Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
பாசம்
தாய்மை
குய்யா தாத்தா
- அபர்ணா பாஸ்கர்|மார்ச் 2013|
Share:
காரமடை குமரேசன் என்கிற என் குய்யா தாத்தாவை என்னுடன் அமெரிக்கா அழைத்து வரலாம் என்ற எண்ணம் தோன்றியதே என் மனைவி சுந்தரிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. "உங்களுக்கு ஏதாவது புத்தி கெட்டுப் போச்சா? தாத்தாவை இந்த வயசுல இங்க எதுக்குக் கூட்டிட்டு வரணும்?" என்று ஆரம்பித்தாள். அப்பா அம்மாவுக்குப் பிறகு எனக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள என் குய்யா தாத்தா மட்டுமே.

காரமடையில் தனியாக இருந்த தாத்தாவை ஆவது ஆகட்டும் என்று அமெரிக்காவுக்கு என்னுடன் அழைத்து வந்துவிட்டேன். இரவு எட்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்ததும் கிராமத்தான் போலிருந்த தாத்தாவின் தோற்றமே சுந்தரியையும் பிள்ளைகளையும் அந்நியப்படுத்தியது. "ஏங்கண்ணு, வீடெல்லாம் சினிமால வராப்போல பெரிசா இருக்காட்ருக்கு. அம்மிணி, நீ நல்லா இருக்கியா? இந்தா, மொதக் காரியமா இந்த அட்டிகையை எடுத்து வெச்சுக்க. ஒனக்குத்தான்! ஒன்ர வூட்டுக்காரனோட பாட்டி, அதான் என்ற சம்சாரத்தோடது!" என்று பொட்டியிலிருந்து அந்தக் காலத்து அட்டிகையை எடுத்துக் கொடுத்தார். பெரிய உற்சாகமில்லாமல் சுந்தரி அதை வாங்கிக் கொண்டாள்.

"தாத்தா, சாப்பிட்டுப் படுங்க. சுந்தரி, தாத்தாவுக்கு தட்டு வை" என்றேன். "இல்ல கண்ணு. சாயந்திரம் ஆறுக்கு அப்புறம் எதுவும் எறங்காது இந்த கட்டைக்கு. நேரமாச்சு. நீ போய் படுத்துக்கம்மா. நான் பேரப் புள்ளைகள பாத்துட்டு தூங்கிக்கிறேன்" என்றார்.

அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என் பிள்ளைகளை நோக்கி ஓடி வந்தார். குமாரும், சின்னவன் ஈசனும் ஓட்டமாய் ஓடி அறைக் கதவைச் சாத்திக் கொண்டனர். "கண்ணு, நான் புதுசில்ல, பளகினா சரியாயிடும். நீ போய்ப் படு ராசா" என்றார்.

பாட்டனுக்கும் பேரனுக்குமான உறவே அலாதியானது. மகனிடம் பாசத்தைக் காண்பிக்க முடியாத அப்பாக்கள் பேரன்களிடம் பாசத்தைக் கொட்டிவிடுகிறார்கள். மகன் செய்த தவறுகளையே பேரன் செய்தாலும் அதைப் புறக்கணிக்கும் பாசமும், பெரிதுபடுத்தாத பக்குவமும் வயது தந்துவிடுகிறது. கணக்கு வாத்தியாரான என் அப்பாவுக்கு நான் மிகவும் சுமாராய் படிப்பது ஜீரணிக்க முடியாத ஒன்றாய் இருந்தது. அப்பாவுடைய கோவத்திலிருந்து என்னை காப்பாற்றி, வார்த்தைக் காயங்களுக்கு பாசமருந்து போட்டுக் கொண்டே இருந்தார் குய்யா தாத்தா. காலணாவுக்கு லாயக்கில்லாத பய என்று அப்பா திட்ட ஆரம்பித்தால் தெருவே வேடிக்கை பார்க்கும். "என்ரா பெரிசா சொல்லிப் போட்டானென்னு ரோசன பண்ணாத கண்ணு! நீ ரொம்பப் பெரிசா வருவ பாரு! எம்பேரனுக்கென்னடா, ராசா அவன்" என்று மார்தட்டிக் கொள்வார்.

எனக்குப் படம் வரைவதில் நாட்டமுண்டு என்பதை முதலில் கண்டுகொண்டவர் அவரே. "என்ர பேரன் முருகன வரஞ்சது மருதமல முருகனே நேர்ல வந்தாப்பல இருக்கு பார்யா" என்று சகதோழரிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்வார். "படிக்கறத விட்டுபுட்டு வெட்டி வேலைக்கு ஆளெடுத்த கணக்கா இப்படி கிறுக்கி எந்தக் காலண்டர்ல போடப்போற! நாய்க்குக்கூட வீட்டக் காக்கற பொறுப்பிருக்கு, நமக்கு?" என்று ஆரம்பித்துத் தொடரும் அப்பாவின் நாராசச் சொற்கள் காதில் விழாமல் கம்பி நீட்டிவிட தாத்தா சமிஞ்சை காட்டுவார். என் ஆர்கிடெக்ட் கனவு தாத்தாவின் ஒரே நிலத்தை வித்துதான் நினைவானது. பழசையெல்லாம் உள்மனசு அசைபோட்டுக் கொண்டே இருக்க சூரியன் வெளியே வரட்டுமா வேண்டாமா என்று எட்டிப் பார்ப்பது சன்னலின் ஊடே தெரிந்தது. மெதுவாக எழுந்து சன்னல் வழியே பின்னாடி பார்த்தேன். தாத்தா அதற்குள் குளித்து,வேட்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு யோகாசனம் செய்து கொண்டிருந்தார். விடியற்காலைத் தூக்கம் கண்ணைச் சொக்க மீண்டும் தூங்கச் சென்றேன்.

குய்யா தாத்தா வந்த ஒரு வாரத்தில் வீட்டில் அவ்வளவு மாற்றம். சுந்தரி எழுந்திருப்பதற்குள் சமையலறையைத் துடைத்து, காய்கறியை நறுக்கி, செடிகளுக்கு தண்ணிவிட்டு என்று பாய்ந்து பாய்ந்து அம்மிணிக்கு உதவி செய்து கொண்டிருந்தார். பிள்ளகளும் குய்யா தாத்தா, குய்யா தாத்தா என்று ஒட்டிக் கொண்டுவிட்டனர். கைக்குட்டையில் எலி செய்து ஓட விடுவதும், நாணயத்தை மறையவிடும் மாய மந்திரமும், சீட்டுக் கட்டு வித்தையும், அக்கம் பக்கத்து அமெரிக்க குழந்தைகளிடமும் அவரை பிரபலப் படுத்தின.

நீச்சல் குளத்தில் கோவணத்துடன் இறங்கி குழந்தைகளைவிட வேகமாய் நீச்சலடித்தார். லாகவமாய் டைவ் செய்து காண்பித்தார். இரண்டு வருடமாக நீச்சல் பள்ளியில் கல்லாத நீச்சலை ஈசனுக்கு எளிதாகக் கற்றுக்கொடுத்தார். வேட்டி, ஹவாய் செருப்புடன் நெடுக நடந்துவிடுவார். பாஷை தெரியாமலே பலருடைய நட்பைச் சம்பாதித்துக் கொண்டார். "என்னங்க, தாத்தா அன்பா ஒத்தாசையா இருக்கறதெல்லாம் சரிதான், கோவணத்தோட நீச்சல் அடிக்கறதும், வேட்டி துண்டோட வாக் போறதும் நல்லாவா இருக்கு? நீங்கதான் அவரை கூட்டிட்டுப் போய் வேணுங்கற துணிமணிய வாங்கிக் கொடுங்க" என்று சுந்தரி சொன்னதன் பேரில் அவரை வால் மார்ட் அழைத்துச் சென்றேன். "கண்ணு, இந்த வயசுல கொளாப் பேண்ட்டு போடணும்னு இருக்காட்ருக்கு, அதையும் ஒரு கை பார்க்க வேண்டியதுதான்" என்று உற்சாகமாய் ஷார்ட்ஸ், கால்சட்டை, ஷூஸ் எல்லாம் வாங்கிக் கொண்டார். அதன்பின் வெள்ளையும் சொள்ளையுமாய் அரைக்குழாயும் (அதாங்க ஷார்ட்ஸ்), பூட்ஸுமாய் டிப்டாப்பாக வலம் வந்தார்.
புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை வணங்கிவிட்டு, கோயிலுக்குக் கிளம்பினோம். சுந்தரி அதிசயமாய் புடவை கட்டிக்கொண்டு கிளம்பினாள். "அம்மிணி, நல்ல நாளும் அதுவுமா இருக்கு. அந்த அட்டிகையப் போட்டுக்க. அம்சமா இருக்கும்" என்றார். அந்த பழங்கால அட்டிகையை விருப்பமில்லாமல் போட்டுக்கொண்டு வந்தாள் சுந்தரி. "நாஞ்சொல்லல கண்ணு, கோனியம்மனுக்கு அலங்காரம் பண்ணதாட்ருக்கு" என்று மெச்சினார். நிஜமாகவே கெம்பும், பச்சையும் கலந்து பதக்கத்துடன் ஜொலித்த அட்டிகை சுந்தரிக்கு மேலும் அழகு சேர்த்தது.

