Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
அம்மாவின் பிரார்த்தனை
குழந்தை வளர்ப்பு
வாசல் அனுபவம்
- கிரீஷ் ஸ்ரீனிவாஸ்|நவம்பர் 2013|
Share:
"இருங்க, கொஞ்சம் தண்ணி குடுச்சிட்டு வந்துடறேன்!"

"என்ன லக்ஷ்மி, கிளம்பற சமயத்துல இருன்னு சொல்றியே! இரு, நானும் தண்ணி குடுச்சுடறேன்."

"அப்பா, எனக்கும் தண்ணி கொண்டு வா!"

"சரி ரேணு, நீ வாசல்லயே அத்தையோட இரு."

ஆனால் அத்தை அங்கு ரேணுவுடன் நிற்கவில்லை. ரேணுவிடம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, கூடத்தில் நிகழும் அமர்க்களத்தை ஓர் ஓரமாக ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்த சிறுவனை அணுகினாள். "என்ன கண்ணா, நீயும் வறியா? அம்மா, அப்பா, அக்கா, நான், குட்டிப்பசங்க, எல்லாரும் சேர்ந்து கடைக்குப் போனா ஜாலியா இருக்கும் இல்ல? தீபாவளிக்கு நீ என்ன கேட்டாலும் வாங்கித்தறேன்" என்று பவ்யமான குரலில் குனிந்து கொஞ்சிப் பார்த்தாள்.

"வரமாட்டேன்." முகத்தைத் திருப்பிக் கொண்டான் சிறுவன். உஷாரான பையன், அத்தை சொன்னதை நம்பவில்லை. முன்பு சூடு பட்டிருப்பான் போலும்!

"அவன் எப்பவுமே அப்படித்தான். ஒரு தடவை வீட்டுல தனியா விட்டாத்தான் புரியும்" என்றார் சிறுவனின் அப்பா குணசேகரன், தண்ணீர் குடித்துவிட்டு கூடத்துக்குத் திரும்பும் வழியில்.

"எட்டு வயசுப் பையனுக்கு என்னடா புரியும்? பயந்துடப் போறான் பாவம்."

"நான் பயப்படமாட்டேன் கௌரி அத்தை!" என்று கோபத்துடன் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொண்டான் சிறுவன்.

தவலையிலிருந்து தண்ணீரை பாட்டில்களில் நிரப்பிக்கொண்டே சிறுவனின் தாயார் "விடுங்க கௌரி, ரெண்டு மணி நேரத்துல திரும்பி வந்துடப் போறோம், அவ்வளவுதான? டிவி பார்த்தா நேரம் போறதுகூடத் தெரியாது அவனுக்கு" என்றார்.

"வந்தாலும் உயிரை வாங்குவான்!" என்றாள் தமக்கை ரேணு.

வாசல் அறையில் மற்றவர்கள் செருப்பு அணிந்து கொண்டிருக்க, குணசேகரன் தன் மகன் பக்கம் திரும்பினான். “என்னடா, நிச்சயமா வரமாட்டியா?"

"மாட்டேன்."

"தனியா இருக்கும்போது சாக்லெட் சாப்பிடுவியா?"

"மாட்டேன்."

"நீ மட்டும் சாப்பிட்ட, உனக்கு தீபாவளிக்கு பிங்க் நிற சட்டைத்தான் வாங்கித் தருவேன். தெரியாதவங்க பெல் அடிச்சா கேட்டைத் திறப்பியா?"

"மாட்டேன்."

"எல்லாத்துக்கும் மாட்டேன் மட்டும் சரியா சொல்லிடு. சமர்த்தா இருப்பியா?"

"இருப்பேன், நீ போ!" என்றான் சிறுவன்.

"போன்னு சொல்லாதடா, போய்ட்டு வான்னு சொல்லணும், புரிஞ்சுதா? சரி எல்லாரும் கெளம்பலாம் வாங்க, ராவுகாலம் வரப்போகுது. கண்ணா, கேட்டைப் பூட்டிக்கோ, கதவை சாத்திக்கோ, சரியா?"

மாடிப்படியில் அனைவரும் இறங்கிப் போவதை கேட் வழியாகப் பார்த்தான் சிறுவன். கீழே குழந்தைகளுடன் வாகனத்தில் ஏற அவர்கள் சிரமப்படுவது அவன் காதில் விழுந்தது. ஒருவழியாக, அப்பா வண்டியை எடுத்தார். பிறகு.... எங்கும் நிசப்தம். தன் இளைய வாழ்க்கையில் முதன்முதலாகத் தன்னந்தனியாக இருந்தான் கிட்டு.

வாசல் அறையிலிருந்து கூடத்துக்குத் திரும்பிக் கதவை சாத்தித் தாளிட்டான். சற்றுநேரம் முன்பு கலகலவென இருந்த கூடம் விரிச்சோ என்று கிடந்தது. கிட்டுவுக்கு ஒருமாதிரி இருந்தது. அதுவரை பெரியவர்கள் சொன்ன பேச்சுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்திருந்தான். இப்போது சொல்வதற்கு யாரும் இல்லை. கேட்பதற்கோ, கேட்காமல் அடம் பிடிப்பதற்கோ வாய்ப்பும் இல்லை. அடிவயிறு ஒரு புரட்டு புரட்டியது. சுதந்திரத்தின் பாரத்தினால் என்று அந்த இளைய பிராயத்தில் புரியவில்லை.

மிரட்டலும் திட்டும் அடியும் தடுத்திருந்த செயல் எதையாவது செய்ய வேண்டும் என்று துடிதுடித்தது அவன் நெஞ்சம்.

அப்பாவின் மேஜையை அணுகினான். மூலையில், அழகாக அலங்கரிக்கப்பட்ட பொறுத்தியில் அப்பாவுக்குப் பிடித்த மையூற்றுப் பேனா எப்போதும் போலச் செருகி இருந்தது. அதை எடுத்து ஒரு உலுக்கு உலுக்கினான். தரையில் நீல வண்ண மை சொட்டியது. பேனாவின் அலகை சொட்டிய மையின் மீது வைத்தான். அமுதம் கண்ட தேனீயைப் போல உறிஞ்சிவிட்டது பேனா. இது நல்ல விளையாட்டாக இருக்கிறதே!

பக்கத்தில் சிகப்பு எறும்புகள் நெட்டுக்குத்தான பாதையில் நடந்துகொண்டிருந்தன. அவ்வெறும்புப் பாட்டையில் இரண்டு எறும்புகளை வழிமறித்து அவற்றின்மீது பேனா மையைச் சிந்தினான். இரண்டும் மையில் நீந்தப் பார்த்து தவித்தன. ஒரு துளி மை பாற்கடலைப் போன்றது! மையில் ஊறி நீல எறும்புகளான பிறகு அவற்றின் கதியை கண்டு பரிதாபப்பட்ட கிட்டு, பேனாவின் அலகை வைத்து மையை நீக்கினான். எதுவும் நடக்காதது போல இரண்டு நீல எறும்புகளும் தமது நண்பர்களைப் போய்ச் சேர்ந்தன.

கொஞ்ச நேரம் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்த கிட்டுவின் கண்களுக்குத் தரையில் கிடந்த பழைய வாரப் பத்திரிகைகள் தென்பட்டன. முன்பக்கத்தில் இளிக்கும் அம்மணிகளுக்கு மீசை தாடியும், வீர ஆண்மகன்களுக்கு கொம்பும் மூக்குத்தியும் வரைந்து அலங்கரித்தான். பிரபலமான நடிகர் ஒருவரின் மூக்கிலிருந்து சளி வழிவதை நுணுக்கமாக வரைந்துவிட்டு, தொலைக்காட்சியில் அம்மா தடை செய்திருந்த சண்டைக் காட்சிகளும், பழைய கிரிக்கெட் போட்டிகளும் பார்ப்பது, குளிசாதனப் பெட்டியிலிருந்து ஜில் தண்ணீர் குடிப்பது, அக்காவின் வாசனைப் பொருட்களை அப்பிக் கொள்வது, கூடத்தில் செருப்புடன் அலைவது - இப்படி செய்யக் கூடாதவற்றை ஒவ்வொன்றாகச் செய்து கழித்தான்.

எல்லாம் அலுத்தவுடன் கடிகாரத்தைப் பார்த்தான். அடடா! அவர்கள் கிளம்பி அரைமணி நேரம்கூட ஆகவில்லையே! செய்வதற்கு வேறென்ன இருந்தது? துருதுருவென்று இருந்தது. அந்த நீல எறும்புகளைத் தண்ணீரில் போட்டால் மை அழிந்து போய்விடுமோ? பாடிக்கொண்டே அந்த பாவப்பட்ட எறும்புகளை குளிப்பாட்டுவதற்குத் தேட ஆரம்பித்தான்... அப்பொழுது கதவில் தட்டு விழுந்தது.

அதற்குள் திரும்பிவிட்டார்களா? இருக்காதே - கதவை அவர்களாகவே திறந்திருப்பார்களே! நிறுத்தி கவனித்தான். தெரியாதவர்களாக இருந்தால் வீட்டில் யாரும் இல்லை என்று கொஞ்சநேரம் கழித்துத் தானாக சென்றுவிடுவார்கள். கள்வர்களாக இருந்தால் வீடு காலி என்று நுழைந்துவிடுவார்களோ? அந்த எறும்புகளை துவம்சம் செய்ததற்கான தண்டனையா இது? அய்யையோ!

திடீர் பயத்தில் செயலிழந்து தரையில் குனிந்தபடியே இருந்தான். விலகும் காலடிச் சத்தத்தை எதிர்பார்த்தன அவன் செவிகள். எங்கும் நிசப்தம். திடீரென மறுபடியும்! இம்முறை வாசல் அழைப்பு மணியைக் கண்டுபிடித்து அடித்தார்கள். கோரமான அந்தச் சத்தம் வீடெங்கும் மூன்றுமுறை ஒலித்தது. வந்தவர்கள் வந்த காரியத்தை லேசில் கைவிட மாட்டார்களாக்கும்! ஒருவேளை அவன் பாடியது காதில் விழுந்திருக்குமோ? தெரிந்தவர்களாக இருந்தால்? வாயில்தான் பூட்டியிருக்கிறதே. கதவைத் திறந்தான்.

