Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-11)
- கதிரவன் எழில்மன்னன்|மே 2012|
Share:
இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். ஷாலினி தூய தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றி சூர்யாவுக்கும் கிரணுக்கும் எடுத்துக் கூறி இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு விண்ணப்பிக்கிறாள். சூர்யாவும் கிரண், ஷாலினி இருவருடன் அக்வாமரீன் என்னும் அந்நிறுவனத்துக்குச் சென்று அங்கு சந்தித்த யாவ்னா என்ற இளம்பெண்ணை, அவளுடைய ஓட்டப் பயிற்சி, வரவேற்பறையின் கலையமைப்பு ஆகிவற்றைக் கூர்ந்து கவனித்து, கணித்து தன் திறனில் நம்பிக்கை பெறச் செய்கிறார். பிறகு யாவ்னா மூவரையும் ஆராய்ச்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்று பலதரப்பட்ட உப்பகற்றல் நுட்ப சாதனங்களைப்பற்றி விவரிக்கிறாள். ஆவியாக்கல் (distillation), எதிர்ச் சவ்வூடு பரவல் (reverse osmosis) போன்ற எளிதான பழைய நுட்பங்களைப் பற்றிக் கூறிவிட்டு புதுநுட்பங்களைப் பற்றி விவரித்த பிறகு, தாமஸ் நீருப்பகற்றல் துறையின் சில நவீன நுட்பங்களைப் பற்றிப் பொதுவாக விவரித்தபின், அக்வாமரீனின் சில தனிப்பட்ட சொந்த நுட்பங்களான மின்னணு உப்பகற்றல், உயிர்நிகர் சவ்வுத்தோல் நுட்பங்களைப் பற்றிக் கூறிவிட்டு மூன்றாம் நுட்பத்தை விவரிக்கலானார்... இப்போது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்!

*****


கிரண் நக்கலாக, "சுத்த சக்தியுமாச்சு, உயிர்நிகர் நுட்பமுமாச்சு, இன்னும் என்ன பாக்கி, நேனோவா?" என்று கேட்கவும், அதேதான் என்று யாவ்னா கூவவும், சூர்யா ஆர்வத்துடன், "ஆஹா, இது என் பழைய தொழிலுக்குப் பக்கத்துல வந்துடுச்சே, மேல சொல்லுங்க" என்று ஆவலுடன் கேட்கவே, தாமஸ் தனது நிறுவனமான அக்வாமரீன் சொந்தமாக நேனோ நுட்பத்தை உப்பகற்றலுக்கு எப்படிப் பயன்படுத்துகிறது என்று விவரிக்கலானார்.

"நேனோ நுட்பங்கள் பலப்பல மாதிரி இருக்கு. அதுல நாங்க பயன்படுத்தியிருக்கறது, கார்பன் நேனோ குழாய்களைப் பயன்படுத்தி மிக நுணுக்கமான துவாரங்களுள்ள வடிகட்டும் வலையை உருவாக்கி, அதுமூலமா ஆஸ்மோஸிஸ் வழிமுறையில, நீர் உப்பிருக்கற பக்கத்துலேந்து, உப்பில்லாத தூய பக்கத்துக்கு போகறா மாதிரி செஞ்சிருக்கோம்..."

கிரண் ஏமாற்றத்துடன் நக்கலாக இடைமறித்தான். "ஹூம் ... இதென்ன, எங்கம்மா சொல்ற விக்ரமாதித்யன் கதை மாதிரி திரும்பி வேதாளம் முருங்கை மரத்துல ஏறிடுச்சே! நீங்க சொல்ற ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ் பத்தி ஏற்கனவே அலசி அலசிக் கிழிச்சாச்சே. இதுல என்ன புது நேனோ நுட்பம் வேற வேண்டியிருக்கு.

டாட்டா நேனோ காரோட ரிவர்ஸ் கியர் நுட்பமா!"

தாமஸ் உஷ்ணமாக எதோ சொல்லப் போகும்போது யாவ்னா முந்திக்கொண்டு அவசரமாகக் குறுக்கிட்டாள். "அப்படி சாதாரணமா சொல்லிட முடியாது கிரண். இது ஏற்கனவே அலசின நுட்பம் இல்லை. அதுக்கு நேர் எதிர்னுகூடச் சொல்லலாம். தாமஸ் இப்ப விளக்குவார் கவனமாக் கேளு, ரொம்பவே ஆச்சர்யப்படுவே!"

யாவ்னா கூறியதைக் கேட்டுத் தணிந்த தாமஸ் ஆசுவாசப்படுத்திக் கொண்டு விளக்கலானார். "கிரண் நீ சொன்னது ஒரு சிறிய அளவுக்கு சரிதான். தற்காலத்துல பயன்படும் உப்பகற்றல் நிலையங்களில பெரும்பாலானவை ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ் முறையைத்தான் பயனபடுத்துகின்றன. ஆனால், எங்க நுட்பம், ரெண்டு விதத்துல முன்னேறியது. முதலாவது, யாவ்னா சொன்னபடி, அது ரிவர்ஸ் இல்லை, ரிவர்ஸோட ரிவர்ஸ். அதாவது, ஃபார்வர்ட் ஆஸ்மோஸிஸ்ங்கறது. இதுல உப்பணுக்கள் வெளியில போயி உப்புத் தண்ணீரை தூய தண்ணீராக்குது..."

இப்போது சூர்யா இடைமறித்தார். "ஆனா தாமஸ், நீங்களோ யாவ்னோவோ ஃபார்வர்ட் ஆஸ்மோஸிஸ் நுட்பத்தைப் பத்தி இப்பக் கொஞ்ச முன்னாடி புது நுட்பங்களைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கறப்ப குறிப்பிட்ட மாதிரி ஞாபகம் வருதே."

தாமஸ் சிலாகித்துக் கொண்டார். "சூர்யா, உங்களுக்கு நல்ல ஞாபக சக்திதான். போற போக்குல இதைப்பத்தி நாம பேசினோம், அது சரிதான். இந்த நுட்பம் ஏற்கனவே சில புதிய உப்பகற்றல் நிலையங்களில நடைமுறையில ஓரளவுக்குப் பயன்படுது. ஆனா, இப்பப் பயன் படுத்தப்படற நுட்பம் மிகமிக முன்னேறியது. நாங்க நேனோ துகள்கள் மற்றும் கார்பன் ட்யூப்கள் பயன்படுத்தி, முன்பு எப்பொழுதும் இல்லாத சக்தி வாய்ந்த ஆஸ்மோஸிஸ் திரை ஒண்ணை எங்க ஆராய்ச்சி நிலையத்துல சமீபமாத்தான் உருவாக்கியிருக்கோம். இது ஆஸ்மோஸிஸ் நடக்கற வேகத்தை மிக அதிகமாக்கி, மிகக் குறைந்த செலவிலயும், மிகக் குறைந்த நேரத்துலயும் நிறைய தூய நீர் உற்பத்தி செய்யக்கூடியது. இதுக்கு பழைய தொழில் உதாரணம் ஒண்ணு சொல்லணும்னா, கைத்தறியிலயும் துணி நெய்யலாம். ஒரு பெரிய மில் இயந்திரத்திலயும் நெய்யலாம்! ஆனா இயந்திரம் பல மடங்கு அதிக வேகத்துல செஞ்சு விலையைக் குறைக்க உதவுதில்லையா, அப்படித்தான். ஆனா இது அதிபுதுமை வாய்ந்த, வெறும் கண்ணுக்குப் புலப்படாத நுட்பத்தைப் பயன்படுத்தும் இயந்திரம்னு கூட சொல்லலாம்!"

சூர்யா தலையாட்டி ஏற்றுக் கொண்டார். "ஓகே, ஓகே, இப்ப புரியுது, விளக்கத்துக்கு நன்றி!"

அக்வாமரீனின் சொந்தத் தனித்துவம் வாய்ந்த நுட்பங்களைப் பற்றிய தாமஸின் விளக்கங்களை முழுவதும் கேட்டதும் அவநம்பிக்கை நீங்கிப் பிரமிப்பில் ஆழ்ந்த கிரண் பாராட்டினான். "தாமஸ், மன்னிச்சுக்குங்க! நான் எதோ புரியாம தாழ்த்திப் பேசிட்டேன். நீங்க இந்த மாதிரி சுத்த சக்தி, உயிர் நிகர்த்துவம், நேனோ நுட்பம்னு மூணு புதுப் புதுத் துறைகளைச் சேர்த்து உப்பகற்றல் துறைக்கு பெரும் முன்னேற்றம் கொண்டு வந்திருக்கீங்க! அற்புதம்! சபாஷ்!"

தாமஸ் கைகளை லேசாக வீசி கிரணின் தோளைத் தட்டினார். "சே, சே கிரண்! மன்னிப்பெல்லாம் எதுக்கு! நீ அப்படி என்ன கேட்டுட்டே? எங்க துறையில இருக்கறவங்களே என்னை நம்பலை, உனக்கு இதெல்லாம் புதுசுதானே? அதை நினைக்காம நானும் ரொம்ப அவசரப்பட்டு உஷ்ணமாயிட்டேன்! சரி விட்டுத் தள்ளலாம்!"

ஷாலினி வினாவினாள். "தாமஸ், உங்க தனி நுட்பங்களைப் பத்தி சொன்னீங்க. அதுக்கும் மேல எதோ அதையெல்லாம் ஒண்ணு சேர்க்கறதுல முன்னேற்றம்னு சொன்னீங்களே அது என்ன?"

தாமஸ் தலையசைத்தபடி விளக்கலானார். "சரியாக் கேட்டீங்க ஷாலினி. அது ரெண்டு மாதிரி முன்னேற்றம். நான் ஏற்கனவே உயிர்நிகர்த்துவம் பற்றி சொன்ன மாதிரி, வெறுமே நுட்பத்தை உருவாக்கினா மட்டும் போதாது. அதை உப்பகற்றல் நடைமுறையில நல்லாப் பயன்படறா மாதிரி செய்யணும். ஒண்ணு விலையைக் குறைக்கணும். இல்லைன்னா தூயநீரை இன்னும் வேகமா உற்பத்தி செய்யணும். இரண்டும் இருந்துட்டா பிரமாதந்தான். அந்த ரீதியில, எங்க நுட்பங்களை நடைமுறைப் பலனுக்கேத்தா மாதிரி செஞ்சிருக்கோம். அது மட்டுமல்லாம, முன்னமே, சூர்யா குறிப்பிட்ட பாஸரல் முறையில இந்த நுட்பங்களைச் சேர்த்திருக்கோம். அது மட்டுமில்லை ..."
கிரண் இடை மறித்தான். "ஓகே, ஓகே, இதுவும் டீவியில கின்ஸூ கத்தி விக்கறா மாதிரி, இது மட்டுமில்லை, இப்பவே வாங்கினா ஒரே விலைக்கு இன்னும் தரோம்னு போயிட்டிருக்கு!"

தாமஸ்கூடச் சிரித்து விட்டார். "அப்படியே வச்சுக்கலாம் கிரண்! ஆனா ஷாலினி குறிப்பிட்டா மாதிரி, சும்மா பல நுட்பங்களை வெறும சேர்த்த ஸ்விஸ் ஆர்மி கத்தியில்லை! ஒவ்வொரு நுட்பமும் வேலை செய்யற விதம் அடுத்த நுட்பத்தை இன்னும் நல்லா வேலை செய்ய வைக்கறா மாதிரி செஞ்சிருக்கோம். பாஸரல் உப்பகற்றல் வழிமுறையில பல அடுக்குகள் இருக்கில்லையா? ரொம்ப நுணுக்கமா ஆராய்ஞ்சு எந்த அடுக்குல எவ்வளவு தண்ணீரை உற்பத்தி செஞ்சு, எவ்வளவு முறை அதே அடுக்கைப் பயன்படுத்திட்டு அதுல உற்பத்தியாகர நீரை அடுத்த அடுக்குக்கு அனுப்பணும்னு தீர்மானிச்சிருக்கோம்."

யாவ்னா தொகுத்துரைத்தாள். "ஆமாம் சூர்யா! அக்வாமரீனின் சொந்த நுட்பங்களோடு பாஸரல் முறையில பல நுட்பங்களையும் சேர்த்து அந்த வரிசை வழிமுறையிலயும் முன்னேற்றங்கள் செஞ்சிருக்கறதுனால, ஒரு லிட்டர் தூயநீர் உற்பத்திக்கு எங்க உப்பகற்றல் நிலையத்தின் பணச் செலவு இப்ப நடைமுறைப் பயன்ல இருக்கற நிலையங்களை விடப் பலமடங்கு குறைவானது. அதுமட்டுமில்லை, உற்பத்தியாகற வேகமும் பலமடங்கு அதிகமானது. ரெண்டையும் சேர்த்தா..."

