Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | சாதனையாளர் | சமயம்
நூல் அறிமுகம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வேட அரசனும் வேடமிலா அரசனும்
- ஹரி கிருஷ்ணன்|ஜனவரி 2014|
Share:
கட்டைவிரலை குருதட்சிணையாகக் கொடுத்துவிட்டுச் சென்ற ஏகலவ்யனை நாம் அடுத்ததாக, தருமபுத்திரன் நடத்திய ராஜசூய யாகத்தில் காண்கிறோம். நேரடியாகப் பார்க்காவிட்டாலும், அவனைப்பற்றிய குறிப்புகள், பிறர் வாயால் சொல்லப்படுவதைக் கொண்டு அறிந்து கொள்கிறோம்.

ராஜசூய யாகத்தில், தொடக்கத்திலேயே ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அர்க்காஹரணம் எனப்படும் முதல்மரியாதையை, யாருக்குச் செய்வது என்ற கேள்வி எழ, கண்ணனே அதற்குத் தகுதியானவன் என்று வீட்டுமர் சொல்ல, கண்ணனுக்கு முதல்மரியாதை செய்ததும், சிசுபாலன் ஆர்ப்பரித்து எழுந்து, கண்ணன் அதற்குத் தகுதியற்றவன் என்பதற்கான காரணங்களைச் சொல்லும்போது, "பீஷ்மர் உலகத்திலுள்ள பெரியோர்களால் மிகவும் அவமதிக்கப்படுகிறார். அரசனல்லாத கிருஷ்ணன், தகுதியுள்ள ராஜாக்கள் அனைவர் நடுவிலும் நீங்கள் செய்த பூஜைக்கு எவ்வாறு உரியவன்" என்று தொடங்குகிறான். (மஹா பாரதம், ஸபா பர்வம், நாற்பதாவது அத்தியாயம், பக்கம் 137--கும்பகோணம் பதிப்பு, இரண்டாம் தொகுதி)

அதாவது, அரசகுலத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், அரசன் என்ற பதவியை வகிக்காத கண்ணன் என்ற குறிப்பு வெளிப்படுகிறது. இது உண்மையும்கூட. இதற்குள் இப்போது புகவேண்டாம். அதன்பின்னர், கண்ணனைக் காட்டிலும் தகுதியுள்ள (அதாவது, சிசுபாலனின் கருத்துப்படி தகுதியுள்ள) மன்னர்கள், கவனிக்கவும், மன்னராக மகுடம் சூட்டிக்கொண்டவர்கள் என்றொரு பெரிய பட்டியல் தொடர்கிறது. அங்கே ஏகலவ்யனுடைய பெயரைக் காண்கிறோம். "பாண்டுவைப் போல யாருக்கும் வெல்ல முடியாதவரும், குணங்களினால் பிரக்யாதி பெற்றவருமாகிய பீஷ்மக ராஜாவும், ராஜாக்களின் சிரேஷ்டனான ருக்மியும் ஏகலவ்யனும் மத்ர தேசாதிபதியான சல்லியனுமிருக்க, நீ கிருஷ்ணனை ஏன் பூஜித்தாய்" என்று சிசுபாலன் கேட்கிறான் (மேற்படி இடம்).

இந்தக் குறிப்பிட்ட வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள பீஷ்மகர்தான் கண்ணன் மணந்த ருக்மிணியின் தந்தை. ருக்மி, ருக்மிணியின் சகோதரன். சல்லியன், நகுல-சகதேவர்களின் தாயாகிய மாத்ரியின் உடன் பிறந்தவன். ஆதலாலே, நகுல சகதேவர்களுக்கும் மற்ற பாண்டவர்களுக்கும் மாமன்முறை ஆகிறவன். 'மிகவும் புகழ் பெற்ற மன்னர்கள்' என்று சிசுபாலன் பட்டியலிடும்போது, இப்படிப்பட்ட மன்னர்கள் வரிசையில் ஏகலவ்யனும் இடம்பெற்றிருப்பது கவனிக்கத் தக்கது. அதாவது, கட்டை விரலைக் காணிக்கையாகக் கொடுத்த ஏகலவ்யன், பின்னாளில் அரசனாக முடிசூடியும் இருக்கிறான்; தருமபுத்திரன் நடத்திய வேள்வியில் பங்கேற்க அழைக்கப்பட்டு வந்திருக்கிறான். இங்கே இவ்வளவு குறிப்புதான் கிடைக்கிறது.

ஊர் திரும்பிய பிறகு, சகுனியிடம் தருமபுத்திரனை வந்தடைந்த சிறப்புகளைப் பட்டியலிட்டுப் பொறாமையால் மனம் குமையும் துரியோதனன், ஒரு கூடுதல் விவரத்தைச் சொல்கிறான். "...மத்ஸ்ய தேசத்தரசன் பொன் பாச்சிகைகளையும், ஏகலவ்யன் பாதுகையையும், அவந்தி தேசத்தரசன் அபிஷேகத்துக்குரிய அநேக தீர்த்தங்களையும்....." வழங்கினார்கள் என்று பட்டியல் நீள்கிறது (த்யூத பர்வம், எழுபத்தொன்பதாவது அத்தியாயம், பக்கம் 253, கும்பகோணம் பதிப்பு, இரண்டாம் தொகுதி).

இந்தப் பகுதியை அப்படியே பாடலாகச் செய்த பாரதி, தன் பாஞ்சாலி சபதத்தில் இதனை,
"பற்றலர் அஞ்சும் பெரும்புகழ் ஏகலவியனே - செம்பொன்
பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும்"
என்று மிக கவனமாகச் சேர்த்திருக்கிறான். இந்தக் குறிப்புதான் ஏகலவ்யனைத் தேடுவதற்கான வேட்கையை என்னுள் உண்டு பண்ணியது.
இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் துணுக்குத் துணுக்கான விவரங்களை ஒன்று திரட்டினால், கட்டைவிரலை குருதட்சிணையாகக் கொடுத்த ஏகலவ்யன் பின்னாளில் முடிசூட்டிக் கொண்டு மன்னனாக, அதுவும் 'பிரக்யாதி பெற்ற மன்னர்களாக' சிசுபாலன் இடும் பட்டியலில் இடம்பெறும் அளவுக்குப் புகழ்வாய்ந்த மன்னனாக விளங்கினான் என்பதும்; தருமபுத்திரன் நடத்திய வேள்விக்கு அழைக்கப்படும் அளவுக்குப் பெயர்பெற்றிருந்தான் என்பதும்; வந்தது மட்டுமல்லாமல், யுதிஷ்டிரனுக்குப் பொன்னால் ஆகிய பாதுகைகளை அணிவிக்கும் அளவுக்கு வளம் நிறைந்தவனாக இருந்திருக்கிறான் என்பதும் தீர்மானமாகின்றன. இதில் ஐயத்துக்கு இடமே இல்லை.

இந்த வேள்வியில் தருமபுத்திரனுக்குச் சிறப்பு செய்த காரணத்தாலேயே அவர்கள் "எல்லோருமே" அவன்பால் மதிப்பும் உள்ளார்ந்த அன்பும் கொண்டிருந்தனர் என்பதற்கு இது சான்றாக அமையாது. ஏனெனில், இப்படி யுதிஷ்டிரனுக்குச் சிறப்பு செய்தவர்களில் ஒரு மிகப்பெரும் பகுதியினர், போர் மூண்டபோது, துரியோதனன் பக்கத்தில்தான் நின்றனர்.

மஹாபாரதப் போரைப் பற்றி எண்ணுகையில் ஒன்றை மிக முக்கியமாக மனத்தில் வாங்கிக்கொள்ள வேண்டும். போர் ஏதோ துரியோதனாதியருக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் 'மட்டுமே' நடந்த ஒன்றன்று. பாண்டவர்கள் மூலமாக இந்தப் போரை துரியோதனாதியர்மேல் நடத்தியவன் கண்ணன். இது உத்தியோக பர்வத்தின் தொடக்கத்திலிருந்தே, யுத்தம் நெடுகிலும் பற்பல முறை, பற்பல விதங்களில் நேரடியாகவே வெளிப்படுகிறது. ஆயுதமேந்தாமல், போரை நடத்தியவன் கண்ணனே.

பாண்டவர்கள் வனவாச காலத்தில், போர் மூளத்தான் போகிறது என்பதை முன்கூட்டியே தீர்மானித்த கண்ணன், போரிலே எதிர்கொள்ள முடியாத பெருஞ்சக்திகளாக இருந்தவர்களையெல்லாம் தனித்தனியாக முடித்து வைத்தான். சொல்லப்போனால், பெருஞ்சக்தியாக விளங்கிய ஜராசந்தனை, ராஜசூய யாகம் தொடங்குவதற்கு முன்னரே, பீமனைக் கொண்டு மற்போரில் கொல்லச் செய்தான்.

ஜராசந்தனும், ஏகலவ்யனும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். "Later, Ekalavya worked as a confidante of King Jarasandha. At the time of the Swayamvara of Rukmini, he acted as the messenger between Shishupala and Rukmini's father Bhishmaka, at the request of King Jarasandha" என்று விக்கிபீடியா குறிக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள செய்தியில், ஜராசந்தனும் ஏகலவ்யனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தது, கண்ணன் வாய்மொழியாகவே, பிற்பகுதியில், போரில் துரோண பர்வத்தில் வெளிவருகிறது. ஆனால், ருக்மிணிக்குத் திருமணம் செய்யத் தீர்மானமானதும், சிசுபாலன் சார்பில் ஏகலவ்யன் பீஷ்மகரிடம் தூது சென்றான் என்பதற்கான சான்று பாகவத மஹாபுராணம் உள்ளிட்ட எங்கும் கிடைக்கவில்லை. இந்தத் தேடல் இன்னமும் நிறைவுறாமலேயே நிற்கிறது.

ஆனால், ஏகலவ்யனைக் கொன்றவன் கண்ணன்தான் என்பதுமட்டும் உறுதியாகத் தெரிகிறது. ஏனெனில் இதைக் கண்ணனே துரோண பர்வத்தில் சொல்கிறான். ஆனால், கண்ணன் ஏகலவ்யனை எப்படிக் கொன்றான் என்பதற்குக் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு செய்திகள் உள்ளன. இதில் சார்புநிலைச் செய்திகள் அதிகம். ஒன்று உடன்பாட்டுச் சார்பு; அல்லது எதிர்மறைச் சார்பு. இவற்றில் ஒன்றில், கண்ணனை ஆதரித்துப் பேசும் தளம் ஒன்றில் இப்படி ஒரு செய்தி கிடைக்கிறது: ஏகலவ்யனைத் தடுத்து நிறுத்த முடியாத கண்ணன், அவனை முதுகிலே குத்திக் கொன்றான். (hinduconcepts.blogspot.in).

இந்தக் குறிப்பை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால், இதற்கு அடிப்படையான இதிகாச, புராணச் செய்தி எங்கும் அகப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், மஹாபாரதப் போரில் கண்ணன், தான் ஏகலவ்யனைக் கொன்ற விதத்தைச் சொல்வது முற்றிலும் வேறுபட்டதாக (ஆனால் மிகச் சுருக்கமாக) இருக்கிறது.

எனவே, நடுநிலையாளருக்கு முன்னால் உள்ள சவால், இத்தனைத் தகவல்களில் எதை நம்பகமானதாகக் கொள்வது, எதை விடுவது என்பதற்கான வழிமுறைகளைத் தேடுவதுதான். இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் என் தேடல் இன்னமும் முடியவில்லை எனினும், ஏகலவ்யன் கொல்லப்பட்ட விதம் எனக் கண்ணன் வாய்மொழியாக வருவது இவை யாவினும் வலிமையான ஆதாரமுடையது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.

கண்ணன் இது குறித்து என்ன சொல்கிறான்? பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline