Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
அரங்கனும் ஆர்லோவ் வைரமும்
கூடு
வாழ்வின் அழகியல்!
- கவிதா யுகேந்தர்|ஜனவரி 2015|
Share:
"ஏ, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், தக்காளி, காய் எல்லாம் இளசா இருக்கும்மா. வந்து அள்ளுங்க." காய்கறிக்காரன் வந்துவிட்டானா? அப்போ மணி பதினொண்ணு ஆகி இருக்குமே, இப்பொழுது சமையல் ஆரம்பித்தால்தான் மதிய சாப்பாட்டைச் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு குருவம்மாவிடம் கொடுத்து அனுப்ப முடியும். குருவம்மாவை என்று நினைத்தவுடன் நினைவு முற்றிலுமாக அவள்பால் சென்றுவிட்டது. வயது என்னவோ முப்பத்தைந்துதான். ஆனால் வயதுவந்த ஒரு பெண், குடிகாரக் கணவன், ஊதாரி மகன் என்று பல சுமைகள். பாவம்! ஏதேதோ வேலை செய்து வருகிற வருமானத்தில் குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். எதற்குத்தான் ஜென்மம் எடுத்தாளோ இப்படிக் கஷ்டப்படுவதற்கு. கடவுளே! கடவுளே!

சரி, குழம்பு கொதிக்கட்டும், பொரியல் காய் வாங்கி வரலாம் என்று கீழே வந்தேன். வெண்டைக்காய் விலை விசாரித்து கால் கிலோ போடச் சொன்னேன். "என்னப்பா, இன்னைக்கு காய் எல்லாம் கம்மியாதான் இருக்கு. நல்ல வியாபாரமோ?"

"ஆமாம்மா, கடவுள் புண்ணியத்துல இன்னிக்கி நல்ல வியாபாரந்தேன். நாளைக்குத்தான் மழை வருமுன்னு பேசிக்கறாங்க. பொழைப்பு எப்புடி போகுமோ. ராத்திரி சாப்பாட்டுக்கு வழி பிறக்குமோ என்னவோ. தினமும் கைக்கு வர்றது வாய்க்கும் வவுதுக்குமே சரியா இருக்கு. அடுத்தநாள் வியாபாரத்துக்கு காய் வாங்கறதுக்குள்ளாறயே நாக்கு தள்ளுது, பத்தாததுக்கு மூணும் பொம்பள புள்ளைங்க. எப்புடித்தான் அதுங்கள கரையேத்தப் போறேனோ. சரி தாயி, என் பாட்டு எப்பவும் எசப்பாட்டு தான். நீ பொடலங்காய் எடுத்துக்கிறியா, நீளமா எம்மாம் ஜோரா இருக்கு பாரு".

"இல்லப்பா, வெண்டை போதும், அப்படியே கால் கிலோ தக்காளியும் போடு". காசைக் கொடுத்துவிட்டு மேலே போர்ஷனுக்குச் சென்றால் குழம்பு மொத்தமாகச் சுண்டி இருந்தது. "உனக்கு வம்பு பேச ஆரம்பிச்சா நேரம் போறதே தெரியாதே" என்று என் கணவர் அடிக்கடி சொல்வது காதில் ரீங்காரமிட்டது. சரி, கேட்டா வத்தகொழம்புன்னு சொல்லிர வேண்டியதுதான் என்று வெண்டைப் பொரியலை அவசர அவசரமாக செய்து முடிக்கவும் குருவம்மா வரவும் சரியாக இருந்தது.

சாயங்காலம் வேலையெல்லாம் முடித்துவிட்டு கோவிலுக்கு புறப்பட்டேன். பூ வாங்குவோமென விலை கேட்டு வாங்கினேன். "ரெண்டு மொழம் போதுமா பாப்பா. மொழம் அஞ்சே ரூபாதான். இன்னொரு மொழம் வாங்கிக்கோ".

"அதெல்லாம் வேண்டாம்மா. ரெண்டு மொழம் மட்டும் போதும்". பையினுள் சில்லரை தேடிக்கொண்டு இருக்கும்பொழுதே பெரிய மீசையுடன் அவன் வந்தான். "ஏ கருப்பாயி, நீ என்ட வட்டிக்கு காசு வாங்கி எவ்வளவு நாள் ஆச்சு. அந்தா தர்றேன், இந்தா தர்றேன்னு இழுத்தடிக்கிரியே, என்னா சமாச்சாரம். ஒழுங்கா பொழைக்கணுமா வேணாவா?"

"ஐயா, சாமி, ரெண்டு நாளா வியாபாரம் படுத்துக்கிச்சியா. இன்னும் ஒரு வாரம் கொடுங்க. வட்டியக் கட்டிப்புடுறன். பெரிய மனசு பண்ணுங்க சாமி".

"சரி சரி, பொலம்பாத. இன்னும் ஒரே வாரம். வட்டி வந்துரனும். இல்ல, கடை இருக்காது, பாத்துக்க" என்றவாறே போய்விட்டான்.
எனக்குப் பாவமாக இருந்தது. இருபது ரூபாயை நீட்டி, "பூவைக் கொடும்மா, மிச்சத்த நீயே வெச்சிக்கோ" என்றேன். "ஐயே, எனக்கு எதுக்கும்மா இந்த காசு. இந்தம்மா மீதி ரூபா" என்றாள். எவ்வளவு திமிர், பலபேர் பார்க்கத் திட்டு வாங்கினாலும் இந்தப் போலி கவுரவத்துக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை என்று எண்ணியவாறு கோவிலினுள் சென்றேன்.

இரவு என் கணவரிடம் எல்லாவற்றையும் விவரித்தேன். காய்கறிக்காரன், குருவம்மா, பூக்காரி யாரையும் விடவில்லை. "இந்த அடித்தட்டு மக்களைப் பார்த்தாலே பாவமா இருக்குங்க. நம்ம மாதிரி இருக்குறவுங்க இவுங்களுக்கு எதாவது பண்ணனும். பாவம்!" என்றேன். என் கணவர் வழக்கம்போல இதற்கும் தலையாட்டினார்.

மறுநாள் காலை ஒரே மழை. சாயங்காலம் கொஞ்சம் குறைந்தது. "ஆப்பிள் ஆரஞ்சு, திராட்சை..." குரல் பரிச்சயமாக இருக்கிறதே என்று கீழே வந்தேன். பார்த்தால் காய்கறிக்காரன். "என்னம்மா பார்க்கறே. மழையை வச்சிக்கிட்டு காய்கறி வாங்கிப்போட்டா எல்லாம் அழுகிடும். அதான் நாலு பழத்த வாங்கி கூடையில போட்டு கொண்டாந்துட்டேன். எதாவது வேணுமாம்மா?"

"இல்லப்பா, நான் உன்னப்பத்திதான் நெனச்சிட்டு இருந்தேன், வியாபாரம் எப்படி இருக்குமோன்னு. எதாவது பண உதவி வேணும்னா சொல்லுப்பா."

"அதெல்லாம் வேண்டாம்மா, எனக்கு வேண்டியதெல்லாம் என்கிட்டே இருக்கு. உனக்குப் பழம் வேண்ணுமின்னா சொல்லும்மா. நல்லதா பார்த்து போடுறன்."

வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீடு வந்தேன். மனது என்னவோ போலிருந்தது.

இரவு ஏழு மணியளவில் குருவம்மா வந்தாள். "என்ன குருவம்மா, இந்த நேரத்தில..."

"இல்ல கண்ணு, உன்ட ஐந்நூறு வாங்கிருந்தனே, கையில கொஞ்சம் பணம் சேர்ந்திச்சி. அதான் எம்புருஷன் வந்து புடுங்கறதுக்குள்ள கொடுத்திரலாம்னு வந்தேன். இந்தா கண்ணு."

"இல்ல குருவம்மா, நீயே வெச்சிக்க. உனக்குதான் ரொம்ப உதவியா இருக்கும்" என்றேன்.

"நல்லா இருக்கு கண்ணு நியாயம். உன் காசை நான் எடுத்தா திருடுற மாதிரி ஆயிடாதா. வாங்கிக்க கண்ணு, அப்பத்தான் எனக்கு தூக்கமே வரும்" என்று வலுக்கட்டயமாகத் திணித்துவிட்டு சென்றாள்.

அன்று இரவு எனக்குத் தூக்கமே இல்லை. யாரோ என் பொட்டில் அடித்த மாதிரி இருந்தது. அடித்தட்டு மக்கள் என்று நான் பட்டம் கொடுத்த மூன்று மனிதர்களின் வேறு வேறு பரிமாணங்களைக் கண்டேன். மூன்று பேருமே வேறொருவருடைய காசிற்கு ஆசைப்படவில்லை, உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து முன்னேறத் துடிப்பவர்கள், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் மனம் தளராதவர்கள். கையில் கொஞ்சம் காசு அதிகமாக இருக்கும் ஒரே காரணத்திற்காக, அடித்தட்டு மக்கள் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பதைவிட அவர்கள் இல்லாமலே இருக்கலாம் என்று நினைத்த எனது அகங்காரத்தை எண்ணி வெட்கினேன். சிறிது துன்பம் வந்தாலும் சுணங்கிப் போகும் நான், ஒவ்வொரு நொடியையும் எது நடந்தாலும் அதைச் சவாலாக எடுத்துக் கொண்டு வாழ்வை வாழும் திண்மையுடைய இவர்களைப் பற்றி தாழ்வாக நினைப்பதா?"

மறுநாள் காலை எனக்கு பூக்காரம்மா, காய்கறிக்காரர், வீட்டுவேலை செய்பவர், கையேந்திபவன் வைத்திருப்பவர்கள் இப்படி யாருமே கண்ணுக்குத் தெரியவில்லை. ஒரு இணக்கமான மனித வாழ்விற்கு உறுதுணையாக இருக்கும் சக்தியின் ஒரு பகுதி இவர்களது உருவில் வலம் வருவதாகவே தெரிந்தது!

கவிதா யுகேந்தர்,
டலுத், ஜார்ஜியா
More

அரங்கனும் ஆர்லோவ் வைரமும்
கூடு
Share: 


© Copyright 2020 Tamilonline