Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பயணம்
கொல்லிமலை (பாகம்-2)
- வற்றாயிருப்பு சுந்தர், பசுபதி|அக்டோபர் 2012|
Share:
காற்றுகூட அடிக்கவில்லை. ஆனால் அந்த நூல் அசைந்தது நிஜம். ஆச்சரியம் தாங்காமல் சற்று குனிந்து கண், காது, மூக்கு ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தேன். தலை எது, வால் எது என்றே தெரியவில்லை. பசுவையும் ஸ்ரீநிவாசனையும் கூவியழைக்க, ஸ்ரீநிவாசன் சிறிய சுள்ளியால் அதை லாவி எடுத்து உயர்த்திப் பிடித்தான். அது அதிகமாக நெளியவே திரும்பக் கீழே விட்டுவிட்டார். "செவிட்டுப் பாம்பா இருக்கும்! காதுவழியா மூளைக்குள்ள போச்சுன்னா ஆள் காலி!" என்றதும் நான் பெரிதாக அடுத்த அடியை வைத்து அதைக் கடந்தேன். (அந்த நூல் உயிரினம் என்னவென்று தெரிந்துகொள்ளாவிட்டால் மண்டை வெடித்துவிடும்போல இருந்தது. கூகுளாண்டவரைச் சரணடைந்தில் அது Horsehair Worm என்றழைக்கப்படும் குதிரைமுடி போலச் சன்னமான, நீளமான ஒரு வகைப் புழு என்று தெரிந்தது. பாம்பெல்லாம் இல்லை! அப்பாடி. என் காது தப்பித்தது. ஆன்லைனில் www.tamilonline.com பசுபதி எடுத்த வீடியோவில் அதைப் பார்க்கலாம்).

இதுவரை பார்த்திராத வண்டுகள், பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், சிறு பறவைகள் என்று வனவுலகத்தின் அந்த வாசனை ரம்யமாக இருந்தது. எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் பறவைகளின் கரைச்சல் கூடுதல் புத்துணர்ச்சி. பொதுவாகவே மனிதன் புழங்காத பகுதிகள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் ஆங்காங்கே பிளாஸ்டிக் குப்பைகள். பசு "இதையெல்லாம் சாப்ட்டுட்டு நெறய பிராணிங்க செத்துப் போய்டுதுங்க" என்று வருத்தப்பட்டுவிட்டு கவுண்டமணி செந்திலைத் திட்டுவது மாதிரி குப்பை போட்டவர்களைக் காற்றில் பார்த்துத் திட்டினான். யாராவது அவன் கண்முன்னால் போட்டிருந்தால் பிடித்துக் குழிக்குள் தள்ளிவிட்டாலும் விட்டிருப்பான்.

பொதுவாகவே வளைந்து வளைந்து செல்வதாலும் மரங்களின் அடர்த்தியாலும் பாதை பத்திருபது அடி தூரம்தான் தெரிந்தது. திடீரென்று பாதை கவட்டை மாதிரி இரண்டாகப் பிரிய, பசுபதியும் ஸ்ரீநிவாசனும் அந்தப் பாதையில் முதல்தடவை வருவதால் அவர்களுக்கும் எந்தப்பக்கம் போவதென்று தெரியவில்லை. பாதை பிரியும் முனையில் குத்துக்காலிட்டு தூக்குச்சட்டி, மஞ்சள் பை சகிதமாக ஒருவர் உட்கார்ந்திருந்தார். டார்ட்டாய்ஸ் கொசுவர்த்திச் சுருள் மாதிரி மெலிதான புகையை பீடியிலிருந்து வெளியே செலுத்திக்கொண்டிருந்தார்.

"அண்ணே. இந்தப் பாதை எங்க போவுது?"

அவர் எழுந்து நின்றுகொண்டு கைகளை வீசி "இங்கிட்டுப் போனீங்கன்னா ஒத்தக்கடை. அங்கிட்டு களூர்!".

"ஒத்தக்கடையா? அது மதுரைப் பக்கமாச்சே!" என்று முணுமுணுத்த என்னைப் பசு முறைத்தான். அந்த நபருக்கு நன்றிசொல்லி பசு கொடுத்த ரூபாயை வாங்க மறுத்தவரை மிகவும் வற்புறுத்திக் கொடுக்க ஏகமாகத் தயங்கி வாங்கிக்கொண்டார். இடப்புறப் பாதையில் சென்று உச்சியை அடைந்ததும் வலப்புறப் பாதை வழியாக இறங்குவது என்று முடிவாயிற்று. நாங்கள் பயணத்தைத் தொடர, மஞ்சள் பை நபரும் எங்களைத் தொடர்ந்தார். "நானும் அங்கிட்டுத்தேன் வாரேன்". ஆங்காங்கே ஒரிரு அடி உயரத்திற்கு கூழாங்கற்கள் பிரமிடுகள் அமைப்பில் குவித்து வைத்திருந்ததைச் சுட்டிக்காட்டிக் கேட்டதற்கு "மலையேர்றவங்க ஒரு அடையாளத்துக்கு வச்சிட்டுப் போறது" என்றார்.

வறண்ட நாக்கை லேசாக நீரில் நனைத்து நனைத்து மலையேறினேன். தண்ணீர் நிறைய குடித்தால் நடக்க முடியாது. ஏற்கெனவே முதுகுப்பை வேறு மலையையே முதுகில் சுமப்பதைப் போல கனத்தது. காலையில் கிளம்பு முன் "மூணு லிட்டர் தண்ணி போதுமா? பை ரொம்ப லைட்டா இருக்கே?" என்று கேட்டதற்கு ஸ்ரீநிவாசன் "மேல ஏற ஏற போட்ருக்கற டவுசரோட வெயிட்டே தாங்கமுடியாதுங்க. எல்லாத்தையும் களட்டியெறிஞ்சுரலாம் போல கனக்கும்" என்றதை ரொம்ப அதீதப் படுத்திச் சொல்கிறார் என்று நினைத்தது மடத்தனம் என்பது புரிந்தது. "லேசா முன்னால சாஞ்சு ஏறுங்க. தள்ளாம இருக்கும்" என்றார். அவர்களிருவரும் ஏதோ வாக்கிங் போவது போல மூச்சிரைக்காமல் ஏறிக்கொண்டிருந்தார்கள். எனக்குத்தான் அது என்னவோ சொல்வார்களே - ஆங் - பகீரதப் பிரயத்தனமாக இருந்தது.

பக்கத்துப் புதரிலிருந்து "ம்மேஏஏஏ" என்ற ஒலி கேட்டது. ஒரு வேளை எந்திரன் சிட்டியோ என்று நினைத்தேன். சொல்லமுடியாது. இந்தியாவில் நிகழும் செல்பேசி புரட்சியில் யாராவது நபர் எந்திரன் சிட்டியின் வில்லத்தன ம்மேஏஏஏயை காலர் டோனாக வைத்துக்கொண்டு கொல்லிமலைப் புதரில் ஒதுங்கியிருக்கிறார் என்று சொன்னால் நம்பியிருப்பேன். என்ன! இங்குமா என்று ஆயாசமாக இருந்திருக்கும். நல்லவேளை. புதரிலிருந்து வெளியே வந்து ஒரு வெள்ளாடு. தொடர்ந்து இன்னும் ஏழெட்டு ஆடுகள் வரிசையாகக் கடந்தன. மலையில் வாழும் ஆடுகள். கால்தடுக்காமல் லாகவமாகச் சரிவில் இறங்கின. பசு அந்த மலைகிராமவாசியிடம் பேச்சுக் கொடுத்தபடி வந்தான். சுற்று வட்டார மலைகள், கிராமங்கள் என்று அவர் சொன்ன பெயர்கள் எதுவும் நான் கேள்விப்படாதவை. எம்ஜியார் நகர், கலைஞர் நகர் போன்றில்லாது நல்ல தமிழ்ப்பெயர்கள் கொண்ட கிராமங்கள். வட்டார வழக்கில் அவர் சொன்ன மருவிய ஊர்களின் பெயர்களின் உச்சரிப்பே புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தது.

உதாரணத்திற்கு: மேலமாத்தி, தாமரைக்குளம், வளப்பூர் நாடு, செல்லிப்பட்டி, நரியங்காடு, பூசணிக்குழி, மேட்டு விளாரம், வாசலூர்பட்டி, செம்மேடு.

கொல்லிமலைப் பெயர்க்காரணத்தைக் கேட்டதும் பசு சொன்னான். "இந்த மலைக்கு வந்த மக்களை டிஸ்டர்ப் பண்ற பூதங்களை விரட்றதுக்காக கொல்லிப்பாவை கிட்ட வேண்டினாங்களாம். பூதத்தைப் பாத்து கொல்லிப்பாவை நக்கலா சிரிச்சு வம்பிழுக்கும். பூதம் கடுப்பாகி அட்டாக் பண்ணும் போது கொன்னுடும். அதையொட்டி வந்தது கொல்லிமலைங்கற பேரு." பேச்சு வல்வில் ஓரியைப் பற்றித் திரும்பியது. தமிழரின் வீரம் என்று வந்துவிட்டால் இக்காலத் தலைமுறையினருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுதான் நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன். சற்று அழுத்திக் கேட்டால் புலியை முறத்தால் அடித்து விரட்டிய மறத் தமிழச்சியைக் குறிப்பிடுவார்கள். வல்வில் ஓரி என்றால் மதுரை ஜிகர்த்தண்டா மாதிரி ஒரு வஸ்து என்று சொன்னாலும் சொல்லலாம்.

ஓரி கொல்லிமலையையும் அதைச் சார்ந்த பகுதிகளையும் ஆண்டவன். கடையெழு வள்ளல்களின் ஒருவன். மிகச்சிறந்த வில்லாளி. ஒரு நாள் வேட்டையாடுவதற்காகச் சென்றவன் தொடுத்த அம்பு யானை ஒன்றைத் துளைத்து, புலியை ஊடுருவி, மான், பன்றி, உடும்பு ஆகியவற்றைத் துளைத்துச் சென்று மரத்தில் குத்தி நின்றதாம். "அப்பேர்ப்பட்ட தில்லாலங்கடிப்பா அவன்" என்றான் பசு. அக்காட்சியைக் கண்டு ஆச்சரியப்பட்ட வன்பரணர் ஓரியைப் பற்றி புகழ்ந்து பாடியிருக்கிறார். சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, போன்ற பழந்தமிழ்நூல்களில் கொல்லிமலைப் பற்றி குறிப்புகள் உண்டு. வன்பரணர் வல்வில் ஓரியைப் பற்றி புறநானூற்றில் ஆதன் ஓரி என்று குறிப்பிட்டிருக்கிறார். ஓரியுடைய தந்தையாக ஆதன் இருக்கவேண்டும் என்பது ஊகம்.

கழைதின் யானையார் என்ற புலவரும் ஓரியைப் பற்றிப் புறநானூற்றில் பாடியிருக்கிறார். பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னன் கொல்லிமலையைக் கைப்பற்ற கடையெழு வள்ளல்களில் இன்னொருவனாகிய காரியை (திருக்கோவிலூரை ஆண்டவன்) ஏவி, காரிக்கும் ஓரிக்கும் நடந்த போரில் மார்பில் அம்புபட்டு மடிந்தான் வீரன் ஓரி. காரி கொல்லிமலையைப் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அளித்தான். பாரி வள்ளல் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஓரியும் ஈகைக் குணம் நிரம்பியவன். ஓரியைப் பற்றி நற்றிணையில் பரணர் குறிப்பிட்டிருக்கிறார். பாரி, ஓரி இருவரையுமே மற்ற அரசர்களுக்குப் பிடிக்கவில்லை போல. பொறாமை. கூட்டம் சேர்ந்து சதித்திட்டம் போட்டு ஜெயித்தார்கள். அது சரி. ஏன் கடையெழு வள்ளல்களில் அல்மோஸ்ட் எல்லாரும் மலையமான்களாகவே இருக்கிறார்கள்? மலைக்கும் ஈகைக் குணத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று தெரியவில்லை. தரைக்கு வந்துவிட்டாலே தலைகால் தெரியாமல் ஆடுகிறோம் போல. அறிஞர்கள் யாராவது விளக்கினால் மதி!

"கீழ பாத்தமே பழனியப்பர் கோவில். அருணகிரிநாதர் திருப்புகழ்ல அந்தக் கோவிலைப் பத்திச் சொல்லிருக்காரு! முருகனும் வள்ளியும் இந்த மலைக்கு தேனிலவுக்காக வந்திருக்காங்க. நம்ம போறமே - இதே பாதைலதான் ஏறியிருக்காங்க. கொல்லிப்பாவைக்கும் கோவில் இருக்கு. மேல இருக்கிற அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு பிற்காலச் சோழர் ராஜராஜனுடைய சித்தி செம்பியன் மாதேவி வந்திருக்கிறார். கோவிலுக்கு நிதி ஒதுக்கியிருக்கிறார்". எப்படித் தொலைந்தன இந்தப் பெருமைகளெல்லாம்? ஏன் மாமனிதர்கள் இந்த மண்ணில் மறுபடியும் உதி்க்கவில்லை? எதற்காக நம்நாடு இன்றும் இப்படி இருக்கிறது? கேள்விகள் மனதைக் குடைந்தன.

எங்கு பார்த்தாலும் பசுமை. அடுக்கடுக்காக மலைத்தொடர்கள். நடுநடுவே நின்று ஓய்வெடுத்த தருணங்களில் நட்சத்திரங்களை மனக்கோடால் இணைத்து உருவம் கொடுப்பது போல, அந்த மலைத்தொடரின் மலைகள், முகடுகள், குன்றுகள் சிலவற்றுக்கு வடிவம் கொடுத்துப் பார்த்தோம். அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் வடிவம்கூட தனியாக, செங்குத்தாக நின்ற மலையொன்றில் தெரிந்தது. உயரே ஏற ஏற கீழே பரந்து விரிந்திருந்த சமவெளிப்பகுதியின் காட்சி பரவசமேற்படுத்தியது. சுண்ணாம்படித்த மைல்கல் அளவிற்குப் பொடிதாக பழனியப்பர் கோவில்கூடத் தெரிந்தது.

"செண்ட் எதுவும் அடிச்சியா?" என்று திடீரெனக் கேட்டான் பசு. "ஆமாம். ரொம்ப லைட்டாதான்" என்றேன். "ஸெண்ட் அடிக்கக்கூடாது. பரவாயில்லை. வேர்த்து ஊத்திருக்கறதால ஸெண்ட் வாடை குறைஞ்சிருக்கும். ஆனா நெக்ஸ்ட் டைம் அடிச்சட்டு வராதே" என்றான். புழுக்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என்று நிறைந்திருக்கும் அந்த வனப்பகுதியில் எங்களைத் தவிர மனிதவாடை யெதுவுமற்றிருந்தது. "ஆனா நம்மை ஓராயிரம் கண்கள் பாத்துக்கிட்டே இருக்கும்" என்று அவன் சொன்னதைக் கேட்டதும் அந்த நினைப்பே சிலிர்ப்பேற்படுத்தியது. "நாம ஒழுங்கா இருக்கற வரைக்கும் பிரச்சினையில்லைப்பா. டவுன்ல இருந்து இங்கு பிக்னிக் வர்றேன் பேர்வழின்னு வந்து அநியாயம் பண்றாங்க. அவங்களால மனுசங்க மேலயே மிருகங்களுக்கு வெறுப்பு வந்துடுது" என்று சொல்லிவிட்டு மண்ணில் புதைந்திருந்த உடைந்த பியர் பாட்டில் சில்லைக் காலால் நெம்பியெடுத்து தூக்கி வீசினான். "பிளாஸ்டிக்கைப் போடறாங்க. தண்ணியடிச்சுட்டு பாட்டிலை உடைச்சு வீசறாங்க. மிருகங்க கால்ல கண்ணாடி ஏறி கொஞ்சநாள் அவஸ்தைப்பட்டு புரையோடி செத்துப் போகுதுங்க" என்றான். "ஆனா நல்ல எண்ணத்தோட வர்றவங்களை உணர்ந்துக்கற சக்தி அதுங்களுக்கு இருக்கு. நம்மை ஒண்ணும் பண்ணாதுன்னு நினைக்கிறேன். ஸ்ரீநிவாசன், இங்க கரடி இருக்குல்ல?"

"என்னது கரடியா?"

"கருங்கரடின்னா பிரச்சினை. மரத்துலகூட ஏறித் தப்பிக்க முடியாது" என்று கிலியேற்படுத்தினான். தேன்கூடுகள் நிறைந்த மலைகள். "அது கெடக்கு. ஆறேழு வகைக் கரடிங்க. கொல்லி மலைலயும், மேற்கு தொடர்ச்சி மலைலயும் இருக்கறது அசையாக் கரடி (sloth bear). இமய மலைல கருங்கரடியும் இருக்கு. மோப்ப சக்தி ஜாஸ்தி. கொஞ்சம் முரட்டு மிருகம். மலையேர்றவங்களுக்கு ஆபத்துன்னு பாத்தா பாம்புதான் டாப். அப்றம் யானை, காட்டெருமை, காட்டுத்தேனீ, கடைசியாதான் கரடி.

"அடப்பாவி. கரடில ஆரம்பிச்சு காட்டெருமைக்கு வந்து யானைல நிக்கறியே! அது சரி. இதையெல்லாம் எங்கிட்ட ஏம்ப்பா சொல்றே?"

"சும்மா ஒரு ஜி.கே.க்குத்தான். மலையேர்றேல்ல. இதையெல்லாம் தெரிஞ்சுக்கோணும். பச்ச கலர் ட்ரெஸ் போட்டுக்கிட்டு வரச்சொன்னேன்ல. இதுக்குத்தான். பச்சக் கலர் போட்டுக்கிட்டு வந்தா அதிகபட்சமா பறவைங்களைத்தான் பயமுறுத்துவோம். இந்த மாதிரி மிருகங்கள் ‘நம்மாளு போலருக்கு’ன்னு கண்டுக்காது. கருப்பு அவ்வளவு உசிதம் இல்லை. இப்படித்தான் நைன்ட்டிநைன்ல ஆந்திரா நாகலாபுரம் மலைல மூணு பசங்க கருப்பு டிஷர்ட் போட்டுக்கிட்டு ஏறினானுங்க. காட்டெருமை மேல மொய்க்கற ஈக்கள் அவனுங்களைக் காட்டெருமைன்னு நெனச்சு மொய்ச்சு.....காட்டெருமைத் தோல் எங்கே. நம்ம தோல் எங்கே.... ம்ஹூம்.. அதை ஏன் கேக்கற!" என்றான். லேசாக வயிற்றைக் கலக்கியது.

(தொடரும்)

வற்றாயிருப்பு சுந்தர், பாஸ்டன்
காணொளி: பசுபதி
மேலும் படங்களுக்கு
Share: 




© Copyright 2020 Tamilonline