Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | ஜோக்ஸ் | Events Calendar | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-8)
- கதிரவன் எழில்மன்னன்|பிப்ரவரி 2012|
Share:
இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். ஷாலினி தூய தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றி சூர்யாவுக்கும் கிரணுக்கும் எடுத்துக் கூறி இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு விண்ணப்பிக்கிறாள். சூர்யாவும் கிரண், ஷாலினி இருவருடன் அக்வாமரீன் என்னும் அந்நிறுவனத்துக்குச் சென்று அங்கு சந்தித்த யாவ்னா என்ற இளம்பெண்ணை, அவளுடைய ஓட்டப் பயிற்சி, வரவேற்பறையின் கலையமைப்பு ஆகிவற்றைக் கூர்ந்து கவனித்து, கணித்து தன் திறனில் நம்பிக்கை பெறச் செய்கிறார். பிறகு யாவ்னா மூவரையும் ஆராய்ச்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்று பலதரப்பட்ட உப்பகற்றல் நுட்ப சாதனங்களைப்பற்றி விவரிக்கிறாள். ஆவியாக்கல் (distillation), எதிர்ச் சவ்வூடு பரவல் (reverse osmosis) போன்ற எளிதான பழைய நுட்பங்களைப் பற்றிக் கூறிவிட்டு புதுநுட்பங்களைப் பற்றி விவரிக்க ஆரம்பிக்கையில் நிறுவனர் தாமஸ் மார்ஷ் வந்துவிடவே, அவரை யாவ்னா அறிமுகப்படுத்தினாள். தாமஸின் குடும்பத்தைப் பற்றி சூர்யா யூகித்து தாமஸுக்குத் தன் மேல் பெரும் நம்பிக்கை பிறக்கச் செய்தார். தாமஸ் நீருப்பகற்றல் துறையின் நவீன நுட்பங்களைப் பற்றி விவரிக்கலானார்...

*****


நீருப்பகற்றல் துறையின் புது நுட்பங்களைப் பற்றி விவரிக்க உங்களை விடத் தகுதி வாய்ந்தவர் யாரும் இல்லை என யாவ்னா கூறியதும் பெருமிதத்தால் விம்மிய தாமஸ் மார்ஷ், கதிரொளிச் சக்தியால் உப்பகற்றும் நுட்பத்தைப் பற்றிக் கூறியதும் "ஒரே பந்தில் ரெண்டு ஸிக்ஸர்!" எனக் கிரண் பாராட்டியதை ஏற்றுக்கொண்டு அடுத்த புதுநுட்பத்தைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

"இன்னொரு புதிய நுட்பம், புவிவெப்ப (geothermal) சக்தியைப் பயன்படுத்துவது. அது மட்டுமன்றி, புவிவெப்ப நீரையே உட்புகு (input source) நீராகப் பயன்படுத்துகிறார்கள். இதில் இரண்டு பலன்கள் உள்ளன. ஒன்று, புவிச்சூழலுக்கு மிக அனுகூலமான ஒரு தூய சக்தி நுட்பத்தைப் பயன்படுத்துவது. மற்றொன்று, புவிமட்ட நீரை அதிகமாகப் பயன்படுத்திச் செலவழிக்காமல், புவி ஆழ நீரை மேல் கொணர்ந்து பயன்படுத்துவது. அதனால், புவிமட்ட நீரை அதிகமாக எடுத்து விடுவதால் நாடுகளின் உட்பகுதியில் ஏற்படும் நிலச்சரிவு போன்ற விளைவுகளைத் தவிர்க்க முடிகிறது!"

கிரண் கை சொடுக்கிக்கொண்டு, "ஹை! இன்னொரு டபுள் ஸிக்ஸர்!" என்று குதூகலித்தான்.

தாமஸூம் முறுவலுடன் தலையாட்டி ஆமோதித்து, தொடர்ந்தார். "ஆமாம் அது சரிதான். இன்னொரு நுட்பம் சொல்றேன். சமீப ஆராய்ச்சிகளில் நேனோ குழாய்களை வைத்து அமைக்கப்பட்ட மென்படலம் (membrane) மிக நன்றாக வடிகட்டுகிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள். இதைப் பயன்படுத்தினால் எதிர்ச் சவ்வூடு பரவலை விட மிகக் குறைந்த அளவில் சக்தி பயன்படுத்தித் தூயநீர் உற்பத்தி செய்யமுடியும் என்று ஆரம்பக் கணிப்புகள் காட்டுகின்றன. வருங்காலத்தில் இது மகத்தான வெற்றி பெறக்கூடும். நேனோ இல்லாமல், பயோமிமிக் அதாவது, உயிரினங்கள் இயற்கையாகப் பயன்படுத்தும் மெம்ப்ரேன்களின் மூலப் பொருட்களை வைத்து அவற்றின் அமைப்பைப் போலவே உருவாக்கப் பட்ட மென்படலங்களைப் பயன்படுத்தும் ஆராய்ச்சியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவை பலன் தருமா என்பது இன்னும் தெளிவாகவில்லை."

ஷாலினி ஆவலுடன் தூண்டினாள். "நேனோ அண்ட் பயோ! இவங்ககூட இப்பதான் சமீபத்துல ஒரு நேனோ நுட்பப் பிரச்சனையை விசாரிச்சாங்க. இது ரெண்டுமே பரபரப்பான துறைகளாச்சே! நான்கூட பயோமெடிக்கல் ஆராய்ச்சி செய்யறேன்... மேல சொல்லுங்க என்றார்."

தாமஸோ தலையாட்டி மறுத்தார். "ஸாரி டு டிஸப்பாயிண்ட் யூ! எனக்கு அதைப்பத்தி ரொம்ப சொல்ற அளவுக்குத் தெரியாது. நான் வேணும்னா அப்புறம் ஒரு ஆராய்ச்சிக் குறிப்புத் தேடி அனுப்பி வைக்கிறேன். யாவ்னா, குறிச்சுக்கிட்டு அப்புறம் கவனப் படுத்து, ஓகே?" என்றார்.

சூர்யா தீவிர சிந்தனையுடன், "இன்னும் வேற புது நுட்பங்கள் இருக்கா?" என்று வினாவினார்.

தாமஸ் உற்சாகத்தோடு தொடர்ந்தார். "ஆஹா, இருக்கே. சமீபத்துல, உப்புத் தண்ணீருக்குள்ளேயே மின்சக்தியைப் பாய்ச்சி அதைச் சூடும் பண்ணி ஆவியாக்கும் நுட்பம் கண்டுபிடிச்சிருக்கறதா ஒரு அறிவியல் செய்தி வந்திருக்கு. அவங்க சொல்றபடி பாத்தா, மத்த வழிமுறைகளை விட இதுக்குப் பாதியளவு சக்திதான் தேவைப்படும் போலிருக்கு. நல்ல ஐடியா!"

கிரண் எக்காளித்தான். "தண்ணிக்கே ஷாக் ட்ரீட்மெண்ட்டா! அதுக்குப் பயந்துதான் தண்ணி பாவம் சீக்கிரம் ஆவியாகிப் பாதி சக்தி செலவழிக்குது போலிருக்கு. இது எப்படி இருக்கு!"

தாமஸ் சிரித்து விட்டார். "குட் ஒன் கிரண்! நல்லா ஜோக் அடிக்கறே நீ!" யாவ்னாவும் கைதட்டிச் சிரிக்கவும், கிரணுக்குப் புளகாங்கிதமாகிவிட்டது.

தாமஸ் தொடர்ந்தார். "இன்னொரு ரொம்ப விசித்திரமான புது நுட்பமும் ஆராயப்பட்டு வருது. தண்ணீரை சூடு செஞ்சு ஆவியாக்கற முறைதான் பாத்தோம் இல்லையா? இப்ப என்னன்னா, நீரை உறைய வச்சு மீண்டும் உருகறப்போ தூய நீரா எடுக்கலாம்னு கண்டு பிடிச்சிருக்காங்க. துருவப் பிரதேசம் போன்ற பனிமிக்க இடங்களுக்கு இது பொருத்தமாயிருக்கலாம்."

