Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
சிறிய உரசல், பெரிய வெடியாகிவிடும்
- சித்ரா வைத்தீஸ்வரன்|பிப்ரவரி 2015|
Share:
அன்புள்ள சிநேகிதியே

எங்களுக்கு இரண்டு பெண்கள். பெரியவள் வளர்ந்து, படித்து, இப்போது ஒரு நல்லவேலையில் செட் ஆகிவிட்டாள். அவளை வளர்ப்பதில் அதிகக் கஷ்டம் இருந்ததாகத் தெரியவில்லை. திருமணம்தான் - யாரை மணக்கப்போகிறாள் என்று - ஒரு கேள்விக்குறி. எங்கள் சொல்படி கேட்பாள் என்று ஒரு நம்பிக்கை. என்னுடைய பிரச்சனை இரண்டாவது பெண்ணைப் பற்றி. அவளுக்குப் பதினாறு வயதாகிறது. இந்த ஊர் டீனேஜ் பெண்களைப் போலத்தான் எல்லா நடவடிக்கைகளும். அதுவும் இந்த ஆறுமாதமாக நிலைமை மிகவும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. வீட்டுச் சாப்பாடு பிடிப்பதில்லை. படிப்பில் கவனம் போய்விட்டது. வீட்டில் எந்த உதவியும் செய்வதில்லை. எங்களுக்குத் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு போய் நண்பர்களுடன் கும்மாளம் போட்டுவிட்டு எங்கேயோ காரை இடித்து ரகசியமாகத் திருப்பி உள்ளே கொண்டுவந்து வைத்துவிட்டாள். நல்லகாலம், யார்மீதும் மோதவில்லை. ரூமைக் குப்பையாக வைத்துக் கொண்டிருக்கிறாள். பசங்ககூடச் சுற்றுகிறாள்.

நாங்கள் 20 வருஷத்திற்கும் மேல் இங்கே இருந்தாலும் ரொம்ப மாறிப்போகவில்லை. அதுவும் பெரியவள் சொன்னதெல்லாம் கேட்டாள். சின்னவள் செய்வதெல்லாம் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு ரகளை. எப்படி அவளை வழிக்குக் கொண்டுவர முடியும் என்றே தெரியவில்லை. என்ன பேசினாலும் கேட்டாலும் எதிர்த்து பதில். சிலசமயம் ஹிஸ்டெரிகலாகக் கத்துகிறாள். எங்களால் அவளைத் திருத்த முடியவில்லையே என்று பெண்ணைவிட்டுப் பேசச் செய்தோம். அவளைக் கண்டபடி கத்தித் தீர்த்துவிட்டாள். கவுன்சலிங் போகச் சொன்னால் அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. சில மாதங்களுக்கு முன்பு என் கணவர் ஏதோ கையை ஓங்கியதற்கு DCF ஐக் கூப்பிடுவதாக பயமுறுத்தினாள். அதற்கப்புறம் நாங்களும் கொஞ்சம் பயந்து பயந்துதான் செயல்படுகிறோம். எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி விவாதம். போன சம்மரில் எங்களுக்கு உறவுக்காரர்கள் வந்து தங்க ஒரு நான்குநாள் அவள் ரூமை விட்டுக்கொடுக்க அவ்வளவு கெஞ்ச வேண்டியிருந்தது. 12 வயதுவரை நன்றாகத்தான் இருந்தாள். அப்புறம் அவளுக்குள் ஏற்பட்ட மாறுதலை நாங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமா இல்லை, திடீரென்று மாறிவிட்டாளா என்று புரியவில்லை. அவளுக்கு வேண்டியதெல்லாம் "Privacy, Freedom and Unlimited Allowance". நாங்கள் இந்த வின்டரில் இந்தியா போக இருந்து, அவள் எங்களுடன் வரமாட்டேன் என்று கண்டிப்பாகச் சொன்னதால் ட்ரிப்பைக் கேன்சல் செய்தோம். எவ்வளவோ விஷயங்கள், எழுத embarassing ஆக இருக்கிறது. படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து எதிர்காலத்தைத் தொலைத்துவிடப் போகிறாளே என்று பயமாக இருக்கிறது. சிலசமயம் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபித்துக் கொண்டு, தடாரென்று கதவை உள்ளுக்குள் தாளிட்டுக்கொண்டு, 24 மணிநேரம், சரியாகச் சாப்பிடாமல்கூட இருக்கிறாள். எப்படி அவளைச் சரிப்படுத்துவது?

இப்படிக்கு
...................
அன்புள்ள சிநேகிதியே

பிறந்து சில நாட்களோ, மாதங்களோ ஆன குழந்தைகள் எதற்காக அழுகின்றன என்று யாருக்குமே புரியாது. பொதுவாகச் சில காரணங்களைச் சொல்லலாமே தவிர ஒவ்வொரு குழந்தையின் அழுகையிலும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அந்தத் தாய், அதுவும் முதல்குழந்தையாக இருந்தால் பரிதவித்து, துடித்துப் போய்விடுவாள். அப்புறம் சரியாகப் போய்விடுகிறது. அதுபோலத்தான் டீன் ஏஜ் பிஹேவியரும். இதிலும் வயதுவந்த பெண்களைப் பற்றித்தான், நான் நிறையக் கேள்விப்படுகிறேன். அவர்களைப்பற்றிப் பாதுகாப்பு உணர்ச்சி பெற்றோர்களிடம் கொஞ்சம் அதிகமாக இருப்பதில் அதிசயமில்லை.

என்னுடைய அனுபவத்தில் பாதை தடுமாறி, பாதம் இடம்மாறி, பார்வை நிலைமாறிப் போன டீனேஜர்கள் திரும்பி வந்துவிடுகிறார்கள். They bounce back. அதற்காக இப்போது கவலைப்படாமல் இருங்கள் என்று நான் சொல்லமுடியாது. பெற்றோர்களுக்கும் சரி, அந்த டீனேஜருக்கும் சரி, இது மிகக்கடினமான காலம். நீங்கள் குடும்பத்துக்கு மட்டும் தலைவியா, இல்லை, வெளியிலும் பொறுப்பான வேலைப்பளுவில் உள்ளவரா? சிறுவயதில் குழந்தைகள் தவறு செய்தால் அதைத் திருத்துவதில் எந்த வகையான கண்டிப்பு இருந்தது? குடும்பமாக அடிக்கடி வெகேஷன் போவது, தினமும் சேர்ந்து உணவருந்துவது போன்ற விஷயங்கள் உண்டா? உங்கள் வாழ்க்கைமுறையைப் பற்றி எனக்கு முழுதாகத் தெரியாத நிலையில், எதனால் திடீரென்று இந்த மாற்றம், எப்படி அணுகினால் பலனிருக்கும் என்று சொல்லத் தெரியவில்லை. பொதுவாக அனுமானித்து எழுதுகிறேன்.

* உங்கள் பெண்ணை இந்தக் காலகட்டத்தில் உங்களுக்குப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளுக்கும் தன்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதைப் புரிந்துகொண்டுவிடுங்கள்.

* இது ஒரு 'தற்காலிக மாற்றம்' அவளுடைய புத்திக்கூர்மையும் சிறுவயதிலேயே அவளுக்குக் கற்றுக் கொடுத்த நெறிகளும் (values) வீணாகப் போகமுடியாது என்று மனதுக்குச் சமாதானம் சொல்லுங்கள்.

* இப்போதிருக்கும் நிலையில், ஒரு சிறிய உரசல்கூட ஒரு பெரிய வெடியாகிவிடும். அதனால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடிவது மிகமிகக் கடினம். வயது, வயது, வயது. வார்த்தைகள் வெடிச்சரங்களாக வெளியில் வரும். உங்களுக்கு குமுறிக்கொண்டுதான் வரும். ஆனால், உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். உங்கள் வயதின் முதிர்ச்சி, வாழ்க்கையின் அனுபவம், பொறுப்பு, பாசம் எல்லாம் சேர்ந்து வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்கும்.

* பத்து தவறுகள் உங்களுக்குத் தெரிந்தால் இரண்டைக் கட்டுப்படுத்துங்கள். எட்டை விட்டுவிடுங்கள். எந்த இரண்டு முக்கியமோ அதில்மட்டும் கண்டிப்பாக இருங்கள்.

* குடும்பச் சூழ்நிலைக்கு அப்பாற்பட்ட இடங்களில் எங்கோ இந்தக் குழந்தைகள் அடிபடுகிறார்கள்; எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டு, பின் ஏமாற்றங்களைத் தாங்கமுடியாமல் பெற்றோர்களை punch-bag ஆக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். 'எங்கே தவறு செய்தோம்' என்று நமக்கும் புரிவதில்லை. நம் பிடியிலிருந்து நம்மை அறியாமலேயே கழன்று கொண்டிருக்கிறார்கள். நமக்குத் தெரியவரும்போது, உடனே 'கண்டிப்பும்' 'தண்டிப்பும்'தான் நமக்குத் தோன்றுகிறது. முதலில் அவற்றைத்தான் பிரயோகிக்கிறோம். தொடர்பு துண்டிக்கப்படுகிறது. "I hate you; I hate you Guys. I can't wait to leave home" என்று ஆத்திரத்துடன், அழுத்தத்துடன் ஒரு பெண் சொல்லும்போது, ஒரு தாய் நிலைகுலைந்து போய்விடுகிறாள். அவள் உணர்ச்சிகளை ஆத்திரம் அல்லது சுயபச்சாதாபமாக வெளியிடுகிறாள். இடைவெளி பெருகுகிறது. வெளியுலகத்தில் ஏதோ ஆசைகளை, நிராசைகளை வைத்துக்கொண்டு அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். திட்டுவதைக் குறைத்து, தடவிக் கொடுப்பதை அதிகரித்தால் கொஞ்சம் டென்ஷன் குறையும் என்று என் அனுபவத்தில் சொல்கிறேன். நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நம் அணுகுமுறை தண்ணீராக இருக்கவேண்டும்.அவர்களுடைய எதிர்காலத்தைப்பற்றிய பொறுப்புதான் முக்கியமே தவிர, பயத்தால் பயனில்லை.

உங்கள் பெண், உங்கள் எதிர்பார்ப்புகளுக்கும் அதிகமாக வாழ்க்கையில் முன்னேறுவாள். This is just a stage and phase of her life.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்
Share: 
© Copyright 2020 Tamilonline