Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
வித்யா சுப்ரமணியம்
- அரவிந்த்|மார்ச் 2013||(1 Comment)
Share:
பெண்களின் பிரச்சனைகளைப் பேசிய பெண் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் வரிசையில், "படைப்பு என்பது கண்ணியத்துடனும், கருத்துடனும் இருப்பதுடன் படிப்பவர்களின் சிந்தனையில் ஒரு சிறு மாறுதலையாவது நிகழ்த்த வேண்டும்" என்ற கொள்கைப் பிடிப்போடு எழுதி வருபவர் வித்யா சுப்ரமணியம். இயற்பெயர் கற்பகவல்லி என்கிற உஷா. சிறுவயதில் படித்த அம்புலிமாமாவும் பதின்பருவங்களில் படித்த தி.ஜா., கல்கி, தேவன் படைப்புகளும் இவரது ஆர்வத்தைத் தூண்டின. விகடனில் வெளிவந்த உமாசந்திரனின் 'முழு நிலா' இவரது மனதில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. தி.ஜா.வின் 'அம்மா வந்தாள்' உள்ளிட்ட புதினங்கள் எழுதும் ஆசையைத் தூண்டின. 1984ல் பெண்கள் மாத இதழான மங்கையர் மலரில் 'முதல் கோணல்' என்னும் சிறுகதை, மகள் மற்றும் கணவரின் பெயரை இணைத்து 'வித்யா சுப்ரமணியம்' என்ற பெயரில் பிரசுரமானது. தொடர்ந்து எழுதினார். முன்னணி இதழ்களில் சிறுகதைகள், நாவல்கள் வெளியாகின. 1992ல் முதல் சிறுகதைத் தொகுப்பு திருமகள் நிலையம் மூலம் வெளிவந்தது. எழுத்தாளர் பாலகுமாரன் இவரது படைப்பாற்றலுக்குத் தூண்டுகோலாகவும் ஆலோசகராகவும் இருந்தார். அவரது ஊக்குவிப்பால் முதல் நாவல் புத்தக வடிவில் வெளியானது.

"எது நம்மை பாதிக்கிறதோ, எது நம்மை மேலும் சிந்திக்கத் தூண்டுகிறதோ அது நல்ல எழுத்து. கல்கியும், சாண்டில்யனும், தேவனும், தி.ஜா.வும், நா.பாவும், உமா சந்திரனும், லஷ்மியும், அனுத்தமாவும், சூடாமணியும், ராஜம் கிருஷ்ணனும் என் மனம் கவர்ந்தவர்கள். சுஜாதாவின் 'எப்போதும் பெண்' எனக்குள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய நாவல். தி. ஜா.வின் கண்டாமணியும், சண்பகப் பூவும், லா.ச.ரா.வின் கிண்ணங்களும், புதுமைப்பித்தனின் ஆற்றங்கரைப் பிள்ளையாரும், விநாயகச் சதுர்த்தியும், பாலகுமாரனின் டம்ப்ளரும், சுஜாதாவின் சிறுகதைகளும் என்னைப் பலநாள் தூங்க விடாமல் யோசிக்க வைத்திருக்கின்றன" என்கிறார், இவர். மத்திய தர வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், அதிலிருந்து மீளும் வழி வகைகளையும் கொண்டதாக இவரது படைப்புகள் விளங்குகின்றன. உரத்த குரலில் அவை நீதி போதிப்பதில்லை. அதே சமயம் பிரச்சனைகளை எந்தக் கோணத்திலிருந்து அணுகினால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன. யதார்த்தமும், அலங்காரங்கள் அதிகமில்லாமல் எளிமையுடன் கூறும் சொற்பாங்கும் இவரது தனித்தன்மை. பெண்களின் உலகத்தைப் பல கோணங்களில் இருந்து பார்க்கும் தரிசனத்தை இவரது படைப்புகள் தருகின்றன.

உறவுகளின் மென்மையை அதிர்ச்சித் தொனி இல்லாமல் உணர்த்துவது வித்யா சுப்ரமணியம் எழுத்தின் பலம். இவரது 'உப்புக்கணக்கு' புதினம் உப்பு சத்தியாக்கிரகத்தை மையமாகக் கொண்டது. ராஜாஜி உள்ளிட்ட நிஜ மாந்தருடன் கற்பனை மாந்தர்களும் இடம்பெற்ற நூல் அது. 'ஆசை முகம் மறந்தாயோ', 'ஆகாசத் தூது', 'பரசுராமன்', 'கோபுர கலசங்கள்', 'வனத்தில் ஒரு மான்' போன்றவை சிறந்த படைப்புகளாகும். 'ஆனந்த அலைகள்', 'அன்றொருநாள்', 'அவள் முகம் காண', 'சின்னஞ்சிறு கிளியே', 'காவிரிக்கரையில் ஒரு காதல்', 'நீ சிரித்தால் நான் சிரிப்பேன்', 'உயிரின் உயிரே', 'ராமர் பாதம்', 'மாதவிப் பொன்மயில்' எனப் பல குறிப்பிடத் தகுந்த படைப்புகளைத் தந்திருக்கிறார். புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், ஆன்மீகக் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதி வருகிறார். தன் எழுத்து பற்றி, "வாழ்வின் நிஜத்தை ஓட்டி கதை எழுதுவதையே நான் விரும்புகிறேன். தனக்கும் ஒரு ராஜகுமாரன் கிடைப்பான் என்று இளம் பெண்களை கற்பனை சுகத்தில் மிதக்க வைக்க என்னால் நிச்சயம் முடியாது. அன்பெனும் வேர், பலமாக ஊன்றி இருந்தால்தான் தன்னம்பிக்கை இலை நுனி வரை ஊடுருவிச் செல்லும் என்பதுதான் எனது எழுத்துக்களின் ஆதார நாதமாய் இருக்கும். அன்பெனும் அச்சாணியில்தான் இவ்வுலகம் சுழல்வதாக நான் நம்புகிறேன். அன்பின்றிச் செய்யப்படும் அனைத்துமே போலியானவை என நினைப்பவள் நான்" என்கிறார்.
'வனத்தில் ஒரு மான்' என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பு தமிழக அரசின் பரிசு பெற்றதாகும். 'ஆகாயம் அருகில் வரும்' என்ற புதினத்திற்கு ஸ்டேட் பேங்க் விருது கிடைத்துள்ளது. 'தென்னங்காற்று' அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது பெற்றுள்ளது. தன்னைப் பாதித்த தி.ஜா.ராவின் நடையில் இதை எழுதியிருக்கிறார். 'கண்ணிலே அன்பிருந்தால்' கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவுப் பரிசு பெற்ற படைப்பு. இரண்டு சிறுகதைகள் இலக்கியச் சிந்தனை விருது பெற்றுள்ளன. இவரது பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 'Beyond the frontier' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளன. 'கான்க்ரீட் மனசுகள்' குறிப்பிடத் தகுந்த தொகுப்பாகும். பயணம் மிகவும் பிடித்தமானது. கைலாயம், பொதிகை மலை, முக்திநாத், சதுரகிரி, பர்வத மலை போன்ற பல புனித இடங்களுக்குப் பயணம் செய்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'பார்த்த விழி பார்த்தபடி' என்ற தலைப்பில் தனது கைலாச யாத்திரை அனுபவங்களை நூலாக்கியிருக்கிறார். இவருடைய 'தீர்க்கசுமங்கலி', 'தவம்' என்ற புதினங்கள் தொலைக்காட்சித் தொடர்களாகியுள்ளன. பலர் இவரது படைப்புகளை ஆராய்ந்து எம்.ஃபில்., முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர். இதுவரை பத்து தொடர்கதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். 87 நூல்கள் வெளியாகியுள்ளன. இவற்றுள் 7 சிறுகதைத் தொகுப்புகள்.

"தான் கண்ட காட்சிகளை, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் எழுத்து. எழுத்தாளர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடுகளை நான் விரும்பவில்லை. எல்லா ஆண்களுக்குள்ளும் பெண்மை இருக்கிறது. அதுபோல எல்லாப் பெண்களுக்குக்குள்ளும் ஆண்மை இருக்கிறது. சுஜாதா, பாலகுமாரன் போன்றோர் பெண்களின் உளவியலை, பிரச்சனைகளை மிக அழகாகப் பதிவு செய்துள்ளனர், அதுபோல நானும் ஆண்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து எழுதியிருக்கிறேன். எழுத்தாளர் என்று அறியப்படுவதையே நான் விரும்புகிறேன்" என்கிறார்.

புற்றுநோயையும், அது பரவுவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் சிகரெட் பழக்கத்தையும் மிகத் தீவிரமாக எதிர்ப்பவர் வித்யா சுப்ரமணியம். மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த அதுபற்றி நிறைய எழுதி வருகிறார். 'கண்ணாமூச்சி' என்ற சுயகதை மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. "உங்கள் உதட்டில் உட்காரும் அந்தச் சிறு நெருப்பு ஒருநாள் உங்களையே சுட்டெரிக்கும் என்பதை நினைவில் கொண்டு அதை ஒதுக்கித் தள்ளுங்கள்" என்பதைத் தனது கதை, கட்டுரைகளில் வலியுறுத்தி வருகிறார். ஓவியம் வரைதல், புகைப்படம் எடுத்தலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 'பெண்மணி', 'கண்மணி' போன்ற இதழ்களில் நாவல்கள் எழுதி வரும் இவர் சென்னையில் வசிக்கிறார்.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline