Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தொன்னைக்கு நெய்யா, நெய்க்குத் தொன்னையா
- ஹரி கிருஷ்ணன்|பிப்ரவரி 2015|
Share:
கண்ணனே யுத்தத்துக்கு மூலகாரணன் என்று சொல்லப்புகுந்தால், பின் எதற்காக அவன் 'பஞ்சவர்க்குத் தூது நடந்தான்' என்ற கேள்வி எழும். போர்தான் இறுதிமுடிவு, போரை நடத்துவதுதான் கண்ணனின் மனத்திலிருந்த தீர்மானம் என்பது உறுதியானால், அப்புறம் என்ன சமாதானப் பேச்சுவார்த்தை வேண்டிக்கிடக்கிறது? நேரடியாகப் போர்க்களத்தில் இறங்கவேண்டியதுதானே? இதென்ன சுத்தி வளச்சு மூக்கைத் தொடுவது என்றல்லவா சிந்தனை ஓடுகிறது.

நம்புங்கள். இந்த விஷயத்தில் கிருஷ்ணனும் ராமனும் ஒன்றேபோல் சிந்தித்திருக்கிறார்கள். ஒன்றேபோல் செயல்பட்டிருக்கிறார்கள். அங்கே சுவேல மலைமேல் வந்து இறங்கியிருக்கிறான் ராமன். ராவணனுடைய கோட்டையின் வடக்கு வாசலை வானரசேனை சூழ்ந்தாயிற்று. 'கடைசி கடைசியாக ராவணனுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும். இப்போது, 'ஒன்று தேவியை விடு; இல்லையென்றால் போர்புரிந்து ஆவியை விடு' என்று அவனிடத்தில் சொல்லிவர அங்கதன் செல்லட்டும். அதற்குப் பிறகு மற்றதைச் சிந்திப்போம். "மறுக்கும் ஆகில் காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது; அறனும் அஃதே; நீதியும் அஃதே" என்று ராமன் சொன்னதை மற்றவர்கள் ஆதரித்தாலும் லக்ஷ்மணன் வன்மையாக மறுக்கிறான். 'சரி. தூது அனுப்பப் போகிறாய். அவன் சீதையைத் திரும்பத் தருகிறான் என்று சொல்வதாகவே வைத்துக்கொள்வோம். அப்படியானால், உன்னுடைய தூதுத் திட்டத்தின்படி போரை நிறுத்திவிடுவதா? இந்தக் கடைசிக்கட்டத்தில் அது நடக்கிற காரியமா? அவன் ஒப்புக்கொண்டுவிட்டால், விபீஷணனுக்கு இலங்கை அரசைத் தருவதாக வாக்களித்திருக்கிறாயே, அது என்ன ஆகும்? யோசிக்க வேண்டாமா?' என்று கோபப்பட்டான். 'சேவகன் முறுவல் செய்தான்' என்றான் கம்பன். இதைக் கேட்ட ராமன் புன்னகைத்தானாம். புன்னகைத்தவாறு சொன்னான்:

அயர்த்திலென்; முடிவும் அஃதே; ஆயினும், அறிஞர் ஆய்ந்த
நயத்துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ?
புயத்துறை வலியரேனும், பொறையொடும் பொருந்தி வாழ்தல்
சயத்துறை; அறனும் அஃதே என்று இவை சமையச் சொன்னான்.


"லக்ஷ்மணா! எனக்கும் அது தெரியுமப்பா. நான் ஒன்றும் மயங்கிவிடவில்லை. தெளிவாகத்தான் இருக்கிறேன். எனக்கென்ன ராவணன் சீதையைத் திரும்பத்தர ஒப்புக்கொள்ளமாட்டான் என்பது தெரியாதென்றா நினைக்கிறாய்? 'முடிவும் அஃதே.' இறுதியில் போர்தான் நடக்கும் என்பது தெரிந்த ஒன்றுதான். ஆனாலும் லக்ஷ்மணா, அறிஞர்கள், பெரியவர்கள் எல்லோரும் ஆராய்ந்து சொல்லிவைத்திருக்கிற அறநூல்களுடைய கருத்து என்றொன்று இருக்கிறது. அதை நாமே விட்டுவிடக்கூடாது. என்னதான் பலசாலியாக இருந்தாலும், போர்த்துறையில் வல்லவனாக இருந்தாலும் கொஞ்சம் பொறுமையும் வேணும். அதுதான் வெற்றிபெறுவதற்கு உரிய வழி. அதுதான் அறம்; தர்மம்" என்று உறுதியாகச் சொல்லிவிட்டான் ராமன்.

தூதுக்குக் கிளம்புவதற்கு முன்னால் கிருஷ்ணன் பேசுகிற வார்த்தைகளை மேற்படி ராமனுடைய வார்த்தைகளோடு ஒப்பிட்டுப்பாருங்கள். தர்மபுத்திரன் 'நீ தூதுபோவதுதான் நல்லது; ஆனால் துரியோதனன் நமக்கு நாட்டைத் திரும்பத் தரப்போவதில்லை என்பதென்னவோ நிச்சயம். ஆனால், நீ அவர்களுடைய சபைக்குச் சென்று, அங்கே உனக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டுவிட்டால், அதன்பிறகு நாட்டைப் பெற்றாலும் ஒன்றுதான் பெறாவிட்டாலும் ஒன்றுதான். எங்களுக்கு அதற்குப் பிறகு மகிழ்ச்சி என்ற ஒன்றே இருக்காது' என்று சொன்னதும் கண்ணன் சொன்னான்: ஏனெனில், துரியோதனன் மனத்தில் கண்ணனைக் கட்டிப் போடுவதற்கான திட்டம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது; துரியோதனன், துச்சாதனன், சகுனி, கர்ணன் ஆகிய நால்வரும் அப்படி ஓர் எண்ணத்துடன் இருக்கிறார்கள் என்பதை முன்னதாகவே அறிந்திருந்தார்கள்.

"ஸ்ரீபகவான், 'ஓ மஹாராஜரே! துர்யோதனன் இவ்விதம் பாபி என்பதை நான் அறிவேன். ஆனாலும், எல்லாவுலகத்திலும் அரசர்களுக்கு நிந்திக்கக் கூடாதவர்களாவோம். எல்லா அரசர்களும் சேர்ந்தாலும் கோபத்தையடைவந்தனான என்னுடைய யுத்தத்தில், சிங்கத்தினுடைய சண்டையில் மற்ற மிருகங்கள் நிற்க முடியாததுபோல நிற்கவல்லவர் ஆகார். அல்லது, அவர்கள் என் விஷயத்தில் சிறிதேனும் தகாதபடி நடப்பார்களேயானால், அந்த எல்லா கௌரவர்களையும் எரிப்பேன் என்பது என்னுடைய உறுதியான எண்ணம். ஓ பார்த்தரே! அவ்விடம் போவது ஒருகாலும் பயனில்லாதது ஆகாது. ஒரு ஸமயம் தனலாபமும் ஏற்படலாம். அல்லது கடைசியாக நிந்தையில்லாமை ஏற்படுகிறது' என்றார்." (கும்பகோணம் பதிப்பு, உத்யோக பர்வம், அத்: 71; பக்: 276)
பேச்சின் தொனிப்பொருளை ஒன்றுக்கிரண்டான பெயர்ப்புகளில் ஒப்பிட்டுப் பார்ப்பதில் தெளிவாகும் என்பதால்இதே பகுதியை கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பிலும் பார்ப்போம்.

"The holy one said, 'I know, O monarch, the sinfulness of Dhritarashtra's son, but by going there we will escape the blame of all the kings of the earth. Like other animals before the lion, all the kings of the earth united together are not competent to stand still before me in battle when I am enraged. If, after all, they do me any injury, then I will consume all the Kurus. Even this is my intention. My going thither, O Partha, will not be fruitless, for if our object be not fulfilled, we shall at least escape all blame. (கிஸாரி மோஹன் கங்கூலி மொழிபெயர்ப்பு, உத்தியோக பர்வம், அத்தியாயம் 72)

உலகத்திலுள்ள அத்தனை மன்னர்களும் ஒன்றாகச்சேர்ந்து நின்றாலும் ஒற்றைச்சிங்கத்தை எதிர்கொள்ளமுடியாமல் மற்ற விலங்குகள் சிதறி ஓடுவதைப்போல், தனியொருவனான என்னை எதிர்க்கச் சக்தியற்றவர்களாகிப் போவார்கள். ஒருவேளை அப்படி ஏதேனும் எனக்குத் தீங்கிழைக்க நினைத்தால், கௌரவர்கள் அனைவரையும் நான் பொசுக்கிவிடுவேன். (பயப்படவேண்டாம்.) இதுதான் என் உத்தேசம். நான் அங்கே போவதனால் (துரியோதனன் எப்படி இருந்தாலும் நாட்டைத் திருப்பித்தர சம்மதிக்கப் போவதில்லை என்பதால்) என்னுடைய தூது பயனற்றுப் போகப்போவதில்லை. நம்முடைய நோக்கம் நிறைவேறாவிட்டாலும், உலகம் பழிப்பது ஒழிந்துவிடும் அல்லவா?' இதைத்தானே குறள், 'மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்' என்று பேசுகிறது? ராமனுடைய பேச்சில் குறிப்புப் பொருளாகக் கிடக்கும் இந்த 'உலகினரின் பழிச்சொல்' பற்றிய குறிப்பு கிருஷ்ணனுடைய பேச்சில் வெளிப்படையாகவே தென்படுகிறது என்ற ஒரேஒரு வித்தியாசத்தைத் தவிர, இரண்டுபேரும் இருந்த சூழலும் ஏறத்தாழ ஒன்றுதான்; இரண்டுபேர் கொண்டிருந்த நோக்கமும், எடுத்த முடிவும் நூற்றுக்கு நூறு சதம் ஒன்றேதான்.

ஒரு பிரச்சினையை ராமன் அணுகியவிதம் வேறு; கிருஷ்ணன் அணுகியவிதம் வேறு என்பதுதான் பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது. இதோ, இதுவரையில் இரண்டிடங்களில் அவர்கள் இருவருடைய கருத்து எப்படி ஒன்றேபோல் இயங்கியது என்பதைச் சுட்டிவிட்டோம். ஆனால், கிருஷ்ணனிடம் இருந்த விளையாட்டுப் போக்கும், குறும்பும், நாடகப்பாங்கும் ராமனுக்கு அப்படியே முழுக்கமுழுக்கப் பொருந்தாது என்றாலும், இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் இருவருமே நடிக்கத் தயங்கியதில்லை. ராமன் பங்கில் இருந்த இந்த மாதிரியான நாடகப் பாங்குடன் கூடிய போக்கை விரித்துப் பேச இது இடமில்லை.

சரி. கிருஷ்ணன் பாண்டவர்கள் பக்கத்தில்தான் தொடக்கத்திலிருந்து நின்றான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாஞ்சாலியின் சுயம்வரத்தில் அந்தணவடிவம் தாங்கி அமர்ந்திருந்த ஐவரையும் பார்த்த மாத்திரத்திலேயே, பலராமனிடம், 'ஐவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்; இங்கே வந்திருக்கிறார்கள்' என்று சொல்வதுதொடங்கி, இறுதிவரையில் கண்ணன் விரும்பியது பாண்டவர்களுடைய நன்மையைத்தான். அதற்காக துரியோதனனை முற்றமுழுக்க விட்டுவிடவில்லை. தன்னுடைய நாராயண சைன்யம் முழுமையையும் அவனுக்குத்தான் கொடுத்தான். பாண்டவர்களுக்குக் கண்ணன் அத்தை மகன். (எப்படி உறவு என்பதை இன்னொருநாள் பார்க்கலாம்.) துரியோதனனுக்குக் கண்ணன் நேரடி உறவில்லை. பாண்டவர்களுக்கு அத்தைமகன் என்பதால் 'எனக்கும் நீ உறவினன்தான்' என்று அந்தச் சந்தர்ப்பத்தில் சொந்தம் கொண்டாடி சைன்னியத்தைப் பெற்றுக்கொண்டு, அதனைத் தொடர்ந்து கண்ணனைக் கட்டிப்போடவும் திட்டமிட்டவன் துரியோதனன். (எப்போதெல்லாம் துரியோதனன் என்று இப்படிப்பட்ட இடங்களில் சொல்கிறேனோ, அப்போதெல்லாம் கர்ணனின் பங்கு இவற்றில் உண்டென்பது உணரத்தக்கது.)

அப்படியானால், கிருஷ்ணனுக்கு பாண்டவர்களிடம் விசேஷ அபிமானம் உண்டாக என்ன காரணம்? துரியோதனனைக் காட்டிலும் இவர்கள் நெருக்கமான உறவினர்கள் என்பதாலா? அல்லது, 'அர்ஜுனன் என் தோழன், சம்பந்தி, சீடன். அவனுக்காக எதுவும் செய்வேன்' என்ற அர்ஜுனன்பாலிருந்த அபிமானம் அப்படியெல்லாம் அவனை துரியோதனனுக்கு எதிராகச் செயல்படத் தூண்டியதா?

ஒன்றை மனத்தில் ஆழமாக இருத்திக்கொள்ள வேண்டும். கண்ணன் பாண்டவர்களோடு நேயம் பாராட்டினான் என்றால் அந்தப் பக்கத்தில் நியாயம் இருந்தது; ஆட்சி அதிகாரம் துரியோதனனைக் காட்டிலும் தர்மனுக்கே உரியதாக இருந்தது; மொத்தநாட்டுக்கும் அரசனாகும் தகுதியும், வாரிசுரிமையும் தர்மனுக்குத்தான் இருந்தது. இவற்றை இனிவரும் தவணைகளில் விளக்குகிறேன். இப்படி இருந்தபோதிலும்கூட, திருதிராஷ்டிரனே பின்னொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவதுபோல், தர்மன் தனக்கிருந்த நல்லகுணத்தால், நல்லமனத்தால், இணக்கமான போக்கால், பாதிராஜ்யம் பெற்றுக்கொள்ளச் சம்மதித்தான். பெற்ற பாதிராஜ்ஜியமோ முற்றமுழுக்க வெறும்காடு. காண்டவவனம். அந்தக் காட்டை அழித்து நாடுசமைத்து, பாரதி சொல்வதுபோல்,

தென்றிசைச் சாவகமாம் - பெரும் 
தீவுதொட்டே வடதிசை யதனில்
நின்றிடும் புகழ்ச்சீனம் - வரை
நேர்ந்திடும் பலபல நாட்டினரும்
வென்றிகொள் தருமனுக்கே - அவன்
வேள்வியில் பெரும்புகழ் விளையும்வண்ணம்
நன்றுபல் பொருள் கொணர்ந்தார் - புவி
நாயகன் யுதிட்டிரன்என உணர்ந்தார்.


காட்டை அழித்து இந்திரபிரஸ்தத்தை நிர்மாணித்த தருமனுடைய புகழ் ஜாவா தொடங்கி சீனாவரையில் விரிந்து பரந்திருந்தது. இங்கே பாரதியைத்தான் மேற்கோள் காட்டியிருக்கிறேன் என்றாலும், இது அப்படியே வியாசர் சொல்லியிருப்பதன் மொழிபெயர்ப்பு. தர்மபுத்திரனை நயவஞ்சகமாகச் சூதில் சிக்கவைத்து அவன் நாட்டைக் கவர்ந்துகொண்டான் துரியோதனன். (இதில் கருத்துவேற்றுமை உண்டென்பதை அறிவேன். விளக்கங்கள் தொடரும்.)

இதிகாசத்தின் நெடுகிலும் பாருங்கள். 'துரியோதனன் அநியாயம் செய்கிறான்' என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். கர்ணனேகூடச் சில சந்தர்ப்பங்களில், "அவர்களுக்கு நாம் எத்தனையோ தீங்குகளை இழைத்துவிட்டோம்" என்று பேசுகிறான். ஆனால், தர்மபுத்திரன் 'பேராசைப்பட்டான்; மோசம் செய்தான்; தனக்கு அதிகாரமில்லாத ஆட்சியைப் பெறநினைத்தான்' என்று (துரியோதனன், துச்சாதனன், சகுனி போன்றவர்கள் நீங்கலாக) திருதிராஷ்டிரன், காந்தாரி உட்பட ஒருவருமே பேசவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. மாறாக, 'அவனுக்குத்தான் ஆட்சியதிகாரம். உனக்கு இதில் பங்கென்ற கேள்விக்கே இடமில்லை' என்று காந்தாரி, துரோணர், திருதிராஷ்டிரன் உட்படப் பேசியிருக்கிறார்கள். (மேற்கோள்களை உரிய இடங்களில் தருகிறேன். அதுவரையில் பொறுமை காக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள்.) எல்லாவற்றுக்கும் மேல், உபப்லாவியத்தில் பாண்டவர்கள் இருந்தபோது, வியாசர் தர்மபுத்திரனைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். அப்போது தர்மனிடத்தில் வியாசர், தர்மனின் வாய்மொழியாகச் சொல்கிறார்: 'யதோ தர்மாஸ் ததா கிருஷ்ணோ யதா கிருஷ்ணாஸ் ததோ ஜய:' (சல்லிய பர்வம், அத்: 61, ஸ்லோ: 30). எங்கே தர்மம் இருக்கிறதோ அங்கே கண்ணன் இருக்கிறான்; எங்கே கண்ணன் இருக்கிறானோ அங்கே வெற்றி இருக்கிறது.'

ஆகவே, கண்ணன் பாண்டவர்கள்பால் நின்றது ஏதோ உறவின்முறையாலோ, நட்பின் அபிமானத்தாலோ அல்லது அவர்கள் கண்ணனை மிகவுயரிய இடத்தில் வைத்துச் சிறப்பித்ததாலோ அன்று. சொல்லப்போனால், கண்ணன் யுதிஷ்டிரனுக்கும் பீமனுக்கும் வயதில் இளையவன். அர்ஜுனனுனக்குச் சமவயதினன். ஆகவே, கண்ணன்தான் யுதிஷ்டிரனிடத்தில் மரியாதை உடையவனாக இருந்தான். தர்மபுத்திரனைப் பார்த்து, 'நீ எனக்கு ஆணையிடு. நான் செய்துமுடிக்கிறேன்' என்றுதான் கண்ணன் வயதில்மூத்தவன் என்பது கருதிப் பேசுகிறான். உறவு இருந்தது; அன்பு இருந்தது; 'இவர்கள் வெற்றியடைய வேண்டும்' என்ற எண்ணம் கண்ணனுக்கு இருந்தது.

பின்னர் ஏன் பாண்டவர் பக்கம் நின்றான் என்றால், வியாசர் பதில் சொல்லிவிட்டார், "எந்தப் பக்கத்திலே அறம் இருக்கிறதோ அந்தப்பக்கத்தில் மட்டும்தான் கண்ணன் இருப்பான்." இதை மாற்றியெழுத யாராலும் ஒண்ணாது. அப்படியானால் தர்மன்பக்கத்தில் இருந்த தர்மநியாயங்களை முதலில் அலசவேண்டும். ஆட்சி அதிகாரத்தில் அவனுக்கே முதலுரிமை என்ற—மற்ற பெரும்பான்மையானவர்கள் வன்மையாக மறுத்துவரும்—கருத்தை நிலைநாட்டுவது. ஆதாரபூர்வமாக நிறுவுவது. அதை அடுத்தாகச் செய்வோம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline