Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | குறுநாவல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-9)
- கதிரவன் எழில்மன்னன்|மார்ச் 2012|
Share:
இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். ஷாலினி தூய தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றி சூர்யாவுக்கும் கிரணுக்கும் எடுத்துக் கூறி இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு விண்ணப்பிக்கிறாள். சூர்யாவும் கிரண், ஷாலினி இருவருடன் அக்வாமரீன் என்னும் அந்நிறுவனத்துக்குச் சென்று அங்கு சந்தித்த யாவ்னா என்ற இளம்பெண்ணை, அவளுடைய ஓட்டப் பயிற்சி, வரவேற்பறையின் கலையமைப்பு ஆகிவற்றைக் கூர்ந்து கவனித்து, கணித்து தன் திறனில் நம்பிக்கை பெறச் செய்கிறார். பிறகு யாவ்னா மூவரையும் ஆராய்ச்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்று பலதரப்பட்ட உப்பகற்றல் நுட்ப சாதனங்களைப்பற்றி விவரிக்கிறாள். ஆவியாக்கல் (distillation), எதிர்ச் சவ்வூடு பரவல் (reverse osmosis) போன்ற எளிதான பழைய நுட்பங்களைப் பற்றிக் கூறிவிட்டு புதுநுட்பங்களைப் பற்றி விவரிக்க ஆரம்பிக்கையில் நிறுவனர் தாமஸ் மார்ஷ் வந்துவிடவே, அவரை யாவ்னா அறிமுகப்படுத்தினாள். தாமஸின் குடும்பத்தைப் பற்றி சூர்யா யூகித்து தாமஸுக்குத் தன்மேல் பெரும் நம்பிக்கை பிறக்கச் செய்தார். தாமஸ் நீருப்பகற்றல் துறையின் நவீன நுட்பங்களைப் பற்றி விவரிக்கலானார். தாமஸ் நீருப்பகற்றல் துறையின் சில நவீன நுட்பங்களைப் பற்றி விவரித்தபின் என்ன நடக்கிறது என்று பார்ப்போமா?

*****


தனது யூகத்திறமையாலேயே தாமஸின் அவநம்பிக்கையைத் தகர்த்து பிரமிக்க வைத்த சூர்யா, மேற்கொண்டு பாஸரல் வழிமுறையைப் பற்றிய தன ஞானத்தைக் காட்டி, தூய தண்ணீர் உற்பத்தித் துறையில் தனக்கிருந்த ஆழத்தை எடுத்துக்காட்டி விடவே அசந்தே போன தாமஸ், கிரண் அக்வாமரீனின் நுட்பம் மற்ற நுட்பங்களை மேற்கொண்டு சேர்ப்பித்த வெறும் கலப்படமா என்று கேட்டதும் கோபமடைந்தாலும், பிறகு தணிவுற்று, தமது சொந்த நுட்பங்களைப் பற்றிப் பெருமிதத்துடன் விவரிக்கலானார். மிக மேற்பூச்சாகப் பார்த்தால் பல நுட்பங்களின் கலவையாகத் தெரிந்தாலும், அக்வாமரீன் சில புதிய நுட்பங்களை உருவாக்கிச் சேர்த்துள்ளதாகவும், பழைய நுட்பங்களைக்கூட அப்படியே பயன்படுத்தாமல், அவற்றின் சிறப்பான அம்சங்களைப் பெரும் பலனளிக்கும் வகையில் சேர்த்ததேகூட ஒரு புது நுட்பமாகும் என்று கூறினார்.

சூர்யா ஆர்வத்துடன், "சரி, அப்படியானால் அக்வாமரீனுடைய விசேஷ நுட்பங்களைப் பற்றி முதலில் விவரியுங்களேன். ஒருங்கிணைச்சு மேம்படுத்தியிருக்கறதைப் பத்தி அப்புறம் பார்க்கலாம்" என்று தூண்டினார்.

தாமஸும் விம்மிய பெருமிதத்துடன் தான் கண்டுபிடித்த அடிப்படை நுட்பங்களை விளக்கலானார். "எங்களுடைய சொந்த உயர்நுட்பம்னா ஒண்ணில்லே, ரெண்டில்லே, மூணு நுட்பங்களை முக்கியமானதா சொல்லலாம்."

கிரண் குறுக்கிட்டான். "அப்பாடியோவ். மூணு புது நுட்பங்களா, பரவாயில்லையே நாங்க முந்தின கேஸ்ல பார்த்தப்போ ரோபாட் விஷயத்துலதான் இவ்வளவு புது நுட்பங்களை உருவாக்கியிருந்தாங்க... ஹூம் சொல்லுங்க ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கு."

தாமஸ் முறுவலுடன், ஆத்மார்த்தமான உத்வேகத்துடன் தொடர்ந்தார். "சரிதான் கிரண். எங்க துறையிலயும் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களும் எதாவது ஒரு மூலையிலதான், அதுவும் குறுகியதான சிறிதளவு முன்னேற்றங்களைத்தான் செஞ்சுக்கிட்டிருக்காங்க. அதுனாலதான் உப்பகற்றல் துறை உலகத்துக்குத் தேவையான அளவு வேகமா முன்னேறலை. ஆனா என் குறிக்கோள் என்னன்னா, ஜான் கென்னடி சந்திரனில் மனிதர்களை நடக்க வைப்போம்னு சொல்லி விண்வெளிப் பயணத்துக்கு ஒரு பெரிய முன்னேற்றம் அளிச்ச அளவுக்கு, உப்பகற்றல் துறையிலயும் ஒரு பெரிய க்வாண்ட்டம் ஜம்ப்புன்னுவாங்களே, அந்த மாதிரி ஒரேயடியாக ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் காணனும்ங்கறதுதான். அதுனாலதான் பல பெரிய புது நுட்பங்களையும் உருவாக்கி, வேறு நுட்பங்களையும் முன்னேற்றி ஒருங்கிணைச்சுக்கிட்டிருக்கேன்."

ஷாலினி பாராட்டினாள். "ரொம்ப நல்ல குறிக்கோள். உலகத்துல, இந்தியாவின் பல மாநிலங்கள் உட்பட, தூய தண்ணீர்ப் பற்றாக் குறையால தவிக்கற இடங்களுக்கு வரப்பிரசாதமா வரட்டும்" என்றாள்.

தாமஸ் தலையாட்டி, "ரொம்ப சரியாச் சொன்னீங்க ஷாலினி" என்று ஆமோதித்துவிட்டு, அக்வாமரீனின் பெரும்புதுமை நுட்பங்களைத் தொடர்ந்து விளக்கலானார்.

"முதலாவதா, வெப்பத்தை வச்சு உப்பணுக்களை விலக்கற நுட்பத்தைப் பத்திச் சொல்றேன்..."

கிரண் மிதமிஞ்சிய ஏமாற்றத்துடன் இடைமறித்தான். "வெப்ப நுட்பமா? அதைத்தான் ஏற்கனவே அலசிக் கிழிச்சாச்சே! இதுல என்ன புதுமை?"

தாமஸ் சிரித்தார். "கிரண், வெப்பம்னாலே கொதிக்க வைக்கறது மட்டுமில்லை. அறிவியல், அதைச் சில புதுமையான விளைவுகளுக்கும் பயன்படுத்தும் கோட்பாடுகளைக் காட்டியிருக்கு. உதாரணமா, சுத்த சக்திக்கு புவிவெப்பத்தை வச்சு மின்சாரம் உற்பத்தி செய்யறதைச் சொல்லலாமே."

கிரண் சற்றே புரிந்த உணர்ச்சியுடன் தலையாட்டினான். "ஓ! அந்த மாதிரியா. சரி, ஆனா அதை உப்பகற்றலுக்கு எப்படி...?"
வெகுநேரமாகத் தாமஸையே பேசவிட்டு மௌனத்தில் ஆழ்ந்திருந்த யாவ்னாவே முந்திக்கொண்டு கிரணுக்கு விடையளித்தாள். "உப்பகற்றலுக்கும் புவிவெப்ப மின்னுற்பத்திக்கான கோட்பாடையே அடிப்படையா வச்சுத்தான் செய்யறோம் கிரண். புவிவெப்பத்துல மின்சக்தி உற்பத்திக்கு, மின்கம்பிகள் மூலமா மின்சாரம் ஓடுது. ஆனா எங்க தூய தண்ணீர் நுட்பத்துல, கம்பிகளுக்குப் பதிலா உப்பு நீரையே மின்சாரம் பாய்ச்சும் ஊடகமாப் பயன்படுத்தறோம். வெப்பத்தினால உண்டாகற மின்னோட்டத்தினால, நீரில் கலந்துள்ள உப்புக்களின் மின்னணுக்கள் பிரிக்கப்பட்டு, மின்முனைகள் (electrodes) மூலமா வெளியெடுக்கப்படுது, நீரும் சுத்தமாகுது. இதுக்கு பலவிதமான சுத்த சக்தி வெப்பங்களையும் பயன்படுத்த முடியும் - சூரிய வெப்பம், புவி வெப்பம், - எல்லாமே! மின்முனைகளிலிருந்து சிறிதளவு மின்சக்தியும் மீட்கப் பட்டுக் கிடைக்கும்."

கிரண் மிகுந்த உற்சாகத்துடன் எக்களித்தான். "ஹு ஹூ! நான் ஒரே கல்லில ரெண்டு மாங்காய்ன்னு அணுசக்தி உற்பத்தியோடு உப்பகற்றல்ங்கறதப் பத்தி விவரிக்கறப்ப ஏற்கனவே ஒருமுறை சொன்னேன். இது அதைவிட பகு பேஷ்! ஒரே கல்லில மூணு மாங்காயா இருக்கு! சுத்த சக்தி பயன்படுத்தித் தூய குடிநீர் உற்பத்தியோட மின்சக்தியும் கிடைக்குது. அட்டகாசமா இருக்கே!"

தாமஸ் பாராட்டினார் "சபாஷ் கிரண், மூணுவிதமான நற்பலனையும் நச்சுன்னு சரியா சுருக்கிச் சொல்லிட்டே! யாவ்னா, பிரமாதமா விளக்கிட்டே. எனக்கு அந்தக் கஷ்டம் மிச்சமாச்சு சரி, அடுத்த நுட்பத்துக்குப் போவோமா?"

சூர்யா ஊக்குவித்தார். "ஆமாம், புதுமை நுட்பம் என்னன்னு கேட்க ஆவலா இருக்கு, சொல்லுங்க!"

தாமஸ் தொடர்ந்து விளக்கலானார். "அடுத்த நுட்பம், உயிரியல் ரீதியானது..."

இம்முறை ஷாலினி பரபரப்புடன் குறுக்கிட்டாள். "ஆஹா, இப்ப என் துறைக்கு வந்துட்டீங்களே. எனக்கு ரொம்ப பரபரப்பா இருக்கு. ஊம், சொல்லுங்க, சொல்லுங்க!"

தாமஸ் முறுவலுடன், "ஆமாம், உயிரியல் நமக்கு இயற்கை படைச்சிருக்கும் பல பிரமாதமான நுட்பங்களைக் கத்துக் குடுக்குது. அதுல இது ஒரு சின்ன விஷயந்தான். இந்த நுட்பம், உயிர்நிகர்த்தல் (biomimetics) எனப்படும் பரந்த பல்துறை நுட்பக் குடும்பத்தைச் சார்ந்தது.”

கிரண் குறுக்கிட்டு, "என்னவோ பெரிய வார்த்தையா சொல்றீங்க. உயிர்நிகர்த்தல்னா என்ன? அதைச் சொல்லிட்டு அப்புறம் அதைச் சார்ந்த உங்க நுட்பத்தை விவரியுங்க. இல்லைன்னா எல்லாமே என் தலைக்குமேல விர்ருன்னு போயிடும்!" என்று கையைத் தலைமீது முன்னிருந்து பின்னாக வீசிக் காட்டினான்.

யாவரும் சிரிக்க, ஷாலினியே முந்திக்கொண்டு விளக்கினாள். "கிரண் அது என் துறை. அதுனால நானே சொல்றேன். பயோமிமெடிக்ஸ் அதாவது, உயிர்நிகர்த்தல்ங்கறது, பல்வேறு துறைகளுக்கான நுட்பங்களிலும், இயற்கையில எப்படி அமைஞ்சிருக்குன்னு கூர்ந்து ஆராய்ஞ்சு, அதுலிருந்து புரிஞ்சுகிட்டு அதோட அடிப்படை அம்சங்களை வேறு துறைகளில பயன்படுத்தறது."

சூர்யா தலையாட்டிக் கொண்டு தன் பங்குக்கு விவரம் சேர்த்தார். "பழைய நாளில சொல்லப் போனா பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக் கண்டான்னு கண்ணதாசன் எழுதினபடி சொல்லிக்கலாம். தாமஸ், கண்ணதாசன் ஒரு இந்திய, தமிழ்க் கவிஞர். நான் கூறினபடி உயிர்நிகர் உவமைகளைச் சொல்லி ஒரு திரைப்படப் பாடல் எழுதியிருக்கார்" என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, "சமீபத்துலகூட சுத்த சக்தித் துறையில இந்த மாதிரி செஞ்சாங்க. சூரியகாந்திப் பூக்களின் இதழ் அமைப்பைப் பார்த்து, ஒன்றை ஒன்று நிழல் சாய்த்து மறைக்காதபடி சூரிய மின்பலகைகளை எப்படி வரிசையமைக்கறதுன்னு..."

தாமஸ் குதூகலித்தார். "ஆஹா, அற்புதமான விளக்கம். கவிதை ரொம்ப நல்லாவே இருக்கு. மிக்க நன்றி. நீங்க ரெண்டு பேரும் என்னைவிட நல்லாவே சொல்லிட்டீங்க. இப்ப புரிஞ்சுதா கிரண்? எங்க தூய தண்ணீர்த் துறையிலும் அப்படிப்பட்ட உயிர்நிகர் நுட்பங்கள் இருக்கு. அதுல ரொம்ப சிறப்பான ஒண்ணை மட்டும் நாங்க வழிமுறைப் படுத்தியிருக்கோம்..."

ஷாலினி குழப்பத்துடன் இடைமறித்தாள். "தாமஸ், நீங்க உயிர்நிகர் நுட்பம் பத்தி முதல்ல குறிப்பிட்டப்போ, உங்களுக்கு இந்தத் துறையைப் பத்தி சரியாத் தெரியாது, அதுனால ஆராய்ச்சிக் குறிப்புக்களை அப்புறம் அனுப்பறேன்னு சொன்னீங்களே?! இப்போ அதையே அக்வாமரீனின் சொந்த நுட்பம்னு சொல்றீங்க? ரெண்டும் எதிர்மாறா இருக்கே!"

தாமஸ் கைகொட்டி, சிரிப்புடன் பாராட்டினார். "சரியா ஒரு பாயிண்ட் புடிச்சிட்டீங்களே ஷாலினி. நல்ல ஞாபகசக்திதான் உங்களுக்கு! ஆனா அரசியல்வாதிகள் மாதிரி முன்னுக்குப்பின் முரணா சொல்றவன் இல்லை நான். ரெண்டுமே உண்மைதான்."

கிரண் "ரொம்பக் குழப்பறீங்களே பாஸ்! என் உச்சி மண்டையில சுர்ருங்குது, விர்ருங்குது, கிர்ருங்குதே!" என்றான்.

தாமஸ் சிரிப்புடன் தொடர்ந்தார். "சரி, சரி, விளக்கறேன். எனக்கு இந்த உயிர்நிகர்த் துறையில பொதுவான நிபுணத்துவம் இல்லைதான். அதுனாலதான், முதல்ல இந்த நுட்பம் பத்திக் குறிப்பிட்டப்போ உயிரியல் மருத்துவத்துறை நிபுணரான ஷாலினிகிட்ட அதைப்பத்தி விளக்கத் தயக்கமா இருந்தது. ஆனா, அந்தத் துறையில எனக்கும் சிறிதளவு பரிச்சயம் இருக்கு. அதுனால, தூய தண்ணீர் உற்பத்திக்கு அது பயன்படும்னு சில கல்வி நிலையங்களின் ஆராய்ச்சியாளர்கள் காட்டியுள்ளதாகப் படிச்சு, உயிர்நிகர் நுட்பங்கள் பத்திய சில கான்ஃபரன்ஸ்களிலயும் கலந்துகிட்டு, அதையும் எங்க நுட்பங்களோட சேர்க்கணும்னு ரொம்ப உத்வேகமா, அத்துறையின் பல நிபுணர்களை அக்வாமரீன்ல சேர்த்து அவங்க மூலமா நடைமுறை ரீதியா முன்னேற்றிய நுட்பந்தான் நான் அக்வாமரீன் நுட்பம்னு குறிப்பிட்டது. அதைப்பத்தி விளக்குவதற்கு நான் சரியானவன் இல்லைதான். உயிர்நிகர்த்துவம் பத்தி யாவ்னாவே என்னைவிட நல்லா சொல்லுவா. யாவ்னா நீயே கொஞ்சம் சொல்லு பார்க்கலாம். அப்புறம் நான் மத்த விஷயங்களைத் தொடர்ந்து விவரிக்கறேன்."

யாவ்னா மகிழ்ச்சியுடன், "ஆஹா, இது எனக்கு ரொம்ப இனிமையான வேலைதான். நன்றி தாமஸ். சொல்றேன்..." என்று விளக்க ஆரம்பித்தாள். யாவ்னா உயிர்நிகர்த்துவம் பற்றிக் கூறியதும், தாமஸ் மேற்கொண்டு விளக்கிய வேறு நுட்ப விவரங்களும் மிக மிகச் சுவாரஸ்யமாக இருந்தன!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline