Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 5)
- கதிரவன் எழில்மன்னன்|ஜனவரி 2015|
Share:
பின்புலம்: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவுகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவமனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். மூவரும் துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இதுவரை: ஷாலினி தம்பி கிரண் வீட்டிற்கு அம்மா அனுப்பிய உணவைக் கொடுக்க வந்தாள். அங்கே கிரண் ஒரு முப்பரிமாண ப்ரிண்ட்டரில் தயாரித்த போர்ஷா கார் மாடலின் நுணுக்கமான அம்சங்களைப் பார்க்கிறாள். அது ப்ரிண்ட்டரில் தயாரானது என்று அவள் நம்ப மறுக்கவே, கிரண் புதிதாகப் பதித்துக் காட்டி வியப்பளிக்கிறான். ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வரவே இருவரும் சூர்யாவோடு அங்கே விரைந்தனர். அங்கு அவர்களை வரவேற்ற பெண்மணியிடம் சூர்யா ஓர் அதிர்வேட்டு யூகத்தை வீசினார். வரவேற்புக் கூடத்திலிருந்த புகைப்படங்களையும் அலங்கரிப்புகளையும் வைத்தே யூகித்ததாக சூர்யா விளக்கினார். பிறகு...

*****


சூர்யாவின் விளக்கத்தைக் கேட்டு வியப்புற்று, அவர்மேல் அபரிமிதமான நம்பிக்கை வளர்த்துக்கொண்ட குட்டன்பயோர்க் நிறுவனர் அகஸ்டா க்ளார்க் மூவரையும் சூர்யாவின் தூண்டுதலுக்கிணங்கி ஆராய்ச்சிக் கூடத்துக்குள் அழைத்துச் சென்றாள். அங்கு அவர்கள் கண்முன் விரிந்ததோ ஒரு வினோத உலகம்! தாம் துப்பறிந்த கேஸ்களில் இதுவரை கண்டிராத ஒரு கலப்படக் கோலமாகக் காட்சியளித்த கூடத்தை மூவரும் வியப்புடன் நோட்டம் விட்டனர்.

அந்தக் கூடத்தில் பலப்பல முப்பரிமாண ப்ரிண்ட்டர்கள் நிறுவப் பட்டிருந்தன. அவை யாவும் பலவிதமான பொருட்களைப் பதித்துக் கொண்டிருந்தன. தானியங்கி ரோபாட்கள் சுறுசுறுப்பாக ஒவ்வொரு ப்ரிண்ட்டருக்கும் போய் பதிக்கப்பட்ட பொருட்களைப் பரிசோதனை மேஜைகளுக்கு கொண்டுபோய் வைத்தன. அங்கு விஞ்ஞானிகள் அவற்றைப் பரிசீலித்துக் கொண்டிருந்தனர். மற்றபடி அறைகளாகப் பிரிக்கப்படாத. விரிந்த வெளியாக இருந்த கூடத்தின் ஒரு பக்கத்தில்மட்டும் சில கண்ணாடி அறைகள் வரிசையாக எழுப்பப் பட்டிருந்தன. அவற்றின் உள்ளே நடப்பதை வெளியிலிருந்தே நன்றாகப் பார்க்க முடிந்தது.

அக்கண்ணாடி அறைகளில் விண்வெளி வீரர்கள் அணிவது போன்ற, முழு உடலையும் மூடிய சுத்த அறை (clean room) உடையணிந்த உருவங்கள் முப்பரிமாண ப்ரிண்ட்டர்களைக் குடாய்ந்து கொண்டிருந்தன. அவர்கள் முகம்கூட மூடப்பட்டு, பார்க்க மட்டும் கண்ணாடியால் மூடப்பட்ட இடைவெளி விடப்பட்டு இருந்தது. மூச்சுகூட பதிக்கப்படும் பொருள்மேல் படாமலிருக்குமாறு மிக ஜாக்கிரதையாக வேலை செய்து கொண்டிருந்தன அந்த உருவங்கள்!

அது மட்டுமல்லாமல், கிரணுக்கும் ஷாலினிக்கும் பரிச்சயமான எரிந்த ப்ளாஸ்டிக் வாசம் சற்றே வீசியது. ஷாலினி மூக்கைச் சுளிப்பதைக் கவனித்த அகஸ்டா க்ளார்க், "ஸாரி, நாங்க எவ்வளவு எக்சாஸ்ட் வைச்சாலும் இந்த ப்ளாஸ்டிக் வாசனை மொத்தமாப் போக மாட்டேங்குது..." என்று மன்னிப்புக் கேட்கவும், ஷாலினி "சே சே, அப்படி ஒண்ணுமில்லே, ஸாரியெல்லாம் எதுக்கு" என்று கையசைத்து மறுதலித்தாள்.

கிரணோ அட்டகாசமாகச் சிரித்துவிட்டு, "ஸாரியா! சரியாப் போச்சு. என் வீட்டு வொர்க்‌ஷாப்ல இருக்கற முப்பரிமாண ப்ரிண்ட்டர் அடிக்கற வாசனைக்கு நான் பழகியாச்சு. அதை வச்சுப் பார்த்தா, இது நல்ல மணம்னுதான் சொல்லணும்!" என்றான். இதைக் கேட்ட அகஸ்டா கிரணைப் பார்த்து புன்னகைத்துத் தலையாட்டவும், கிரண் உச்சி குளிர்ந்தான். ஷாலினி கிரணை மீண்டும் முறைத்தாள். அவன் அதைக் கண்டுகொள்ளாமல் அகஸ்டாவைப் பார்த்து பதிலுக்குப் புன்னகைத்தான்.
ஷாலினி கிரண் வீட்டில் பார்த்த அதே முப்பரிமாண மாடல் ப்ரிண்ட்டர் அந்தக் கூடத்தில் இருப்பதைக் கண்டு கிரணை இழுத்துக் காட்டினாள். அது ஒரு ப்ளாஸ்டிக் கையைப் பதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து கிரணிடம், "பாத்தியா, இதாவது ஒரு பயனிருக்கற பொருள் பதிக்குது. உன்னை மாதிரி கார் பொம்மை செய்யலை" என்றாள்.

கிரண் உறுமினான். "பயனிருக்கா இல்லயாங்கறதை சொல்றதுக்கு நீ யாரு? அந்தக் கார் மாடல், என்னமாதிரி கார் உற்சாகிகளுக்குப் பயன்படுது. உன்னை மாதிரி மடிசஞ்சிகளுக்கு வேணா பயனில்லாம இருக்கலாம்" என்றான்.

சூர்யா குறுக்கிட்டார். "சரி, அந்த சச்சரவு எதுக்கு இப்போ. அகஸ்டா, செயற்கைக் கை பயனுள்ளதுதான். ஆனா அதைக் காட்டறத்துக்கு எங்களைக் கூப்பிடலைன்னு நினைக்கிறேன். இன்னும் ரொம்ப சன்னமான விஷயமா இருக்கணும். இந்த ரோபாட்கள்கூட கார் உற்பத்தி தொழிற்சாலைகளில இப்பப் பயன்படுத்தற சாதாரணமான விஷயந்தான். அந்தக் கண்ணாடி அறையில் உருவாக்கப்படும் பொருட்களாக இருக்குமோ? அதைப்பத்தி சொல்றீங்களா?"

அகஸ்டா சூர்யாவிடம், "சரியாப் பிடிச்சிட்டீங்க சூர்யா! வெளியில் இருக்கற இதெல்லாம் கொஞ்சம் சாதாரணமான விஷயங்கள்தான். குட்டன்பயோர்கின் மிக முக்கியமான தொழில்நுட்பம் அந்தக் கண்ணாடி அறைகளுக்குள்ளதான் இருக்கு. அங்கதான் நாங்க உடல் திசுக்கள் எல்லாம் பதிக்கறோம். அவங்க போட்டிருக்கற விண்வெளி வீரர் மாதிரியான முழுவுடல் பாதுகாப்பு உடை அவங்களைப் பாதுகாப்பதற்காக இல்லை. அவர்கள் உடல்களிலிருந்து எந்த விதமான தூசியோ, திசு ஸெல்களோ பதிக்கப்படும் திசுவில் விழுந்து மாசுபட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான். அந்தக் கண்ணாடி அறையும், காற்றில்கூட எந்த விதமான துகள்களும் பாக்டீரியாக்களும் இல்லாமல் மிகமிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது" என்றாள்.

சூர்யா தலையாட்டியபடி, "இந்த அதிசுத்த அறைத் தொழில்நுட்பம், என் முன்காலத் துறையான மின்வில்லை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான அம்சம். அதனால், அதைப்பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அதே தொழில்நுட்பம் இங்கும் பயன்படுத்தப்படுவது சுவாரஸ்யந்தான். ஆனால், ஆச்சர்யம் என்று சொல்லமுடியாது. இரண்டுக்கும் ஒரே அதிசுத்தம்தான் தேவையாக உள்ளது அல்லவா!" என்றார்.

அகஸ்டா ஆமோதித்தாள், "ஆமாம் சூர்யா. நீங்கள் சொல்லும்படி, மின்வில்லைத் துறையில் அதிசுத்தம் தேவைதான். ஆனால், இந்தத் திசுத் துறையில் நுண்துகள்கள் மட்டுமல்லாமல், நுண்ணுயிரிகள் (microbes) மற்றும் திசுத் துகள்களும் மாசுபடுத்தாமல் இருக்க வேண்டியுள்ளதால், காற்றை இன்னும் அதிஜாக்கிரதையாகச் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது."

ஷாலினியும் ஆமோதித்தாள். "அது ரொம்பச் சரி. எங்க மருத்துவ ஆராய்ச்சிக் கூடங்களில்கூட இப்படித்தான் நுண்ணுயிர் மாசில்லாமல் இருக்கச் சில அறைகள் அதிசுத்தமாக வைக்கப்படுது. ஆனா, அங்க ஆராய்ச்சியாளர்களையும் நோய்களிலிருந்து காக்க இந்த உடைகள் பயன்படுது. சமீபத்துல ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா தொற்றிலிருந்து மருத்துவர்களையும் மற்றப் பணியாளர்களையும் காக்க இந்த மாதிரி உடை போட்டிருந்ததைப் பாத்திருப்பீங்க..."

கிரண் இடையில் குதித்தான். "அதிசுத்தம் இருக்கட்டும்! எனக்கு இந்தத் திசுக்களை எப்படி முப்பரிமாணமாகப் பதிக்கிறீர்கள், எப்படிப் பயன்படுதுங்கறதைத் தெரிஞ்சுக்கத்தான் ரொம்ப ஆவலா இருக்கு. அதைப்பத்தி சொல்லுங்க. அப்பதானே அதுல பிரச்சனை என்னன்னு புரிஞ்சுக்க முடியும்!" என்றான்.

பிரச்சனையைப் பற்றி ஒரு கணம் கவலை எழுந்தாலும், ஆழ்ந்த ஆர்வமுள்ள தனது துறையைப்பற்றி விவரிக்கும் வீர்யம் பொங்கி எழுந்ததால் கவலையை உதறித் தள்ளிவிட்டு ஈடுபாட்டுடன் விவரிக்கத் தொடங்கினாள் அகஸ்டா. "கிரண், நாங்கள் எவ்வாறு தயாரிக்கிறோம் என்பதைப்பற்றிப் பிறகு பார்க்கலாம். இதை எதற்காகத் தயாரிக்க வேண்டும், எப்படிப் பயன்படும் என்பதைப் புரிந்து கொள்வதுதான் அத்தியாவசியம்."

"ஆமாமாம். பயனைப்பத்தி முதல்ல சொல்லுங்க" என்றாள் ஷாலினி. அகஸ்டா அபரிமிதமான உற்சாகத்தோடு விவரிக்கத் துவங்கினாள். "திசு பதிப்பது எதற்குப் பயன்படக்கூடும்னு சொல்லி மாளாது. அவ்வளவு பரந்த பயனுடையது. நம்முடைய உடல் எப்போதும் ஸெல்களை உருவாக்கித் திசுக்களைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கு. சிறுவயசில் எங்கயாவது விழுந்து சிராய்ச்சு காயம்பட்டா அழுவீங்க. அம்மா அதுமேல மருந்து தடவி கட்டுப்போட்டு விட்டுட்டா, அதுல வேகமா புதுத்தோல் வளர்ந்து சீக்கிரமே ஆறிடும். ஆனா..." என்று சொல்லிக்கொண்டே போனவள், ஷாலினி சிரிப்பை அடக்க முடியாமல் தவிப்பதைப் பார்த்து நிறுத்திவிட்டு, "என்ன அப்படி சிரிக்கறா மாதிரி இருக்கு?" என்று சிறிய சினத்தோடு வினவினாள்.

ஷாலினி சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு கையைத் தூக்கி சமாதானம் விழைந்தாள். "ரொம்ப ஸாரி! நான் நீங்க சொன்ன விஷயத்துக்காக சிரிக்கலை. சின்ன வயசில கீழ விழுந்து அடிபட்டா அழறதப் பத்தி சொன்னீங்களா, எனக்கு சின்ன வயசு ஞாபகம் வந்துடுச்சு. கிரண் சின்ன வயசில அடிக்கடி தத்தக்கா பித்தக்கான்னு ஓடி, மரத்துல குரங்கு வேலை பண்ணி அடிபட்டுக்கிட்டு திருதிருன்னு முழிப்பான். ஆனா அம்மாவைப் பாத்துட்டா போதும், ‘ஓ’ன்னு ஒரே அழுகைதான், இப்ப கிரண் அழறா மாதிரி நினச்சுப் பாத்தேன். சிரிப்பு வந்துடுச்சு, அடக்கமுடியல, ஸாரி!" என்றாள்.

அகஸ்டாவும் கிரணைப் பார்த்து வாயைப் பொத்திக்கொண்டு களுக் என்று நகைக்கவே கிரணுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்து விட்டது. "ஹேய், நானாவது கல்லு, மரம்னு ஏறி விளையாடிதான் அடிபட்டுகிட்டேன், ரத்தம் நிறைய வந்துது, அதுனாலதான். மத்தவங்க மாதிரி புத்தகத்துல கண்ணை புதைச்சுகிட்டு நடந்து சுவத்துல முட்டிகிட்டு ஒண்ணும் அழலயே!" என்றான்.

அவனுக்கு பதில் சொல்ல வாய் திறந்த ஷாலினியை சூர்யாவின் குரல் தடுத்து நிறுத்தியது. "சின்னப் பிள்ளைங்க மாதிரி இது என்ன வீண் சண்டை? அகஸ்டா சொல்லிக்கிட்டிருந்த முக்கியமான விவரத்தை இடைமறிச்சு நிறுத்திட்டீங்களே? மேல சொல்லுங்க அகஸ்டா!"

சூர்யாவின் சொல்லால் சிரிப்பை நிறுத்திவிட்டு, அகஸ்டா மீண்டும் ஆழ்ந்து விவரிக்கலானாள். "ஆனால், நமக்கு வயதாக ஆக, அவ்வாறு தானாகவே திசுக்களைப் புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் சிறிது சிறிதாகக் குறைந்துவிடுகிறது. மேலும், சில சிறுவயதுக் குழந்தைகளுக்கும் கூட இத்தகைய குறைபாடு உள்ளது. அது மட்டுமல்ல, நம் உடலில் இருதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புக்கள் செயலற்றுப் போகுமானால் அவற்றுக்கு மாற்று அங்கம் பொருத்த வேண்டும். ஆனால் மாற்று அங்கங்கள் கிடைப்பது மிக அரிது. அதனால் பலர் இறக்கின்றனர். அப்படியே கிடைத்தாலும், ஒருவரின் உடல் மற்றவரின் அங்கத்தை ஏற்காமல் போக நிறைய வாய்ப்புள்ளது. ரத்தக்குழாய்கள் போன்றவற்றுக்கு மாற்றாக எதையும் பொருத்த இயலாது. செயற்கைப் பொருட்களும் சரிப்பட்டு வருவதில்லை."

அகஸ்டா படபடவெனக் கூறியதை ஷாலினி ஆமோதித்தாள். "கரெக்ட். இந்த உள்ளுறுப்புகள் கிடைக்காமல் அல்லது நிராகரிக்கப்படுவதால் பலர் அவதிப்படுவதைதான் நான் நாள்தோறும் என் மருத்துவமனையில் பார்த்து வருந்துகிறேனே. அதற்கு உங்கள் தொழில்நுட்பத்தால் எதாவது நிவாரணம் கிடைக்குமானால் பிரமாதமான பயன்தான் அது!"

அகஸ்டா சிலிர்த்துக்கொண்டு "நிவாரணம் கிடைக்கத்தான் நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் ஷாலினி. ஆனால்..." என்று தொடர்ந்து அவள் விவரித்த குட்டன்பயோர்க் பிரச்சனையின் விவரங்களையும், முப்பரிமாண மெய்ப்பதிவு முடிச்சின் சிக்கல்களையும், சூர்யாவின் கைவண்ணத்தையும் வரும் பகுதிகளில் காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline