Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
நேர்காணல்
டென்னிஸ் வீராங்கனை நிருபமா வைத்யநாதன்
வைரமணி
- ஈரநெஞ்சம் மகேந்திரன்|நவம்பர் 2013||(3 Comments)
Share:
"விழியம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட்டே" என்ற பட்டினத்தாரை "வீதிவரை மனைவி" என்று எளிமையாகச் சொன்னார் கண்ணதாசன். பெண்களுக்கு மயானத்தில் அனுமதியில்லை. அதையும் மீறி மயானத்திலேயே வெட்டியான் பணி செய்கிறார் வைரமணி. கோவையில் வசிக்கும் இவருக்கு வயது 30. மணமாகிக் குழந்தைகள் இருக்கிறார்கள். தந்தை செய்துவந்த தொழிலை வயிற்றுப்பாட்டுக்காகத் தொடர்கிறார், 20 ஆண்டுகளாக. மயான பூமியில் தனி ஒருவராய்க் குழி தோண்டுவதும், விறகடுக்குவதும், எரியூட்டுவதும் என அச்சமின்றி இயங்கிக் கொண்டிருக்கிறார். 'நேசம்' அமைப்பினர் இவரை கௌரவித்துள்ளனர். தென்றலுக்காக அவரைச் சந்தித்து உரையாடினார் 'ஈர நெஞ்சம்' பி. மகேந்திரன். அதிலிருந்து....

கே: எப்போதிலேர்ந்து இந்தப் பணியை செஞ்சு வர்றீங்க, அதுக்கான காரணம் என்ன?
ப: எனது அப்பா பேரு கருப்பசாமி; அம்மா கருப்பாத்தாள். குடும்பத்துல நான் கடைசிப் பெண். அதிகம் படிக்கலை. அப்பா வெட்டியான் வேலை பார்த்து வந்தார். அவர் திடீர்னு இறந்து போகவே, குடும்பத்தைக் காப்பாத்த அம்மா அந்த வேலையைச் செய்ய முன்வந்தாங்க. ஒரு பெண் வெட்டியான் வேலை பார்ப்பதாவதுன்னு நிறைய எதிர்ப்பு வந்துச்சு. அதெல்லாம் மீறி அவங்க அந்த வேலையைச் செஞ்சாங்க. நானும் பத்து வயசு முதலே அம்மாக்கு உதவியா பல வேலைகளைச் செஞ்சேன். அம்மா கஷ்டப்பட்டு உழைச்சு கூடப் பொறந்தவங்களுக்கெல்லாம் கல்யாணம் செஞ்சு வச்சாங்க. நானும், ரஜிங்குற கேரளத்து வாலிபரை காதலிச்சு கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். சில வருஷத்துல அம்மா காலமாயிட்டாங்க. கணவரின் சம்மதத்தோட அப்பாம்மா செஞ்ச இந்த வேலையைச் செய்ய ஆரம்பிச்சேன். ஒருவிதத்தில இது எங்கள் பூர்வீகத் தொழில். என் தாத்தாகூட வெட்டியானாத்தான் இருந்தாரு. என் கணவருக்கு வருமானம் குறைவா இருப்பதாலயும் குழந்தைகளைப் படிக்க வைக்கிறதுக்காகவும்தான் இந்த வேலையைச் செய்யறேன். ஆனாலும் இந்தத் தொழிலை நான் மட்டமா நினைக்கலை. விருப்பத்தோடுதான் செய்யறேன். ஆண்கள் மட்டும்தான் இதை செய்யணும்; இறந்து போனவுங்க உடம்ப காட்டுக்கு எடுத்துவரப்ப, கூடப் பெண்கள் வரக்கூடாதுன்னெல்லாம் கிராமத்துல சொல்வாங்க. ஆனா நான் இந்தக் காட்டுலயே உண்டிருக்கேன். ஒறங்கியிருக்கேன். எல்லோரும் ரொம்பத் தைரியமான பொண்ணுன்னு சொல்றாங்க. பெண்களால செய்ய முடியாத வேலைன்னு எதுவுமே இல்லைன்னுதான் நான் நெனக்கிறேன்.

கே: இதுவரை எவ்வளவு பேரை அடக்கம் செஞ்சிருப்பீங்க?
ப: இதுவரை ஒரு 3000 பேரை அடக்கம் செஞ்சிருப்பேன். நான் தனியாளாவே குழி தோண்டறது, மண் எடுக்குறதுலேர்ந்து எல்லா வேலையும் செஞ்சிருவேன். சமயத்துல வீட்டுக்காரரும் உதவி செய்வாரு.

கே: இந்த வேலையைச் செய்யுறது கஷ்டமாயில்லையா?
ப: இதிலென்னங்க கஷ்டம். சின்ன வயசிலேர்ந்து அப்பா, அம்மா எல்லாரும் செஞ்சு பழகின வேலைதான். இது மோசமாவோ, வேண்டாத ஒண்ணாகவோ நினைக்கலை. ஆனா குழந்தைங்க, இளவயசுக்காரங்களை அடக்கம் பண்ணும்போது மனசுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம்னு இருக்கும். அழுகையா வரும். வெளிக்காட்டாம அடக்கிக்கிடுவேன். மத்தவங்களுக்கு நாம சங்கடம் தரக்கூடாது இல்லையா?கே: சரி, இதுல வர்ற வருமானம் போதுமானதா இருக்கா?
ப: முன்னெல்லாம் அதிகமா பிணங்க வரும். இப்போ மின்சாரச் சுடுகாடு வந்திருச்சி. அதுனால இங்க வந்து அடக்கம் செய்யறது கம்மியாயிருச்சி. முதியோர் இல்லங்க, ஆதரவில்லாதங்க, வசதியில்லாதவங்க கொண்டுவர்றது மட்டும்தான் இங்க வருது. அதை நம்பித்தான் வாழ வேண்டியிருக்கு. இதனால நிரந்தர வருமானம்னு ஏதும் இப்போ கிடைக்கறதில்ல.

கே: ஏழைகள், ஆதரவற்றோர்களின் உடல்கள் வரும்போது என்ன செய்வீங்க?
ப: அவங்ககிட்ட இவ்ளோ கொடு, அவ்ளோ கொடுன்னு பேரம் பேசுறதில்லை. அந்த நேரத்தில அவங்களுக்கு ஒரு உறவா, உதவியாதான் நான் இருப்பேன். சிலபேரு வசதி இல்லை, அடக்கம் செய்யுறதுக்குக்கூட பணம் இல்லைன்னு சொல்வாங்க. அவங்களை நான் ஏதும் கட்டாயப்படுத்தறதில்லை. கொடுக்குறத வாங்கிப்பேன். அவுங்களும் நம்ம மாதிரி ஏழைங்கதானே, நாமதானே உதவணும்னு நினைச்சுப்பேன்.

கே: பேய், பிசாசுன்னு சொல்றாங்களே, அதைப்பத்தி பயமா இல்லையா?
ப: இல்லை. நான் சின்ன வயசிலேர்ந்து இங்கேயே வளர்ந்து வந்ததால எனக்கு எந்தப் பயமும் இல்லை. பேய், பிசாசுன்னு சொல்றதுல நம்பிக்கையும் இல்லை. இந்த இடம் அந்த ஈஸ்வரன் வாழும் இடம்னு நம்புறேன். அதுனால இதை ஒரு கோவில் மாதிரிதான் நான் நெனக்கிறேன். அதுனால இங்கே பயப்பட ஏதுமில்லை. இங்கே யாரும் யாரையும் ஏமாத்துறதில்லை. வஞ்சகம் செய்றதில்லை. கெடுதல் செய்றதில்லை. எந்த அநியாயமும் இங்க நடக்கலை. சொல்லப்போனா இதுதான் ரொம்பப் பாதுகாப்பான இடம். உண்மையைச் சொல்லணும்னா, சமயத்துல இந்த மனுஷங்களை கண்டாத்தான் ரொம்பப் பயமா இருக்குது.

கே: ஏன்?
ப: பின்ன என்னங்க, ஜீவன் செத்து அமைதியா அடக்கமாகுற இந்த இடத்துல கூட பொன்னுக்குச் சண்ட, நகைக்குச் சண்ட, பணத்துக்குச் சண்ட, சாராயத்தக் குடிச்சுப்போட்டு சண்டை போட்டுக்கறாங்க. 4, 5 மணி நேரம் உடம்பை அடக்கம் பண்ணாம அப்படியே வச்சிக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டிருப்பாங்க. பார்க்க ரொம்ப வேடிக்கையா இருக்கும். நாளை நமக்கும் இந்த இடம்தான்; இதுதான் நிரந்தரம்னு நெனக்காம, இருக்கிறவரை ஒத்துமையா இருப்போம்னு நெனக்காம சண்ட போடறதப் பார்க்கும்போது உண்மையிலேயே ரொம்ப வேதனையாவும் இருக்கும்.
கே: பொதுமக்கள் மற்றும் அரசு உங்களுக்கு எந்த அளவுக்கு உதவியா இருக்கு?
ப: பொதுமக்கள் கிட்ட இருந்து எந்த ஆதரவும் இல்லை. இப்பம்கூட என்னைப் பத்தி பத்திரிகையில செய்தி வந்த பிறகுதான் அரசாங்கத்துக்கும் என்னைப்பத்தித் தெரிஞ்சுது. கலெக்டர் என்னைக் கூப்பிட்டு, ஒரு பெண் எதுக்கு இந்த வேலை செய்யணும், நாங்க கடன் கொடுக்குறோம். நீ கடை வச்சுப் பிழைச்சுக்கன்னு சொன்னார். ஆனா எனக்கு அதில விருப்பமில்லை. நான் இந்தத் தொழிலை மனப்பூர்வமாக 20 வருஷமாச் செஞ்சு வர்றேன். எனக்கு இந்த தொழிலிலேயே ஒரு அங்கீகாரம், அரசு உதவி, இல்லன்னா அரசு வருமானம் கிடைச்சால் அதுதான் எனக்கு ரொம்ப உதவியா இருக்கும். மத்தபடி முன்னாடி எல்லாம் சொந்தக்காரங்க யாரும் கண்டுக்க மாட்டாங்க. நல்ல காரியங்களுக்கு, விசேஷங்களுக்கு என்னியக் கூப்பிட மாட்டாங்க. ஒரு சக மனுசியாக்கூட மதிக்க மாட்டாங்க. நானும் ஒதுங்கியேதான் இருந்தேன். இப்போ வெளி உலகத்துக்கு என்னைப் பத்தித் தெரிஞ்சதும் எல்லாரும் வர்றாங்க, பேசுறாங்க, கூப்பிடுறாங்க. தைரியத்தைப் பாராட்டுறாங்க. என்கிட்ட யோசனை எல்லாம் கேட்குறாங்க.

கே: உங்க குடும்பம் பத்திச் சொல்லுங்களேன்!
ப: மூத்த மகள் விசித்ரா ஒரு கடையில வேலை பார்க்கிறா. இரண்டாவது மகள் அனிதா. மூணாவது மகன் சிவா. ஸ்கூலில் படிக்கிறாங்க. என் கணவர் ரெஜி கூலி வேலை செய்யுறார். பசங்க என்னைய மாதிரியே ரொம்பத் தைரியமானவங்களா இருக்காங்க. ஆனா அவங்களும் என்னமாதிரி இந்தத் தொழிலுக்கு வராம இருக்கணும். அவங்கள நல்லமுறையில் வளத்து ஆளாக்கணும். அதுனாலயே நான் அவங்களை அதிகம் காட்டுக்கு வரவிடமாட்டேன். நான் இவ்வளவு கஷ்டப்படுறதும் அவங்களுக்குத்தானே! அவங்க நல்லா படிக்கணும். ஒசந்த வேலைக்கு போவணும். அதுதான் என்னோட லட்சியம். ஆசை எல்லாம்.

கே: உங்களோட இந்த வேலைபத்தி உங்க கணவர், பசங்க எல்லாம் என்ன நெனக்கறாங்க?
ப: எல்லோருமே நல்ல அன்பா, ஆதரவாத்தான் இருக்காங்க. இந்த வேலைய நான் எங்க கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே செஞ்சிக்கிட்டு வர்றேன். அப்புறமும் கூட வீட்டுக்காரர் சம்மதத்தோடதான் செய்திட்டு வர்றேன். குழந்தைங்களும் பிறந்ததுமுதலே இதையெல்லாம் பார்த்து வளர்ந்து வந்ததால் இதை ஒரு வேறுபாடா அவங்களும் நெனக்கலை. குடும்பத்திற்காகத்தான் செய்யறேங்கறதுனாலயும், வருமானம் வேணுங்கறதுனாலயும் யாரும் இந்த வேலையத் தப்பா நினைக்கலை. என் கணவரும், குழந்தைகளும் என்னைப் புரிஞ்சிக்கிட்டு இருக்கறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. அக்கம் பக்கத்திலகூட இப்போ என்னைப்பத்தி ரொம்பப் பெருமையாத்தான் பேசறாங்க. பாராட்டுறாங்க.

கே: அரசு மற்றும் மக்களிடமிருந்து என்ன எதிர்பார்க்குறீங்க?
ப: சிலபேருக்கு இந்த வேலையைப்பத்திப் புரியலை. அவங்க இதுவும் ஒரு நல்ல வேலைதான்னு உணர்ந்து நடந்துகிட்டா, என்னையும் அவங்கள மாதிரி ஒரு சராசரி மனுசியா மதிச்சி நடந்துகிட்டாப் போதும். அரசாங்கம் இதை ஒரு அரசுப் பணியா அங்கீகரிச்சு அவங்களே சம்பளம் கொடுத்தா நல்லாருக்கும். அதுமாதிரி இந்த வேலையில இருந்து வயசானதால இதைப் பார்க்க முடியாதவங்களுக்கு அரசாங்கம் ஓய்வூதியம் கொடுத்தா அவங்க குடும்பத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும். அரசாங்கம் நிச்சயம் செய்யும்னு நான் நம்புறேன்.

கள்ளம் கபடமில்லாமல், உள்ளதை மறைக்காமல் பேசுகிறார் மயானத்தில் ஒளிரும் இந்த வைரமணி. அவரது வாழ்வு ஒளிபெற வாழ்த்தி விடைபெற்றோம்.

சந்திப்பு, படங்கள்: ஈரநெஞ்சம் மகேந்திரன்

*****


P. மகேந்திரன், (பார்க்க தென்றல், ஜனவரி, 2012) கோவையில் 'ஈரநெஞ்சம்' என்ற சேவை அமைப்பை நடத்தி வருகிறார். ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், மனநோயாளிகள் ஆகியோருக்காக உழைத்து வருகிறார். அவர்களுக்குச் சிகிச்சையளித்துக் காப்பிடங்களில் சேர்ப்பதும், உரியோரைக் கண்டறிந்து அவர்களிடம் சேர்ப்பிப்பதும் இவரது முக்கியப் பணிகள். ஆதரவற்றோருக்கான இறுதிச் சடங்குகளையும் முன்னின்று செய்கிறார். மேலும் இவரது சேவைகள் பற்றி அறிய: eerammagi.blogspot.in
More

டென்னிஸ் வீராங்கனை நிருபமா வைத்யநாதன்
Share: 
© Copyright 2020 Tamilonline