கிரண் மீண்டும் இடைமறித்து நையாண்டினான். "சரிதான். அக்கடான்னு இருக்கற உப்புத் தண்ணியைப் பாவம் சித்திரவதை பண்றாங்க. சூடு வைக்கறாங்க, ஷாக் குடுக்கறாங்க. இப்ப குளிர்ல நடுங்க வச்சு உறையவும் வக்கறாங்க! பாருங்க சீக்கிரமே அது உப்பையெல்லாம் தானாவே விட்டுட்டு இதோ தூய்மையா வந்திருக்கேன் என்னை விடுங்கடா சாமிங்களான்னப் போகுது!"
தாமஸ் முறுவலுடன், "அப்படி வந்துட்டா அது உலகத்துக்கே நல்லதுதானே கிரண்! உன் வாக்குப் பலிக்கட்டும்" என்று பதிலடித்தார்.

ஷாலினி கை தட்டினாள். "சரியா சொன்னீங்க தாமஸ்!"

சூர்யா எல்லோரையும் விஷயத்துக்கு இழுத்துக் கொண்டு வந்தார். "இப்ப இவ்வளவு நுட்பம் சொன்னீங்களே, அதுல எதாவதுதான் அக்வாமரீன் ஆராய்ஞ்சுகிட்டிருக்கா, இல்லை வேற எதாவதா?"

தாமஸ் பாராட்டினார். "ரொம்ப தேங்க்ஸ் சூர்யா. எங்களை சரியான பாயிண்ட்டுக்குத் தள்ளிட்டீங்க, சபாஷ்! நான் எங்க நுட்பத்தைப் பத்தி கொஞ்சம் விளக்கிட்டு அப்புறம் எங்க பிரச்சனையைப் பத்தி விவரிக்கிறேன். அக்வாமரீன் நுட்பம் நான் ஏற்கனவே சொன்ன நுட்பத்துல ஒண்ணுன்னும் சொல்ல முடியாது, அது எதுவும் இல்லைன்னும் சொல்ல முடியாது ..."

கிரண் குழப்பத்துடன் இடைமறித்தான். "அது என்ன தாமஸ், எங்கப்பா பாக்கற தமிழ் சினிமால வரும்... ஆனா வராதுன்னு ஒரு கடி ஜோக் வரும் அந்த மாதிரி சொல்றீங்க? மண்டை குழம்புது!"

ஷாலினி சிரித்தாள். "ஏய் கிரண் நீ ஒரு விஞ்ஞானி இல்லை, பணம் எண்றவன்னு சரியாக் காட்டிட்டே போ! அவர் சொல்றது எனக்கு நல்லாவே புரியுது. அக்வாமரீன் நுட்பத்துல அவர் சொன்ன மத்த நுட்பங்களின்அம்சங்கள் கொஞ்சம் கலந்திருக்குன்னு சொல்றார், அப்படித்தானே தாமஸ்!"

தாமஸ் தன் இரு கைகளையும் நீட்டி கட்டை விரல்களை உயர்த்தி பலமாக மேலும் கீழும் அசைத்து பாராட்டினார். "எக்ஸாக்ட்லி! விஞ்ஞானிக்கு விஞ்ஞானியா சரியா உணர்ந்துட்டீங்க! நீங்க சொல்றபடிதான். நாங்க அந்த மாதிரி அம்சங்களோடு எங்க புது அம்சங்களையும் சேர்த்த பெரும் ஆழ்புதுமை (grand deep innovation) நுட்பமாக உருவாக்கி வருகிறோம்."

சூர்யா இடை மறித்து, "பாஸரல் உப்பகற்றல் முறை மாதிரியா" என்று வினாவினார்.

தாமஸ் அசந்தே போனார்! "வாவ்! பாஸரல் முறை உங்களுக்குத் தெரியுமா? வெரி நைஸ்! அப்போ நான் ரொம்ப விளக்கக் கஷ்டப்பட வேண்டியதில்லை" என்று மேற்கொண்டு சொல்லப் போனவரை யாவ்னா தடுத்தாள். "இல்லை தாமஸ், சூர்யாவுக்குத் தெரிஞ்சிருக்கலாம், ஆனா ஷாலினியும் கிரணும் முழிக்கறதைப் பாத்தா நீங்க சுருக்கமா விளக்கிடறது நல்லது" என்றாள்.

தாமஸ் ஆமோதித்தார். "ரைட் யூ ஆர் யாவ்னா! பாஸரல் முறையை இவருக்குத் தெரிஞ்சிருக்கேங்கற பரபரப்பில மீதி பேரை மறந்துட்டேன். சரி விளக்கறேன். சூர்யா சொன்னபடி எங்க நுட்பம் பாஸரல் முறையை ஒரு முன்னோடியாக் கொண்டதுதான். பாஸரல் உப்பகற்றல் முறை, பல உப வழிமுறைகளை ஒன்று திரட்டி, குறைந்த சக்தி செலவிலேயே நிறைய தூய நீர் உற்பத்தி செய்யறத்துக்கான நுட்பம். ஆவியாக்கல், ஆவிஉலர்த்தல் (demisting), அழுத்தம் (compression), மற்றும் குளிர்த்து திரவமாக்கல் (condensation), இவைகளுக்கிடையில் நீரோட்டம் போன்று பல உபவழிமுறைகளை சேர்த்துள்ளது."

கிரண் சற்று ஏமாற்றத்தோடு வினாவினான். "அக்வாமரீன் நுட்பம் அவ்வளவுதானா? பாஸரல் முறை மாதிரி சில உபநுட்பங்களைக் கலந்து மஸாலா சாய் மாதிரி புதுசாக் குடுக்கப் போறீங்களா? நான் நீங்களே எதோ ராக்கெட் இயல் மாதிரி பிரமாதமான நுட்பம் கண்டு பிடிச்சிருக்கீங்கன்னு நினைச்சேன்."

தாமஸ் முகம் சிவந்து கோபத்துடன், "இங்க பாரு கிரண் ..." என்று ஆரம்பிக்கவும், யாவ்னா மீண்டும் குறுக்கிட்டாள். "கிரண் நீ ரொம்பத் தப்புக் கணக்கு போட்டுட்டே. பாஸரல் முறைங்கறது ஒரு உதாரணத்துக்குத்தான். மற்ற நுட்பங்களிலிருந்து சில நல்ல அம்சங்களைத்தான் நாங்க தேர்ந்தெடுத்திருக்கோமே ஒழிய, சும்மா கலவை மசாலா இல்லை. தாமஸ், கிரணுக்குப் புரியறா மாதிரி விவரியுங்க."

கிரணும் "ஸாரி தாமஸ், உங்க நுட்பத்தை சும்மா கேலியா நினைக்கலை. நீங்க மேலே விவரியுங்க" என்று கூறவும், தாமஸ் மேற்கொண்டு விளக்கலானார்.

"யாவ்னா சொன்னபடி, எங்க நுட்பம் வேறு உப்பகற்றல் நுட்பங்களின் சிறந்த அம்சங்களை ஒன்று சேர்த்ததோடு எங்களுக்கே உரித்தான புதுமையான சில அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு வகை அம்சங்களையும் ஒன்றுக்கொன்று மேம்படுத்தும் வகையில் பிணைத்து உருவாக்கியுள்ளோம்." என்று பெருமையுடன் அக்வாமரீனின் நுட்பத்தைப் பற்றி விவரிக்கலானார்.

தாமஸ் விவரித்த நுட்பத்தின் சுவாரஸ்யமான அம்சங்கள் பிரமிக்க வைத்தன! மேலும் அந்த நுட்பத்துக்கு விளைந்த பிரச்சனையைப் பற்றி அவர் கூறியது மலைக்க வைப்பதாகவே இருந்தது!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline