Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | முன்னோடி | சாதனையாளர்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | ஹரிமொழி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
மரபின் மைந்தன் ம. முத்தையா
- அரவிந்த் சுவாமிநாதன்|டிசம்பர் 2014||(1 Comment)
Share:
கவிஞர் மரபின் மைந்தன் ம. முத்தையா, தமிழகத்தின் இளைய தலைமுறை மேடைப்பேச்சாளர்களில் முதன்மையானவர். சைவத்திலும், இலக்கியத்திலும் தோய்ந்தவர். சங்க இலக்கியங்களிலும் சமய இலக்கியங்களிலும் ஆழங்காற்பட்டவர். கவிதை, இலக்கியம், ஆன்மீகம், வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு என்று பல தலைப்புகளில் நூல்கள் எழுதியிருக்கிறார். இவரது கவிதைகள் பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. மலேசியா, சிங்கப்பூர், குவைத், அபுதாபி, அமெரிக்கா, பாரிஸ், ஸ்விட்சர்லாந்து, மொரீஷஸ் என்று உலகெங்கும் பயணம் செய்து இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகிறார். தமிழக அரசின் 'கலைமாமணி', ரோட்டரி சங்கங்களின் உயரிய விருதான State of Honour award, 'தன்னம்பிக்கை நாயகன்', கி.ரா.வின் 'கரிசல் கட்டளை விருது' உட்படப் பல கௌரவங்களைப் பெற்றவர். மேனாள் அமைச்சர் ப. சிதம்பரம் சமீபத்தில் தொடங்கிய 'எழுத்து' இலக்கிய அமைப்பின் அறங்காவலர் குழுவினருள் ஒருவர். marabinmaindanmuthiah.blogspot.in என்ற வலைப்பதிவில் எழுதி வருகிறார். கவிஞர் வைரமுத்துவைத் தலைவராகக் கொண்ட 'வெற்றித்தமிழர் பேரவை'யின் பொதுச் செயலாளர். தமிழின் மேன்மையை வலியுறுத்திய பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய்க்கு அவ்வமைப்பு நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்னை வந்திருந்தவரைத் தென்றலுக்கெனச் சந்தித்தோம். அதிலிருந்து...

*****


கே: 'மரபின் மைந்தன்' என்பது எப்படி வந்தது?
ப: எனது பாட்டனார் திருக்கடவூர் அபிராமி அம்பாள் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர். 27 கோயில்களின் அறங்காவலராக அவர் இருந்தார். திருக்கடவூரில் ஒரு தேவாரப் பாடசாலையை நடத்தி வந்தார். அங்கு மாணவர்களுக்கு இலவச உணவு, உடை, தங்குமிடத்தோடு திருமுறைப் பயிற்சிகளை நடத்தி வந்தார். அங்கே விடுமுறைக்குச் செல்லும் போதெல்லாம் வாரியார் சுவாமிகள், குன்றக்குடி அடிகளார் என பல தமிழறிஞர்களைப் பார்த்திருக்கிறேன். பாட்டனாரின் இல்லத்திற்கு வராத தமிழறிஞர்களே கிடையாது. காலைப் பொழுதுகள் பாடசாலை மாணவர்களின் தேவாரப் பாடல்களோடுதான் விடியும். அப்படி ஒரு சூழல் சிறுவயதிலேயே அமைந்ததனால் மரபு இலக்கியங்களின்மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவற்றின் சந்தமும் நயமும் என்னைக் கவர்ந்ததால் மரபுக் கவிதைகள் எழுத ஆசைப்பட்டேன். பள்ளிப்பருவத்திலேயே 'மரபின் மைந்தன்' என்ற புனைபெயரை வைத்துக்கொண்டு கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். மேடையில் பேசவும் துவங்கினேன். "பரதனா, இலக்குவனா?", "கற்பிலே சிறந்தது கண்ணகியா, சீதையா" போன்ற தலைப்புகளில் பேசுவேன். அதற்காகக் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் எல்லாம் வாசிப்பேன். செவ்வியல் நூல்களைப் படித்து, குறிப்பெடுத்து, மனனம் செய்து மேடைகளில் பேசுகிற முறை அன்றைக்கு இருந்தது. அப்போது 'முத்தையா' என்பது பொதுப்பெயராக இருந்ததால் தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக "மரபின் மைந்தன்" என்ற புனைபெயச் சேர்த்துக்கொண்டு, மரபின் மைந்தன் முத்தையா ஆனேன்.

கே: கண்ணதாசன்மீது ஆர்வம் வந்தது எப்படி?
ப: நான் படிப்பில் சராசரிக்கும் கீழான மாணவன்தான். ஆனால், அப்பருவத்திலேயே, என்னால் ஒரு விஷயத்தை எல்லார் மனதிலும் பதியும்படிச் சொல்ல முடியும் என்பதை உறுதியாக நம்பினேன். அதுபோல சுவாரஸ்யமாக எழுத முடியும் என்பதிலும் ஆழமான நம்பிக்கை இருந்தது. எழுத வேண்டும் என்ற எண்ணமும் கவிதை, மரபு வடிவங்களில் பரிச்சயமும் இருந்ததே தவிர, விஷயத்தை எப்படி உணர்ச்சிகரமாக, தீவிரத் தன்மையோடு சொல்வது என்பது அந்த வயதில் தெரியவில்லை. நான் ஒன்பதாம் வகுப்பில் தோல்வியுற்று மறுபடியும் படித்துக் கொண்டிருந்தபோது எனது பிறந்தநாள் பரிசாக சிவசுப்பிரமணியம் என்னும் என் உறவினர் ஒருவர் கண்ணதாசன் கவிதைகளையும், மு. மேத்தா எழுதிய 'அவர்கள் வருகிறார்கள்' என்ற கவிதை நூலையும் பரிசாக அளித்தார்.

அப்படித்தான் கண்ணதாசனின் கவிதைகள் அறிமுகமாகின. இயல்பாகவே பாடப்புத்தகங்கள் தவிர்த்து பிறநூல்களைப் படிக்கும் ஆர்வம் எனக்கிருந்தது. அவற்றை ஆர்வமுடன் படித்தேன். அப்போதே எனக்கு மனப்பாடத் திறன் என்பது அதிகம். மனப்பாடம் செய்வது வேறு, மனப்பாடம் ஆவது என்பது வேறு. இயல்பாகவே பாடல்கள் எனக்கு மனப்பாடம் ஆகின்றன. இன்றுவரை அப்படித்தான். கண்ணதாசனின் கவிதைகளை ஆவேசத்துடன் வாசித்தேன். அவரது ஆறு கவிதைத் தொகுதிகள், 'ஆட்டனத்தி - ஆதிமந்தி', 'மாங்கனி', 'இயேசு காவியம்', முற்றுப்பெறாத கவிதைக நூலான 'சங்கர காவியம்' எல்லாம் ஆழ்ந்து வாசித்தேன். கண்ணதாசன் என்னை ஆட்கொண்டார். மரபின் ஓட்டங்களுக்கு என் மனதுள் ஒரு தடம் போட்டுக் கொடுத்தவர் கண்ணதாசன். அவரது திரைப்பாடல்களைவிட அவரது கவிதைகளில்தான் அதிகப் பரிச்சயமுண்டு. என் கவிதைக்கு மானசீக குருநாதர் கண்ணதாசன்தான்.கே: உங்கள் முதல் கவிதைத் தொகுப்பு எது?
ப: 'வேலின் வெளிச்சத்தில்' என்பது எனது முதல் கவிதைத் தொகுப்பு. அது வெளியானது சுவாரஸ்யமான விஷயம். நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த காலம். எனது தமிழாசிரியர் வெங்கடேசன், கோவை கம்பன் கழகத்தின் செயலாளர். என்னைவிட அவருக்கு எனது கவிதைகளின் மேல் அதிக நம்பிக்கை இருந்தது. அவர் "நாளை கோவை கணபதி பகுதியில் நடக்கும் அருணகிரிநாதர் விழாவிற்கு நீ ஒரு கவிதை எழுதிக்கொண்டு வந்து வாசி" என்றார். நான் அப்போது பிள்ளைத்தமிழ் நூல்களில் தோய்ந்திருந்த காலம். பிள்ளைத் தமிழாக எழுத நினைத்தேன். ஆனால் ஒரே நாளில் 100 பாடல்களை எழுதுவது இயலாது என்பதை அவரிடம் சொன்னேன். அவர், "பரவாயில்லை. பருவத்துக்கு ஒன்றாகப் பாடல்களை எழுதிக் கொண்டு வா. போதும். அதை 'ஒரு பா பிள்ளைத்தமிழ்' என்று சொல்லிக் கொள்ளலாம்" என்று சொல்லி ஊக்குவித்தார். 'அருணகிரி - ஒருபா பிள்ளைத் தமிழ்' எழுதினேன். அருணகிரியாரின் சந்த நயத்திலேயே பாடல்களை எழுதினேன். உதாரணமாக, "வலையில் நெளியும் கழல்கள் அனைய விழிகள் எழுதும் வனிதையர்" என்று தொடங்கி வருகைப் பருவப் பாடலை எழுதினேன். இப்படி அந்த விழாவில் பத்துப் பாடல்களை அரங்கேற்றினேன்.

