Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
குறுநாவல்
சில மாற்றங்கள் (பகுதி- 12)
- சந்திரமௌலி|மே 2012|
Share:
Click Here Enlargeஇதுவரை: பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து தவிக்கும் தன் மற்றொரு அமெரிக்க நண்பன் ராஜுக்கு வேலை கேட்கிறான். ராஜின் தகுதிகளில் திருப்தியுறும் ஸ்ரீ அவனுக்கு வேலை தருவதாக வாக்களிக்கிறான். ஆனால் மேலும் ராஜின் விவரங்களைப் பார்க்கும்போது அவன் தன்னோடு சிறு வயதில் ஒன்றாகப் படித்துத் தன் வாழ்வில் ஆறாத தழும்பை ஏற்படுத்திய ரங்கராஜ் என்பதை அறிந்துகொண்டு தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான். பழிவாங்கும் எண்ணத்தோடு தன் பள்ளி நாட்களையும் ரங்கராஜோடு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் அசை போடுகிறான். இவை எதையும் அறியாத ரங்கராஜ், தன் மனைவி கவிதாவை வேலையிடத்தில் விட்டுவிட்டு, குழந்தை நித்யாவோடு தினேஷ் வீட்டுக்கு, ஸ்ரீயைச் சந்திக்கக் கிளம்புகிறான். நடுவழியில் மழையில் மாட்டிக் கொள்கிறான். ராஜை அழைத்து வர தினேஷ், ஸ்ரீயுடன் கிளம்புகிறான். ஸ்ரீ தனக்கு ஏற்பட்ட காயத்தை மேலும் நினைவு கூர்ந்தவாறே ராஜைப் பழி தீர்க்கும் எண்ணத்தில் காரைச் செலுத்துகிறான். ஸ்ரீ பழி தீர்த்தானா? ராஜுக்கு வேலை கிடைத்ததா? அவன் கஷ்டம் தீர்ந்ததா?

*****


ராஜ் இன்னும் யோசித்துக் கொண்டிருந்தான், ஆனால் அவனால் ஸ்ரீயை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. தினேஷ் வீடு இருந்த மொத்தத் தெருவுமே ஏதோ ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட இடம்போல ஆளரவம் இல்லாமல் இருந்தது. அமெரிக்க வீதிகளில் இது சகஜமானாலும் ராஜுக்கு அந்தச் சூழ்நிலையின் நிசப்தம் இன்னும் இறுக்கத்தை ஏற்படுத்தியது. கராஜ் கதவு ரிமோட் தயவில் நிதானமாகத் திறந்தாலும் அந்த இரவு வேளையில் அந்த இறுக்கத்தைக் குலைப்பது போல் நாராசமாக சப்தம் எழுப்பியது. அதன் சப்தம் அடங்கும் நேரத்தில் பின்சீட்டிலிருந்து "உவ்வே..உவ்வே" என்று பெரிதாகச் சப்தம் கேட்டது. ஒரே நேரத்தில் ஸ்ரீயும், ராஜும் திரும்பிப் பார்த்தார்கள். தினேஷ்தான் தலையைப் பிடித்துக் கொண்டு பாதி சரிந்த நிலையில் குடல் வெளியே வந்துவிடும்போல் சப்தம் எழுப்பினான். குழந்தை நித்யா மிரண்டு வீல் என்று கத்தியது. ராஜ் உடனே கார் கதவைத் திறந்து இறங்கி தினேஷைக் கைத்தாங்கலாகப் பிடித்து, "தினேஷ்.. தினேஷ் வீடு வந்துருச்சு. என்ன ஆச்சு உனக்கு. கீழே இறங்கு தினேஷ்" என்று ஏறக்குறைய அவனைப் பின்சீட்டிலிருந்து இழுத்தான்.

ஸ்ரீயும் காரைவிட்டு இறங்கி "சொன்னா கேக்கறதில்லை, கண்ட நேரத்தில சோறு சாப்பிடாம தண்ணி அடிச்சா இப்படித்தான். ரங்கன் நீங்க அவனைக் கைத்தாங்கலா அழைச்சுக்கிட்டு போய் உள்ளே விடுங்க. நான் குழந்தையை எடுத்துகிட்டு காரை லாக் பண்ணிட்டு வரேன்" என்றான். தினேஷ் மேலும் இருமுறை 'உவ்வே உவ்வே" என்றான், ஆனால் நல்லவேளை வாந்தி எதுவும் எடுக்கவில்லை. ராஜ் தினேஷைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தாலும், குழந்தை நித்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான். அது தினேஷ் போட்ட சப்தத்தில் அதிர்ந்து அழத் தொடங்கியது இன்னும் நிறுத்தியபாடு இல்லை. நித்யாவை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லை. தோளில் சாய்ந்திருக்கும் தினேஷையும் கீழே விடமுடியவில்லை. ஒரு தந்தையின் உள்ளுணர்வு உடனடியாக வேலை செய்ய, தன் செல்போனில் கவிதா அழைக்கும் ரிங் டோனை இயக்கி, செல்ஃபோனை நித்யாவின் அருகில் வைத்தான். நித்யா ஸ்விட்ச் போட்டது போல் டக் என்று அழுகையை நிறுத்திவிட்டு கழுத்தை அந்தச் சிறிய இடத்துக்குள் இப்படியும் அப்படியும் திருப்பி அங்கு இல்லாத அம்மாவைத் தேடியது. சற்றே நிம்மதியான ராஜ், "ஸ்ரீ நான் தினேஷை உள்ளே விட்டுட்டு வரேன். நீங்க நித்யாவைப் பாத்துக்கங்க. நானே திரும்ப வந்து எடுத்துக்கறேன்" என்றான்.

"இல்லை ரங்கன். குழந்தையை நான் தூக்கிக்கிட்டு வரேன். இட் இஸ் ஓகே."

"அதுக்கு சொல்ல வரல்லை ஸ்ரீ. நித்யா ரொம்ப நேரமா வெளியிலே இருக்கா. அசிங்கம் பண்ணியிருக்க வாய்ப்பிருக்கு, செக் பண்ணிட்டு, டயபர் மாத்திட்டு உள்ளே எடுத்துப் போகணும்"

"ராஜ் நீங்க தினேஷை முதல்ல உள்ளே கூட்டிகிட்டுப் போங்க. அவன் உங்கமேலே அசிங்கம் பண்ணிடப் போறான். அவனை உள்ளே கூட்டிகிட்டு போகறதை விட குழந்தையைத் தூக்கிகிட்டு வரது ஒரு சிரமமும் இல்லை. எனக்கும் குழந்தை இருக்கு, இதெல்லாம் பழக்கம்தான். யூ கேரி ஆன். குழந்தை பேரு என்ன சொன்னீங்க. ஆங் நித்யா…. ஹலோ நித்யா குட்டி.. பயந்துட்டியா!" சற்றுமுன் குத்தல் பேச்சு பேசியவனா இப்படிப் பேசுகிறான் என்று ராஜ் சற்றே ஆச்சரியப்பட்டாலும், குழந்தையிடம் எல்லாரும் வாஞ்சை காட்டுவதுபோல் ஸ்ரீயும் காட்டுகிறான், இதை வைத்து அவன் தன் வேலை விஷயத்தில் இறங்கி வருவான் என்று நினைப்பதற்கில்லை என்று மனதுக்குள் தெளிவு படுத்திக்கொண்டான்.

தினேஷைத் திறந்திருந்த கராஜ் வழியாகத் தோளில் சாய்த்து, கைத்தாங்கலாக நடத்திக்கொண்டு போனான். இப்போது தினேஷும் சற்று அடங்கியிருந்தான். நல்லவேளை மேலே அசிங்கம் பண்ணாமல் தப்பினோமே என்று ராஜ் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். கராஜைத் தாண்டிப் படிகளின் வழியே வீட்டினுள் நுழைய தினேஷை சற்றே தூக்க வேண்டியிருந்தது. ஆனால் ராஜுக்கு அவன் மனதில் இருக்கும் சுமைகளைத் தூக்குவதைவிட அதிக சிரமமாகப் படவில்லை. உள்ளே படுக்கை அறைக்கு தினேஷை நடத்திச் சென்றான். அவனைப் படுக்கையில் தள்ளிவிட்டு, குளிர்ந்த நீரால் முகத்தைத் துடைத்துத் தெளிவிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

தினேஷ் தெளிந்து எழுந்தால் ஏதாவது வழி பிறக்கலாம். எதுவாயிருந்தாலும் கவிதா வருவதற்குள் தீர்மானமாகிவிட்டால் நல்லது. கவிதாவின் முன்னால் ஸ்ரீ ஏதாவது அவமானப்படுத்தினால் அது பெரிய ரசாபாசத்துக்கு வழி வகுத்துவிடும். உள்ளே தினேஷை அவனது கட்டிலில் கிடத்திவிட்டு, காலணிகளைக் கழற்றிவிட்டு, தினேஷின் கன்னங்களில் மெல்லத்தட்டி, "ஏய் தினேஷ் வீடு வந்துருச்சு எழுந்திரு. கெட் அப் ஐ சே" என்று சொல்லிவிட்டு தண்ணீர் எடுத்து வர ராஜ் உள்ளே பாத்ரூமுக்குள் சென்றான். அதுவரை தளர்ந்து, தள்ளாடி மயங்கிய நிலையில் இருந்த தினேஷ், ஓரக்கண்களால் விழித்து ராஜ் பாத்ரூமுக்குள் போவதைப் பார்த்தான்.

"சாரி நண்பா. உனக்கு ரொம்பக் கஷ்டம் குடுத்துட்டேன் இன்னிக்கு. இன்னும் கொஞ்ச நேரம்தான் பொறுத்துக்க. எல்லாம் நான் திட்டம் போட்டது போலத்தான் நடக்குது. எதிர்பாராமல் உன் கார் நின்னது, கவிதாவுக்கு வேலை போனது எல்லாம் போனஸ் மாதிரி சேர்ந்து கைகுடுக்குது. நான் இன்னும் கொஞ்சநேரம் கண்முழிக்க மாட்டேன். நான் கண்முழிச்சா உனக்கு கஷ்டம். இன்னும் கொஞ்சநேரம் பொறுத்துக்க மை டியர் ஃப்ரெண்ட்" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு, ராஜ் திரும்ப வருவதைப் பார்த்ததும் முழு திருப்தியோடு கண்களை மறுபடியும் மூடிக்கொண்டான்.

கீழே காரின் விளக்குகள் இன்னும் ஒளி உமிழ்ந்த வண்ணம் இருந்தன. வானம் மப்பும் மந்தாரமுமாக மேகம் சூழ்ந்து இருந்ததால், நிலா ஒளியும், நட்சத்திரங்களின் ஒளியும் வெகுவாக மழுப்பப்பட்டு சுற்றி இருளோ என்று இருந்தது. அந்தப் பின்னணியில் பளீர் விளக்குகளோடு கார்மட்டும் ஒளிர்ந்ததும், அதனுள்ளே எந்தக் கவலையும் கபடமும் இல்லாமல், அந்தக் குழந்தை கை கால்களை அசைத்துச் சிரித்தது, ஏதோ தேவர் உலகத்திலிருந்து உதித்ததுபோல மேலும் பிரகாசமாகக் காட்டியது. ஸ்ரீக்கு அவனை அறியாமல் அந்தக் குழந்தையிடம் வாஞ்சை பிறந்தது, எந்தத் தகப்பனையும் போல உடனே தன் குழந்தை சித்தார்த் அதே வயதில் எப்படி இருந்தான், எவ்வளவு இன்பத்தைத் தன் வாழ்வில் சேர்த்தான் என்று யோசித்தான். நித்யாவுக்கு வேடிக்கை காட்டியபடியே அதற்கு டயபர் மாற்றிவிட்டான். இப்போது நித்யா இன்னும் குஷியாக களுக் என்று சிரித்து வேற்றுமுகம் இல்லாமல் ஸ்ரீயோடு விளையாடியது. அந்தச் சில நிமிட நிகழ்வுகள், மறுபடி ஸ்ரீயின் மனப்போராட்டத்தைத் தொடங்கி வைத்தன.

"சே என்னைக்கோ சின்ன வயசுல விளைவு தெரியாமல் செய்த தப்புக்கு, அந்த ரங்கனைப் பழிவாங்கறதா நினைச்சு, இந்த பிஞ்சுக் குழந்தையின் எதிர்காலத்தை இப்பவே சூன்யமாக்கறதா? மத்தவங்க வேதனையிலே சந்தோஷப்படுறது, நம்ம மனசு சந்தோஷத்துக்காக மத்தவங்களைக் கஷ்டப்படுத்தறது இதெல்லாம் மோசமான சுயநல மனோபாவம். இந்தக் குழந்தை என்ன பாவம் பண்ணியது. சரியில்லை. இது சரியில்லை." சிறு வயதிலிருந்து சொர்க்கம் நரகம் கான்சப்டை வைத்து பயமுறுத்தி பயமுறுத்தி ஊட்டப்பட்ட நல்ல எண்ணங்கள், படித்த நீதிக்கதைகள், டாக்டர் சாரியின் அறிவுரைகள் எல்லாம் கலந்த மனசாட்சி தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு பேசியது.

"இந்தக் குழந்தை கஷ்டப்படுவது ஒரு கொலேடரல் டேமேஜ். இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அது இந்தக் குழந்தையின் விதி. நான் கணக்கு முடிப்பது ரங்கனிடம் மட்டுமே. அப்படிப் பார்த்தால் அந்த ரங்கன் செய்த தீமை என்னை மட்டும் பாதிக்கவில்லையே. என்னோடு சேர்த்து என் அப்பா, அம்மா எவ்வளவு கஷ்டம் அனுபவித்தார்கள். அதற்கு யார் பதில் சொல்வது? ரங்கனைப் பழிவாங்குவதுதான் சரி. இவ்வளவு நாள் நான் பட்ட வேதனைகளுக்கு இதுதான் சரியான நியாயம்," உக்கிரமான மனது அடித்துப் பேசி மனசாட்சியை அடித்து விரட்டியது.

"ஐ ஆம் நாட் செல்ஃபிஷ். ஐ அம் கெட்டிங் ஜஸ்டிஸ்" என்று வாய்விட்டுத் தன்னை அறியாமல் சொன்னான். நித்யாவை இன்னும் சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் தன் மனவுறுதி தளர்ந்துவிடும் என்ற பயத்தில், நித்யாவிடமிருந்து பார்வையை விலக்கி, விளக்குகளை அணைத்து, குழந்தையை உள்ளே எடுத்துச்செல்ல நினைத்தான். மறுபடி டாக்டர் சாரி சொன்னது நினைவுக்கு வந்தது.

ஒருமுறை டாக்டர் சாரியின் கிளினிக்குக்கு போயிருந்த போது, சீனுவுக்கு வலிப்பு வந்தது. அதற்கு இரண்டு வாரம் முன்பு டாக்டர் சாரி அவன் எடுத்துக் கொண்டிருந்த மருந்துகளின் டோசேஜைக் குறைத்துப் புதிய மருந்து கொடுக்க ஆரம்பித்திருந்தார். சில காலம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்ததால் சற்றே நிம்மதியாயிருந்த நிலையில் இடிவிழுந்தது. அந்தப் பதட்டத்தில் அப்பாவுக்கு நிலை கொள்ளவில்லை. டாக்டர் சாரி உள்ளே ஃபோனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார், ரிசப்ஷனிஸ்டும், ஒரு ஜூனியர் டாக்டரும் தடுத்ததைப் பொருட்படுத்தாமல் தடதடவென்று டாக்டர் சாரியின் அறைக்குள் நுழைந்து "டாக்டர், பிளீஸ் வெளில உடனே வாங்க. சீனுவுக்கு மறுபடி ஃபிட்ஸ் வந்துருச்சு. ரொம்ப தவிக்கிறான்" என்றார்.
டாக்டர் சாரி கோபப்பட்டு இரைந்து நான் பார்த்ததில்லை. ஃபோனை ஒரு கையால் மூடிக்கொண்டு கத்தினார், "மிஸ்டர் ராகவன். ஏன் இப்படி பதட்டப் படறீங்க. சீனுவுக்கு ஃபிட்ஸ் வந்துருச்சுன்னா, அவனை அங்கே விட்டுட்டு இங்க ஏன் ஓடி வந்தீங்க. வெளிலே என் ஜூனியர் சம்பத் இருக்காரு இல்லை. தவிர இந்த மாதிரி நடந்தா என்ன செய்யணும்னு உங்களுக்குச் சொல்லிக் குடுத்திருக்கேன் இல்லை? நான் ஒரு முக்கியமான கான்வர்சேஷன்ல இருக்கேன். இப்படி பார்ஜ் இன் பண்றீங்களே. டோண்ட் பீ சோ செல்ஃபிஷ்" என்றார். பின்னாலே வந்த ரிசப்ஷனிஸ்ட் "சொல்லச் சொல்ல கேக்காம உள்ளே வந்துட்டாரு டாக்டர். சார் நீங்க வெளில போங்க. டாக்டர் சம்பத் உங்க பையனை ட்ரீட் பண்ணிட்டிருக்காரு," என்றாள்.

எல்லாம் அடங்கி நாங்கள் டாக்டர் சாரியை மறுபடி அன்று பார்க்கும்போது மதியம் இரண்டு மணி. டாக்டர் சாரி இப்போது சகஜ நிலையில் உரையாடினார். அப்பாவால் காலையில் நடந்த சம்பவத்தை மறக்கமுடியவில்லை. முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கன்சல்டிங் முடிந்ததும், டாக்டர் சாரி அதைப்பற்றிப் பேசத்தொடங்கினார். "மிஸ்டர் ராகவன் காலையில உங்களைப் பார்த்து கத்தியதுக்கு நான் சாரி கேட்டுக்கறேன். நான் சப்தம் போட்டதுக்குதான் சாரி சொல்றேன். ஆனா நான் சொன்ன விஷயத்துக்கு வருத்தப்படலை. நீங்க அதை மறந்துடுங்க" என்றார்.

அப்பா சற்றே சோர்ந்த குரலில் "பரவாயில்லை டாக்டர். சீனுவுக்கு ரொம்ப நாள் கழிச்சு அப்படி ஆகவே பதட்டப்பட்டுட்டேன். நீங்க என்னை வெளியே போகச் சொன்னதுகூட வருத்தமில்லை. ஆனா செல்ஃபிஷ்னு சொன்னது எனக்கு சரியாப்படலை. ஒரு ஜீவன் அப்படித் துடிக்கும்போது யாருமே என்னைப்போல பதட்டப்பட்டு என்னவாவது செய்ய நினைக்கிறது மனுஷ இயல்பு தானே?"

டாக்டர் சாரி உடனே பதில் சொல்லாமல், என் அப்பாவை உற்றுப் பார்த்து கண்ணாடியைக் கழற்றினார். அவர் கண்ணாடியைக் கழற்றினால், ஏதோ முக்கியமாக ஒன்று சொல்லப் போகிறார் என்று அர்த்தம். அவருடைய மேனரிஸம் எல்லாம் எனக்கு அப்போது அத்துப்படி. "உங்களை ஒரு கேள்வி கேக்கறேன் அதுக்கு நீங்க உண்மையா பதில் சொல்லணும்" என்று சொல்லிவிட்டு, பதிலுக்கு காத்திராமல் "உங்க கண் எதிரில் ஒரு குழந்தை கடலில் விழுந்தா என்ன செய்வீங்க?" என்றார்.

"அய்யோ காப்பாத்துங்கனு கத்தி, லைஃப் கார்ட், நீச்சல் தெரிஞ்சவங்களைக் காப்பாத்தக் கூப்பிடுவேன்."

"குட் ஆன்சர். சரி விழுந்தது உங்க குழந்தையாயிருந்தா என்ன செய்வீங்க?" இந்தக் கேள்வி அப்பாவை ஆட்டிவிட்டது "வந்து... வந்து... இன்னும் பெரிய அலை ஏதாவது வர்ரதுக்கு முன்னே நானே பாய்ஞ்சு காப்பாத்தக் கடலில் இறங்குவேன்" என்றார்.

"உண்மையான பதில். இன்னும் ஒரு கேள்விக்கு பதில் சொல்லிருங்க போதும். நான் கேட்ட கேள்வி ரெண்டுலயுமே ஒரு குழந்தை கடலில் விழுது. ஆனால் உங்க பதில் ரெண்டுலையும் வேறு. ஏன்?"

"ரெண்டாவது கேள்வியிலே என்னுடைய குழந்தை கடலில் விழுந்தா என்ன செய்வேனு கேட்டீங்க."

"எக்ஸாக்ட்லி. அதைத்தான் நான் செல்ஃபிஷ்னு சொன்னேன். 'என்னுடைய'ன்னு சொன்னதும் உங்க பதில் வேற மாதிரி ஆயிடுச்சு இல்லையா. நான் காலையிலே ஒரு டெர்மினலி இல் பேஷண்டுக்கு நாங்க கடைசி முயற்சியா செய்யற நியூரோசர்ஜரி விஷயமா ஒரு ஸ்பெஷலிஸ்டோட கன்சல்டேஷன்ல இருந்தேன். அதுவும் நம்ம சீனு வயசுடைய ஒரு பையன்தான். எனக்கு எல்லாரும் ஒண்ணுதான். சீனு மாதிரி கோடிக்கணக்கானவங்க இந்த நோய்க்கு ஆளாகியிருக்காங்க. எல்லாருக்கும் ட்ரீட்மெண்ட் கிடைக்கணும். நீங்க சீனு கஷ்டப்படும்போது "என்" பையன் கஷ்டப்படறான்னு பாக்காம, அவன் கஷ்டத்தைத் தீர்க்க என்ன பண்ணனும், இவனை மாதிரி கஷ்டப்படற மத்தவங்களுக்கு என்ன பண்ணலாம்னு பாத்தீங்கன்னா பதட்டமே இருக்காது. உங்களுக்கு நான் சைக்காலஜி லெசன் எடுக்கறதுக்காக இதைச் சொல்ல வரலை. நான் ஃபாலோ பண்ற, எனக்கு நிம்மதியைத் தர்ற சில நல்ல விஷயங்களை உங்களோட ஷேர் பண்ணிக்கிறேன். தட்ஸ் ஆல்," என்றார்.

"எப்பவுமே இந்த 'நான்', 'என்னுடைய' அப்படிங்கிற மனோபாவம் போயிட்டுதுன்னா எந்தக் கஷ்டமும் லைஃப்ல வலிக்காது. பதட்டம் இருக்காது. உங்களோட ஜட்ஜ்மெண்ட்லேயும், மத்தவங்களை நடத்தற விதத்துலேயும் தப்பே பண்ணமாட்டீங்க."

என் அப்பா அவர் கைகளைப் பிடித்துக் குலுக்கி "தேங்க்யூ வெரி மச் டாக்டர். ஐ கம்ப்ளீட்லி அக்ரி வித் யூ. என்னாலே அப்படியே இதை ஃபாலோ பண்ணமுடியுமான்னு தெரியாது. நிச்சயம் முயற்சி பண்ணுவேன். ஆனா ஒண்ணு.. சீனுவுக்கு நீங்க சொல்றது வேதவாக்கு. அவன் நிச்சயம் நீங்க சொல்றதை ஃபாலோ பண்ணுவான். சீனு நிச்சயம் செல்ஃபிஷா இருக்கமாட்டான். நான் காரண்டி அதுக்கு" என்றார்.

காற்று சில்லென்று இப்போது பலமாக வீசியது. ஸ்வெட்டரின் மீது ஜாக்கெட்டைப் போட்டுக்கொண்டு குளிர் தெரியாமலிருக்க ஜிப்பை இழுத்து விட்டுக்கொண்டான் ஸ்ரீ. நித்யாவுக்கு ஒரு கம்பளித்துணியைப் போர்த்தி, அதன் தலை, காதுகளை மறைத்து தொப்பியை இழுத்துவிட்டு, காரைவிட்டுத் தூக்கினான். "சீனு நிச்சயம் செல்ஃபிஷா இருக்கமாட்டான். நான் காரண்டி அதுக்கு" என்ற அப்பாவின் வார்த்தைகள் அந்தக் குளிர்ந்த காற்றோடு முகத்தில் அடிப்பதுபோல ஓலமிட்டன.

நித்யாவை அதன் பேசினெட் கூடையில் வசதியாக அமர்த்தி, வெளியில் எடுத்தான். கார் கதவுகளை அடைத்துவிட்டு, வீட்டுக்குள் மெல்ல நடந்தான். குழந்தை அந்தக் கூடைக்குள் வேகமாகக் கை, கால்களை அசைத்தது. சீக்கிரம் உள்ளே போகவேண்டும், இல்லாவிட்டால் இந்தக் குளிரில் குழந்தைக்கு ஜன்னி வந்துரும் என்று நினைத்து சற்றே எட்டி நடையைப் போட்டான். இப்போது குழந்தையிருந்த கூடை இன்னும் வேகமாகக் குழந்தையின் கைகால் உதைப்பில் அசம்பாவிதமாக ஆடத் தொடங்கியது.
நித்யாவைப் பார்த்தால் பழிவாங்கும் எண்ணம் மாறிவிடுமோ என்ற நினைப்பில் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்த ஸ்ரீ, இந்தக் கூடையின் ஆட்டத்தில் அவளைப் பார்க்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டான். இப்போது அவன் வீட்டுக்குள்ளே நுழைந்துவிட்டான். இன்னும் கூடையின் ஆட்டம் நிற்கவில்லை. கூடையைக் கீழே வைத்துவிட்டு நித்யாவைப் பார்த்தான். இன்னும் அது குலுங்கிக் கொண்டிருந்தது. "பாப்பாவுக்கு குளிருதா? வீட்டுக்குள்ளே வந்துட்டோம்." என்று சொல்லி, குழந்தையை வாரி எடுத்து, உடல் சூட்டில் அமர்த்த நினைத்தபோது தான் உன்னிப்பாக நித்யாவை கவனித்தான்.

நோ. இது குளிர் நடுக்கமில்லை. ஓ நோ! இது எனக்கு ரொம்பப் பழக்கமான நடுக்கம். அய்யோ இந்தக் குழந்தைக்கா! குழந்தையை மெல்ல எடுத்து மெத்தென்ற போர்வையில் கிடத்திப் பரபரவென இயங்கத் தொடங்கினான். தினேஷை எழுப்பும் முயற்சியைக் கைவிட்ட ராஜ் இப்போது மாடிப்படியிலிருந்து இறங்கி வரும் சப்தம் கேட்டது.

(தொடரும்)

சந்திரமௌலி
Share: 




© Copyright 2020 Tamilonline