Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-16)
- கதிரவன் எழில்மன்னன்|அக்டோபர் 2012|
Share:
இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். மூவரும் அக்வாமரீன் என்னும் நிறுவனத்துக்குச் செல்கின்றனர். அங்கு வேலை செய்யும் யாவ்னா என்ற இளம்பெண் மற்றும் நிறுவனரான தாமஸ் மார்ஷ் இருவரையும் சந்தித்தனர். தாமஸின் குடும்பத்தைப் பற்றி சூர்யா சரியாக யூகித்துத் தாமஸுக்குத் தன்மேல் பெரும் நம்பிக்கை பிறக்கச் செய்தார். யாவ்னாவும் தாமஸும், நீருப்பகற்றல் துறையின் சில நவீன நுட்பங்களைப் பற்றியும் அக்வாமரீனின் சில தனிப்பட்ட சொந்த நுட்பங்களைப் பற்றியும் விவரித்தனர். அக்வாமரீனின் சொந்த நுட்பங்கள் சேர்க்கப்பட்ட உப்பகற்றல் தளம் பழைய தளங்களைவிடப் பலமடங்கு அதிக தூய நீரை, மிகக் குறைந்த செலவில், மிகச் சிறிய சாதனத்தைக் கொண்டு உற்பத்தி செய்து உலகின் தூயநீர்த் தேவையைப் பூர்த்திக்க முடியும் என்று விளக்கினர். அதில் என்ன பிரச்சனை என்று ஆராய்வதற்காக, அக்வாமரீனின் மத்திய கன்ட்ரோல் கூடத்துக்குத் தாமஸ் அழைத்துச் சென்றார். அங்குத் தலைமை விஞ்ஞானியான ஜேம்ஸ் கோவல்ஸ்கியுடன் சேர்ந்து உப்பகற்றல் சாதனப் பழுது விவரங்களைச் சூர்யா ஆராய்ந்து அவை ரேண்டம் வரிசையல்லாமல், ஒரு குறிப்பிட்ட வினோதமான வரிசையில் அமைந்துள்ளதாகக் காட்டினார். மேற்கொண்டு என்ன நடக்கிறது.‍...

*****


சூர்யா காட்டியபடி, வெவ்வேறு படி வரிசையிலும் இல்லாமல், ரேண்டமாகவும் இல்லாமல், ஆனால், எளிதான A B C என்னும்படி மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக உப்பகற்றல் சாதனத்தின் மூன்று அக்வாமரீன் சொந்த நுட்பங்களும் பழுதாகாமல், எதோ விசித்திரமான வரிசையில் பழுதாகின்றன என்பதால், தாமஸும், ஜேம்ஸும் மிகவும் குழம்பினர்.

இவ்வாறு இரண்டும் கெட்டானாக இருப்பதால், யாரோ வேண்டுமென்றே செய்திருக்க வேண்டும் என்ற உண்மை நிதர்சனமாகிவிட்டதால், தாமஸ் உஷ்ணமாகக் கேட்டார், "யாரோ வேணும்னு செஞ்சிருக்காங்கறது தெரியுது. ஆனா ஏன் இப்படி இந்த வரிசைமுறையை மறைச்சு ஒரு புதிரா வைக்கணும்?"

சூர்யா தீவிர சிந்தனையுடன் தலையாட்டினார். "நாமும் அதைத்தான் கண்டு பிடிக்கணும். இந்தப் பிரச்சனைக்கான நிவாரணம், இந்த வரிசை முறைக்கான காரணத்தின் அடிப்படையிலிருந்து கிடைக்கும்னு எனக்குத் தோணுது. பார்க்கலாம்".

ஜேம்ஸ் ஆட்சேபித்தார். "ஹூம்... எனக்கென்னவோ அப்படித்தான் இருக்கணும்னு தோணலை. இருக்கக் கூடும், அவ்வளவுதான் சொல்ல முடியும். ஆனா யாராவது வேணும்னு செஞ்சு, ஆனா மறைச்சு வைக்கணும்னா ரேண்டம் வரிசை வரவழைக்கறது எவ்வளவு சுலபம்! இவ்வளவு கஷ்டப் படுவானேன்? இது வேணும்னு செஞ்சதுன்னு யாராவது காட்டணும்னா எளிதான வரிசையா செஞ்சிருக்கலாமே. இது என்னவோ ரெண்டுங் கெட்டானா இருக்கே. எதோ கொஞ்ச அளவுக்கே மறச்சுட்டு, எதோ குழைந்தங்களுக்கு ஈஸ்டர் முட்டை வேட்டை இல்லன்னா ட்ரெஷர் ஹண்ட் விளையாட்டு மாதிரி... சே! ரொம்ப குழப்பமா இருக்கு!"

சூர்யா தலையில் படாலெனத் தட்டிக் கொண்டு கூவினார். "ஜேம்ஸ் நீங்க ஒரு ஜீனியஸ்! இந்த வினோத பழுது வரிசை முறைக்கு அதுதான் காரணம்! அதுக்குத் தான் யாரோ வேணும்னே அப்படி செஞ்சிருக்காங்க!"

யாவ்னா மிகவும் குழப்பத்துடன், "ஆங்? அதுதான் காரணம்னா எது? கொஞ்சம் சொல்லுங்களேன்!" அனைவரும் சூர்யாவை ஒரு வினோத பிராணி பேசுவதுபோல் கேள்விக் குறியுடன் நோக்கினர்.

சூர்யா விளக்கலானார். "சரி சொல்றேன். ரேண்டம் வரிசையில பழுதுகள் வரவழைக்கறது ரொம்ப சுலபம். அதே மாதிரி, A B Cன்னு மூணு உப்பகற்றல் நுட்ப நிலைகளையும் ஒரே மாதிரி வரிசையா வரவழைக்கறதும் சுலபம். ஆனா ரெண்டுமில்லாம ஜேம்ஸ் சொன்னா மாதிரி நாமும் முன்னரே சொன்னமே, குழந்தைங்க புதையல் தேடும் விளையாட்டுன்னு, அந்த மாதிரி வேணும்னே செஞ்சிருக்காங்க."

தாமஸ் பொறுமையிழந்து சீறினார், "அதான் முன்னமே எல்லாரும் சொல்லிட்டமே, வேணும்னு செஞ்சிருக்காங்கன்னு. ஜேம்ஸ் சொன்னது ஜீனியஸ்னீங்களே, அதென்ன, அதை விளக்குங்க."
சூர்யா மெள்ளத் தலையசைத்துக் கொண்டு விளக்கினார். "தாமஸ், ஜீனியஸ்னு நான் சொன்னது எதுக்குன்னா, ட்ரெஷர் ஹண்ட் தேடல் விளையாட்டுன்னு ஜேம்ஸ் சொன்னார் இல்லையா? அதே மாதிரி, உங்க எதிரிங்க யாரோ, நாங்க ரொம்ப திறமைசாலிகள், எப்படி பழுதுகளை மிகக் கடினமான மறைமுக வரிசை முறையில ஒளிச்சு, ஆனா தெரிஞ்சுட்டா வேணும்னே செஞ்சதுன்னு தெரியறா மாதிரி மிகத் திறமையா, அமைச்சிருக்கோம்; முடிஞ்சா எங்களைக் கண்டுபிடிச்சுடுங்க பார்க்கலாம், Catch me if you can அப்படீன்னு சவால் விடறா மாதிரி செஞ்சிருக்காங்க. அதுதான் ஜேம்ஸ் குறிப்பிட்டப்போ எனக்குப் பளீர்னு புலப்பட்டது. அதைத்தான் நான் குறிப்பிட்டேன்."

கிரண் துள்ளினான். "ஓ, catch me if you can! அது ஒரு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திரைப்படமாச்சே! அதைச் சொல்றீங்களா? லவ்லி மூவீ. அதுல லியனார்டோ டி கேப்ரியோ எவ்வளவு பிரமாதமான வித்தையெல்லாம் செஞ்சு..."

ஷாலினி கிரணின் கைமேல் பட்டென்று ஒரு சொடுக்கு அடித்து அடக்கினாள். "ஸ்டாப் இட் கிரண், என்ன இது விவஸ்தையே இல்லாம படத்தைப் பத்தி?" யாவ்னோவோ களுக்கென நகைக்க கிரண் அவளைப் பார்த்து கண்ணடித்து முறுவலித்தான்.

ஜேம்ஸ் சூர்யா கூறியதற்கு ஆட்சேபணை எழுப்பினார். "ஆனா சூர்யா, உங்களை மாதிரி யாரோ இந்தப் பிரச்சனையை ஆராய வருவாங்க, இந்த வினோத பழுது வரிசையைக் கண்டு பிடிப்பாங்கன்னு இதை செஞ்சவங்களுக்கு எப்படித் தெரிஞ்சிருக்க முடியும்? நாங்களும் பல வாரமா ஆராய்ஞ்சும் இதைக் கவனிக்கலையே? நீங்க இப்ப கண்டு பிடிக்கலைன்னா அவங்க பெரிய முயற்சி சுத்தமா வீணாப் போயிருக்கலாமே? அப்ப நீங்க குறிப்பிட்ட அந்த சவாலே இருந்திருக்காதே? அதுக்கென்ன சொல்றீங்க?"

சூர்யா கூர்ந்த யோசனையோடு தலையாட்டினார். "ஜேம்ஸ், நீங்க சொல்றது சரிதான். இந்தப் பழுது வரிசை கண்டுபிடிக்கப் படும்ங்கறது அவங்களுக்கு முன்கூட்டியே தெரிஞ்சிருக்கவோ, இப்படித்தான் நடக்கும்னு நூறு சதவிகித உத்தரவாதமோ இருந்திருக்க முடியாது. ஆனா இதுக்கு வேற காரணம் இருக்க வாய்ப்பே இல்லை. இதுதான் எளிதான பொருத்தமான விளக்கம், அதுனால அதுதான் சரியா இருக்க மிக அதிக வாய்ப்பிருக்கு. எனக்கென்ன தோணுதுன்னா, இதைச் செஞ்சவங்களில ஒருத்தருக்கு தலைக்கனம், அகங்காரம் இருந்திருக்கு. யாராவது கண்டுபிடிச்சா தன் திறமையைக் கண்டு வியக்கணுங்கற ஆசையில கம்ப்யூட்டர் மென்பொருட்களில ஈஸ்டர் முட்டைன்னு ஒண்ணு எதாவது காம்ப்ளிகேட்டடா செஞ்சா அதை உருவாக்கினவங்க பேர்கள் எல்லாம் வருமே, அந்த மாதிரி செஞ்சிருக்கணும்னு நினைக்கறேன்."

கிரண் மீண்டும் துள்ளினான். "ஆமாமாம். நான் மைக்ரோஸாஃப்ட் எக்ஸலில கூட எந்த மாதிரி வக்கிரமான மேக்ரோ போட்டா எந்த மாதிரி ஈஸ்டர் எக் வரும்னு ரொம்ப ஆராய்ஞ்சு..."

இம்முறை யாவ்னா இடைமறித்துக் கிரணை அடக்கினாள். "அது இருக்கட்டும் கிரண்! சூர்யா சொல்றபடி யாரோ எங்க முயற்சி தோல்வியடையணுங்கற எண்ணத்தோட வேணும்னே பழுதாக்கியிருக்காங்க அப்படீங்கறதை நினைச்சா மிகவும் மனசு கஷ்டமா இருக்கு. எவ்வளவு பேர் தங்களோட உசிரைக் குடுத்து உழைச்சிருக்காங்க, இதைப் போய் நாசமாக்கியிருக்காங்களே, சே!"

தாமஸ் அடக்க முடியாத ஆத்திரத்துடன் கூவினார். "ஆமாம், சூர்யா, இதை இப்படி வேணும்னே பழுதுகளை வரவழைச்சு எங்களைப் பார்த்து கேலி செஞ்சு களிக்கறவங்களை உடனே கண்டு பிடிங்க. உங்களுக்கு என்ன உதவி வேணுமானாலும் நானும் என் மேலாண்மைக் குழுவும் செய்யத் தயார்!" என்றார். ஜேம்ஸும் உணர்ச்சிபூர்வமாகத் தலையாட்டினார்.

சூர்யா மெள்ளத் தலையசைத்தபடி, "தாமஸ், ஜேம்ஸ், இதைச் செஞ்சு காட்டியிருக்கறவங்க உடனே கண்டுபிடிக்கக் கூடிய லேசுப் பட்டவங்களா இருக்க வாய்ப்பில்லை. நாம மிகவும் பிரயத்தனம் செஞ்சு, படிப்படியா முன்னேறி, இந்தச் சிக்கலின் ஒவ்வொரு முடிச்சா அவிழ்த்துத்தான் கண்டுபிடிக்கணும். இந்தப் பழுதுகள் வெறும் விபத்தோ உங்க உப்பகற்றல் நுட்பங்களிலேயே உள்ள பிரச்சனைகளோ இல்லைன்னு நாம தெரிஞ்சுக்கிட்டதுதான் முதல் படி. இந்த மாதிரி ஈஸ்டர் எக் வரிசையமைச்சுத் தங்களைக் காட்டிக்கிட்டது அவங்க செஞ்ச முதல் தவறு. அதிலிருந்தே அவங்க குணாதிசயம் என்னனு தெரியுது. அதை வச்சு எவர்கள் அந்த குழுவுல இருக்க முடியும், யார் இருக்க முடியாதுன்னு கணிக்கலாம். அதை வச்சு அடுத்த முடிச்சுகளை அவிழ்க்கலாம் – கொஞ்சம் பொறுத்துக்குங்க. நிதானந்தான் இந்தப் பிரச்சனையின் நிவாரணத்துக்கு வழி," என்றார்.

தாமஸ் சற்றுத் தணிந்தார். "சரி சூர்யா. நீங்கதான் துப்பறியும் நிபுணர். நான் உங்க திறமை மேலதான் நம்பிக்கை வச்சிருக்கேன். உங்க வழியிலேயே நிதானமா விசாரிச்சுக் கண்டுபிடிங்க. ஆனா, நீங்க சொல்ற அந்தக் பாதகர்களின் குணாதிசயங்கள் என்ன கணிச்சீங்க? அதை வச்சு எப்படி அடுத்த படிக்குக் போகலாம்? அதையாவது கொஞ்சம் சொல்லுங்க. இல்லைன்னா உங்களுக்கு புலப்பட்டது என்னன்னு குடாய்ஞ்சு யோசிச்சு, யோசிச்சு என் மண்டையே வெடிச்சுடும்!"

சூர்யா முறுவலித்தார். "அய்யய்யோ, உங்க மண்டையை வெடிக்க வச்ச பாவம் எனக்கு வேண்டாம்ப்பா! சொல்றேன். ஆனா மொத்தத்தையும் இப்பவே விளக்கிட்டா அந்த தீயவங்க முன்ஜாக்கிரதையாகி வேறு மாதிரி செயல்பட்டு தடயங்களை மறைக்க வாய்ப்பிருக்கு இல்லையா! அதனால உங்களுக்கு மேற்பூசலா ஒரு மாதிரி காட்டறேன். அதுல புரியற அளவுக்குப் போதும். மீதி இன்னும் நிறையக் கணிச்சதுக்கப்புறம் சொல்றேன்."

யாவ்னா வேண்டிக் கொண்டாள். "ப்ளீஸ் சூர்யா, கொஞ்சமாவது சொல்லுங்க. எனக்கும் ஆவல் தாங்கலை!"

சூர்யா தன் கணிப்பை விளக்கலானார். அவர் கூறியது மிக சுவாரஸ்யமாகவும், ஆர்வத்தை அதிகரிப்பதாகவும் இருந்தது!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline