Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-15)
- கதிரவன் எழில்மன்னன்|செப்டம்பர் 2012|
Share:
இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். மூவரும் அக்வாமரீன் என்னும் நிறுவனத்துக்குச் செல்கின்றனர். அங்கு வேலை செய்யும் யாவ்னா என்ற இளம்பெண் மற்றும் நிறுவனரான தாமஸ் மார்ஷ் இருவரையும் சந்தித்தனர். தாமஸின் குடும்பத்தைப் பற்றி சூர்யா சரியாக யூகித்துத் தாமஸுக்குத் தன்மேல் பெரும் நம்பிக்கை பிறக்கச் செய்தார். யாவ்னாவும் தாமஸும், நீருப்பகற்றல் துறையின் சில நவீன நுட்பங்களைப் பற்றியும் அக்வாமரீனின் சில தனிப்பட்ட சொந்த நுட்பங்களைப் பற்றியும் விவரித்தனர். அக்வாமரீனின் சொந்த நுட்பங்கள் சேர்க்கப்பட்ட உப்பகற்றல் தளம் பழைய தளங்களைவிடப் பலமடங்கு அதிக தூய நீரை, மிகக் குறைந்த செலவில், மிகச் சிறிய சாதனத்தைக் கொண்டு உற்பத்தி செய்து உலகின் தூயநீர்த் தேவையைப் பூர்த்திக்க முடியும் என்று விளக்கினர். அதில் என்ன பிரச்சனை என்று ஆராய்வதற்காக, அக்வாமரீனின் மத்திய கன்ட்ரோல் கூடத்துக்குத் தாமஸ் அழைத்துச் சென்றார். அங்குத் தலைமை விஞ்ஞானியான ஜேம்ஸ் கோவல்ஸ்கியுடன் சேர்ந்து உப்பகற்றல் சாதனப் பழுது விவரங்களை சூர்யா ஆராய ஆரம்பித்தார். மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்‍...

*****


உப்பகற்றல் சாதனத்தை இருமுறை ரீசெட் செய்து, இருமுறையும் வெவ்வேறு நிலைகளில் பழுதாவதைக் கண்டவுடன், சூர்யா வெவ்வேறு முறை பழுதாகும் நிலைகள் ஒரே வரிசையாக வருகின்றனவா, அல்லது வரிசை முறையெதுவுமின்றி வருகின்றனவா என்று கேட்டவுடன் அது தங்களுக்குத் தோன்றாத, மிக நல்ல கேள்வி என்று தாமஸும் ஜேம்ஸும் பாராட்டினர். சூர்யா, சாதன மேல்நோக்குக் கணினியின் பதிப்பீடுகளை (log files) ஆராய்ந்தால், அந்த விவரம் புலப்படும் என்று கூறியதும் ஜேம்ஸ் ஆமோதித்து, அவசரமாக பதிப்பீடுகளை கணினியின் மின்திரையில் கொணர்ந்து சூர்யாவுக்குக் காட்டினார்.

சூர்யா ஒவ்வொரு பதிப்பீட்டிலும் இருந்த பழுதுகளின் நிலைகளின் பெயர்களை A, B, C என்ற எழுத்துக்களை மட்டும் உரக்கக் கூறிக் கொண்டு வந்தார். ஜேம்ஸ் ஒரு தாளில் அவற்றைக் குறித்துக் கொண்டே வந்தார்.

சூர்யா குறிப்பிட்ட எழுத்து வரிசை இதுதான்:
A B C A C B B A C B C A C B A C A B B C A B A C A C B A B C C A B C B A C B A C A B A B C A C B B A C B C A…

சூர்யா சட்டென நிறுத்திவிட்டு ஜேம்ஸ் குறித்துக் கொண்ட தாளை வாங்கி, குறுந்தாடியை வலதுகையால் நீவி விட்டுக் கொண்டே பார்த்தபடி யோசனையில் ஆழ்ந்து விட்டார். சில நொடிகளுக்குப் பின் ஜேம்ஸ் அங்கு நிலவிய மௌனத்தைக் கலைத்தார். "ஹூம்... என்ன யோசிக்கறீங்க சூர்யா? எனக்கென்னவோ இதுல வரிசைமுறை எதுவும் இருக்கறா மாதிரி தெரியலையே?"

தாமஸும் ஆமோதித்தார். "ஆமாம் ஜேம்ஸ். எனக்கும் வரிசைமுறை இருக்கறா மாதிரி புலப்படலை."

சூர்யா மெல்லத் தலையசைத்து மறுத்தார். "இல்லை தாமஸ், ஜேம்ஸ். இது ரேண்டம் இல்லை. மேலாகப் பார்த்தா ரேண்டமா இருக்கறா மாதிரியும், ஆனா கொஞ்சம் நுணுக்கமா உள்ளுக்குள்ள ஆராய்ஞ்சு பாத்தா ரொம்ப காம்ப்ளெக்ஸா, திரும்பி வருகிறா மாதிரியான வரிசைமுறையை கஷ்டப்பட்டு ஒளிச்சு வச்சு ரொம்பவே புத்திசாலித்தனமான வேலை செஞ்சிருக்காங்க. எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும்னுதான் புரியலை? சாதாரணமா ஏன் ரேண்டமா வச்சிருக்கக்கூடாது?"

ஜேம்ஸுக்கு ஆச்சரியமாகிவிட்டது. "என்ன? வரிசைமுறை ஒளிஞ்சிருக்கா? எனக்கு ஒண்ணும் தெரியலையே! சும்மா எதாவது இருக்கணுமேன்னு சொல்றீங்களா?"

கிரண் தாவிக் குதித்தான். "பாத்தீங்களா, திரும்பவும் சூர்யா மேல சந்தேகிக்கறீங்களே! சும்மாவெல்லாம் சொல்லமாட்டார் அவர். எங்க இங்க குடுங்க, நான் பாக்கறேன்" என்று அந்தத் தாளைப் பிடுங்கிக் கொண்டு சில நொடிகள் ஆராய்ந்துப் பார்த்தான். "ஹூம், சட்டுன்னு ஒண்ணும் தெரியமாட்டேங்குதே" என்று தலையைச் சொறிந்து கொண்டான்.

ஜேம்ஸ் "ஹூம்!" என்று அலட்சியத்துடன் ஒலியெழுப்பிவிட்டு எதோ சொல்லப் போகும்போது கிரண் சிலிர்த்துக்கொண்டு இடை மறித்தான். "இருங்க, இருங்க. எனக்குப் புரிஞ்சு போச்சு! நிச்சயமா வரிசைமுறை ஒளிக்கப்பட்டிருக்கு..." என்றான். தாமஸ் தாளைக் கிரணிடமிருந்து இழுத்து எடுத்துப் பார்த்தார். "ஹூம். எனக்கு இன்னும் ஒண்ணும் தெரியலை. சும்மா நீயும் எடுத்து விடறயா கிரண். என்ன வரிசை, சொல்லேன் பார்ப்போம்" என்று தூண்டிவிட்டார்.
கிரண் முறுவலித்தான். "என் மேலயும் சந்தேகமா! இது எங்க பங்கு மார்க்கெட்ல விலை வரிசை முறை எதாவது இருக்கான்னு அலசி அலசி எனக்குப் பழக்கம் இருக்கறதுனால தெரிஞ்சுது இது. சரி, இப்பப் பாருங்க." என்று கூறிவிட்டு, தன் கைபேசியை எடுத்து, தாளைப் பார்க்காமலே, பல எழுத்துக்களைத் தட்டிவிட்டு அதைத் தாமஸிடம் நீட்டினான். ஜேம்ஸ், யாவ்னா, ஷாலினி மூவரும் கூட தாமஸின் அருகில் நெருக்கமாகக் கூடி நின்று கொண்டு கைபேசியின் திரையை நோக்கினர். கிரண் தாளிலிருந்த எழுத்துக்களை வேறு மாதிரி இரு வரிசைகளாக அமைத்திருந்தான்:

A B C - B A C – C B A – B C A – A C B – C A B - ...
A C B - B C A – C A B – B A C – A B C – C B A - ...

ஜேம்ஸ், தாமஸ் இருவரும் "ஓ! வாவ்... பிரமாதம்" என்று எக்களிக்கவும், யாவ்னா, ஷாலினி இருவரும் இன்னும் புரியாமல் விழிக்கவே, சூர்யா விளக்கினார்.

"நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பயாலஜி ஆளுங்க. அதனால கணக்கு, லாஜிக் படியான வரிசை சட்டுனு தெரியல போலிருக்கு. சரி பாருங்க ஒவ்வொரு எழுத்தும் தனியா மட்டும் பாத்தா அவை வரிசையா இருக்கறது புலப்படறதில்லை. ஆனா ..."

அவர் தொடர்வதற்குள் கிரண் தாவிக் குதித்தான். "ஆனா, நான் போட்டிருக்கற படி மூணு மூணா சேர்த்துப் பாத்து ரெண்டாவது மூணெழுத்தை முதல் மூணெழுத்தின் கீழாப் போட்டுப் பாத்தா..."

அவனையும் இடைமறித்து அடக்க முடியாத பரபரப்புடன் உள்புகுந்தார் ஜேம்ஸ், "... அப்படிப் போட்டுப் பாத்தா தெரியுதில்லையா? முதலாவது மூணெழுத்து A எழுத்துல ஆரம்பிக்குது, மேலயும் கீழயும் இருக்கற மூணெழுத்து மீதி ரெண்டு எழுத்தையும் மாத்தி மாத்தி இருக்கு. அதே மாதிரி…"

அடுத்து தாமஸ் தாவிக் குதித்தார் "ஆமாம். அடுத்த மூணெழுத்து B எழுத்துல ஆரம்பிச்சு மேலயும் கீழயும் மீதி ரெண்டு எழுத்துக்களும் மாத்தி மாத்தி இருக்கு. அடுத்தது C எழுத்துல காம்பினேஷன்."

சூர்யா முத்தாய்ப்பு வைத்தார். "அது மட்டுமில்லை. அடுத்த மூணெழுத்து B-ல ஆரம்பிச்சு அடுத்தது A-இல் ஆரம்பிக்கும் ரெண்டு மேல்-கீழ் மூணெழுத்தும், C-யின் ரெண்டு மூணெழுத்தும் இருக்கு. அப்புறம் மீண்டும் C மூணெழுத்தே வருது. ஏன்னா, இது உள்ளுக்குள்ள இருக்கற வரிசையை சுத்தி வெளியில 18 எழுத்துக்களுக்கப்புறம் மாறும் முதல் எழுத்து வரிசையில அப்படி வருது."

யாவ்னா "அம்மாடியோவ்! இவ்வளவு விஷயம் இருக்கா இதுல!" என்றாள். ஷாலினி தன் சூர்யா கண்டுபிடித்த விஷயம் இது என்னும் பெருமையுடன் முறுவலித்தாள். "ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் அமைச்சிருக்காங்க. ஆனா சூர்யாகிட்ட மறைக்க முடியமா!"

தாமஸ் பலமாகத் தலையாட்டினார், "ரொம்ப சரி ஷாலினி. சூர்யா பிரமாதமா யோசிச்சு கண்டு பிடிச்சிருக்கார். ஆனா எதுக்கு இவ்வளவு கஷ்டப் பட்டிருக்காங்க? ரொம்ப ஆச்சர்யமாவும் குழப்பமாவும் இருக்கு."

சூர்யா தலையாட்டியபடி விளக்கினார். "ஆச்சர்யமாத்தான் இருக்கு. இதோ பாருங்க. 18 எழுத்துக்கப்புறம் முதல் எழுத்து மாறும்போது, அடுத்த ரெண்டு எழுத்துக்கள் முதல் தடவை மாதிரியில்லாம முன்னுக்குப் பின் மாத்தியிருக்காங்க. அதாவது முதல் தடவை B A C – B C A–ன்னும் ஆனா ரெண்டாவது முறை B C A – B A C–ன்னும் வருது!"

ஜேம்ஸ் பிரமிப்புடன் வாய் பிளந்தார். "வாவ், இதுக்குள்ள இவ்வளவு மாறுதல்கள் வச்சிருக்காங்க! அதுனாலதான் சட்டுன்னு பாக்கறச்சே வரிசை முறை தெரியலை. இதை எப்படி அவ்வளவு சீக்கிரம் கண்டு புடிச்சீங்க சூர்யா? பிரமாதம்!" சூர்யா அந்தப் பாராட்டைப் பெரிது படுத்தாமல், "அப்படி ஒண்ணுமில்லை ஜேம்ஸ். என் தொழிற்சாலை அனுபவத்துல இந்த மாதிரி பல பிரச்சனைகளைப் பாத்திருக்கேன்; அதுல வந்த வரிசை முறை ஆராய்ச்சித் திறன் அவ்வளவுதான். என்ன மாதிரி பல பேர் இதைச் செய்ய முடியும்" என்று பவ்யமாகக் கூறினார்.

தாமஸ் சூர்யாவின் பணிவை ஏற்றுக் கொள்ளாமல் "உங்களை ரொம்பச் சாதாரணமா சொல்லிக்கறீங்க சூர்யா. ஆனா எனக்கு நல்லா புரிஞ்சுடுச்சு. நான் பாத்தவங்களில உங்க அறிவுக்கூர்மை அபாரமானது. உங்களுக்கு இயற்கை தந்திருக்கும் வரம் இது" என்று மனமாரப் பாராட்டினார். சூர்யாவும் மறுக்காமல் தலை வணங்கி ஏற்றுக் கொண்டார்!

தன் சூர்யாவுக்குக் கிடைத்த பாராட்டு தனக்கே கிடைத்தாற்போல் ஷாலினி கிளுகிளுத்துப் பெருமையுடன் சூர்யாவின்மேல் பாசப் பார்வையை வீசினாள். கிரணும் அவளைப் பார்த்து முறுவலித்து அவள் கையை லேசாக அழுத்தி விட்டான். சூர்யாவோ இந்தக் குறுநாடகத்தைக் கண்டும் காணாத மாதிரி முறுவலுடன் திரும்பிக்கொண்டார்.

தாமஸின் கேள்வி யாவரையும் மீண்டும் பிரச்சனைக்கு இழுத்தது. "ஆனால் இந்த வரிசை முறைக்கு என்ன அர்த்தம்? யாரோ வேணும்னே சும்மா இவ்வளவு நுணுக்கமான வரிசை முறையில எங்க மூணு நுட்பங்களும் பழுதாகறா மாதிரி செஞ்சிருக்காங்க. எதுக்கு அப்படிச் செய்யணும். ஒண்ணு ரேண்டமாவே விட்டிருந்தா சந்தேகமே வராம இருக்கலாம். அல்லது ரொம்ப வெளிப்படையான வரிசை முறையில சும்மா A B C A B C A B C–ன்னு எதாவது எளிதான வரிசையாவது செஞ்சிருக்கலாம். இப்படி ஓளிவு மறைவான வரிசை முறை செய்வானேன்?"

அவர் கேள்விக்குச் சூர்யா அளித்த பதிலும் அதன் விளைவுகளும் யாவருக்கும் திகைப்பளிப்பவையாக இருந்தன.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline