Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | குறுநாவல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சிறுகதை
பெண்குலத்தின் வெற்றியடி
பிராயச்சித்தம்
- ஸ்ரீதர் சதாசிவன்|ஏப்ரல் 2012|
Share:
"ஹே மாம்! ஃப்ளைட் ஹாஸ் லேண்டட்" சுபாவின் செல்பேசியில் "பீப்" என்ற சத்தத்துடன் வந்து சேர்ந்தது ஸ்ருதியின் செய்தி. "ப்ளைட் வந்தாச்சு டியர்" பக்கத்திலிருந்த ராகவனைப் பார்த்துச் சொன்னாள் சுபா.

காலை மணி பதினொன்று. நியூ ஜெர்சி நியூவர்க் விமான நிலையம், டெர்மினல் சி. சுபாவும், ராகவனும் தங்களது மகள் ஸ்ருதியை வரவேற்பதற்காக பிரின்ஸ்டனிலிருந்து வந்திருந்தார்கள். ஸ்ருதிக்கு கலிஃபோர்னியாவில் சிஸ்கோ நிறுவனத்தில் வேலை. இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஸ்ருதி நியூ ஜெர்சி வந்து அம்மா, அப்பாவைப் பார்ப்பது வழக்கம். முக்கால்வாசி, நீண்ட வார இறுதிகளில் வருவாள். இந்தமுறை இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு முக்கியமான ஒரு காரணத்திற்காக வருகிறாள்.

"நீ பேசிப் பாரு. உங்க அப்பா நீ சொன்னா கேக்க சான்ஸ் இருக்கு" என்று இரண்டு வாரங்களுக்கு முன்னால் தொலைபேசியில் சுபா மகளுக்கு அழைப்பு விடவே, உடனடியாக அலுவலகத்தில் விடுமுறைக்குச் சொல்லி, பிரயாண ஏற்பாடுகள் செய்து, இதோ இன்று நியூ ஜெர்சி வந்து இறங்கியிருக்கிறாள் ஸ்ருதி.

விஷயம் இதுதான். அடுத்த மாதம், ராகவன்-சுபாவின் மூத்த மகனும், ஸ்ருதியின் அண்ணனுமான சித்தார்த்துக்கு நிச்சயதார்த்தம். சித்தார்த் ரொம்பவும் திறமையான, பொறுப்பான, வெற்றிகரமான வாலிபன். குழந்தைகள் இருவர்மீதும் ராகவன், சுபாவுக்குக் கொள்ளை பிரியம். நன்கு படித்து, கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாமல், எல்லோரும் போற்றும் நல்ல குணாதிசயங்களுடன் குழந்தைகள் வளர்ந்து, வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பது, இருவரது வளர்ப்புக்கு ஒரு சான்றிதழ்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு சித்தார்த், தனது கேர்ள் ஃப்ரெண்டு அமாண்டாவை பற்றி சொன்ன பொழுது, "டேடிங்" தானே என்று ராகவன் அதைப்பற்றிப் பெரிதாக எதுவும் எண்ணவில்லை. அமாண்டா போன வருடம் தேங்க்ஸ் கிவிங் விடுமுறைக்கு வந்தபொழுதுகூட, ராகவன் அதை சீரியசாகக் கருதவில்லை அல்லது கருத விரும்பவில்லை. போன வாரம், சித்தார்த் அமாண்டாவுக்கு 'ப்ரொபோஸ்' பண்ணியதாக போன் செய்தபொழுது, ராகவனுக்குப் பெரும் அதிர்ச்சி, நிதர்சனம் உரைத்தது. சுபாவும், ஸ்ருதியும் சந்தோஷத்தில் வானுக்கும் பூமிக்கும் குதித்தார்கள். ராகவன் கொண்டாடவில்லை. அவனுக்கு இந்தச் சங்கமத்தில் துளியும் இஷ்டம் இல்லை என்று சுபாவிடம் சொன்னபொழுது, கொதித்துப் போனாள் சுபா.

"என்ன சொல்ற டியர்? ஆர் யூ சீரியஸ்?"

"ஆமாம். நான் போன வருஷம்கூட அவன்கிட்ட இது ஒத்து வராதுனு சொன்னேன். ஒரு இந்தியப் பொண்ணா பார்த்திருக்கலாம்."

"ஓ வெல், பாக்கலை. என்ன இப்போ? அமாண்டாக்கு என்ன குறைச்சல்? அழகான, திறமையான, அனுசரணையான பொண்ணு."

"நம்ம கலாச்சாரத்துக்கு ஒத்துவராது சுபா."

"வாட்? இது அமெரிக்கா. இருபத்தியொன்றாவது நூற்றாண்டு. கற்காலம் இல்லை" எரிச்சல் வந்தது சுபாவிற்கு.

"எனக்கு இதுல உடன்பாடு இல்லை சுபா. அவ்ளோதான். நாம எங்கேஜ்மென்ட் பார்டிக்கு போகவேண்டாம்."

ராகவன் எப்பொழுதும் சித்தார்த்மேல் தேவைக்கதிகமான கண்டிப்புடன் நடந்து கொள்கிறான், என்பது சுபாவின் குற்றச்சாட்டு. அதனாலேயே சித்தார்த் மீது சற்று அதிகக் கரிசனம் சுபாவுக்கு. சித்தார்த்துக்காகப் பலமுறை ராகவனோடு சண்டை போட்டிருக்கிறாள். இந்த முறையும் அப்படித்தான்.

"வாட் நான்சென்ஸ்? நீ என்ன பேசறேனு தெரிஞ்சுதான் பேசறையா? நம்ம குழந்தை நிச்சயதார்த்தம், நாம கண்டிப்பாப் போறோம்!"

"உனக்கு வேணும்னா போ. நான் தடுக்கலை. அதே மாதிரி நீ என்னை கட்டயப்படுத்தாத!" முடிவாகச் சொன்னான் ராகவன்.

"இந்த பாரு டியர், சித் கல்யாணம் எனது நெடுநாளைய கனவு. அதுல தேவையில்லாத எந்த டிராமாவும் வேணாம். ப்ளீஸ்!" விடுவதாய் இல்லை சுபா.

இதைத் தொடர்ந்து, ராகவனுக்கும் சுபாவுக்கும் தினசரி வாக்குவாதம். ராகவன் பிடிவாதமாக இருந்தான். சுபா சொன்ன எந்த வாதத்தையும் அவன் ஏற்கவில்லை. சுபாவால் தாங்க முடியவில்லை. குடும்பத்தில் நடக்கும் முதல் நல்ல நிகழ்ச்சி, அதை மகிழ்ச்சிகரமாக நடத்தவிடாமல் ராகவன் இப்படிப் படுத்துகிறானே என்ற கோபம் அவளுக்கு. சித்தார்த் பேசினால் எந்தப் பயனும் இருக்காது, நிலைமை இன்னும் மோசமாகத்தான் போகும் என்று உணர்ந்த சுபா, ஸ்ருதியிடம் பேசினாள்.

ஸ்ருதி அப்பாவின் செல்லப் பெண். ராகவனை அணுக அவள்தான் சரி. இளையவள் என்றாலும், ஸ்ருதிக்கு பொறுமை, நிதானம் அதிகம். நல்ல மனமுதிர்ச்சி கொண்டவள். குடும்பப் பிரச்சனைகளில், எல்லோருக்குமிடையே பாலமாக, பக்குவமாக செயல்படுவது ஸ்ருதிக்குக் கைவந்த கலை. எப்படியாவது அப்பாவிடம் மனம்விட்டுப் பேசி, பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்ற உறுதியில் இன்று நியூஜெர்சி வந்திருக்கிறாள் ஸ்ருதி.

ராகவன் ஒன்றும் பேசாமல், அமைதியாகவே காரை ஒட்டிக்கொண்டு வந்தான். வீட்டுக்கு வந்து, ஸ்ருதி குளித்து, எல்லோரும் சாப்பிட உட்கார்ந்த பொழுது, ஸ்ருதி மெல்லப் பேச்சை ஆரம்பித்தாள். "என்னப்பா? நீ என்ன டிசைட் பண்ணியிருக்க?" என்றாள் ராகவனைப் பார்த்து தயக்கமாக.

"எதைப்பத்தி?" ராகவனுக்குத் தெரியாமல் இல்லை, இருந்தாலும் அவன் அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை.
"என்ன இது கேள்வி? பாத்தியா ஸ்ருதி?" எரிச்சல் பொத்துக்கொண்டு வந்தது சுபாவுக்கு.

"நீங்க ரெண்டு பேருமா சேர்ந்துகிட்டு, என்னை இன்டராகேட் பண்ண நினைச்சா, அதுக்கு நான் ஆள் இல்லை. ஸாரி" என்று மேஜையைவிட்டு விருட்டென்று எழுந்து போனான் ராகவன்.

"அம்மா. நீ ஏன் இடைல பேசற?" என்று சுபாவை நொந்துகொண்டாள் ஸ்ருதி.

"முடியல ஸ்ருதி. அப்படி என்ன பிடிவாதம்? 'சித்'த உங்க அப்பா இப்படி நடத்தறதப் பாத்தா மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு," சுபாவின் குரலில் வருத்தம் தெரிந்தது. "அம்மா!" என்று எழுந்து அவளை அணைத்துக்கொண்டாள் ஸ்ருதி. "ரிலாக்ஸ். நான் பேசறேன். ஐ திங்க் ஐ நோ வாட் த ப்ராப்ளம் இஸ்."

"என்ன?" புரியாமல் கேட்டாள் சுபா.

"அத்தை!" என்று பதில் வந்தது ஸ்ருதியிடமிருந்து.

*****


ஸ்ருதிக்கு இன்றும் அந்த நாள் நினைவில் இருக்கிறது. ஸ்ருதியும் சித்தார்த்தும் அப்பொழுது குழந்தைகள். இந்தியாவிலிருந்து வந்தது அந்த தொலைபேசி அழைப்பு. ராகவனின் வீட்டில் பிரச்சனை. அவன் தங்கை காயத்ரி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்திருந்தாள். காயத்ரிக்கு அப்பொழுது இருபத்தி ஆறு வயது. அவளுடைய கல்லூரி சிநேகிதனும், உடன் வேலை செய்பவனுமான மதுவின் மீது காயத்ரிக்கு காதல். ராகவனுக்கும் அவனது பெற்றோர்களுக்கும் அதில் எள்ளளவும் சம்மதம் இல்லை.

காரணம் மது வேற்று ஜாதி. காயத்ரி பிடிவாதமாக இருந்தாலும், அவர்கள் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. முதலில் வெறுமனே எதிர்த்து வந்தவர்கள், பின்பு மெதுவாக காயத்ரிக்கு மாப்பிள்ளை தேட துவங்கினார்கள். காயத்ரி சுதாரித்தாள். வீட்டை விட்டு வெளியேறி, மதுவை திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தாள்.

"என்ன தைரியம் உனக்கு? இன்னிக்கு மட்டும் நீ வீட்டை விட்டு போன, உனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த உறவும் கிடையாது" தொலைபேசியில் இரைந்தான் ராகவன்.

"அண்ணா..கோவப்படாத. ஐ லவ் மது. என்னால என் மனச மாத்திக்க முடியாது. புரிஞ்சிக்கோ. ப்ளீஸ்" கெஞ்சினாள் காயத்ரி.

"உனக்காக நாங்க எல்லாரும் வளைஞ்சு குடுக்கணுமா? முடியாது. முடிவா சொல்றேன், நீ மட்டும் இன்னிக்கு வீட்டைவிட்டுப் போன, நீ எங்களை பொருத்தவரைக்கும் செத்துட்ட!" தொலைபேசியை துண்டித்தான் ராகவன்.

அதுதான் காயத்ரியிடம் அவன் கடைசியாக பேசிய வார்த்தைகள். காயத்ரி வீட்டை விட்டு வெளியேறி மதுவை திருமணம் செய்துகொண்டாள். குடும்பம் அவளது உறவை துண்டித்தது.

சில மாதங்களில் அவள் கருத்தரிக்க, ராகவனின் அம்மாவிற்கு மனசு கேட்கவில்லை. அவளது மகன்கள் இருவரும் எதிர்த்தாலும், காயத்ரியை போய் பார்த்தாள், வீட்டிற்கு அழைத்து வந்தாள். முதலில் அவளை ஒதுக்கினாலும், மெதுவாக குடும்பத்தில் ஒவ்வொருவராக அவளையும், மதுவையும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஆனால் ராகவனிடம் எந்த மன மாற்றமும் இல்லை. காயத்ரி மூன்று, நான்கு தடவை ராகவனுடன் தொலைபேசியில் பேச முயன்றாள். அவள் குரல் கேட்டவுடன் தொலைபேசியை துண்டித்தான் ராகவன். "நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். கோவம் வேண்டாம், என்னோடு பேசு" என்று பல ஈமெயில்கள் எழுதினாள். ராகவன் பதில் அனுப்பவில்லை. காயத்ரியின் பெயரைக்கூட கேட்க அவன் விரும்பவில்லை. "உன் குடும்பம், உன் முடிவு டியர்" என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டாள் சுபா.

சில மாதங்களில் சொல்ல முடியாத சோகம் ஒன்று நிகழ்ந்தது. காயத்ரியின் குழந்தை பிறந்த இரண்டாவது நாளே, இறந்து போனது! ராகவனின் அம்மா போனில் கதறினாள் "பச்ச உடம்புக்காரி, தலை பிரசவம். இப்படி ஆகிப் போச்சே!" ராகவன் பதில் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்தான்.

"அவகிட்ட பேசுப்பா! நீ அவகூட பேசறதில்லைனு அவளுக்கு ரொம்பவே வருத்தம். இந்த சமயத்துல அவளுக்கு நீ ஆறுதல் சொன்னா, கொஞ்சம் தெம்பு வரும். பாவம் சின்னப்பொண்ணு, ரொம்பவே மனசு உடைஞ்சு போயிருக்கா" கெஞ்சினாள் அம்மா. ராகவன் அப்பொழுதும் ஒன்றும் சொல்லவில்லை. அவன் மனம் சிறிதும் இளகவில்லை.

ராகவனை கெட்டவன் என்று சொல்லிவிட முடியாது. உலகில் எல்லோரிடமும் ஒரு சில கெட்ட குணங்கள் கண்டிப்பாக இருக்கும். ராகவனுக்கு வரட்டு பிடிவாதம், ஈகோ இரண்டும் ரொம்பவே அதிகம். "முயலுக்கு மூன்றே கால்" என்று முரண்டு பிடிப்பான். தான் ஒன்று நினைத்தால், அதுதான் சரி அவனுக்கு.

வருடங்கள் ஓடினாலும், அவன் தனது முடிவில் அப்படியே நின்றான். காயத்ரியை அவன் மன்னிக்கவே இல்லை.

*****


பிரிட்ஜ்வாட்டர் பெருமாள் கோவில். வியாழக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை. தரிசனம் முடித்து, பிரகாரத்தில் அமர்ந்தார்கள் ராகவனும், ஸ்ருதியும். காரணமாக சுபா வீட்டில் தங்கிவிட்டாள்.

"ஐ லவ் திஸ் டெம்பில்" என்றாள் ஸ்ருதி ராகவனைப் பார்த்து.

"ஹ்ம்ம்" குனிந்து நிலத்தை வெறித்துக் கொண்டிருந்தான் ராகவன்.

"இங்க வந்தாலே மனசுக்கு ஒரு நிம்மதி, இல்லப்பா?"

"ஹ்ம்ம்"

"கடைசியா எப்போ வந்தோம்"

"ஞாபகம் இல்லை"

"மே மாசம்! சித் பிறந்த நாளைக்கு" என்று நினைவுபடுத்திச் சொன்னாள் ஸ்ருதி.

"............."

"அப்பா..." மெதுவாக அவன் கைகளைப் பற்றி தடவினாள் ஸ்ருதி. "கோவப்படாத! ஐ நோ யூ லவ் அஸ். சித்மேல உனக்கு எவ்ளோ பிரியம்னு எனக்கு தெரியும்."

மீண்டும் மௌனம்.

"அவன் வாழ்க்கைல இது ஒரு முக்கியமான, சந்தோஷமான மொமென்ட். நாம எல்லோரும் அவன்கூட இருக்கணும். அதுதானே குடும்பம், சொல்லு!"

"அவன் ஒரு இந்திய பொண்ணா பாத்திருக்கலாம்ல?" தொண்டையைச் செருமிக்கொண்டு கேட்டான் ராகவன்.

"பாத்திருக்கலாம். ஆனா அவனுக்கு அமாண்டாவைப் பிடிச்சிருக்கு. இட்ஸ் ஹிஸ் லைஃப்"

"அது எப்படிமா? அப்போ பெத்தவங்க, கூடப்பிறந்தவங்க இவங்களுக்கெல்லாம் ஒரு மதிப்பும் இல்லையா?" இன்னுமும் குனிந்த தலை நிமிராமல் பேசினான் ராகவன்.

"கூடப்பிறந்தவங்கனு நீ யாரச் சொல்ற? எனக்கு முழுச் சம்மதம்" என்று அழுத்தமாய்ச் சொன்னாள் ஸ்ருதி.

"எனக்குச் சம்மதம் இல்லை" ராகவனின் குரல் உயர்ந்தது.

எதிர்த்து பதில் பேசவில்லை ஸ்ருதி. பேசாமல் இருந்தாள். சிறிது நேர அமைதிக்குப் பிறகு, தயங்கித் தயங்கி மீண்டும் ஆரம்பித்தாள். "சரி, நான் ஒண்ணு கேக்கட்டா? டென்ஷன் ஆகக்கூடாது."

"ஹ்ம்ம் கேளு"

"காயத்ரி அத்தைக்கும், இதுக்கும் எதுவும் கனெக்‌ஷன் இருக்கா? இஸ் இட் பாதரிங் யூ?"

குனித்து நிலத்தை வெறித்துக்கொண்டிருந்த ராகவன், திடுக்கிட்டுத் திரும்பினான். "ஐ நோ டாட், உனக்கு இந்த டாபிக்கைப் பத்திப் பேச இஷ்டம் இல்லை, ஐ நோ. ஆனா நீ பேசித்தான் ஆகணும். யூ ஹேவ் டு. அப்போதான் உனக்கு ஒரு தீர்வு கிடைக்கும். க்லோஷர்!"

"................"

"போன வருடம் அத்தை இறந்து போயிட்டாங்கன்னு நியூஸ் வந்தப்போகூட நீ எதையும் வாயைத் திறந்து சொல்லல. உனக்கு இன்னும் அவங்கமேல கோவமா?"

"அது .. வந்து" பேச ஆரம்பித்த ராகவனின் குரல் திக்கியது. கண்களில் லேசாக ஈரம் படர்ந்தது.

"இட்ஸ் ஓகே. இட்ஸ் ஓகே!" என்று அவன் கைகளை அழுத்தினாள் ஸ்ருதி.

மீண்டும் அமைதி. ராகவன் இரண்டு நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. கண்களை மூடி, பிரகாரத் தூணில் சாய்ந்து கொண்டான். ஸ்ருதி அமைதியாக இருந்தாள். ராகவனுக்கு அந்த இடைவெளி தேவை என்பது அவளுக்குப் புரிந்தது.

"பத்தொன்பது வருஷம்!" என்று கண்ணை மூடியவாறே சொன்னான் ராகவன். "பத்தொன்பது வருஷம், நான் அவகூட பேசலைமா, வேற ஜாதில கல்யாணம் பண்ணிகிட்டதுகாக."

"தெரியும்பா" குரலை ரொம்பவே தாழ்த்தி, சன்னமாகச் சொன்னாள் ஸ்ருதி.

"அவ சாவுக்குக்கூட நான் போகலை..."

ஒன்றும் சொல்லவில்லை ஸ்ருதி. ராகவன் மனதில் இருப்பதைக் கொட்டித் தீர்க்க வேண்டும். அதற்கான சமயம், சந்தர்ப்பம் இது. வார்த்தைகளைக் குறைத்தாள் அவள்.

காயத்ரி போன வருடம் மார்பகப் புற்றுநோய் பாதித்து இறந்து போனாள். இரண்டு குழந்தைகளையும், மதுவையும் விட்டுப் பிரிந்து போனாள். கேசவன் மூலமாகச் செய்தி வந்தபொழுது, ராகவன் வாயைத் திறந்து ஒன்றும் சொல்லவில்லை என்றாலும், அவன் முகத்தில் அதிர்ச்சியும், வேதனையும் அப்பட்டமாகத் தெரிந்தன.

"உனக்கு ஞாபகம் இருக்காது. அவளுக்கு மூணு குழந்தைங்க. முதல் குழந்தை இறந்து போச்சு. இரங்கல் கேட்டுக்கூட நான் ஒரு போன் பண்ணலை அவளுக்கு" என்று சொன்னபொழுது ராகவன் குரலில் நடுக்கம் அதிகரித்தது, கண்களில் கண்ணீர் தாரையாகக் கொட்டியது.

"டாட்! டாட்! இட்ஸ் ஓகே," என்று அவன் தோள்களைப் பிடித்தாள் ஸ்ருதி.

"எல்லாம் எதுக்காக? அவ புருஷன் வேற ஜாதிங்கறதுகாக! அப்போ என்னமோ அது கொலைக் குத்தமா தோணிச்சு. இப்போ யோசிச்சுப் பாத்தா என்ன முட்டாள்தனம்னு புரியுது."

"........"

"இன்னிக்கு சித் வேற இனத்துல கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிச்சா, என்னைப் போல 'ஹிபாகிரட்' வேற யாரு இருக்கமுடியும் சொல்லு? உங்க அத்தைக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?"

"............"

"என்னை மட்டும் தூக்கி எறிஞ்சயே, உன் பிள்ளை பண்ணினா மட்டும் உனக்கு சம்மதமானு, உங்க அத்தை என்னை கேக்கறாம்மா" பொது இடம் என்றுகூட யோசிக்காமல் ராகவன் கதறி அழ ஆரம்பித்தான்.

"ஓ காட்! டாட்! ஐ யம் சோ ஸாரி" என்று அவன் தலையை வருடினாள் ஸ்ருதி. அழாதே என்று சொல்லவில்லை. ராகவன் அழுது தீர்க்க வேண்டும்.

சில நிமிடங்களில் ராகவன் தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டான். கைகளால் கண்களை துடைத்துக் கொண்டான். "சித் வாழ்க்கைல நான் பங்கு எடுத்துக்க முடியாதும்மா. எனக்கு அதுல ரொம்பவே வருத்தம்தான். ஆனா அதுதான் சரி. அதுதான் நியாயம். அதுதான் எனக்கு நான் கொடுத்துக்கற தண்டனை."

"நோ டாட். நோ! யூ ஆர் ராங்!" இது பேச வேண்டிய தருணம் என்று புரிந்தது ஸ்ருதிக்கு. "அப்படிச் செய்யறதுனால நீ மறுபடியும் அத்தையைக் காயபடுத்தற"

"............." குழப்பமாய் ஸ்ருதியை பார்த்தான் ராகவன்.

"அத்தையை ஒதுக்கி வெச்ச மாதிரியே, சித்த ஒதுக்கினா, அது தப்பு. அது உனக்கு தண்டனை இல்லை"

"............."

"அத்தையோட நீ கழிக்க முடியாம போச்சே அந்தப் பத்தொம்பது வருஷம், அதுதான் உனக்கு தண்டனை, உன் இழப்பு"

"............."

"யெஸ் டாட். ஐ யாம் ஸோ ஸாரி பார் யுவர் லாஸ்"

"தாங்க்ஸ்மா" மெதுவான குரலில் சொல்லி, அவள் கைகளைப் பற்றினான் ராகவன்.

"நீ சித்தோட முடிவ முழுமனசோட ஏத்துக்கணும்னுதான் அத்தை விரும்புவாங்க. அப்படிப் பண்றதுதான் நீ அவங்களுக்கு, அவங்க காதலுக்கு, அவங்க வாழ்க்கைக்கு செய்யற மரியாதை. உன்னோட பிராயச்சித்தமும் அதுதான்."

"யூ திங் சோ? அது என் சுயநலம் இல்லை? பாரபட்சம் இல்லை? ஹிப்பாக்ரஸி இல்லை?"

"இல்லை. கண்டிப்பா இல்லை. ட்ரஸ்ட் மீ!" அவனை கண்ணுக்குக் கண் பார்த்து உறுதியாகச் சொன்னாள் சுபா.

"ஹ்ம்ம்"

"இப்போ உடனே நீ எந்த முடிவும் எடுக்க வேண்டாம். நல்லா நிதானமா யோசிச்சுப் பாரு, உனக்கே புரியும். உன் மனசுக்கே அந்தத் தெளிவு வரும். என்ன?"

"சரி" என்றான் ராகவன்.

வீட்டுக்குத் திரும்பியதும் சுபா ஆர்வமாக ஸ்ருதியிடம் கேட்டாள். "என்னாச்சு? உங்க அப்பா மனசு மாறுமா?"

"ஐ திங் ஸோ" என்று நம்பிக்கையாய்ச் சொன்னாள் ஸ்ருதி.

*****


இரண்டு வாரங்கள் கழித்து -

மது தனது ஈமெயிலைத் திறந்தபொழுது, "ஹலோ" என்ற சப்ஜக்டுடன் தெரிந்தது அந்த ஈமெயில். யாரிடமிருந்து என்று பார்த்தபொழுது "ராகவன்" என்று சொன்னது கணிப்பொறி

ஸ்ரீதர் சதாசிவன்,
நியூ ஜெர்சி
More

பெண்குலத்தின் வெற்றியடி
Share: 
© Copyright 2020 Tamilonline