Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
'பத்மஸ்ரீ' பெறுகிறார் ஜார்ஜ் ஹார்ட்
சென்னை டிசம்பர் சீஸனில் அமெரிக்கக் கலைஞர்கள்
- மீனாட்சி கணபதி, சுபத்திரா பெருமாள்|பிப்ரவரி 2015|
Share:
சத்யா ரமேஷ்

கலிஃபோர்னியா, சான் ஹோஸேவின் சர்வலகு பெர்கஷன் ஆர்ட் சென்டர் மாணவி சத்யா ரமேஷின் மிருதங்க அரங்கேற்றம் சென்னை ஆழ்வார்ப்பேட்டை 'தத்வலோகா' அரங்கத்தில் நடைபெற்றது. சர்வலகுவின் இயக்குனரும், குருவுமான ரமேஷ் ஸ்ரீனிவாஸனின் புதல்வியான இவர், முன்னணி வயலின் வித்வான்களான திரு. லால்குடி GJR கிருஷ்ணன் மற்றும் திருமதி லால்குடி விஜயலக்ஷ்மி ஆகியோரின் வயலினிசை நிகழ்ச்சிக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் அரியவாய்ப்பைப் பெற்றார்.

Click Here Enlargeபத்மபூஷண், சங்கீத கலாநிதி திரு. TV கோபாலகிருஷ்ணன் தலைமைவகித்த இந்நிகழ்ச்சிக்கு, லால்குடி ஸ்ரீமதி பிரம்மானந்தம், மன்னார்குடி ஈஸ்வரன், நெய்வேலி சந்தானகோபாலன், சித்திரவீணை கலைஞர்கள் நரசிம்மன் மற்றும் ரவிகிரண், கர்நாடிகா சகோதரர்கள், மதுரை GS மணி, டாக்டர். M. நர்மதா, பாபநாசம் அசோக்ரமணி, விட்டல் ராமமூர்த்தி போன்ற புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் வருகைதந்திருந்தனர்.

லால்குடி அவர்களின் ஹம்ஸவிநோதினி ராகவர்ணத்தில் ஆரம்பமான கச்சேரியில் ஆரம்பமுதலே சத்யாவின் திறமை பளிச்சிட்டது. நிகழ்ச்சியின்முக்கிய கீர்த்தனையான கரகரப்ரியாவில் 'நடசி நடசி'க்கு இடையில் வந்த தனியாவர்த்தனத்தில் சத்யா தன்னம்பிக்கையோடு, தாள நுணுக்கங்களைத் தெளிவாகவும் திறமையாகவும் வாசித்து, கடம் வாசித்த சுரேஷ் அவர்களின் திறமைக்கு ஈடுகொடுத்தார்.

நிகழ்ச்சிக்குத் தலமைவகித்த TV கோபாலகிருஷ்ணன், ஒரு இளம்பெண் மிருதங்கம் வாசித்தால் எப்படியிருக்கும் என்றறிய வேண்டுமெனில் இவரது வாசிப்பைப் பார்த்தால் போதும் என்றார். தனது குருவான வேலூர் ராமபத்திரனின் பாரம்பரியத்தை, ரமேஷ் ஸ்ரீனிவாசன் சர்வலகு மூலம் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதைப் பாராட்டினார். பின்னர் பேசிய நெய்வேலி சந்தானகோபாலன், இது அரங்கேற்றம்தான் என்றாலும் அவையிலிருந்த ஜாம்பவான்களும் நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது என்றார். நிகழ்ச்சியின் இறுதியில், வேலூர் ராமபத்திரனின் பிள்ளைகளான திரு. முகுந்த் மற்றும் திருமதி. பத்மினி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

*****


கிருத்திகா ராஜகோபாலன்

Click Here Enlargeசிகாகோ நாட்யா டான்ஸ் தியேட்டரின் கலை இயக்குநர் செல்வி. கிருத்திகா ராஜகோபாலனின் நடனநிகழ்ச்சி சென்னை பாரத் கலாச்சாரில் டிசம்பர் 26, 2014 அன்று நடைபெற்றது. இவர் 'பத்மபூஷண்' கலாநிதி நாராயணன், மற்றும் ஹேமா ராஜகோபாலன் ஆகியோரின் மாணவி.

ஊத்துக்காடு வேங்கடகவிக்கு வந்தனம் செய்யும் விதமாக நிகழ்ச்சி அவரது விநாயகர் பாடலுடன் தொடங்கியது. 'மும்மத வேழமுகத்து விநாயகன்' என்ற இந்தப் பாடல், கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாக இருந்தது. நிகழ்ச்சியின் முக்கிய உருப்படியான கல்யாணிராக நவரத்ன கிருதியில் கிருத்திகாவின் திறமை பளிச்சிட்டது. ஜதிகளும், ஸ்வரங்களும் அமைந்த இப்பாடலுக்கு இவர் நளினமாக ஆடினார். வித்தியாசமான அங்க அசைவுகளுடன், நடனஅமைப்பு புதுமையாகவும், துடிப்பாகவும் இருந்தது. புகழ்பெற்ற 'விஷமக்காரக் கண்ணன்' பாடலுக்கு இவர் ஹாஸ்ய ரசம் தொனிக்க ஆடியது வெகு அழகு. ரீதிகௌளையில் 'என்ன புண்ணியம் செய்தேனோ' என்ற நிறைவுப் பாடலின் அபிநயம் உள்ளத்தை உருக்கியது.

*****


மாதவி வெங்கடேஷ்

Click Here Enlargeமேரிலாந்திலுள்ள 'ப்ரக்ருதி டான்ஸ்' அமைப்பின் இணைநிறுவனரும், இணை கலையியக்குனருமான மாதவி வெங்கடேஷ் பாரதீய வித்யா பவன், திருப்பதி திருமலா தேவஸ்தானம் தகவல் மையம், ஹரே கிருஷ்ணா கோவில், பெரம்பூர் சாய்பாபா கோவில் ஆகிய இடங்களில் இவ்வருடம் பரதநாட்டியம் ஆடினார். திருமதி. விஜி ப்ரகாஷ் அவர்களிடம் நடனம் பயின்ற இவர், நாட்டிய கலாநிதி குரு. T.K. கல்யாணசுந்தரம், திரு. ஹரிக்ருஷ்ணன் கல்யாணசுந்தரம், திருமதி. இந்திராணி கடம்பி, திருமதி. ஸ்ரீலதா வினோத் ஆகியோரிடமும் உயர்பயிற்சி பெற்றுள்ளார். இவர் தனியாகவும், தக்ஷிணா/டேனியல் சிங் மற்றும் சக்தி டான்ஸ் கம்பெனி ஆகியவற்றின் உறுப்பினராகவும் இந்தியா, அமெரிக்கா ஆகிய இடங்களில் ஆடியுள்ளார். இவரது நிகழ்ச்சிகள் லிங்கன் சென்டர், நியூ யார்க்; கென்னடி செண்டர், வாஷிங்டன்; சென்னை மியூசிக் அகாடமி ஆகியவற்றில் நடைபெற்றுள்ளது.

மேரிலாண்ட் கேபிடல் பார்க் அண்ட் கமிஷன், தனது 32வது நடன வடிவமைப்பாளர்கள் காட்சிக்கு (showcase) வாஷிங்டன் D.C. பகுதியிலிருந்து தேர்வு செய்த 7 நடனப்பள்ளிகளில் இந்த 'ப்ரகிருதி டான்ஸ்' ஒன்று. பரதநாட்டியப் பயிலரங்குகள் நடத்தி மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் மாதவி. 2014ல் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த 300 பள்ளி மாணவர்கள் இந்தப் பயிலரங்குகளில் பங்கேற்றுள்ளனர். மேரிலாண்ட் ஸ்டேட் ஆர்ட்ஸ் கவுன்சில் (2014), ஆக்ஸ்ஃபோர்டு ஓரையல் கல்லூரியின் கோவர் நடன ஆக்கப் பரிசு (2013), சென்னை மியூஸிக் அகாடமி ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். தேசிய இளங்கலைஞர் அறக்கட்டளையின் திறன் விருது, அல்லையன்ஸ் ஃபார் கலிஃபோர்னியா ட்ரெடிஷனல் ஆர்ட்ஸின் பயிற்சியாளர் நிதிநல்கை ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

யூசி பெர்க்கலியில் பயோஎஞ்சினியரிங் இளநிலைப் பட்டம் பெற்றுள்ள இவர், தற்சமயம் பயோமெடிகல் அறிவியலில் ஆய்வு செய்கிறார்.

*****
மௌனிகா & இஷானா

Click Here Enlargeசகோதரிகள் மௌனிகா நாராயணனும், இஷானா நாராயணனும் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 'இந்திய நாட்டிய விழா'வில் தொடங்கி கிரி ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் கபாலீஸ்வரர் கோவில், கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் பாரதீய வித்யா பவன், மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், மடிப்பாக்கம் பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா போன்ற இடங்களில் நடனமாடினர்.

புதுவருடப் பிறப்பன்று பங்களூருவைச் சேர்ந்த 'சிவப்ரியா நாட்டியப்பள்ளி' சார்பில் நடைபெற்ற 'சரதோத்ஸவ நாட்டிய விழா 2015'ல் நடனமாடினர். நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர்களான திரு. கிரண் சுப்ரமணியன் மற்றும் சந்தியா சுப்ரமணியன் ஆகியோர் இவர்களது நடனத்தை வெகுவாகப் புகழ்ந்தனர்.

மாமல்லபுரம் நிகழ்ச்சியில் சரஸ்வதி ராக புஷ்பாஞ்சலி, கணேச துதி, கமாஸ்ராக 'வேலனைக் காண்போம் வாரிர்', பாபநாசம் சிவனின் புகழ்பெற்ற 'ஆனந்தநடமிடும் பாதன்', 'ரஞ்சனிமாலா', 'வலசி தில்லானா' போன்றவற்றுக்கு நடனமாடினர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இவர்கள் வழங்கிய நிகழ்ச்சி பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

சகோதரிகள் இருவரும் குரு விஷால் ரமணியிடம் 8 ஆண்டுகளுக்குமுன் நடனம் கற்கத் தொடங்கி, 2011ல் அரங்கேற்றம் கண்டனர். குரு. திருமதி. வித்யாலதா ஜீரகேவிடம் நடனப் பயிற்சியைத் தொடர்ந்தனர். அவர்கள் ஆடிய வர்ணமும், சிவதாண்டவமும் 'சிவப்ரியா நடனப்பள்ளி' யின் Dr. சஞ்சய் சாந்தாராம் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. இவர்கள் இருவரும் இயைந்து ஆடுவதை 'இரட்டையர்கள் ஆடுவதுபோல் இருந்தது' எனப் பலரும் வெகுவாகப் பாராட்டினர்.

*****


அனன்யா அஷோக்

Click Here Enlargeஅனன்யா அஷோக் விரிகுடாப் பகுதி கர்நாடக இசை ரசிகர்களுக்கு பரிச்சயமான பெயர். இங்கேயே வளர்ந்து, படித்து, கர்நாடக இசை கற்று, இப்போது சென்னைக்குப் புலம்பெயர்ந்து, அங்கே இசைமேடைகளில் நிதானமாக ஆனால் உறுதியாக முன்னேறிவரும் இளங்கலைஞர்.

நடந்துமுடிந்த சீஸனில் பல முக்கிய சபாக்களில் கச்சேரிகள் செய்து கவனத்தைக் கவர்ந்தார். மயிலை ஆர்.ஆர். சபாவில் தொடங்கி, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், 'சார்ஸுர்' ஆதரவில் நாரதகான சபா மினிஹால், ஹம்சத்வனி, பாரத் கலாசார் என்று எல்லா இடங்களிலும் சிறப்பாக நடந்து முடிந்தது. தவிரவும், சென்னை மியூஸிக் அகாடமி HCL நிறுவனத்தின் ஆதரவுடன் நடத்தும் மாதாந்திர கச்சேரித் தொடரில் 2014ம் வருடத்துக்கான, சிறந்த கச்சேரிக்கான விருதை தமிழக கவர்னர் மேதகு ரோஸைய்யாவிடமிருந்து, ஜனவரி 1, 2015 அன்று, அகாடமியின் விருதுவழங்கும் விழாவில் பெற்றார்.

சங்கீதகலாநிதியும், இசையுலக ஜாம்பவானுமான மதுரை டி.என். சேஷகோபலன் அவர்களிடம் இசைப் பயிற்சியைத் தொடரும் அனன்யா, இசையுலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பிடிப்பார் என்பதில் ஐயமில்லை.

*****


மானஸா சுரேஷ்

Click Here Enlargeசான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதி ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான மானஸா சுரேஷ், 'சுருதி ஸ்வர லயா' இசைப்பள்ளியைச் சேர்ந்தவர் இவ்வாண்டு இசைவிழாவில் நீலகண்டசிவன் அகாடமி, பிரம்மகான சபை, பார்த்தசாரதிசுவாமி சபா, கர்நாடிகா குளோபல் ஹெரிடேஜ் மியூசிக் ஃபெஸ்டிவல், க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை, சிவன் அகாடமி போன்ற பல்வேறு அரங்குகளில் இசைக்கச்சேரிகள் வழங்கினார். தவிர திருவையாறு மற்றும் கோயம்புத்தூரில் நடைபெற்ற தியாகராஜ ஆராதனை விழா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நடத்தும் 'டைம்ஸ் தியாகராஜா' போட்டியில் பங்கேற்ற ஐம்பதுக்கும் மேற்பட்டோரில் ஒருவர். ஃபிப்ரவரியில் நடைபெற உள்ள இறுதிச்சுற்றுக்கு 6 பேரில் ஒருவராக வந்துள்ளார். ரசிகர்கள் முகநூலில் facebook.com என்ற பக்கத்தில் இவருக்கு ஓட்டளிக்கலாம். திரு. ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் அவர்கள் தினத்தந்தியில் (ஜனவரி 10, 2015) எழுதிய இசைவிழா விமர்சனத்தில், முன்னேறிவரும் திறமைவாய்ந்த கலைஞர் என மானஸாவைக் குறிப்பிட்டுள்ளார்.

*****


ஸ்ரீக்ருபாவின் 'ராமம் குணாபிராமம்' நாட்டிய நாடகம்

Click Here Enlargeராமாயணத்தைப் புதியகோணத்தில் நாட்டிய நாடகமாகத் தரும்படி பத்மா சேஷாத்ரி கலைக்குழுவின் நிறுவனரும், கல்வியாளருமான திருமதி. YGP கேட்டுக் கொண்டதற்கிணங்க 'ராமம் குணாபிராமம்' என்ற நாட்டிய நாடகத்தை, சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியின் பிரபல ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி வழங்கியது. ஸ்ரீராமனின் பதினாறு கல்யாணகுணங்களை நாரதர் வால்மீகிக்குச் சொல்வதாக இது அமைந்துள்ளது.

திரு. அசோக் சுப்ரமணியம், பல்வேறு ஆய்வுகள் செய்து ஸ்ரீராமனின் அருங்குணங்களைப் பாடல்களாக வடித்துக் கொண்டிருக்கும்போது, தற்செயலாக வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் கொடுத்த கேலண்டரில் ஸ்ரீராமனின் 16 கல்யாண குணங்களும் உதாரணக் கதைகளோடு இருப்பதைக் கண்டார். அந்தப் பரவச உணர்வுடனே பாடல்களை எழுதி, திருமதி. விஷால் ரமணியிடம் காண்பிக்க, அவர் பாடல்களைத் தேர்வுசெய்து நாட்டிய நாடகமாக்கினார். மாணவர்கள் 11 பேர் இதற்குப் பயிற்சிபெற்று, சென்னை நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடினர்.

ஸ்ரீக்ருபாவின் பாடகர் கௌஷிக் சம்பகேசன் முயற்சியில் சென்னையில் இந்தப் பாடல்கள் தகுந்த பக்கவாத்தியங்களோடு பதிவுசெய்யப்பட்டன. ரம்யா ரமேஷ் லக்ஷ்மணன், வர்ஷினி ஸ்ரீகாந்தன், உஷா வெங்கடாசலம் ஆகியோர் பாத்திரங்களை ஏற்றனர். காவியத்தலைவன் ஸ்ரீராமனாக ஷ்ரேயா கஷ்யப், சீதையாக இஷானி சிங் தோன்றி ஆடியவிதம் நேர்த்தி. நாரதராக குரு விஷால் ரமணி பங்கேற்றார். நாடகத்தின் முடிவில் திருமதி YGP, நாட்டியக் குழுவினரைப் பாராட்டியதுடன், அடுத்த வருடம் கிருஷ்ணன் வடிவெடுத்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

'சரஸ்வதி மெமோரியல்' நிதி திரட்டுவதற்காக இதே நாடகத்தை அறுபது பேர் நடிப்பில் பிரம்மாண்டமாக நடத்த ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி திட்டமிட்டுள்ளது. பிற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

*****


தொகுப்பு: மீனாட்சி கணபதி
தமிழாக்கத்தில் உதவி: சுபத்திரா பெருமாள்,
கூப்பர்டினோ, கலிஃபோர்னியா
More

'பத்மஸ்ரீ' பெறுகிறார் ஜார்ஜ் ஹார்ட்
Share: 




© Copyright 2020 Tamilonline