தாமஸ் குறுக்கிட்டு எதோ கனவுலகில் ஆழ்ந்துவிட்ட தோரணையில் பேச ஆரம்பித்தார். "ஆமாம். யாவ்னா சொல்றது மாதிரி, செலவுக் குறைப்பையும் உற்பத்தி துரிதத்தையும் சேர்த்துப் பார்த்தா, உலகின் தூயநீர்ப் பற்றாக்குறையை மொத்தமா ஒழித்து, முன்னேறும் நாடுகளின் ஒவ்வொரு கிராமத்துக்கும், இண்டு இடுக்குகளுக்கும் கூட உங்க கங்கை பழங்காலத்தில் இருந்ததுபோல் தூயநீர்ப் பிரவாகமாக பெருகச் செய்யலாம். அதனால், எவ்வளவு நற்பலன்கள் விளையும் தெரியுமா?! சுகாதாரம் பெருகி நோய்கள் குறையும். தண்ணீர்ப் பற்றாக் குறையால் விளையும் பேதங்களையும், ஏன் வருங்காலப் போர்களையும் கூடத் தவிர்க்கலாம்."

வருங்காலக் கனவுலகில் சஞ்சரித்தபடி விவரித்துக் கொண்டே போன தாமஸை, சூர்யாவின் இடைமறிப்பு தடாலென தற்காலத்தில் தவிர்க்க வேண்டிய பிரச்சனைகளுக்கு இழுத்தது! "நீங்க சொல்றது கேட்க மிக இனிமையாத்தான் இருக்கு தாமஸ். ஆனா உங்களை அந்த சொர்க்க நிலைக்குப் போக விடாமல் தடுக்கற இடைஞ்சல்தான் என்ன? விளையக் கூடிய நற்பலன்களுக்கு இடையூறா இருக்கற அந்தப் பிரச்சனையைப் பத்தி சொல்லுங்க. நிவர்த்திச்சு முன்னேற்றும் முயற்சியில் இறங்கலாம்!"

திடுக்கிட்டு நனவுலகுக்கு மீண்ட தாமஸ், சுதாரித்துக் கொண்டு நாத்தழுதழுக்க, சூர்யாவின் கைகளைத் தன் இரு பெரும் கரங்களுக்குள் அடக்கிக் கொண்டு, "ரொம்ப சரியா சொன்னீங்க சூர்யா. எங்க பிரச்சனைகளத் தயவு செஞ்சு நிவர்த்திச்சுக் கொடுங்க. உங்க திறமையையும் அறிவு கூர்மையையும் நேரா அனுபவிச்சதுனால எனக்கு மிக நம்பிக்கை பிறந்திருக்கு. செய்வீங்களா சூர்யா? என் தூயநீர்க் கனவை நனவாக்கும் வாய்ப்பையாவது எனக்கு மீட்டுக் கொடுங்க. அதுக்கப்புறம் வணிக நடைமுறையில நடக்கறது நடக்கட்டும்!"

சூர்யா உணர்ச்சி வேகத்தோடு ஆறுதலளித்தார், "நிச்சயமா தாமஸ். எங்களால ஆனவரைக்கும் தீவிரமா ஆராய்ஞ்சு உங்க பிரச்சனைக்கு என்ன காரணம், எப்படி நிவர்த்திக்க முடியும்னு பாத்துடலாம். நீங்க ஈடுபட்டிருக்கற முயற்சி மிகமிக உன்னதமானது! உலகத்தின் பல கோடிகளிலுள்ள பலகோடி மக்களுக்கும், ஏன் மற்ற ஜீவராசிகளுக்கும் கூட மிகப் பலனளிக்கக் கூடிய இந்த முயற்சிக்கு எங்களால எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ முயற்சி செஞ்சே தீருவோம்!"

ஷாலினியும் தன் பங்குக்கு யாவ்னாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆதரித்தாள். "யாவ்னா என்கிட்ட உங்கப் பிரச்சனையைப் பத்தி சொன்னவுடனேயே நானும் அதைத்தான் நினைச்சேன். நான் குறிப்பிட்டவுடனேயே சூர்யாவும் தயங்காம ஒத்துக்கிட்டார். நிச்சயமா நிவர்த்திச்சுடுவார். கவலையே வேண்டாம்!"

கிரணும் தலையாட்டி தாமஸுக்குக் கை கொடுத்து இரு கரங்களின் கட்டை விரலையும் உயர்த்திக் காட்டி, "உங்க நுட்பத்துக்கான பிரச்சனை என்னங்கறதை விளக்குங்க.

பிச்சி உதறி விலக்கிடுவோம்!" என்று ஊக்குவிக்கவும், தாமஸும் புத்துணர்ச்சி, புதுநம்பிக்கையுடன் விளக்கலானார்.

அவர் விளக்கிய பிரச்சனை மிகச் சிக்கலாக இருந்தது. அதன் முடிச்சவிழ்க்க சூர்யா அணுகிய முறையும் விந்தையாகவே இருந்தது!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline