Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சாதனையாளர்
சரணேஷ் பிரேம்பாபு
மருத்துவர் T.S. கனகா
- அலர்மேல் ரிஷி|அக்டோபர் 2012|
Share:
1940-50களில் பெண்களைப் பள்ளிக்கு அனுப்பவே தயங்குவார்கள். உயர்கல்விக்கு அனுப்புவது அதைவிடப் பெரிய விஷயம். அப்படிப்பட்ட காலத்தில் ஒரு பெண் சென்னை எழும்பூரிலுள்ள கார்ப்பரேஷன் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், சாரதா வித்யாலயாவில் உயர்நிலைப் பள்ளியும் முடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார் என்றால் நம்பமுடிகிறதா? இவரது பள்ளிப்படிப்பு முழுவதும் தமிழ்வழியே. மருத்துவம் பயில முடிவெடுத்தது மக்களுக்குச் சேவை செய்வதற்காகத்தான். இதற்குக் குடும்பம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகத் திருமணமே செய்து கொள்வதில்லை என்றும் தீர்மானித்துக் கொண்டார். அப்படியே சாதித்தும் காட்டிய அந்தப் பெண்மணிதான் டாக்டர். T.S. கனகா M.S.,M.Ch.,Ph.D.,D.H.Ed.

மருத்துவக் கல்லூரியில் கால்வைத்த நாள் முதலே ஆராய்ச்சியில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். இவரது உழைப்பையும் திறமையையும் நன்கு புரிந்து கொண்ட அப்போதைய கல்லூரி நிர்வாகி (Dean) டாக்டர். டி.கே. பிரசாத ராவ், கனகா மேற்கொண்டிருந்த மூன்று பிராஜெக்ட்களுக்கும் ஒரு தனி பரிசோதனைக் கூடத்தை ஒதுக்கித் தந்தார். கனகாவும் அவருடன் இதில் ஆய்வு மேற்கொண்ட மூவரும் எந்த நேரத்திலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கினார். பேரா. பி.என்.ரங்கையா, பி.வி. ராஜன், ரத்னகண்ணன், ஆகியோரும் பிற துறையினரும் ஆராய்ச்சியைப் பெரிதும் ஊக்கப்படுத்தினார்கள் என்பதை நன்றியுடன் குறிப்பிடுகிறார் கனகா.

டாக்டர் கனகா எம்.எஸ். பட்டப் படிப்புக்கு விண்ணப்பித்தார். ஜெனரல் சர்ஜரி ஆண்களின் ஏகபோக உரிமையாக இருந்த காலம் அது. மாணவிகள் என்றாலே அவர்களைத் தேர்வு செய்வதில்லை. ஆனால் இவருடைய மதிப்பெண்கள் அத்தடையைத் தாண்ட வைத்தது. தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலில் இவர்தான் முதலிடம் பெற்றிருந்தார். முன்னர் கூறிய பிரசாதராவ்தான் இத்தேர்வுக்குழுவின் தலைவர். கனகா வெற்றிகரமாக M.Ch. (Master of Chirosurgery) பட்டம் பெற்றார். தொடர்ந்து நரம்பியல் ரண சிகிச்சை மருத்துவத்தில் பிஎச்.டி. பெற்றார். இந்தத் துறையின் முதல் இந்தியப் பெண் மருத்துவர் கனகா என்பதுடன், கம்யூனிச நாடுகளைத் தவிர்த்த ஆசியநாடுகளிலேயே முதல் நரம்பியல் ரணசிகிச்சை மருத்துவர் என்ற பெருமைக்கும் உரியவர் இவர்.

நவீன பரிசோதனைக் கருவிகளும் வேறு உபகரணங்களும் இல்லாத காலத்திலேயே டாக்டர் கனகா மூளையிலும் முதுகுத் தண்டுவடத்திலும் நீண்டகால மின்முனை (chronic electrodes) பதிக்கும் ‘ஸ்டீரியோடாக்டிக்’ அறுவை சிகிச்சை (stereotactic surgery) செய்வதில் நிபுணத்துவம் பெற்றார். இத்தகைய அறுவை சிகிச்சை மூலம் உலக நாடுகளின் பாராட்டுக்களை பெற்றார். முதன்முதலாக ஜப்பான் பல்கலைக் கழகம் இத்தகைய அறுவை சிகிச்சை பற்றிச் செயல்விளக்க விரிவுரை ஆற்றவும் கருத்தரங்குகள் நடத்தவும் இவரை அழைத்தது. போர்ட்லேண்டிலுள்ள ஆரிகன் பல்கலைக்கழக நரம்பியல் பேராசிரியர் டாக்டர். ஜேனிஸ் ஸ்டீவன்ஸ் 1975ல் டாக்டர் கனகா அவர்கள் ப்ராடிஸ்லாவா நகரில் நடந்த மாநாட்டில்அளித்த கட்டுரையைப் பற்றிக் கேள்விப்பட்டார். இந்தியாவில் இப்படி ஓர் அதிசயமா என்று வியப்புற்ற அவர் சென்னைக்கு வந்து ஒருவாரம் தங்கி கனகா செய்துள்ள சிகிச்சைக் குறிப்புக்களைப் படித்தறிந்து பின்பே நம்பினார். அவரைப் பாராட்டும் விதமாக, கனகா செய்யும் ரண சிகிச்சைக்குத் தேவைப்படும் மருத்துவக் கருவி ஒன்றையும் வெளிநாட்டிலிருந்து வரவழைத்துக் கொடுத்ததுடன் அமெரிக்காவில் பத்துப் பல்கலைக் கழகங்களில் விரிவுரை ஆற்றவும் ஏற்பாடுகள் செய்தார். இதுவே கனகாவின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. செக்கோஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் கருத்தரங்குகளில் பங்கேற்று நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை அளித்ததோடு பல செயல்விளக்க விரிவுரைகளும் ஆற்றி இருக்கிறார்.

பெருமூளைவாத (cerebral palsy) நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் உதவி தேவைப்படலாம் என்பதால் கல்லூரியிலேயே தங்கிவிடுவதும், வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே மாலை 6 மணிக்குமேல் வீட்டிற்குச் சென்று மறுநாள் காலையில் பணிக்குத் திரும்புவதும் வழக்கம். மேலும் இளம்பிள்ளை வாதத்தால் (polio) அவதிப்படுவோரின் துன்பத்தைப் போக்குவதில் மிகுந்த அக்கறையும் பரிவும் காட்டியது அவரை ஒரு மனிதாபிமான மருத்துவராக இனம் காட்டுகிறது.
1963ல் இந்திய ராணுவத்தில் (Indian Army Medical Corps) ரணசிகிச்சை மருத்துவராகச் சேர்ந்தார். 1990ல் இதிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும் இவரது மருத்துவ சேவை முழுவீச்சில் தொடர்ந்தது. இவரது திறமையைப் பாராட்டி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இவரை கௌரவ மருத்துவ விஞ்ஞானியாகப் பணித்தது. தாம்பரத்திலுள்ள இந்து மிஷன் மருத்துவ மனை, அடையாறு புற்றுநோய் நிறுவனம், திருப்பதி தேவஸ்தானம் ஆகியவற்றில் இவர் நரம்பியல் துறை கௌரவ ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அரசுப் பணியில் இருந்த காலத்திலும் சரி; ஓய்வு பெற்றபின்னும் சரி, வருமானத்தைக் குறிக்கோளாகக் கொண்டு தனிப்பட்ட முறையில் மருத்துவம் (Private Practice) பார்ப்பதில்லை. தான் பணி ஓய்வுபெற்ற அன்று கிடைத்த தொகை முழுவதையும் மூலதனமாக்கி, தந்தை கொடுத்த இரண்டு கிரவுண்டு நிலத்தில் தன் பெற்றோர் பெயரில் அறக்கட்டளை நிறுவியுள்ளார். ‘ஸ்ரீ சந்தான கிருஷ்ண பத்மாவதி உடல்நலன் மற்றும் ஆராய்ச்சி நிலையம்’ என்ற இந்த அறக்கட்டளை வறுமைக் கோட்டிலுள்ள மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கிறது. தாமே 108 முறை ரத்த தானம் செய்துள்ளார்.

உடலுக்குத்தான் உண்டு முதுமை, அறிவுக்கும் உழைப்புக்கும் இல்லை என்பது டாக்டர். கனகாவைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை. பார்க்கின்சன்ஸ் நோய், விபத்தின் காரணமாக இடுப்புக்குக் கீழே செயலிழத்தல் (Paraplegia), மூட்டுப்பிடிப்பு, மறதி, தூக்கமின்மை போன்றவற்றால் துன்பப்படும் முதியோர்களுக்கென்று சிறப்பு மருத்துவ மனை நிறுவி அவர்களுக்கு உதவுவதுதான் கனகாவின் இன்றைய செயல்திட்டம். இதற்கான செவிலியர் பயிற்சி இவரது அறக்கட்டளையில் அளிக்கப்படுகிறது.

டாக்டர் கனகா 80 வயதைக் கடந்துவிட்டார். வாழ்நாள் சாதனை விருதுகளும் பாராட்டுக்களும் அவரைத் தேடி வந்தவண்ணம் இருப்பதில் அதிசயமில்லை பட்டியலிட்டால் நீளும். துருக்கி நாட்டிலிருந்து இவருக்கு அழைப்பு வந்து இப்போது காத்திருக்கிறது. இவர் மனதில் மருத்துவம் மட்டுமல்ல, இறையுணர்வும் வேரூன்றி உள்ளது. 24 மணி நேர அகண்ட பஜனை, ராமநாம தியானம் என்று இவர் இல்லத்தில் நடந்த வண்ணம் இருக்கும். டாக்டர். கனகா தமிழ்நாட்டு சாதனைப் பெண்மணி மட்டுமல்ல; மருத்துவ உலகின் சேவை மாணிக்கமும் ஆவார். இவரது தொலைபேசி எண்: 044-22230935 (சென்னை).

டாக்டர். அலர்மேலு ரிஷி
More

சரணேஷ் பிரேம்பாபு
Share: 




© Copyright 2020 Tamilonline