நடத்தினார். அதில் அரைமணி நேரம் கச்சேரி செய்ய வாய்ப்புக் கொடுத்தனர். அது எனது இசை வாழ்வின் திருப்புமுனை என்று சொல்லலாம். அதுவரை வருடத்திற்கு 20, 30 நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருந்தேன். அந்த மாநாட்டுக்குப் பின் மாதம் 20, 30 வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

அதற்குக் காரணம், எனது நிகழ்ச்சியை ரசித்த ஐயா ராமதாஸ் அவர்கள், அங்கு திரண்டிருந்த 50,000 பேர் முன்னால் என்னைப் பாராட்டிப் பேசியதுடன், "என்னை உங்கள் திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறீர்களோ இல்லையோ, சுக. பாவலனுக்குக் கச்சேரி வாய்ப்புகள் கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டதுதான். அதை மறக்க முடியாத பாராட்டாகச் சொல்லலாம்.

அதுமுதல் தினந்தோறும் நான்கு மணி நேரம் பயிற்சி, தொடர்ந்து கச்சேரி. படிக்க நேரமே ஒதுக்க முடிந்ததில்லை. நான் கிராமத்தில் வளர்ந்ததால் கார் வசதி எல்லாம் இல்லை. பேருந்தில் சென்றுதான் கச்சேரி செய்யவேண்டி இருக்கும். இரவு, பகல் என்று பாராமல் பயணித்துக் கச்சேரி செய்திருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

சொல்லப் போனால், பாராட்டு என்றால் என்ன, அதன் மதிப்பு என்ன என்பதெல்லாம் புரிவதற்கு முன்பே அது எனக்குக் கிடைத்துவிட்டது. அதனால், இன்றைக்கும் யாராவது பாராட்டினால் அதைத் தலையில் ஏற்றிக் கொள்வதில்லை. மனமாரப் பாராட்டுவது கண்டு மகிழ்ச்சிதான். ஆனால், அதை தலைக்குள் கொண்டு செல்வதில்லை. மனமுருகி வயதானவர்கள், பெரியவர்கள் பலர் பாராட்டுவார்கள். தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்வார்கள். மிக நெகி்ழ்ச்சியாக இருக்கும். அதைவிடப் பெரிய சந்தோஷம் எதுவுமில்லை என்று தோன்றுகிறது.



கே: உங்களைக் கவர்ந்த இசைக் கலைஞர்கள் யார், யார்?
ப: மிகமிகப் பிடித்தவர்கள் என்றால், திருவாளர்கள் லால்குடி ஜெயராமன், எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் ஆகியோரை மிகவும் பிடிக்கும். அவர்கள் இசையைக் கேட்டாலே மனதுக்கு இதமாக இருக்கும். மனம் அமைதியாகி விடும். டி.என்.கிருஷ்ணன் அவர்களையும் பிடிக்கும். நான் கர்நாடக இசையோடு மெல்லிசைக் கச்சேரிகளும் நிறையச் செய்து வருகிறேன். அம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு வித்திட்டதே, குன்னக்குடி வைத்தியநாதன் ஐயாதான். அவரது இசை எனக்கு மிகமிகப் பிடிக்கும். அவரது பக்திப் பாடல்களுக்கான இசை பிரமாதமாக இருக்கும். 'மருதமலை மாமணியே முருகையா' பாடலின் இசையை உச்சம் என்றுதான் சொல்லவேண்டும்.

கர்நாடக இசை மட்டுமல்லாமல் திரையிசை, மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை என்று இசையின் எல்லா வடிவங்களுமே எனக்குப் பிடிக்கும். அம்பி சுப்பிரமணியம் அபாரமான வித்தகர். எல். வைத்தியநாதன், எல். சங்கர், எல். சுப்பிரமணியம் வாசித்த பைரவி வர்ணத்தை அடிக்கடி கேட்பேன். இப்போது வாசிப்பவர்களில் எம்பார் கண்ணன், அக்கறை சகோதரிகள், துரை ஸ்ரீநிவாசன் பிடிக்கும்.

கே: அமெரிக்காவில் நிறையக் கச்சேரிகள் செய்திருக்கிறீர்கள். அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்..
ப: அமெரிக்க வாய்ப்பு நண்பர் நாகை. ஸ்ரீராம் அவர்கள் மூலமாக வந்தது. பாபு பரமேஸ்வரன் எனக்கு மிகுந்த ஆதரவளிப்பார். நல்ல மனிதர். மிக நல்ல இசைக்கலைஞர். பாபு சார் எல்லோரையும் மனதாரப் பாராட்டுவார், வாழ்த்துவார், ஊக்குவிப்பார். மற்ற இசைக் கலைஞர்களிடம் அறிமுகம் செய்து வைப்பார். அவரிடம் இதுபோன்ற நல்ல விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். என்னுடைய முன்னேற்றத்திற்கு அவர் மிக முக்கிய காரணம். இசை நிகழ்ச்சிகளுக்காகத் தொடர்ந்து எட்டு வருடங்களாக நான் அமெரிக்கா போய்வந்து கொண்டிருக்கிறேன்.

அங்குள்ளவர்கள் நல்ல ரசனை உடையவர்கள். இசைக்கு நல்ல வரவேற்பு அளிப்பவர்கள். என்னுடைய வயலின் இசை, அதன் நாதம் அவர்களில் பலரைக் கவர்ந்தது. அங்கு தியேட்டரில் இருக்கும் ப்ரொஃப்ஷனல் சவுண்ட் என்ஜினியர்கள் என்னிடம் வந்து, "இந்த சவுண்ட் நல்லாருக்கே, இந்த பிக் அப் எங்க வாங்கினீங்க?" என்று கேட்பார்கள். உண்மையில் அந்த 'பிக் அப்' நானே செய்தது. அங்கு பலரும் என்னிடம் "அரங்கத்தில் இரண்டு குரல்கள் பாடுவதுபோல் கேட்டது. மேடையில் பார்த்தால் ஒருவர்தான் பாடுகிறார். எங்கிருந்து அந்த இன்னொரு குரல் என்று பார்த்தால், அது உங்கள் வயலினில் இருந்து வருகிறது என்பது பின்னால்தான் தெரிந்தது" என்று சொல்லி ஆச்சரியப்படுவார்கள். இப்படிப் பலர் என்னிடம் வயலின் இசை, இசையாக மட்டுமல்லாமல் ஒரு குரல் போன்றும் கேட்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். என்னைப் பாராட்டி விருதுகள் எல்லாம் கொடுத்தார்கள். அன்பளிப்புகளுக்கும் குறைவில்லை. நான் பயன்படுத்தும் 'மேக்புக் ப்ரோ' கூட எனது மாணவர் கனடாவில் இருந்து அமெரிக்கா வந்து எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததுதான். அதை வைத்துத்தான் நான் ம்யூசிக் ப்ரொடக்‌ஷன் எல்லாமே செய்கிறேன். அமெரிக்க அனுபவம், தொழில் நுட்பத்தின் அடுத்த படிக்குச் செல்ல எனக்கு மிகவும் உதவியது.

தனது மாணவ மாணவியருடன்



கே: நீங்கள் பெற்ற விருதுகள், அங்கீகாரங்கள் குறித்து...
ப: சிறு வயதில், அதாவது அரங்கேற்றம் ஆவதற்கு முன்பே நிறையப் போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு வாங்கியிருக்கிறேன். பாட்டுப் போட்டிகளிலும் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். 10 வயதில் பாண்டிச்சேரி வானொலியில் நடந்த ஆடிஷனில் வென்று அங்கு பல நிகழ்ச்சிகளைச் செய்திருக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், 2000த்தில் சென்னை தமிழிசைச் சங்கம் ஒரு போட்டி நடத்தியது. அதில் இந்தியாவில் இருந்து யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். அதில் வெல்பவர்களுக்கு லால்குடி கோபாலையர் நினைவுப் பரிசு வழங்கப்படும். போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து வந்து கலந்துகொண்ட மாணவன், சென்னையைச் சேர்ந்த கலைஞர்களுடன் போட்டி போட்டு வெல்வது எவ்வளவு கடினம் என்பது எல்லாருக்கும் தெரியும். அதை மறக்க முடியாது.

பிறகு போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆர்வம் குறைந்துவிட்டது. 'சப்தஸ்வர இசைப் பேரவை' எனக்கு 'சப்தஸ்வர மாமணி' என்ற பட்டத்தைத் தந்தது. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள முருகன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் எனக்கு 'இன்னிசை இளவல்' என்று பட்டமளித்தார்கள். அப்போது எனக்கு வயது 12. 'சங்கீதச் சங்கொலி', 'இசை உலகில் ஓர் இளம்புயல்' என்ற தலைப்பில் தினமணி சுடரில் ஒரு கட்டுரை வந்தது. அதுமுதல் என்னை 'இளம்புயல்' என்று கூப்பிட ஆரம்பித்தனர். சமீபத்தில் இயக்குநர் பாக்கியராஜ் அவர்களின் அறக்கட்டளையில் இருந்து 'வயலின் சக்கரவர்த்தி' என்ற விருதை அளித்தனர். இப்படிப் பல விருதுகளைச் சொல்லலாம்.

இசையும் தொழில்நுட்பமும்
எனது வயலினுக்காக நான் ஒரு பிக் அப் கருவியை 20 வருடங்களுக்கு முன் தயார் செய்து உபயோகித்தேன். அதிலிருந்து வரும் ஒலி அனைவரையும் கவர்ந்துவிடும். எனக்கும் அது வேண்டும் என்று கேட்பவர்களுக்கு நானே தயாரித்து விற்கும் சூழல் இல்லாததால், எப்படித் தயாரிக்கலாம் என்று சொல்லிக் கொடுக்கிறேன். 100, 150 டாலர் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் பிக் அப்பில் வரும் ஒலியை, வெறும் 300 ரூபாய் செலவில் பெறமுடியும்.

அதுபோல, வயலினில் யாரும் 'பிராசஸர்' பயன்படுத்த மாட்டார்கள். கிடாரில்தான் பயன்படுத்துவார்கள். ஏன் அதனை வயலினுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று யோசித்து, 21 வருடங்களுக்கு முன்பு நான் அதனைப் பயன்படுத்தினேன். எனக்குத் தெரிந்த வகையில், தென்னிந்திய கர்நாடக இசைக் கலைஞர்களில் வயலினுக்கு என்று 'பிராசஸரை' முதன்முதலில் உபயோகித்தது நான்தான். அதைப் பயன்படுத்தி sound modulation செய்தபோது, அந்த ஒலியால் கவரப்பட்ட ரசிகர்கள் அதை மிகவும் வரவேற்றனர். அதுமுதல் வயலின் கலைஞர்கள் பலரும் கிடார் பிராசஸரை வயலினுக்குப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

அந்தப் பிராசஸரை வாங்கினால் அது கிடாருக்கான செட்டப்பில்தான் இருக்கும். அதை வயலினுக்கேற்றவாறு மாற்றுவதற்கான ஆலோசனைகளை நான் சொல்லித் தந்திருக்கிறேன். என்னைத் தொடர்பு கொள்ளும் இசைக் கலைஞர்களுக்கு சொல்லித் தருகிறேன். ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்ளலாம்: sukapavalan@gmail.com.

சுக. பாவலன்


கே: ஆன்லைன் வழியே மாணவர்களுக்கு நடத்திவரும் வகுப்புகள் குறித்து...
ப: 2015ல் ஆன்லைன் மூலம் சொல்லித்தர ஆரம்பித்தேன். அது என்னைத் தேடி வந்த வாய்ப்பு. மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இதை ஆரம்பித்தேன். முக்கியமாகச் சொல்லவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் நானாக இசை நிகழ்ச்சி, ஆன்லைன் வகுப்பு என்று இன்றுவரை எதையும் தேடிப் போனதே இல்லை. அதுவாக வருவதுதான். கனடாவிலிருந்து நித்திலன்-நிஷாந்த் இவர்கள்தாம் எனது முதல் மாணவர்கள். எனக்கு அமெரிக்கா வந்து மேக்புக் பிரசண்ட் செய்ததும் அவர்கள்தான். தற்போது கோவிட் சூழலால் நிறைய மாணவர்கள் இணையவழி வகுப்புகளில் இணைந்துள்ளனர். இலங்கை, ஆஸ்திரேலியா, லண்டன், மலேசியா, துபாய் என்று எல்லா இடங்களிலிருந்தும் மாணவர்கள் கற்கிறார்கள். நான்கைந்து பேர் அரங்கேற்றம் செய்யத் தயாராக உள்ளனர். வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு மணி நேரங்கள் என்பதால் தனித்தனியாக மாணவர்களுக்கு வகுப்பெடுக்க வேண்டும். அவர்களுக்கான பாடத்திட்டம், இசைக் குறிப்புகள் தயார் செய்வது, பயிற்சி அட்டவணை, ஒலிப்பதிவு என்று ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

அமெரிக்கா, கனடா, சென்னை போன்ற இடங்களில் இருந்து நிறைய மியூசிக் ப்ரொடக்‌ஷன்ஸ், நாட்டிய ப்ரொடக்‌ஷன்ஸ், ஆல்பங்கள் அல்லது அமெரிக்காவில் நடக்கும் லைவ் கச்சேரிக்கு நமது வயலின் ட்ராக் எடுத்துக்கொள்வது போன்ற பணிகள் நடக்கின்றன. நான் வீட்டிலிருந்தே ரெகார்டிங் செய்து அனுப்புகிறேன். வீட்டிலேயே ஸ்டூடியோ தனியாக வைத்திருக்கிறேன்.



கே: உங்கள் குடும்பம் பற்றி..
ப: அப்பா சுப்பிரமணியன். இடைநிலை ஆசிரியராக இருந்தார். அம்மா கலைமதி இல்லத்தரசி. அவர்கள் இருவரது பெயரின் முதல் எழுத்தை இணைத்து நான் சுக. பாவலன் ஆனேன். அப்பா என்னை இசைத் துறைக்குக் கொண்டு வந்து ஊக்குவித்து வளர்த்தார். எனது 18ம் வயதில் காலமாகிவிட்டார். அம்மா எங்களுடன் இருக்கிறார். மனைவி மீனாட்சி ஆசிரியப் பயிற்சி முடித்திருக்கிறார். இசையில் மாஸ்டர்ஸ் செய்திருக்கிறார். வயலின் வாசிப்பார். பாடுவார். நன்றாக ஓவியம் தீட்டுவார். பாடல் எழுதுவார். எனது மகன் பெயர் சுர்ஜித். நான்காம் வகுப்புப் படிக்கிறான். எனக்கு ஒரே தங்கை. பெயர் சுக. நிலா. அவர் மாஸ்டர் ஆஃப் மியூசிக் செய்திருக்கிறார். விவாசயம், வைத்தியம், ஜோதிடம் சார்ந்த குடும்பமாக முற்காலத்தில் இருந்த நாங்கள், தற்போது இசைக்குடும்பம் ஆகிவிட்டோம்.

கே: உங்கள் வாரிசுகளுக்கும் இசையில் ஆர்வம் உள்ளதா?
ப: இருக்கிறது. சுர்ஜித் சிறு குழந்தையாக இருக்கும்போதே ஸ்ருதி பாக்ஸை ஆன்செய்து 'ஆஆ' என்று பாடிக் கொண்டிருப்பான். தற்போது வளர்ந்து விட்டான் என்றாலும் உட்கார்ந்து கற்றுக் கொள்வதில் அந்தக் காலத்துக் குழந்தைகள்போல் இன்றைய குழந்தைகள் இல்லை. நான் நான்கு மணி நேரம் அப்போது சாதகம் செய்தேன். இவர்களை அரை மணி அமர்த்தி வைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால், சிறு வயதிலேயே அவனுக்கு நல்ல ஸ்வரஞானம் உண்டு. சொல்லிக் கொடுத்தால் சரியாகப் புரிந்துகொண்டு பாடுவான். வயலின், பாட்டு, டிரம்ஸ் கற்கிறான். பாடல்கள் எழுத முயற்சிக்கிறான்.

என் மாணவர்கள் பலர் அரங்கேறி, தனியாகக் கச்சேரி செய்கின்றனர். என்னைப் போலவே நிறையக் கச்சேரிகள் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதில் எனக்குப் பெருமை.

ஜானகி அம்மாவுடன்



கே: இந்த கோவிட்-19 சூழலை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?
ப: இரண்டு விஷயங்களைக் கற்றதாகச் சொல்லவேண்டும். நாங்கள் - அதாவது எல்லா இசைக் கலைஞர்களுமே - பசித்தால் சாப்பிடுவதில்லை; தூக்கம் வரும்போது தூங்குவதில்லை. அந்த நேரத்தில் கச்சேரி செய்து கொண்டிருப்போம் அல்லது பயணத்தில் இருப்போம். இது மிகவும் மகிழ்ச்சிகரமான துறைதான். ஆனால், பசி, தூக்கம் என்ற இந்த இரண்டு விஷயங்களும் எங்கள் கைகளில் இல்லை. மாதம் 25, 30 நிகழ்ச்சிகளுக்குப் போவது, ஓய்வே இல்லாமல் உழைப்பது என்று பிஸியாக இருந்ததன் விளைவு, நான் உள்பட எங்கள் குடும்பத்தார் எல்லாருமே இந்த கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோம். மீண்டுவரச் சில மாதங்கள் ஆகின. இந்த கோவிட் மூலம் கற்றுக்கொண்டது என்னவென்றால், உடம்பைக் கவனிக்க வேண்டும்; பசிக்கும் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும், நல்ல ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும், முறையாக உடலைப் பராமரித்து நோயெதிர்ப்பு ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான்.

மற்றொரு விஷயம், இசைக் கலைஞர்களுக்கான நிரந்தர வருமானம் நிச்சயம் கிடையாது. எவ்வளவு பெரிய ஆளானாலும், ஒரு மாதம் வந்தது அடுத்த மாதம் வரும் என்று சொல்ல முடியாது. எனக்கும் அப்படித்தான். என்னிடமும் அதிகம் சேமிப்பு இல்லை. இசைக்கருவிகள், ஒலிப்பதிவுக் கருவிகள், மென்பொருள்கள் போன்றவற்றை வாங்கச் செலவழித்து விடுவேன். அதை முதலீடு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இப்போது யோசிக்கும்போது குடும்பத்துக்கென்று சேமிப்பு ஒன்றைத் தனியாக ஒதுக்கி, பின்பலமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. உடல்நலனில் அலட்சியம் காட்டக்கூடாது. இவற்றை இந்தக் கோவிட்-19 கற்றுத் தந்திருக்கிறது.



கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்?
ப: திட்டம் என்பதைவிட ஆசை என்று சொல்லலாம். என் வயலின் இசையைக் கேட்ட உடனேயே 'இது சுக. பாவலனின் இசை' என்று அனைவரும் சொல்லும் ஒரு அடையாளத்தைப் பெறவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வயலினைப்பற்றி எங்காவது ஒரு பேச்சு வருகிறதென்றால், என்னைப் பற்றிய சிந்தனை ஒரு துளியாவது அனைவருக்கும் வரவேண்டும் என்ற விருப்பம் உண்டு. அதாவது மாண்டலின் என்றால் எப்படி ஸ்ரீநிவாஸ் சார் பெயர் உடனடியாக நினைவுக்கு வருகிறதோ அப்படி. வயலின் ஜாம்பவான்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களோடு என்னைப் பற்றிய சிந்தனையும் வரவேண்டும் என்பது என் ஆசை.

இசையை இன்னமும் எளிமையாக்கி அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் விருப்பம் உண்டு. காரைக்கால் என்றால் நிறைய வயலினிஸ்ட்கள் இருப்பார்கள், பாவலன் மாணவர்கள் நிறையப் பேர் வயலின் வாசிப்பார்கள் என்ற ஓர் அடையாளத்தைக் கொண்டுவர ஆசை இருக்கிறது. மற்றபடி, நாம் மேதை, பெரிய ஆள் என்ற எண்ணமெல்லாம் எதுவும் இல்லை. இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறுபுள்ளிதான் என்பதே என் அபிப்பிராயம்.

நல்ல மாணவர்களை நிறைய உருவாக்க வேண்டும். வேறு மொழிகளில் உள்ளவர்களுக்கும் புரிகிற மாதிரி நம்முடைய தேவாரம், திருவாசகம் போன்றவற்றை ஸ்வரக் குறிப்புகளுடன் கொண்டு செல்லவேண்டும். நம் தமிழ் இசையை, பக்தி இசையை எல்லா மொழிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கான எழுத்துருவை உருவாக்க உழைத்துக் கொண்டிருக்கிறேன். நமது தமிழிசையை உலகில் உள்ள எல்லா மக்களும் நாம் எப்படிப் பாடுகிறோமோ அதேமாதிரி பாடவேண்டும். அதற்காக அவர்கள் அறிந்த மொழியில் ஸ்வரக் குறிப்புகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன்.

சுக. பாவலனின் உலகளாவிய இசைப் பார்வையில் மயங்கி, அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

பாட்டு நோட்டுக்கள்!
12 வயதிலிருந்து மாதம் 20, 30 கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தேன். அன்றைய சூழலில் நிறைய மெல்லிசைப் பாடல்களை வாசிக்க வேண்டி இருந்தது. அதற்கான ஸ்வரக்குறிப்பு போன்றவற்றை என் அம்மாதான் எழுதிக் கொடுப்பார். சுமார் பத்து நோட்புக்காவது இருக்கும். கர்நாடக இசைப்பாடல், வர்ணம், பக்திப் பாடல், திரையிசைப் பாடல்கள் பழையவை, இளையராஜா பாடல்கள், புதிய பாடல்கள் என்று ஒவ்வொன்றுக்கும் ஒன்று என்று நிறைய நோட்டுப் புத்தகங்களை வைத்திருந்தேன். அவற்றை நிகழ்ச்சிகளுக்கு எடுத்துச் செல்வதென்றால் பெரிய மூட்டையாக இருக்கும். அப்போது நான் சிறுவன். பின்னர் கணினித் தொழில்நுட்பத்தில் பட்டய வகுப்பு படித்து முடித்தபோது, இந்த இசைக் குறிப்புகளுக்காக ஓர் எழுத்துருவை வடிக்கலாமே என்று தோன்றியது. ஆனால் இசைக் குறியீடுகளில் 'ரி', 'நி' இவற்றுக்கெல்லாம் கீழே, மேலே புள்ளி வைப்பது அதன் ஸ்தாயியைக் குறிப்பதாகும். இப்படிப் புள்ளியெல்லாம் வைத்து 'வேர்டிங்' செய்வது மிகக் கஷ்டம். ஒவ்வொன்றுக்கும் ஒரு 'டெக்ஸ்ட் பாக்ஸ்' வைக்க வேண்டும். அப்படிச் செய்தாலும், ஒரு பாட்டை 'டைப்' செய்ய இரண்டு நாள் ஆகிவிடும்.

2004ல் நானே ஒரு TTF கோப்பாக 'சுகபாவலன் தமிழ்' என்ற எழுத்துருவை உருவாக்கினேன். அதனை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவிவிட்டால், கர்நாடக இசை ஸ்வரங்களை மிக எளிதாகத் தட்டச்சு செய்யலாம். அதனை ஒரு PDF அல்லது வேர்ட் ஃபைலாகச் சேமித்து வைக்கலாம். நான் வாசிக்கும் 2000, 3000 பாடல்களுக்கு இப்படிப்பட்ட ஸ்வரக் குறிப்புகளை என்னுடைய ஐபேடில் PDF ஆக வைத்திருக்கிறேன்.

இதில் முக்கியமான விஷயம், நான் பாடலுக்கு வாசிக்கும் முறை என்னவென்றால், அந்தப் பாடலுக்கான இடைவெளியில் வரும் இடையிசைக்கான ஸ்வரக் குறிப்புகளை மட்டுமே நான் வைத்திருப்பேன். மற்றபடி பாடல்களை எப்போதுமே வரிகளாகவேதான் வாசிப்பேன். முழுமையாக அப்படி வாசிக்கத்தான் நான் முயற்சி செய்வேன். அப்படித் தான் வாசிக்கவேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.

அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்லும் போதுதான் மற்ற மொழி பேசுபவர்களிடத்தும் நம் நோட்ஸ் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உதாரணமாக, அமெரிக்காவில் என்னுடன் புல்லாங்குழல் வாசிப்பவர் மங்களூரில் இருந்து வந்திருப்பார். அவருக்கு நான் தமிழில் நோட்ஸ் கொடுக்க முடியாது. என்ன செய்வது? இதையே அவருக்குப் புரியும்படியாக, அவரது மொழியில் கன்வெர்ட் செய்தால் என்ன என்று தோன்றியது. 'சுகபாவலன் தமிழ்' எழுத்துருவைப் பயன்படுத்தி நீங்கள் ஸ்வரக் குறிப்பை தட்டச்சு செய்து வைத்திருந்தால், அதை அப்படியே செலக்ட் செய்து, ஃபான்ட் ரீப்ளேஸ் செய்து, 'சுகபாவலன் இங்கிலீஷ்' என்று கொடுத்தால் போதும், நீங்கள் ஏதும் டைப் செய்யவேண்டாம் - அப்படியே ஆங்கில நோட்ஸாக மாறிவிடும். அதாவது 'ச, ரி, க, ம, ப, த, நி, ஸ' என்பது 'sa, ri, ga, ma, pa, tha, ni, Sa என்று தானாக மாறிவிடும். இதேபோல மலையாளத்திற்கும் தயாரித்திருக்கிறேன். அடுத்ததாக கன்னடம், தெலுங்கு, ஹிந்திக்கும் தயாரித்துவிட்டு, மொத்தமாக இவற்றை இலவசமாக அளிக்கும் எண்ணம் இருக்கிறது. வேலை நடந்துகொண்டிருக்கிறது.

மற்றபடி தற்போது நிறையக் கலைஞர்கள் இம்முறையைப் பயன்படுத்துகிறார்கள். நிறையப் பல்கலைக்கழகங்கள், கல்லூரி மாணவர்கள் தங்கள் ப்ராஜெக்டிற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். இதனை எல்லாரும் தெரிந்து பரவலாகப் பயன்படுத்தினால் எனக்கு மகிழ்ச்சிதான். இது குறித்துச் சந்தேகம் இருந்தால், விளக்கம் தேவைப்பட்டால் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். (வலைமனை) இலவசமாக அந்த எழுத்துருவை அளிக்க நான் தயாராக இருக்கிறேன்.

சுக. பாவலன்
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline