Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
கல்யாண மாமி
அர்த்தத்தின் தேடல்
கனிந்து வரும் பசுபோல்!
கைப்பிடிக் கடலை
- அம்புஜவல்லி தேசிகாச்சாரி|அக்டோபர் 2013|
Share:
அபுரூபத்தம்மாளுக்கு விடிந்ததிலிருந்தே படபடப்பாக இருந்தது. தவிசுப்பிள்ளை தாமுவை விரட்டோ விரட்டென்று விரட்டிக் கொண்டிருந்தாள். தோட்டத்தில் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த சின்னானை அழைத்து, "செல்லாத்தா எங்கிருந்தாலும் கைப்பிடியாக் கூட்டி வா. கடலை கொஞ்சம் கெடக்கு. தட்டிக் குடுக்கணும்னு சொல்லி வரச்சொல்லு" என்று துரத்தினாள். சமயம் பார்த்து ஏதோ வழக்கு என்று பட்டணம் போய்விட்டார் வீட்டய்யா; வர ஒரு வாரமாகுமாம். "நான் இருந்து என்ன செய்யப்போறேன்? இத்தனை ஆள் படையிருக்கு; நீயே கவனிச்சுக்கோ" என்று கிளம்பிவிட்டார்.

நாலுநாள்கூட இல்லை மகள் காந்தி வெளிநாட்டிலிருந்து வருவதற்கு. கல்யாணத்துக்குப் பின் ஒரே முறை வந்ததுதான். இரண்டு பேறுகாலத்துக்கும் அவளால் போக முடியவில்லை. பெரியவள் மாலு பிறக்கச் சில நாட்களே இருக்கையில் வீட்டுப் பெரியவர், அவள் மாமனார் காலமாகி, விசேஷங்கள் முடியவும் பேத்தி பிறக்கவும் சரியாக இருந்தது. அடுத்தவளுக்கும் போக முடியாமல் தம்பி மகள் கல்யாணம் வந்து சேர்ந்துவிட்டது. மாப்பிள்ளை சேகர் இந்த ஏழு வருஷத்தில் ஐந்து வேலைகள் மாறிவிட்டதால் விடுப்பு கிடைக்கவில்லை. போட்டோப் படமும் ஃபோன் பேச்சிலும்தான் பிள்ளைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது.

கடலை வெட்டாகி ஒரு மாதம்தான் ஆகிறது. பால் மணத்துடன் பிஞ்சுக்கடலை ஆறேழு மரக்காலும், உலர்ந்தது ஏழெட்டு மரக்காலும் வீட்டுக்கு எடுத்துவைத்தது இருக்கிறது. கடலை உருண்டை, மிட்டாய், பர்ஃபி என்று நாலுவிதப் பலகாரம் செய்துவைத்தால் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அங்கே என்னென்னவோ இங்கிலிசுக்காரன் திண்டிதான் தின்னுங்கள். பாவம் காந்தி, இங்கிருக்கும்போது மல்லாட்டை சட்னி, காரக்குழம்பு என்றால் பிரியமாகச் சாப்பிடுவாள். இப்ப, நாக்கு செத்துக் கிடக்கும். வயணமாக ஆக்கிப்போடணும். கற்பனைகளும் யோசனைகளும் அமுக்கிப் போட்டன அபுரூபத்தை.

"வாரச் சொன்னீங்களாமில்ல?" என்று படைபதைக்கும் வெயிலில் தலை முக்காடுடன் வாயில் குறட்டில் குரல் கொடுத்து நின்றாள் செல்லாத்தா.

"ஒரு மரக்கா மல்லாட்ட இருக்கு; மவ வெளி நாட்டிலேர்ந்து வரா. ஏதாச்சும் திண்டி செய்யலாமுன்னு. இன்னும் நாளையும் வந்து செத்த தட்டிக் குடுத்துட்டுப் போ" என்றபடி உள்ளே சென்றாள். செல்லாத்தாவும் தொடர்ந்து சென்று முற்றத்தில் நின்றாள்.

பெரிய கூடையில் கோபுரமாக வேர்க்கடலையை கொணர்ந்து முற்றத்தில் கொட்டினாள் அம்மாள். "ஒரு மரக்கா இருக்கு அந்திக்குள்ளே ஒடச்சுக் குடு" என்றாள் குருட்டுக் கணக்காகப் பார்த்தால்கூட இரண்டு மரக்காலுக்குக் குறையாது. "கூட இருக்கும்போலிருக்கேம்மா. உச்சியாயிடுச்சி" என்று தயங்கினாள் செல்லாத்தா.

"ஆமாம் கண்ணளக்காததையா கை அளந்திடும்? பிடி கூடக்கொறைய இருந்தா என்னவாம்? பேசி நிக்கற நேரத்துலே படி கொட்டை உடைச்சிடலாம்" என அலட்சியமாகக் கூறிவிட்டு உள்ளே மறைந்தாள் அம்மாள். எதிர்ப் பேச்சு வாயாடல் எதுவும் இங்கே பலிக்காது எனத் தெரிந்த செல்லாத்தா தலைப்பை வரிந்து கட்டிக்கொண்டு மளமளவென்று வேலையில் இறங்கினாள்.

செல்லாத்தாவுக்கு இந்த மாதிரிப் பெரிய மனுசங்க வீட்டு வேலை, ஒவ்வொரு வெள்ளாமைக் காலத்திலும் அறுப்பு, நடவு எந்த வேலை எப்பொழுது கிடைக்கிறதோ, அதுதான் அவளுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் கஞ்சி ஊற்றுகிறது. புருஷன் சிகாமணி நினைத்தால் ஏதாவது வேலைக்குப் போவான்; கிடைத்ததை டாஸ்மாக்குக்கு மொய் எழுதிவிட்டு வருவான். வேலை இல்லாதபொழுது அவளை அடித்து உதைத்துக் கிடைத்ததைப் பீராய்ந்து கொண்டு போய்விடுவான். இந்த நிலைமையில் உரத்துக்கூட அவள் பேசிவிட முடியுமா என்ன?

பெரியவள் சின்னிக்கு ஏழு வயது; பள்ளிக்குப் போய்விடுவதால் மதியச் சாப்பாடு கிடைத்துவிடும். இளையவன் பிச்சையை அடுத்த வீட்டில் விட்டு வந்திருக்கிறாள். உலர்ந்த மணிலாக் கொட்டைகளை எந்த ஒரு இயந்திரமும் இயங்காத வேகத்தில் தட்டிப் பயறைக் கூடையில் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்தாள் செல்லாத்தா. மணி மூன்றை நெருங்குகையில் தம்பியைக் கையில் பிடித்தபடி வந்தாள் மகள். மூலைக்கடை ராசுவிடம் வாங்கிய பன் துண்டைக் கடித்துக் கொண்டிருந்தான் குழந்தை. அம்மாவைக் கண்டதும் கழுத்தைக் கட்டிக்கொண்டது. நாலு பயறைக் கொடுத்ததும் அக்காளுடன் விளையாடப் போய்விட்டது. அந்தி சாயும் வேளையில் ஒருவிதமாக வேலையை முடித்து சேலையை உதறிக்கொண்டு எழுந்தவள், அபுரூபத்தம்மாளிடம் "புள்ளைங்களுக்கு கொஞ்சம் பயறு குடுங்கம்மா; கொறிச்சிட்டுக் கெடக்கும்" என்று மனுக் கொடுத்தாள்.

"ஆமா, கொட்டையிலே பாதி சவளையாக் கெடக்கு. இதிலே என்ன பலகாரம் செஞ்சு வக்க முடியுமோன்னு இருக்கேன். ம்... நாளை தட்டி முடியக்கொள்ள எதாச்சும் தாரேன்" என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
மறுநாள் சனிக்கிழமை; சின்னிக்குப் பள்ளி விடுமுறை. இரண்டுக்கும் கஞ்சியைக் காய்ச்சிக் கொடுத்துவிட்டு கடலை உடைக்க வந்துவிட்டாள் செல்லாத்தா. "பச்சை மல்லாட்டையை உடைச்சு இந்தப் போகிணியிலே போட்டுடு. உலர்ந்ததோட கலந்துடாதே என்றபடி இன்னொரு மரக்காலுக்கு மேலிருந்த கடலையைக் கொணர்ந்து கொட்டினாள் அம்மாள். செல்லாத்தா என்ற இயந்திரம் இயங்க ஆரம்பித்தது.

எத்தனை நேரம்தான் விளையாடுவதும், அக்காளுக்குத் தொல்லை கொடுத்துப் பிடிவாதம் பிடிப்பதும் முடியும்? ஒரு கட்டத்தில் குழந்தை பிச்சை அம்மாவைப் பார்க்க வேண்டுமென்று அழ ஆரம்பித்துவிட்டான். சின்னியும் சிறு பெண்தானே. அவனைச் சமாளிக்க இயலாமல் பெரிய வீட்டுக்கு இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள். ஓடிவந்து கட்டிக்கொண்ட குழந்தை கையில் நாலு பருப்பைக் கொடுத்து மகளுடன் வாயிற்புறம் துரத்திவிட்டாள். வெயிலை வீணாக்காமல் இரண்டும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன.

பச்சைக் கடலையைக் உடைக்க ஆரம்பித்தாள் செல்லாத்தா; உலர்ந்தது ஒரு கூடை கூட உடைத்துவிடலாம்; தோட்டுடன் கடித்துக்கொண்டு இருக்கும் பச்சையை உ டைப்பது சுலபமல்ல. நகக்கணுவெல்லாம் கிழிபட்டு, எரிச்சலெடுத்தது. சோத்துக்குப் போனால் நேரம் கடத்திவிடுவாள் என்று அவளுக்கும் குழந்தைகளுக்கும் நீச்சத்தண்ணியும் சோறும் இரண்டு வெங்காயத்துடன் கொடுத்து, உடனே வேலையைத் தொடர வைத்துவிட்டாள் எஜமானியம்மாள். ஆடி அலுத்து பசங்கள் இரண்டும் வாயிற் திண்ணையில் படுத்துவிட்டன.

ஆயிற்று; முக்கால்வாசிக் கடலை உடைத்தாயிற்று. தூங்கிக்கொண்டிருந்த பையன் விழித்து, அம்மாவைத் தேடி உள்ளே வந்தான். இளரோஜா வண்ணத்தில் குவிக்கப்பட்டிருந்த பச்சைக் கடலையைக் கண்டதும் அவன் நாக்கில் நீர் ஊறியது. ஓடி வந்து ஒரு பிடி வாரி எடுத்தான். ஒருவாரம் முன்புதான் பெரும்பெயறு கோயிலில் முடி இறக்கிய மொட்டைத் தலையை ஆட்டி ஆட்டிக்கொண்டு அவன் கிளம்புமுன் அந்தப் பக்கம் வந்த அபுரூபத்தம்மாள் இதைப் பார்த்துவிட்டாள். அவ்வளவுதான்; "ஐயோ ஐயோ, இப்பிடி அள்ளிக் கொட்டிக்கிட்டா என்ன மிஞ்சும்? ஏண்டி செல்லம், நீ உடைக்கிற அழகிலே எனக்குத் தோடுகூட மிஞ்சாது போல இருக்குதே. இந்த வயசிலே திருட்டுப் புத்தியைப் பாரேன்" என இரைந்தவண்ணம் அந்தக் குழந்தையின் மொட்டைத் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள். ஓவென்று கதறியபடி வெளியே ஓடி அக்கா மடியில் விழுந்தது குழந்தை. பாவம் விக்கித்துப் போய் சிலையாக அமர்ந்திருந்த செல்லாத்தா என்ன செய்வாள்? படியளக்கறவங்களுக்கு எதிராப் பேசிட முடியுமா?

தம்பியை இடுப்பில் சொருகியவண்ணம் உள்ளே சீறிக்கொண்டு வந்த சின்னி, "என்னம்மா இப்பிடி இந்தப் பச்சப்புள்ளைய கொட்டியிருக்கீங்களே; இந்தச் சொப்புக் கையிலே மரக்கா பயறா நின்னுடும்? நாக்கு நசைக்கி நாலு கடலை எடுத்ததைத் திருட்டு அது இதுன்னுக்கிட்டு; என்ன மனுசங்களோ? ஏம்மா, நீயும் பாத்துக்கிட்டுக் குந்தியிருக்கியே; புள்ள கதறுறதுகூடக் காதிலே உழலியா?" என எஜமானி அம்மாளுக்கும் தாய்க்குமாகக் கோபத்தைக் கொட்டிவிட்டுக் குழந்தையுடன் வெளியேறினாள்.

"ஆத்தாடி, உம் பொண்ணு வாயாலதான் வாழப் போகணும். இந்த வயசில என்ன ஒரு திமிர்ப் பேச்சு? இப்பவே அடக்கலைன்னா நாளை கைக்கடங்காது" என அறிவுரை வழங்கிவிட்டு ஏதுமே நடக்காததுபோல உள்ளே சென்றுவிட்டாள் அம்மாள்.

வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பிய செல்லாத்தாவிடம் "நாளை கொஞ்சம் மாவு இடிச்சுக் குடுக்கணும். வெயிலுக்கு முன்னே வந்துடு" என உத்தரவிட்டாள் அம்மாள். ஆனால் அவள் வீடு சேருமுன்னமே எதிரே வந்த சின்னி, "அம்மா, தம்பிக்கு காச்சல் கொதிக்குது. பொன்னியக்கா செண்டருக்குத் தூக்கிப் போயிருக்கு" என்று செய்தி வாசித்தாள்.

டாக்டரம்மாள் குழந்தையைப் பார்த்ததும் பதறிப் போய்விட்டார். தலையில் வேறு எலுமிச்சையளவு புடைப்பு; காரணத்தைக் கேட்டதும் "அடிப்பாவி, இப்படிக் குட்டி அதிர்ச்சியிலே குழந்தைக்கு ஜுரமே வந்திருக்கே; பொம்பளையா இல்லை பிசாசா அவ?" என எரிச்சலுடன் கூறி உடனே பிள்ளையை அட்மிட் செய்துவிட்டார். ஜுரம் இறங்க நான்கு நாட்கள் ஆயின.

மாவிடிக்கச் செல்லாத்தா வரவில்லைஎன்று அடுக்கடுக்காக அவளை வைதுவிட்டு வேறொருவருக்கு இரண்டு மடங்கு கூலி கொடுத்து வேலையை முடித்துக் கொண்டாள் அபுரூபத்தம்மாள். பலகாரம் செய்யும் ராயரைக்கொண்டு பெரிய தூக்குகளில் கடலை உருண்டை, பர்ஃபி, தட்டை எனப் பலவகைப் பலகாரங்களைச் செய்து வீட்டையும் ஒழுங்கு செய்து முடிக்கவும் மகள் வரவும் சரியாக இருந்தது.

குழந்தைகள் மாலா, ஷீலா இருவரும் பாட்டியிடம் ஒட்டிக்கொண்டு சுற்றிச்சுற்றி வந்தனர். செய்த பலகாரங்களைத் தட்டுகளில் வைத்து அருமையிட்டுவிட்டு மகளுடன் பேசியவாறே அடுப்படியில் தவிசுப்பிள்ளைக்கு உத்தரவுகளைப் போட்டுக் கொண்டிருந்தாள் அம்மாள். திடீரென்று உள்ளே வந்த மூத்தவள் மாலு "அம்மா, ஷீலு கண்ணெல்லாம் தண்ணி கொட்டுது; உடம்பெல்லாம் ஒருமாதிரி ஆயிடுச்சு என அழுதபடி கூறினாள். முற்றத்துக்கு ஓடிவந்த காந்தி குழந்தையின் நிலையைப் பார்த்ததும் கலவரத்துடன் "என்னம்மா, இவளுக்குக் கடலைப் பலகாரமாக் குடுத்திருக்கீங்களே; இவளுக்கு நட் அலர்ஜி. என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?" என்றாள். அபுரூபத்தம்மாள் பதில் கூறாது கையைப் பிசைந்துகொண்டு நின்றாள். குழந்தையை உடனே திண்டிவனத்திலுள்ள பெரிய மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். டாக்டரிடம் ஒரு பாட்டம் பாட்டு வாங்கிக்கொண்டு ஒருவிதமாக மருத்துவம் முடிந்து இரண்டு நாட்களில் வீடு வந்து சேர்ந்தனர்.

பையனுக்குச் சற்று சுகமானதும் செல்லாத்தாளும் ஏதாவது வேலை இருக்குமென்று வந்து நின்றாள். சொன்னபடி வராததற்குக் காரணம் கூறியதும் அலட்சியமாக "பிள்ளை நோவுக்குக் கள்ளமில்லை. கஷாயம் கலிக்கம்னு வெச்சுக் கொடுக்காம நாலு நாள் வேலையை விட்டு ஆசுபத்திரியிலே காவல் கிடந்தயாக்கும். பக்கம் அண்டையில் யாருக்காவது காய்ச்சல் இருக்கும். பெண்ணைப் பார்த்துக்க விட்டுட்டு வரக்கூடாதா?" என்று தன் வேலை கெட்டதையே பெரிதாக எண்ணி இரைந்தாள்.

இதனிடையில் சின்னியும், பிச்சையும் அங்கு வந்தனர். அதே சமயம் உள்ளிருந்து வந்த காந்தி, "செல்லாத்தா என் பிள்ளைக்கி இந்த மல்லாட்டை சமாசாரமெல்லாம் ஒத்துக்காது. அலர்ஜி. நீ கொண்டுபோய் பிள்ளைங்களுக்குக் குடு. இனி இந்த வீட்டில் கடலை, முந்திரி எந்தப் பருப்போ தின்பண்டமோ இருக்க வேண்டாம்; பட்டதெல்லாம் போதும்" என்றபடி ஒரு பெரிய பையில் பலகாரங்களைப் போட்டு எடுத்து வந்து செல்லாத்தாவிடம் கொடுக்க வந்தாள்.

சின்னி முந்திக் கொண்டு "அன்னிக்கிப் பச்சப் புள்ள நாலு பயறு எடுத்ததுக்கு காச்ச வரமட்டும் கொட்டுவாங்களாம். இன்னிக்கி அவுங்க புள்ளைக்கு ஏதோ இங்கிலீசு நோக்காடு என்னதும் கூடைகூடையாத் தூக்கித் தருவாங்களாம். என்ன நல்ல மனசு?" என்றபடி தம்பியிடம் "பிச்சப்பையா, வாடா நம்ம ராசு மாமா கடையிலே ஒனக்கு கடலை முட்டாய் வேணது வாங்கித்தரேன்" என அவனை இழுத்துக்கொண்டு வெளியேறினாள்.

கன்னத்தில் யாரோ ஓங்கி அறைந்ததுபோல் அதிர்ந்து நின்றாள் அபுரூபத்தம்மாள்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி,
சான் ஹோசே, கலிஃபோர்னியா
More

கல்யாண மாமி
அர்த்தத்தின் தேடல்
கனிந்து வரும் பசுபோல்!
Share: 




© Copyright 2020 Tamilonline