கோவிலில் எல்லோரும் மாத்தி மாத்தி அட்டிகையைப் பற்றி விசாரிக்கவும் சுந்தரிக்கு ஆனந்தமாய் இருந்தது. நேற்றைய பழமைதான் நாளையப் புதுமை என்பது சரியாக இருந்தது. வரும் வழியில் ஐஸ்க்ரீம் கடையில் நிறுத்தி, ஆசைதீர ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம். சிறு வயதில் நானும் தாத்தாவும் பதுங்கிப் பதுங்கி அந்தப் பால் ஐஸை சாப்பிட்டதையும் இருவருமாய் அப்பாவிடம் கன்னாபின்னாவென்று திட்டு வாங்கிக் கொண்டதையும் சுந்தரிக்கும் பிள்ளைகளுக்கும் சிரிக்கச் சிரிக்க சொல்லிக் கொண்டோம்.

நினைவுகள் மேகம் போன்றவை. தாகமெடுக்கும் போது நமக்காகவே மழையைப் பொழியும். வாழ்க்கை வறண்டு போகாமல் பாதுகாக்கும் பழைய நினைவுகளால் வரும் கண்ணீர்கூடத் தனி சுகம்தான்.

மறுநாள் ஏழு மணிக்கு நான் எழுந்து வந்தபோது தாத்தா இன்னும் படுத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. "தாத்தா, உடம்பெல்லாம் சொகமாத்தானே இருக்கு?" என்றபடி நெத்தியைத் தொட்டுப் பார்த்தேன். சூடாகத்தான் இருந்தது. லொக்லொக் என்று இருமிய வண்ணம் இருந்தார். சுந்தரி இருமலுக்கு மருந்து கொடுத்துவிட்டு குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றாள். மதியம் வந்து மிளகு, பூண்டு போட்டு ரசம் வைத்துக் கொடுத்தாள். ஆபீஸிலிருந்து வந்தபோது தாத்தா இன்னும் படுத்தபடி இருந்தார். குழந்தைகள் தாத்தா எப்போ எழுந்து விளையாடுவார் என்று அவரைச் சுற்றி வளைய வந்தனர். நான்கு நாட்கள் சுந்தரியின் எந்த கை வைத்தியமும் பலிக்கவில்லை.

தாத்தா மிகவும் சோர்ந்து போயிருந்தார். "எனக்கொண்ணுமில்ல, நெஞ்சுல கபம் கட்டிருக்காட்ருக்கு. தானா சரியாயிடும், டாக்டரெல்லாம் எதுக்குக் கண்ணு?" என்றார். இன்னும் ரெண்டு நாள் பார்ப்போம் என்று இருந்துவிட்டேன். மூச்சு விடவே சிரமப்பட்டுப் போனவுடன் டாக்டரிடம் அழைத்துப் போனேன். லங் இன்ஃபெக்ஷன் என்றார்கள். எக்ஸ்ரே எடுத்தார்கள், உமிழ் நீரெடுத்து லேப் டெஸ்டுக்கு அனுப்பினார்கள். டெஸ்ட் ரிசல்ட் வந்தவுடன் தாத்தாவுக்கு நிமோனியா என்றார்கள். ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வீட்டுக்கு வந்தோம். இருவர் முகத்திலும் ஈயாடவில்லை.

குமாரும் ஈசனும் "தாத்தா எங்கம்மா? எப்ப வருவார்? எங்க விட்டுட்டு வந்தீங்க" என்று கேள்வியால் துளைத்தனர். "போய்ப் படுங்க. தாத்தா உடம்பு சரியானதும் வருவார்" என்று சுந்தரி சத்தம் போட்டவுடன் அழுகையுடன் உள்ளே போய்ப் படுத்தனர். வீட்டில் ஒரே அமைதி. நெஞ்செல்லாம் ஒரே புழுக்கமாய் இருந்தது. இரண்டு நாளாய் தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் தாத்தா எப்படி இருக்கிறார் என்று நர்ஸிடம் ஃபோனிலேயே கேட்டுக் கொண்டோம். அமெரிக்காவில் இன்சூரன்ஸ் உள்ளவர்கள் மருத்துவமனைக்குப் போனாலே பில் கட்டி மாளாது. ஊரிலிருந்து வயதான தாத்தாவை அழைத்து வந்தது வேலியிலிருக்கும் ஓணானை மடியில் கட்டிக் கொண்ட கதையாய் ஆனதே!

"சுந்தரி, நீ சொன்னதக் கேக்காமல் உணர்ச்சி வசப்பட்டு தாத்தாவைக் கூட்டிட்டு வந்தது தப்புன்னு தோணுது. சாரிம்மா." என்றேன். "தாத்தாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பிடலாமா? நீங்களே கூட்டிட்டுப் போய் விட்டுட்டு வந்தாலும் சரிதான். நம்மால ஆஸ்பத்திரி பில்லெல்லாம் கட்டிகிட்டே இருக்க முடியாது. அஞ்சாறு நாள் அங்கே இருந்தா பத்தோ இருபதோ ஆகும் போலிருக்கு. இதுல மனுசன் தவறிட்டா அதவிடப் பெரிய தலவலி" என்றாள். அவள் சொல்வதும் நியாயமாய் பட்டது.

"நாளைக்கே அவரைக் கூட்டிட்டு வந்துடறேன். அடுத்த ஃப்ளைட்டைப் புடிச்சு இந்தியாவில விட்டுட்டு வந்தாதான் நிம்மதி" என்றேன். கை நிறையச் சம்பாதித்தாலும் கஷ்டப்பட்டு சம்பாதித்தது. கிழவரின் கடைசிக் கால மருத்துவ செலவுக்காகவா சம்பாதிக்கிறோம் என்றது மனசு.

மறுநாள் மருத்துவமனைக்கு போனபோது டாக்டர் மேரி ஷா இன்முகத்துடன் வரவேற்றார். "ரொம்ப ஸ்ட்ராங்கான ஓல்ட் மேன் உன் தாத்தா, நல்லா குணமாயிட்டார். ஆன்டிபயாடிக்ஸ் மருந்தை மட்டும் கொடுத்துட்டே இருங்க. இன்னிக்கு சாயந்திரமே கூட்டிட்டுப் போகலாம்" என்றார்.

மனதில் தாத்தா குணமான நிம்மதியை விடக் குற்ற உணர்வே மேலோங்கி நின்றது. மனம் எவ்வளவு பெரிய குரங்கு. பணம்தான் இந்த மனத்தை எப்படி ஆள்கிறது! நாளைய சாப்பாட்டைப் பற்றிக் கவலைப்படாமல், இருந்த ஒரே நிலத்தைப் பேரனின் ஆசைக்காக அடகு வைத்த கல்வியறிவில்லாத தாத்தாவின் பாசமும் நம்பிக்கையும் கூனிக் குறுகச் செய்தது!

ஒரு வாரத்தில் தாத்தா நன்றாகத் தேறிவிட்டார். குழந்தைகள் குதூகலமாய் இருந்தனர். ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது. அக்கம் பக்கத்திலிருந்தெல்லாம் வந்து அவரைப் பார்த்து விசாரித்துவிட்டு விடை கொடுத்துச் சென்றனர். "ஏங்கண்ணு, ஏதாச்சு அவசர செலவிருந்தா இருக்கட்டுமேன்னு எடுத்துட்டு வந்த பணமிருக்கு. வச்சிக்க! இந்தக் கௌவன் ஊருக்கு எடுத்துட்டுப் போய் இதெ என்னச் செய்யப் போறேன்?" என்று கையில் திணித்தார். ஆஸ்பத்திரிச் செலவுக்கு மேலே இருந்தது. "சந்தோசமா இருந்துப் போட்டாச்சு. நீதான் பிள்ளைங்களையும் அம்மிணியையும் கூட்டிட்டு நம்மூருக்கு வரணும்" என்றபடி விடைபெற்றார். வானம் ஏய்யா இந்த மண்ணுல மழையக் கொட்டிக்கிட்டே இருக்கு?

அபர்ணா பாஸ்கர்,
அட்லாண்டா, ஜார்ஜியா
More

பாசம்
தாய்மை
Share: 
© Copyright 2020 Tamilonline