கோவைக்குப் பக்கத்தில் 'தென்சேரிமலை' என்ற ஒரு தலம். அதைச் 'செஞ்சேரி மலை' என்பார்கள். அதில் மலையின் உச்சியில் முருகனும், அடிவாரக் குகையில் முருகன் பாலதண்டாயுதபாணியாகவும் இருக்கிறார். கொள்ளை அழகு. அங்கு கிருத்திகைக்குக் கிருத்திகை சொற்பொழிவாற்றும் வாய்ப்பு புலவர் ஜானகி என்பவர் மூலமாக எனக்குக் கிடைத்தது. அந்த முருகனுக்கென்று எழுதிய துதிமலர்களையும் சேர்த்து, சில ஆண்டுகளுக்குப் பின் வெளியானதுதான் 'வேலின் வெளிச்சத்தில்'. அதுதான் அச்சில் வந்த எனது முதல் தொகுப்பு. நான் அவற்றை பள்ளிப் படிப்பின் விளிம்பில் எழுதியிருந்தாலும் இளங்கலை படித்து முடித்த பிறகுதான் அது அச்சு வடிவம் பெற்றது. இன்றுவரை அந்த முதல் தொகுப்பின் தீவிரம் நீங்காமல் இருக்கிறது.

கே: இந்த முயற்சிகளுக்கு வீட்டில் வரவேற்பு எப்படி இருந்தது?
ப: நான் வசதியான சூழலில் பிறந்து வளர்ந்தவன். வீட்டாருக்கு நான் சரியாகப் படிக்கவில்லை என்ற குறை மட்டுமே இருந்தது. நான் மாலையில் சொற்பொழிவுக்குச் செல்வதையும் பின் மாலை, பொன்னாடைகளுடன் இரவு வீடு திரும்புவதையும் அவர்கள் விசித்திரமாகத்தான் பார்த்தார்களே தவிர, குறை ஒன்றும் கூறவில்லை. வீட்டில் சற்றுக் கண்டிப்பு இருந்தது. ஆனால், நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. நாளடைவில் சமூகத்தில் அங்கீகாரம் வர, வர என் முயற்சிகளை ஏற்கத் தொடங்கினார்கள். குடும்பச் சூழல் எனது முயற்சிகளைப் பாதிக்கவில்லை.கே: கவிதை என்பது எப்படி இருக்கவேண்டும்?
ப: எந்தப் படைப்பும் பல்லாண்டு கால மரபின் நீட்சியாக இருக்க வேண்டும். மரபார்ந்த சிந்தனைகள் இருக்கவேண்டும் என்பதில்லை. அதன் சாயல், சாரல், தெறிப்பு அதில் இருந்தால் போதும். இன்றைய நவீனப் பொருட்களைப் பாடும்போது கூட, மொழி எவ்வளவு ஆழமானது என்பது நவீன கவிதையைப் பார்த்தால் தெரியும். ஒரு விதை எவ்வளவு வீரியமானது என்பது அது எந்த மரத்தில் இருந்து வந்தது என்பதிலும், எந்த நிலத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் இருக்கிறது. எனவே மரபும் நிலமும் பலமானது என்பது நம் தமிழ் மரபின் முக்கியமான அம்சம். அதை வெளிப்படுத்தும் கவிதைகளை நான் நேசிக்கிறேன். வரவேற்கிறேன்.

கே: இன்றைய கவிதைச் சூழல் குறித்தும் உங்கள் கருத்தென்ன?
ப: நான் மரபுக் கவிதைகளில் ஆர்வம் கொண்டிருந்தாலும் நவீன கவிதைகளினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவன். இன்றைக்கு வருகிற தமிழின் முக்கியமான நவீன கவிதைகளோடு எனக்கு நிறையப் பரிச்சயமுண்டு. தமிழிலக்கியத்தின் உச்சமான படைப்புகள் உருவாகிக் கொண்டிருக்கிற நேரம் என்று நான் இந்தக் காலகட்டத்தைச் சொல்வேன். பல அயல்நாட்டு நண்பர்களுடன் பேசும்போது இதை நான் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன். தீவிர இலக்கியம் என்றில்லை; வெகுஜன இலக்கியம், நவீன இலக்கியம் என எல்லாத் தளங்களிலுமே தற்போது உச்சப் படைப்புகள் உருவாகி வருகின்றன. ஜெயமோகனின் முதற்கனல், வெண்முரசு போன்ற மகாபாரத வரிசையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். கவிதைகள் என்று எடுத்துக் கொண்டால் கல்யாண்ஜி, கலாப்ரியா போன்றோரது கவிதைகளில், அந்த வகைமை எழுத்துக்களில் எனக்குப் பெரிதும் ஈடுபாடுண்டு. யவனிகா ஸ்ரீராம் போன்ற பின்நவீனத்துவக் கவிஞர்களையும் நான் அவதானித்து வருகிறேன். இன்றைக்குத் தமிழில் கவிதை எழுதிக் கொண்டிருப்பவர்களில் சங்க இலக்கியத்தின் சாயலோடு, சாரத்தோடு எழுதுபவர்கள் மிகவும் அபூர்வம். அதில் குறிப்பிடத்தகுந்தவராக 'சக்திஜோதி'யைச் சொல்லலாம். அவரது ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. ஏழாவது வரப் போகிறது. அவரது கவிதைகள் என்னை வியந்து பார்க்க வைக்கின்றன.
கே: 'ரசனை', 'நமது நம்பிக்கை' இதழ்கள் நடத்திய அனுபவத்தைச் சொல்லுங்கள்...
ப: நான் நடத்திய இலக்கிய இதழ் 'ரசனை.' சுயமுன்னேற்ற இதழ் 'நமது நம்பிக்கை'. அவற்றைத் தொடங்கக் காரணம் எனக்கு விளம்பரம், இதழியல் துறைகளில் இருந்த நாட்டம்தான். நான் முதுகலை மாஸ் கம்யூனிகேஷன் படித்தேன். ஒரு விளம்பர எழுத்தாளனாகத் தான் என் வாழ்க்கையைத் துவக்கினேன். அந்த வாய்ப்பு வந்தது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. நான் கோவை மணி மேல்நிலைப் பள்ளியில் படித்தவன். அதன் தலைமையாசிரியர் பி.வி. பத்மநாபன் என்னை ஊக்குவித்தவர்களுள் முக்கியமானவர். அவர் பணி ஓய்வு பெறும் காலத்தில் நான் கோவை பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். முன்னாள் மாணவர் சங்கம் அவருக்கு வழியனுப்பு விழா நடத்தியது. அந்த மன்றத்தின் செயலாளர் 'சசி அட்வர்டைசிங் ஏஜன்ஸி' என்ற நிறுவனத்தை நடத்தி வந்த ஆர். சாமிநாதன். விழாவுக்கு யாரைத் தொகுப்புரையாளராகப் போடலாம் என அவர் தலைமையாசிரியரிடம் ஆலோசிக்க, அவர் என் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார். நான் தொகுப்புரையாற்றினேன். விழா முடிந்து கிளம்பும்போது சாமிநாதன் என்னிடம் வந்து தனது விளம்பர நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற அழைத்தார். நான் படித்துக் கொண்டிருக்கிறேன்; என்னால் வரமுடியாது என்று மறுத்துவிட்டேன். அவரோ விடாப்பிடியாக மாலை நீங்கள் இரண்டு மணி நேரம் வந்தால் போதும் என்று சொன்னார். ஆனால் நான் போகவில்லை.

சில நாட்கள் கழித்து அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, அலுவலகத்திற்கு வரச் சொன்னார். நானும் தவிர்க்க முடியாமல் சென்றேன். அந்த அலுவலகமும் அதன் சூழலும் என்னைக் கவர்ந்தன. 1989ன் இறுதிப் பகுதி அது. அந்தக் காலகட்டத்திலேயே தினமும் இரண்டு மணி நேர வேலைக்கு எனக்கு மாதம் 750 ரூபாய் தருவதாகச் சொன்னார். நானும் ஒப்புக்கொண்டேன். ஆறே மாதத்தில் அதை 1500 ரூபாயாக உயர்த்தினார். காரணம், விளம்பர எழுத்து எனக்கு இயல்பாக, லாகவமாக வந்தது. எனது கவிதைப் பயிற்சி, எழுத்தார்வம், இலக்கியப் பரிச்சயம் காரணமாக என்னால் சிறப்பாகச் செய்ய முடிந்தது.

இதழியல் ஆர்வத்தினால், நான் பல இதழ்களில் ஆலோசகனாக, துணையாசிரியனாக எனப் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறேன். அப்படித் தொடங்கியதுதான் 'ரசனை' மற்றும் 'நமது நம்பிக்கை'. சுஜாதா, சிறந்த இலக்கிய இதழுக்கான விருதை ஒவ்வோர் ஆண்டும் 'சுஜாதா விருது' என்று குறிப்பிட்டு எழுதுவார். அது தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு, அவர் மறையும் வரையில், 'ரசனை' இதழுக்குத்தான் கிடைத்தது. தற்போது 'ரசனை' இதழ் வெளிவருவதில்லை. 'நமது நம்பிக்கை' ஏழெட்டு ஆண்டுகளாக வெளிவருகிறது.

கே: உங்களைக் கவர்ந்த முன்னோடி, சமகால எழுத்தாளர்கள் என்று யார், யாரைச் சொல்வீர்கள்?
ப : நான் வயதில் இளையவன் என்பதால் இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான படைப்பாளிகள் எனக்கு முன்னோடிகள்தான். இதில் ஜெயகாந்தன், ஜெயமோகன், நாஞ்சில்நாடன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர் என்னைக் கவர்ந்தவர்கள். அவர்களுக்கும் மூத்தவர்களில் நான் விரும்பி வாசித்தவர்கள் புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன் ஆகியோர். கவிதை என்று எடுத்துக் கொண்டால் சங்க இலக்கியம் தொடங்கி, பக்தி இலக்கியங்கள் வரை என்னைக் கவர்ந்தவை பல. பன்னிரு திருமுறைகள் மீது எனக்கு அளவுகடந்த ஈடுபாடும், பிரியமும் உண்டு. அதுபோல பாரதியாரும், கண்ணதாசனும் என் மனதிற்கு மிக நெருக்கமானவர்கள்.கே: இலக்கியவாதியாக மட்டுமல்லாமல், ஆன்மீக ஆர்வலராகவும் இருக்கிறீர்கள். ஆன்மீகத்தை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்?
ப: சுயம் தேடுகிற ஓர் முயற்சிதான் ஆன்மீகம். ஆன்மீகம் என்பது கடவுளைக் காண்பது மட்டுமல்ல; காணுகிற பொருள்களில் எல்லாம் கடவுளைக் காண்பதும்தான்.

கே: உங்களை பாதித்த ஆளுமைகள் யார், யார்?
ப: என்னைப் பாதித்த ஆளுமைகள் என்று யாருமில்லை. என்மீது தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகள் உண்டு. அதில் கண்ணதாசன் முக்கியமானவர், இன்றளவும். அதுபோல கவிப்பேரரசு வைரமுத்துவும் மிக முக்கியமானவர். எனது மனதுக்கு மிகப் பிடித்த ஒரு மனிதர். வெளித்தோற்றத்தில் அவருக்கு இருக்கும் அந்த விறைப்பு, முறுக்குத்தனம் எல்லாவற்றையும் தாண்டி அவரிடத்தில் ஒரு மிக மென்மையான, மேன்மையான பல இயல்புகளை நான் கண்டிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். விளம்பரத்துறையைப் பொருத்தவரை சென்னையில் பிஃப்த் ஸ்டேட் (fifthestate.in) என்ற விளம்பர நிறுவனத்தை நடத்திவரும் திரு. கணேஷ் பாலிகா எனக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியவர்.

ஆனால் ஆன்மீக ஈடுபாடு வந்த பிறகு, ஈஷா யோக மையத்தின் சத்குரு அவர்களுடனான தொடர்பு கிடைத்த பிறகு - அவருடைய திருவடிகளில் இருந்து யோகப் பயிற்சிகள், தீக்ஷை பெற்ற பிறகு - பாதிப்புகள், தாக்கங்கள் என்பது அதிகம் இல்லை. சுயத்தைத் தேடி நீங்கள் நடக்கிறபோது மற்ற ஆளுமைகளை நீங்கள் ரசித்துப் பார்ப்பீர்களே தவிர, அவர்களுடைய தாக்கத்தை உங்களுள் அதிகம் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். இதைக் கடந்த ஐந்தாண்டு காலத்தில் நான் அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.

கே: நீங்கள் பொதுச்செயலாளராக இருக்கும் 'வெற்றித் தமிழர் பேரவை' பற்றிச் சொல்லுங்கள்...
ப: வெற்றித் தமிழர் பேரவை முதலில் 'கவியரசு வைரமுத்து சமூக, இலக்கியப் பேரவை' என்ற பெயரில் இயங்கி வந்தது. அதனை இன்னும் விரிவானதொரு தளத்துக்குக் கொண்டு போகலாம் எனக் கவிஞர் யோசித்தபோது நான் பரிந்துரைத்த பெயர்தான் 'வெற்றித் தமிழர் பேரவை'. பேரவை, புலமையையும், தலைமைப் பண்பையும் மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. அரசியல சாராமல், பாகுபாடுகள் பாராமல் தமிழுக்கு இருக்கும் மேன்மைகளைத் தமிழ் மக்களிடத்தே கொண்டு சேர்ப்பதற்காக ஆரம்பிக்கபட்ட அமைப்பு அது. இலக்கியக் கூட்டங்கள், கவிதைப் பயிலரங்குகள், நூல் வெளியீட்டு விழாக்கள் இதன்மூலம் நடந்து வருகின்றன. தமிழகத்தின் பல பகுதிகளில் இதற்குக் கிளைகள் இருக்கின்றன.

கே: இசைத் தொகுப்புகள் (ஆல்பம்) பலவற்றை வெளியிட்டுள்ளீர்கள். திரைப்படப் பாடலாசிரியர் ஆக ஆர்வம் காட்டாதது ஏன்?
ப: நான் எழுதிய பாடல்கள் ஒன்றிரண்டு படங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றபடி நான் திரைப்படப் பாடலாசிரியர் ஆகவேண்டும் என்று முயற்சி எடுத்ததில்லை. ஏனென்றால் அது பெரிய துறை. இன்றைக்குத் திரைப்படப் பாடலாசிரியர்களாக இருபபவர்களின் அர்ப்பணிப்பு மிகப்பெரிது. அவர்கள் நல்ல பாடல்கள் எழுதுகிறார்களா இல்லையா என்ற கேள்விக்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால் பாடலாசிரியர் ஆகவேண்டும் என்பதற்காக, ஏறக்குறைய அவர்கள் வாழ்க்கையின் 15-20 ஆண்டுகளைக் கோடம்பாக்கத்திலேயே கழித்திருக்கிறார்கள். எனக்கு அந்தத் துணிச்சல் இல்லை.

ஆனால் இசைப் பாடல்கள் நிறைய எழுதியிருக்கிறேன். அவற்றை ஏசுதாஸ், வாணி ஜெயராம், சித்ரா, ஸ்வர்ணலதா, ஹரிணி, உன்னிமேனன், உன்னி கிருஷ்ணன் எனப் பலர் பாடியிருக்கிறார்கள். அவை ஆல்பங்களாக வெளிவந்துள்ளன. ஈஷாவுக்காக நான் எழுதிய பாடல்களை சுதா ரகுநாதன் உள்ளிட்ட பலர் பாடியிருக்கின்றனர். இதிலும் ஒரு சுவாரஸ்யம். ஏசுதாஸ் சின்னத்திரைக்குப் பாடுவதில்லை என்ற முடிவில் இருந்தவர். ஆனால் அவருடைய நிறுவனத்தின் இசையமைப்பாளர் கே.ஏ. ராஜு சின்னத்திரையில் ஒரு தொடருக்கு இசையமைத்ததன் காரணமாக ஏசுதாஸ் அதற்குப் பாட ஒப்புக்கொண்டார். 'ஹரே பாச்சா.. ஹரே கிச்சா' என்ற நகைச்சுவைத் தொடர் அது. அதில் "அழகே அழகே கொஞ்சம் அருகே வரவா" என்ற, நான் எழுதிய பாடலை ஏசுதாஸ் பாடியுள்ளார். ஏசுதாஸ் சின்னத்திரைக்காகப் பாடிய முதல் பாடல் அதுதான்.கே: விருதுகள் குறித்து உங்கள் எண்ணம் என்ன?
ப: விருதுகள் உள்ளபடியே அவ்வப்போது நம்மை உற்சாகப்படுத்துகின்றன. ஏதோ ஒருவகையில் கிடைக்கும் அங்கீகாரம், ஒரு கவனக்குவிப்பு என்ற வகையில் விருதுகள், 'மேடையில் வீசிடும் மெல்லிய பூங்காற்றே' என்று வள்ளலார் சொன்னதுபோல ஒரு இனிமையான விஷயம்தான்.

கே: எது உங்கள் படைப்பாற்றலை உயிர்ப்போடு வைத்திருக்கிறது?
ப: இது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு காலத்தில் உணர்ச்சி என்னை எழுத வைத்தது. உணர்ச்சியினுடைய தீவீரம்தான் ஒருவனைப் படைப்பாளி ஆக்குகிறது. அந்த உணர்ச்சியே வாசித்து வளப்படுத்துகிறது. உணர்ச்சியும் வாசிப்பும் ஒருங்கே அமைகிறபோது ஒரு படைப்பிற்கான உந்துதல் உள்ளுக்குள் வெவ்வேறு தளங்களில் நிகழ்கிறது. தற்போது ஆன்மீகம் எனக்கு முக்கியமான உந்துசக்தியாக இருக்கிறது. காணுகிற பொருள்களில் எல்லாம் கடவுள்தன்மை இருந்தால் அதை எழுதுவது என்பதை ஆன்மீகத்தின் ஒரு முக்கியமான அம்சமாக நான் கருதுகிறேன்.

உதாரணமாக எனது இனிய நண்பர் மலேசிய மத்திய இணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்களோடு திருவாரூர் திருக்கோயிலுக்குச் சென்றிருந்தேன். நிறைய நண்பர்களும் வந்திருந்தனர். இரவு எட்டரை மணி இருக்கும். கமலாம்பிகை சன்னதியில் நிற்கிறபோது எதிரே ஒரு சின்னஞ்சிறுமி நின்று கொண்டிருந்தாள். அவள் தந்தையோடு வந்திருந்தாள். அவளிடம் எங்கள் எல்லோருக்குமே ஏதோ ஓர் அம்சம் - சிறப்பு - இருப்பதாகப்பட்டது. நான் அந்தச் சிறுமியையே கமலாம்பாளாக அன்று இரவு அறைக்கு வந்த பிறகு ஒரு கவிதை எழுதினேன். அந்தக் குழந்தையின் களங்கமற்ற கண்களில் தெரிந்த கடவுள்தன்மை, குழந்தைமைக்கே உரியதான - நிராகரிப்பு இல்லாத - ஓர் அலட்சியம், எதிரே இருப்பவர் யார் என்று தெரியாத விளையாட்டுத்தன்மை இவற்றிலெல்லாம் கடவுள் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நான் அதை எழுதினேன். ஆன்மீக ஈடுபாடு என்பது, காணும் பொருள்களிலெல்லாம் கடவுளைக் காணும் பரவசத் தருணங்களைக் கிளர்த்துகிறபோது, அந்த உணர்வு எழுதும் ஈடுபாட்டைத் தருகிறது.

சிங்கப்பூரில் கண்ணதாசன் இலக்கிய விழாவுக்காகப் புறப்படும் அந்த நேரத்திலும் நம்மோடு அழகாகப் பேசிய அவரை வாழ்த்தி விடைபெற்றோம்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


கண்ணதாசனின் கவிதை நயம்
'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' பாடல் பற்றி நான் மேடைகளில் சொல்வதுண்டு. பட்டுப்போன மூங்கில்தான் புல்லாங்குழல் ஆகும். புல்லாங்குழல்தான் புருஷோத்தமனைப் பாடும். ஆனால் கவிஞரோ, "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்" என்று எழுதுகிறார். ஒவ்வொரு மூங்கிலுக்கும் புல்லாங்குழல் ஆக வேண்டும், பரந்தாமன் கைகளில் தவழ வேண்டும் என்ற கனவு இருக்கும். மூங்கில் இந்த இடத்தில் மனிதனுக்கான குறியீடு. பட்டுப்போன மூங்கில் புல்லாங்குழல் ஆவதுபோல உலக ஆசைகள் பட்டுப்போன மனிதன் பரம்பொருளைச் சேர்கிறான். எனவே மூங்கில்கள் புருஷோத்தமனைப் பாடி தாங்களும் புல்லாங்குழல்களாவதற்குத் தவம் செய்ய வேண்டும். மூங்கிலின் உச்சம் புல்லாங்குழலாவது. அதற்கு வழி புருஷோத்தமனைப் பாடுவது.

அடுத்த வரியில் "வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே! எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்" என்கிறார் கவிஞர். மலர்களில் இருக்கும் மது தேடி வண்டுகள் வருகின்றன. நந்தவனம் இந்தப் பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. மலரில் உள்ள மது, உலக இன்பங்களுக்கும், வண்டுகள் மனிதர்களுக்குமான குறியீடு. உலக வாழ்வின் இன்பங்களை நுகர்வதை விட்டுவிட்டு, மதுசூதனன் என்கிற தெய்வீகத் தேன்துளியைத் தேடச் சொல்கிறார் கவிஞர்.

கண்ணனின் திருவுருவை, "கார்மேனி" என்று வர்ணிப்பது வைணவ இலக்கியத்தில் நிறைய உண்டு. அந்த மேகங்கள், கண்ணனின் திருவுருவ அழகுக்கு ஈடுதர முடியாமல், அதில் ஈடுபட்டுப் புகழ்ந்து பாட வேண்டுமாம். "பன்னீர் மலர்சொரியும் மேகங்களே! எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்" என்கிறார் கவிஞர்.

- மரபின் மைந்தன் ம. முத்தையா எழுதிய "கண்ணதாசன் ஒரு காலப்பெட்டகம்" நூலிலிருந்து.

*****


சத்குரு
சத்குருவுடனான எனது அனுபவங்களை நமது நம்பிக்கை இதழில் "அற்புதர்" என்ற தலைப்பில் ஒரு தொடராக எழுதி வருகிறேன். 20, 25 மாதங்களாக அதை எழுதி வருகிறேன். "சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே" என்று ஒரு பழைய பாடல் உண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாய் ஒரு குழந்தையைப்போல் இருக்கும் கண்கள், பேசுகிற, பழகுகிற இயல்பு எல்லாம் சத்குரு அவர்களிடத்தில் நான் பார்த்து வியக்கிற அம்சங்கள். 1996லிருந்து நான் அவருடைய நேரடிக் கண்காணிப்பில் இருக்கிறேன். அவர் எவ்வளவு எளிமையானவர், எவ்வளவு மென்மையானவர், எவ்வளவு கூர்மையானவர், எவ்வளவு மேன்மையானவர் என்றெல்லாம் வரையறுத்துச் சொல்ல முடியாத அளவுக்கு விசாலமான பரப்புடையவர் அவர். எத்தனையோ சம்பவங்கள் அவரைப்பற்றிச் சொல்லலாம். உதாரணத்திற்கு ஒன்று.

அவர் யாரையும் புண்படுத்தக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார். நான் மிகவும் மதிக்கக் கூடிய ஓர் ஆளுமை சௌந்தர் வல்லத்தரசு என்பவர். இசைஞானி இளையராஜாவின் உதவியாளராக இருந்த அவர் தற்போது ஈஷாவில் ஒரு தன்னார்வத் தொண்டராக, தியான அன்பராக விளங்குகிறார். அவர் ஒருமுறை ஈஷாவின் "காட்டுப் பூ" இதழ் குறித்து சத்குருவுடன் பேசிக் கொண்டிருந்தார். நானும் அங்கே இருந்தேன். அவர் சத்குருவிடம், "சத்குரு, இந்தப் புத்தகம் வேண்டாதவர்களுக்கெல்லாம் போகிறது சத்குரு" என்றார். அடுத்த விநாடி சத்குரு, "அப்படிச் சொல்லாதீங்க சௌந்தர். வேண்டாதவங்கன்னு நமக்கு யாருமே இல்லை. இந்த பூமியில் இருக்கும் எல்லோருமே நமக்கு வேண்டியவங்கதான்" என்றார். எந்த ஒரு சொல்லையும் வெற்றுச் சொல்லாக, விரயச் சொல்லாக சத்குரு பார்ப்பதே இல்லை. அதன் ஒவ்வொரு அர்த்தத்தையும் உணர்ந்து உள்வாங்கி "சொல்லுக சொல்லில் பயனுடைய" என்று குறளில் சொல்லப்படுவதையே அவர் தனது வாழ்க்கை முறையாகக் கொண்டிருக்கிறார். விரிவாக நான் 'அற்புதர்' தொடரில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

- மரபின் மைந்தன் ம. முத்தையா

*****


எனது நூல்களில் மிகப் பிடித்தவை
நான் இதுவரை 54 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். நான் எழுதிய கவிதை நூல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அதையும் தாண்டி நான் மூன்று நூல்களை மிக முக்கியமான நூல்களாகக் கருதுகிறேன். ஒன்று, மகாகவி பாரதியையும், ஓஷோவையும் ஒப்பிட்டு நான் எழுதிய 'எட்டயபுரமும் ஓஷோபுரமும்'. கண்ணனைக் கண்டவர்கள் என்பதுதான் அதன் அடித்தளம். ஓஷோவின் "கிருஷ்ணா" பற்றிய உரைகளையும், பாரதியின் கண்ணன் பாட்டையும் ஒப்பிட்ட அந்தப் புத்தகம் எனக்கு மிகவும் உவப்பானது. மற்றொரு நூல் 'கண்ணாதாசன் ஒரு காலப்பெட்டகம்'. அது கண்ணதாசனின் கவிதைகளையும், பாடல்களையும் ஆராய்ந்து கூடவே கண்ணதாசன் குறித்த எனது அனுபவங்களையும், கருத்துக்களையும் முன்வைப்பது. மூன்றாவது, எனது ஐம்பதாவது புத்தகமான 'திருக்கடவூர்'. பிரபஞ்சம் தோன்றியபோது திருக்கடவூர் எப்படி இருந்தது, நடுவில் எப்படி இருந்தது, இன்றைக்கு எப்படி இருக்கிறது என்று வரிசையாக அதனை ஆண்ட மன்னர்கள் காலம், அங்கு வந்த அருளாளர்கள், நாயன்மார்கள் காலம், சைவ சித்தாந்த அறிஞர்கள் காலம், அபிராமிபட்டர் காலம், பிறகு என் பாட்டனார் காலம் என ஒரு நனவோடைப் பதிவாக எழுதியிருக்கிறேன். இவை மூன்றும் எனக்கு மிகவும் பிடித்தவை.

- மரபின் மைந்தன் ம. முத்தையா
Share: 
© Copyright 2020 Tamilonline