வாசல் அறைக்குள் கால் வைக்காமல், கூடத்து நுழைவாயிலிலிருந்தே எட்டிப் பார்த்தான் கிட்டு. அவன் கதவை மூடியிருந்த காலத்தில் மேகம் சூழ்ந்து வெளி உலகம் இருட்டிவிட்டது என்பது அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

"மம்மி இருக்காங்களா?" என்றது ஒரு குரல்.

அவன் கண்களுக்கு இருட்டு பழகியவுடன், கேட்டுக்குப் பின்னால் நின்ற மனிதன் புலப்பட்டான். அவனைக் கிட்டு முன்பு பார்த்ததில்லை. படிந்து வாரிய முடி, சப்பை மூக்கின்மீது பெரிய கண்ணாடி. மேல் உதட்டிற்கும் மூக்கிற்கும் பாலமாக விளங்கிய கருப்பு மீசை. அவன் தோளிலிருந்து தொங்கிய கருப்புப் பையை பத்திரப்படுத்த அதன் மீது ஒரு கையை வைத்திருந்தான். இளைஞன்தான், இருபதுகளைத் தொட்டு நான்காண்டுகள்கூடத் தாண்டியிருக்காது. ஆனால் கிட்டுவின் கண்களில் அவன் பெரியவனாகத் தெரிந்தான்.

"அம்மா குளிக்கறாங்க," என்றான் கிட்டு. உண்மையைச் சொல்ல சரியான நேரம் அல்ல என்று அவன் தந்தையே ஒப்புக்கொள்வார்.

"ஓஹோ, கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்களா?"

"ம்ம், வந்திடுவாங்களே."

"சரி, நான் அது வரைக்கும் இங்கயே இருக்கேன். நீ போய் விளையாடு தம்பி."

மேல் உதட்டைக் கடித்தான் கிட்டு. புருவத்தில் வழிந்த வியர்வையை கைகுட்டை வைத்துத் துடைத்துக் கொண்டான் அவன். புழுக்கம் தாங்க முடியவில்லை. கூடத்தில் தொலைபேசி அடிக்கும் சத்தம் கேட்டது. ஓடிப்போய் எடுத்தான் கிட்டு.

"ஹலோ?"

"யாரு, கிட்டுவா?"

"சீனு மாமா!"

"அம்மா இருக்காளா?"

"அம்மா வெளிய போயிருக்காங்களே!"

"அப்படியா? வீட்டுல தனியா இருக்கியா நீ?"

"ஆமாம்," பெருமையாகச் சொன்னான். தொலைபேசியை அணைத்தவுடன் தான் செய்த தவறை உணர்ந்தான் கிட்டு. வாசலுக்குத் திரும்பி வெளியில் இருந்த அந்நியனை சந்தேகத்துடன் பார்த்தான். தான் வாயால் உளறியது வாயில்வரை எட்டியிருக்குமோ?

"என்ன தம்பி, மம்மி வீட்டுல இல்லையா? தனியா இருக்கியா?" என்று அதட்டினான் மனிதன்.

பதில் சொல்லத் துணிச்சல் இல்லை. தலையசைத்தான் கிட்டு.

"ச்ச! இப்படி நேரத்தை வீணாக்கிட்டியே! இதை முன்னாலயே சொல்லியிருக்கலாமுல்ல?" என்று எரிந்து விழுந்தவன் முணுமுணுத்துக்கொண்டே கிளம்பத் திரும்பினான். அவனைப் போலவே பொறுமை இழந்த வானமும் அதே சமயத்தில் கனத்த மழை பொழியத் தொடங்கியது. கிட்டு அது வரையில் கேட்டிராத வார்த்தைகள் அந்த அந்நியனின் வாயிலிருந்து மழைத்துளிகளைப் போல பொழிந்தன. ஏசி முடித்த மனிதன் கிட்டுவின் பக்கம் திரும்பினான். கிட்டு முகம் பயத்தில் வெளிறியது.

ஆனால் வந்தவன் பவ்யமான குரலில் பேசினான். "ஏம்பா தம்பி, இந்தப் படிக்கட்டுல நான் கொஞ்ச நேரம் உக்காந்துக்கட்டா? மழை குறைஞ்சவுடனே போயிடறேன்" என்று வினவினான். தலை ஆட்டினான் கிட்டு.

*****
படிக்கட்டில் உட்காருவதற்குள் சரவணனின் கடுப்பு தோல்வி உணர்வாக மாறியிருந்தது. மழை பொழிந்த சத்தம் அவன் செவிகளில் ஈயம் காய்ச்சி ஊற்றுவதுபோல் கேட்டது. வெயிலில் வியர்க்கும் - அதில் அவன் மட்டும்தான் நனைவான்; ஆனால் மழை பொல்லாதது. அவனுடன் சேர்ந்து அவன் சரக்கும் நனைந்து குட்டிச்சுவராகப் போகும்.

இன்னும் எத்தனை வீடுகளுக்குப் போக வேண்டும், எவ்வளவு விற்பனை செய்ய வேண்டும்! சலித்துவிட்டான். தினமும் அலைச்சல், பேச்சு, கெஞ்சல்... அதிர்ஷ்டம் அடித்தாலும் தற்காலிக நிம்மதிதான்; மறுநாள் மறுபடியும் பூஜ்யத்திலிருந்து தொடங்கவேண்டும். சாலையில் இருந்த தூசியும் மண்ணும் கண்ணுக்கெதிரில் சகதியாக மாற, மழைநீரில் உலகம் மூழ்க, அவனும் தன் சோகங்களில் ஆழ்ந்தான்.

சிறிதுநேரம் கழித்து, வீட்டுக்குள் இருந்த சிறுவன் தன்னையே உற்றுப் பார்ப்பதை கவனித்தான் சரவணன். அந்தப் பார்வையில் தெரிந்தது என்ன? இரக்கமா? கண்டுபிடிக்க பேச்சுக் கொடுக்கப் பார்த்தான்.

"தம்பிக்கு என்ன பேரு?"

"கிட்டு."

"கிட்டு, என்ன வயசு உனக்கு?"

"ஏழு."

"அடேங்கப்பா. பெரிய பையனா நீ. அதான் வீட்டுல தனியா இருக்கியா?"

"தனியா இல்லையே, நாய்க்குட்டி தூங்கிட்டிருக்கு. எழுப்பட்டா?"

"தாராளமா." சரவணன் சிறுவனை நம்பவில்லை. கிட்டு இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.

"என்ன தம்பி, நாய் எங்கே?" என்று சிரித்தான் சரவணன்.

"அண்ணா நீங்க திருடனா?"

திடுக்கிட்டான். இந்தச் சிறிய பையனுக்கு தன்னைக் கண்டால் அவ்வளவு பயங்கரமாக இருந்ததா! பறிகொடுத்த தன்மானத்தை மீட்க முயன்றான். "இல்லைப்பா! இப்படி போய் சொல்லிட்ட? இந்த பை இருக்குல்ல பை" என்று தனக்கருகில் கீழிறக்கி வைத்திருந்த கருப்புப் பையைச் சுட்டிக் காட்டினான். "வீட்டுல இருக்கும் பெரியவங்ககிட்ட அதைப்பத்தி பேச வந்தேன்."

"ஓ, எதையாச்சு விக்க வந்தீங்களா?"

"ஆம்."

"என்னது?"

"என்சைக்லோபீடியா."

"அப்படீன்னா?"

"அது... ஒரு விதமான புக்கு. உன் மம்மிகிட்ட பேசி உனக்கு வாங்கித் தர சொல்லறத்துக்காக வந்தேன்."

"ம்ம்."

உள்ளே இருந்தது நூல்கள் என்று தெரிந்தவுடன் கிட்டுவின் ஆர்வம் குறைந்ததை கவனித்தான் சரவணன். உண்மையான விற்பனையாளன் என்பதால் இது அவன் ரோஷத்தைக் கிளப்பிவிட்டது. "சாதாரண புத்தகம் இல்ல தம்பி. உலகமே அடங்கியிருக்கும் புத்தகம்! உனக்குத் தோணும் எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்லும்."

"அப்படியா! நீங்க இதை முழுசா படிச்சிருக்கீங்களா?"

"ஓ, படிச்சிருக்கேனே."

"அதான் இந்த வேலையப் பாக்கறீங்களா?"

நச்சென்றது சரவணனுக்கு. பையன் தன்னைக் கிண்டல் செய்கின்றானா என்ன? ரோஷம் கொந்தளித்தது. ஆனால் சிறுவனின் பால்வடியும் முகத்தில் நக்கலுக்கான அறிகுறியே இல்லை. "படிக்காம இந்த வேலை செய்யமுடியுமா? ஒவ்வொரு பக்கத்தையும் மனப்பாடமே பண்ணிட்டேன்" என்று கோபத்தை விழுங்கிப் பொய் சொன்னான்.

"அப்போ இவ்வளோ படிச்சா... நானும் உங்களை மாதிரிதான் ஆவேனா?"

மறுபடியும் சிறுவனின் கேள்வி பளாரென்று கன்னத்தில் அறைந்தாற்போல் இருந்தது சரவணனுக்கு. அது என்ன 'உங்கள மாதிரிதான்'? சரவணனுக்குத் தன் உத்யோகத்தின் மீது மரியாதை இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த சிறுவன்கூட மட்டம்தட்டும் அளவிற்குக் கீழ்த்தரமானதா அது? இந்த அவதூறைப் பிஞ்சிலேயே சரிக்கட்ட வேண்டும் என்பதற்காக, "தம்பி, இந்தியாவோட மூன்றாவது பிரதமர் யாரு தெரியுமா உனக்கு?" என்று சவால் விட்டான்.

இல்லை என்று தலை அசைத்தான் கிட்டு. "லால் பஹதுர் சாஸ்திரி."

அன்று தொலைக்காட்சியில் பார்த்திருந்த பழைய கிரிக்கெட் போட்டி ஞாபகம் வந்தது கிட்டுவுக்கு. "ரவி சாஸ்திரியோட அப்பாவா?"

"அவர் தாத்தா." விஷயம் தெரியவில்லை என்றால் லாவகமாகப் புளுகுவான் சரவணன். தொழில் அப்படி.

"ஓ!"

தான் சொன்ன செய்தியால் அசந்துவிட்டான் கிட்டு என்று பெருமிதப்பட்டான் சரவணன். ஆனால் கிட்டுவின் கேள்வி வெள்ளம் வற்றவில்லை.

"தினம் வீடுவீடாப் போய் என்சாய்பீடியா விப்பீங்களா?"

"ஆமாம்." உற்சாகம் இல்லாமல் பதில் சொன்னான்.

"எத்தனை வீடுகளுக்குப் போவீங்க?"

"அறுவது எழுவது கதவைத் தட்டுவேன். ஒரு நாற்பது பேர்கிட்ட பேசுவேன்." இந்த மூஞ்சியப் பாத்தா யார் கதவைத் திறப்பாங்க? நினைத்துப் பார்த்தால் அவனே மலைத்தான். தினமும் புதிய திசையில கால் எடுத்து வைக்கவேண்டும். பார்த்திராத வட்டாரங்கள், கேள்விப்படாத பேருந்து எண்கள், இவை அனைத்தையும் எதிர்கொண்ட பிறகு மாலையில் அலுவலகத்திற்குத் திரும்பச் சென்று அன்றைய விற்பனை பற்றி கணக்குச் சொல்வது... கல்லூரி முடிந்ததிலிருந்து இப்படியே வாழ்க்கையை கழித்திருந்தான்.

"நெஜமாவா!" ஆச்சரியத்தில் கிட்டுவின் புருவங்கள் உயர்ந்தன. "அத்தனை பேரும் வாங்குவாங்களா?"

"சிலர்..." வாக்கியத்தை முடிக்கவில்லை சரவணன். சராசரியாக எவ்வளவு விற்பனை செய்வான் என்பதை எளிதில் கணக்கிடலாம். ஆனால் ஒவ்வொரு விற்பனைக்குப் பின்னாலும் ஒரு மகாயுத்தமே அடங்கியிருக்கும். அதை எப்படி கணக்கில் சேர்ப்பது?

அவன் கை தட்டுவதைக் கேட்டு கதவைத் தப்பித் தவறித் திறப்பவர்கள் முதலில் அதை மூடுவதற்குத்தான் வழியைப் பார்ப்பார்கள். கணவன் தினமும் எந்த சட்டையைப் போட வேண்டும் என்பதிலிருந்து அனைத்து வீட்டு விவகாரங்களிலும் ஆதிக்கம் செலுத்திய இல்லத்தரசிகள், "என் புருஷன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுதான் வாங்க முடியும், சாரி," என்று கதவை மோதிச் சாத்துவார்கள். அந்த ஆண் சிங்கங்களோ வீட்டில் இருந்தால், "என்னது, புக்கா? புக்கு படிப்பானா என் பையன்? அதோ பாருங்க, டென்னிஸ் பால கிரிக்கெட் பாலா நெனச்சு எச்சில் துப்பி தொடையில தடவிட்டிருக்கானே, அவனை பாக்க படிக்கற பையன் மாதிரியா இருக்கு? என்னடா, நீயே சொல்லு, வாழ்க்கைல ஒரு புக்காவது படிச்சிருப்பியா? இவனுக்கெல்லாம் வாங்கிக் கொடுக்கறதுக்கு பதிலா பிச்சைக்காரனுக்கு காசு போடலாம், புண்ணியமானும் கிடைக்கும்," என்று தம் இளம் செல்வங்களை திட்டுவதற்கே சாக்காக பயன்படுத்துவார்கள்.

"நீங்க வாங்கி கொடுங்க அப்பா, நிச்சயமா படிச்சு காட்டுவேன்" என்று சொல்வதற்கு யாராவது பிறந்திருப்பான் என்று சரவணனும் காத்திருந்து அலுத்துவிட்டான். சொரணை கெட்ட தலைமுறை!

அத்தகைய தந்தைமார்களையும் தாய்மார்களையும் மடக்கித் தன் வழியில் கொண்டு வருவதுதான் அவன் தொழில். உண்மையில் அவன் புத்தக விற்பனையாளன் அல்ல - நம்பிக்கை விற்பனையாளன். வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்கு இருந்த வருத்தங்களையும் தமது குழந்தைகள் பற்றிய ஏக்கங்களையும் இந்த ஒரு நூலை வாங்கினால் போக்கிவிடலாம் என்று அவர்களை நம்பவைக்க வேண்டும்.

தினமும் எத்தனை அவமானங்கள், படபடப்புகள், சிறு வெற்றிகள்கூட... இவை அனைத்தையும் சுருக்கி, நாளிறுதியில் கருப்புப் பையின் எடையை வைத்தே அவனையும் எடை போடுவார்கள் அலுவலகத்தில். பணம் கொடுக்கவரும் மூதாட்டியிடம் கடைசி நிமிடத்தில் சரியான சில்லரை இல்லை என்பதுபற்றி யாருக்கு கவலை? மழை பெய்ததால் ஒருமணி நேரம் ஒரே வீட்டு வாசற்படியில் ஒதுங்கி ஒரு சிறுவனுடன் வெட்டிப்பேச்சு பேசவேண்டியதைப் பார்த்து பரிதாபப்பட யார் இருக்கிறார்?

இவ்வாறு யோசனைகளில் ஈடுபட்ட சரவணன் கிட்டுவின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. பார்வையோ வாயிலுக்கு அடியில் பயணம் சென்ற எறும்புகளை விட்டு நகரவில்லை. முதுகுச் சுமை, முன்னால் பாதை - வேறெது பற்றியும் அக்கறை இல்லாமல் சென்றிருந்தன.

"நீங்க நீல கலர் எறும்பு பாத்திருக்கீங்களா?" கிட்டுவின் கீச் குரல் குறுக்கிட்டது.

"நீல எறும்பா? அப்படி ஒண்ணும் கிடையாதே!"

"அப்போ அது என்ன?" என்று எறும்பு கூட்டத்தின் பக்கத்தில் குந்திக்கொண்டு சுண்டு விரலால் ஒரு பகுதியை சுட்டிக் காட்டினான் கிட்டு. உற்றுப் பார்த்த சரவணன் முகபாவம் ஆச்சரியத்தில் மாற, கிட்டு கலகலவென சிரித்தான். திரும்பத் திரும்ப அந்தச் சிறு பையன் தன்னை சிறுமைப்படுத்தியதாகத் தோன்றியது சரவணனுக்கு. மறுபடியும் தனது தந்திரத்தைக் கையாளத் தெம்பு இல்லை.

"இந்தாடா, நான் கிளம்பற வரைக்கும் பேசாம படி," என்று அவன் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்திய கசங்கிய கலைக்களஞ்சியத்தை எடுத்து வாயிலுக்கு அடியில் தள்ளி விட்டான். இதனால் எறும்புக் கூட்டம் சிதறியது அவனுக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.
*
கனத்த புத்தகத்தை பிடித்துக்கொள்ள இரண்டு கைகளும் தேவைப்பட்டன கிட்டுவுக்கு. தரையில் அமர்ந்து, மடியில் சாய்த்து அதன் பக்கங்களைப் புரட்டினான். அழகான வண்ணப் படங்கள் அவனைக் கவர்ந்தன.

கொஞ்ச நேரம் மௌனத்தில் கழித்தார்கள். மழைச்சாரல் படிகட்டை ஈரமாக்க, மேலும் வாயிலருகில் நகர்ந்து உட்கார்ந்தான் சரவணன். கூடிய சீக்கிரத்தில் மழை நிற்கப் போவதாகத் தெரியவில்லை. கன்னத்தை கையில் சாய்த்து வானத்தை நோக்கி பார்த்திருந்தான்.

"அங்கில், எனக்கு ஒரு சந்தேகம்."

'அங்கில்' பெருமூச்சு விட்டான். "என்ன?"

"இங்க எச்சிலை பத்தி போட்டிருக்கு. எச்சில்தான் நாம் உட்...உட்...உட்-"

"உட்கொள்ளும் உணவின் சுவையை உணர வைக்கிறது. உணவைச் செரிமானம் செய்யவும் உதவும். மனித வாயில் இருக்கும் உமிழ்நீர் சுரப்பிகள் எச்சிலை ஊற வைக்கின்றன. தினமும் ஒன்றரை லிட்டர் எச்சிலை உற்பத்தி செய்கின்றன" என்று முடித்தான் சரவணன். பிரபலமான பகுதி அது, நன்றாக மனப்பாடம் செய்து வைத்திருந்தான். "அதுக்கென்ன இப்ப?"

"நம்ம மூளைதான எல்லாத்துக்கும் காரணமுன்னு சொல்வாங்க?"

"ஆமாம்."

"இந்த - செருப்பை, இல்ல, சுரப்பியை - எச்சில் பண்ண வெக்கறதும் மூளைதானே?"

"அதேதான். உன்னை இப்படி யோசிக்க வெக்கறதும் உன் மூளைதான்."

"எல்லாத்துக்கும் மூளைதான் காரணமுன்னா... பின்ன எச்சில் எங்கேந்து வருது, எதுக்காக வருது, எவ்வளவு வருதுன்னு ஏன் எனக்கு என் மூளை வழியா முதலேந்தே தெரியல? இதைப் படிச்சுதான் என் மூளை தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு?"

பதில் சொல்ல வரவில்லை சரவணனுக்கு. அந்த அத்தியாயத்தை கரைத்துக்குடித்த அவனுக்குத் தோன்றாத கேள்வியை இந்த ஏழு வயதுச் சிறுவன் கேட்டு வாயை பிளக்க வைத்துவிட்டானே! எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக இருந்த மூளைக்கே அதன் நடவடிக்கைகளுக்கு அர்த்தம் தெரியாமல் போனதற்குக் காரணம் என்ன?

"தெரியலையே பா," என்று தோல்வியை ஒப்புக்கொண்டான்.

"என்சாய்பீடியாவுல பதில் இல்லையா?"

"இருக்கலாமே. நீ படிச்சு பார்த்தால்தான் தெரியும்."

"அப்ப நீங்க முழுசா படிச்சதில்லையா?"

இல்லை என்று தலை அசைத்தான்.

"அப்போ வாங்கறவங்க முழுசா படிப்பாங்களோ?"

"இல்ல." உண்மையைச் சொல்லத் தொடங்கியவனால் நிறுத்த முடியவில்லை.

"அப்புறம் ஏன் வாங்கறாங்க?"

"கஷ்டப்பட்டு எழுதினவங்க பாவம் இல்ல?" பையனுக்கு தனக்கு மீது உண்டாகியிருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் பொசுங்கியிருக்கும் என்று தோன்றியது சரவணனுக்கு. ஆனாலும் கேள்வி வெறி தணியவில்லை கிட்டுவுக்கு - யோசனையில் அவன் மேலும் முகம் சுளித்ததைப் பார்த்து மனம் வாடினான் சரவணன். என்ன பாவம் செய்ததால் இந்த சிறுவனிடம் அகப்பட்டோமோ?

"இதை எழுதினவங்க மஹா புத்திசாலியா?"

"பயங்கர புத்திசாலி. உன்னை மாதிரியே."

"உலகத்துல இருக்கற எல்லாமே தெரியுமா அவங்களுக்கு?"

"ம்ம், தெரியுமே." எதற்காக அப்படி உளறி வைத்தான்? எச்சரிக்கையாக, "தெரிந்திருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். யார் கண்டது? இந்த உலகமே ஒரு மாயம்," என்று விடவேண்டியத்தானே!

"ஆனா அவங்களுக்கு இதை விக்கத் தெரியாதே? நீங்கதானே விக்கணும்?"

என்ன சொல்ல வருகிறான் பையன்? "ஆமாம், அவங்களுக்கு அதெல்லாம் தெரியாது."

"அப்படீன்னா நீங்க இல்லைன்னா அவங்களுக்கு வேலையே இருக்காது. இந்த வேலையை நீங்க பண்ணாத்தான் அவங்களுக்கு அந்த வேலை இருக்கும்."

"அப்படி சொல்ல முடி-"

"நானும் பெரியவன் ஆகும்போது ஊர் ஊரா போய் விக்கப்போறேன்."

"என்ன சொன்ன?"

"எனக்கும் உங்களை மாதிரி இருக்கணும்!"

சரவணன் அதிர்ந்தான். அத்தனை நேரம் அந்தப் பொடிப்பயல் தன்னை இழிவுபடுத்துகிறான் என்று நினைத்திருந்தான். கடைசியில் அவனைப் போற்றி உச்சக்கட்ட பாராட்டு செலுத்திவிட்டானே! கிட்டு முதலில் கேட்ட கேள்விகளின் உள்ளர்த்தம் தெளிவானது. அவை அவனை கொச்சப்படுத்துவதற்கில்லை - தனது தாழ்வு மனப்பான்மைதான் அவற்றை அந்த கண்ணோட்டத்தில் பார்த்திருந்தது. வீட்டில் தனியாக அடங்கிய சிறுவன், நாள்தோறும் உலகம் சுற்றும் விற்பனையாளனின் வாழ்க்கையைப் பற்றிக் கொண்ட பிரமிப்பினால் எழுந்த கேள்விகள் அவை. அடாடா! தனக்குத் தோன்றாத விஷயத்தை மறுபடியும் உணர்த்திவிட்டானே சுட்டிப் பையன்!

பேச்சு என்பது சரவணனுக்கு வாழ்க்கையில் உருப்படியாக செய்யத்தெரிந்த ஒரே காரியம். கல்லூரி சென்றது, பொறியியல் படித்தது, ஏதோ இயந்திரத்தில் பூட்டாணியின் அளவை நிர்ணயிப்பது - அதெல்லாம் அவனுக்குப் பிடிக்கவில்லை, ஏறவுமில்லையே! படிப்படியாகப் படித்து முன்னேறிய அவன் நண்பர்களோ இன்று படிந்து வாரிய தலையுடன் ஜில்லான அலுவலகத்தில் கணினிக்கு முன்னால் தமது தினங்களைக் கழித்து வந்தனர். ஒன்றாகச் சேர்ந்து கும்மாளம் போடும்போது, அவனது வேலையைப் பற்றி மட்டும் யாரும் பேச்சு எடுக்க மாட்டார்கள். அவனும், எதோ கொஞ்சகாலம் இப்படித் தள்ளிவிட்டு, போகப்போக அவர்களைப் போல ஆகிவிடலாம் என்றுதானே கனவு கண்டிருந்தான். இப்போது யோசித்துப் பார்த்தால் - ஒரே இடத்தில் உட்கார்ந்து, அதே நபர்களுடன் இளித்துப் பேசி, விசைப்பலகை தட்டிக்கொண்டு காலம் கழிப்பதில் அவனுக்கு என்ன சுகம்?

இந்த வேலையைப் பற்றி அவனுக்கு நிஜமாகவே பிடிக்காமல் இருப்பதற்கு என்ன இருந்தது? யோசித்துப் பார்த்தால் நாள் கடைசியில் அலுவலகத்துக்குச் சென்று கணக்கு சொல்வது மட்டும்தான் கசந்தது! மற்றபடி, ஒவ்வொரு வாசலிலும் காத்திருந்தது ஒரு புதிய அனுபவம். பல தினுசான மனிதர்கள், தற்காலிக நண்பர்கள் - கற்றுக்கொள்ள எவ்வளவு இருந்தது! இந்த அலைச்சல், மழை எல்லாம்!

மழையா? மழை நின்றிருந்தது என்று கவனித்தவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. மேகங்களுக்குப் பின்னால் சிக்கித் தவித்த கதிரவன் வெற்றிகரமாக வெளியேறியிருந்தான். குளியல் போட்ட உலகம் பிரகாசித்தது.

மேலும் அந்தப் படிகட்டில் நேரம் கழிக்க விருப்பம் இல்லை சரவணனுக்கு. செய்வதற்கு எவ்வளவு இருந்தது! எழுந்தான். கிட்டு தனது கையில் இருந்த புத்தகத்தை வாசலுக்கு அடியில் தள்ளிவிட்டான். அதை எடுத்துப் பையில் வைத்த சரவணனுக்குப் புதிய யோசனை தோன்றியது.

"ஏம்பா, ஒரு நிமிஷம் கேட்டைத் திறந்து விடு."

கிட்டுவின் கண்களில் தடுமாற்றம் தெரிந்தது.

"நான் உள்ளுக்குள்ள வர மாட்டேன், பயப்படாதே," என்றான் சரவணன், சமாதானமாக.

திறந்திடுவானா?

கிட்டு நகரவில்லை. அதற்கு மேல் வற்புறுத்த விரும்பாத சரவணன் பேசாமல் கிட்டுவின் முடிவிற்கு காத்திருந்தான்.

டக்! பூட்டு அவிழ்ந்தது. கிரீச்! வாயில் திறந்தது.

சரவணன் புன்னகைத்தான். தன் தோளில் தொங்கிய பையிலிருந்து புதிய நூல் ஒன்றை எடுத்தான். ப்ளாஸ்டிக் சுற்றிப் போர்த்தியிருந்த அது வெளிச்சத்தில் பிரதிபலித்தது. "தரையில தள்ளியிருந்தா அழுக்காகியிருக்கும். இந்தா. எப்பப்பத்தாலும் படிக்காத. தோணும்போது படி."

திரும்பி, குறைந்த எடையுடன் படிகளை இறங்கி தோட்டம் வழியாக வெளியேறினான். இடதுதோளில் தொங்கிய கருப்புப்பை அவன் விறுவிறு நடையில் முன்னும் பின்னும் ஆடியது. அந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தவனுக்கும், பக்கத்து வீட்டுக்குக் கிளம்பியவனுக்கும் அடையாள ஒற்றுமையாக இருந்தது அந்த கருப்புப்பை மட்டும்தான்.

*****


"ஜோ ஜோ ஜோ, சமர்த்து இல்ல? அழாத கண்ணா..."

"அப்பா, சீக்கிரம் திற பா! நான் ஓடணும்!"

"இரு ரேணு. லக்ஷ்மி, சாவி உன்கிட்ட இருக்கா?"

"இல்லையே."

"காலிங் பெல் அடியேன் குணசேகர், பொண்ணு துடிக்கறாயில்ல! அவனுக்கு கதவுகூடவா திறக்கத் தெரியாது?"

"அடிக்கறேன் கௌரி, லக்ஷ்மி இந்தா நீ குழந்தைய பிடிச்சுக்க."

"அப்பா அவன் தூங்கித் தொலைச்சிருப்பான், நாலஞ்சு தடவை அடிங்க!"

மணி ஒருமுறை அடித்தது.

வாசலில் அமர்ந்திருந்த வாலிபன் கிளம்பி சுமார் இரண்டு மணி நேரம் கழிந்திருந்தது. வாயில் பூட்டைக் கிட்டு அவிழ்த்தவுடன் அவசர ஓட்டம் விடுத்தாள் அக்கா ரேணு.

இரு கைகளிலும் ஜவுளி நிறைந்த கனத்த துணிப்பைகளை ஏந்தி உள்ளறையை அணுகிய தந்தை கிட்டுவைப் பார்த்து, "என்னடா பண்ண வீட்டுல தனியா?" என்று கேட்டுக்கொண்டே சென்றார்.

"சும்மா இருந்தேன்."

"நான் அப்பவே சொன்னேன். இங்க வெட்டியா இருந்ததுனால யாருக்கு என்ன லாபம்? பேசாம எங்களோட வந்திருக்கலாம்! அடுத்த தடவை வருவியா?"

"வறேன்."

கிரீஷ் ஸ்ரீனிவாஸ்
More

அம்மாவின் பிரார்த்தனை
குழந்தை வளர்ப்பு
Share: 
© Copyright 2020 Tamilonline