Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | குறுநாவல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சாதனையாளர்
விசாலினி குமாரசாமி
பிரகதி குருபிரசாத்
- பா.சு. ரமணன்|மார்ச் 2012|
Share:
நீங்கள் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பவராக இருந்தால் கர்நாடக இசை, திரையிசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசை என எவ்வகைப் பாடலையும் அநாயசமாகப் பாடும் ஒரு இளம்பெண்ணைக் கண்டு புருவம் உயர்ந்திருக்கும். அழகான குரல் வளம், அற்புதமான பாவம், தெளிவான உச்சரிப்பு இவற்றோடு மாறாத புன்சிரிப்புடன் தனக்கேயுரிய பாணியில் பாடி நடுவர்களின் பாராட்டையும், பார்வையாளர்கள் மற்றும் சக போட்டியாளர்களின் அன்பையும் ஒருங்கே பெற்றிருப்பவர் பிரகதி குருபிரசாத். ஃப்ரீமாண்ட் மிஷன் சான் ஹோசே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பிரகதி, முன்னரே சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். இந்தப் பகுதியில் தமிழ் மெல்லிசை மற்றும் கர்நாடக இசைக் கச்சேரிகளில் நிறைய பங்களிப்புச் செய்திருக்கிறார். சமீபத்தில் ஜெயா டி.வி. அமெரிக்காவில் நடத்திய கர்நாடிக் ம்யூசிக் ஐடல் யு.எஸ்.ஏ. இசைப் போட்டியில் மூன்றாம் இடத்தையும், சிறந்த குரல் வளத்துக்கான சிறப்புப் பரிசையும் பெற்றிருப்பவர். தனது இனிய குரல் வளத்தால் வளைகுடாத் தமிழர்களின் செவியையும் மனதையும் ஒருங்கே கவர்ந்த பிரகதி, இப்போது உலகத் தமிழர்களையும் தனது செல்லக் குரலால் கவர்ந்து கொண்டிருக்கிறார்; விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர்-3 நிகழ்ச்சி வழியே.

அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் அமெரிக்கன் ஐடல் என்னும் போட்டி நிகழ்ச்சிக்கு ஒப்பான தமிழ் இசை நிகழ்ச்சி ஏர்டெல் சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர் என இருவேறு பிரிவுகளில் போட்டி உண்டு. கடந்த ஆண்டுகளில் ஜூனியருக்கான முதல் போட்டியில் கிருஷ்ணமூர்த்தியும், இரண்டாவதில் அல்கா அஜீத்தும் வென்று சூப்பர் சிங்கராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது நடப்பது மூன்றாவது போட்டி.

2011 ஜூலையில் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வெளியானதும் தன் குரல் வளத்தைப் பிரதிபலிக்கும் பாடல்களைப் பாடிப் பதிவு செய்து விஜய் டி.வி.க்கு அனுப்பினார் பிரகதி. அவை நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட, இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காகத் தனது படிப்பைக் கூடத் தள்ளி வைத்துவிட்டு சென்னைக்குப் பறந்திருக்கிறார். பிரகதி தேர்ந்தெடுக்கப்பட்ட விவரங்களையும் நிகழ்ச்சியில் பாடிய முதல் பாடலையும் இங்கே காணலாம்:


இவரது குரல்வளத்தால் கவரபட்ட இயக்குனர், தயாரிப்பாளர் நேட்டி குமார் தன்னுடைய 'பனித்துளி' படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பை அளித்திருக்கிறார். தமிழில் மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் சரளமாகப் பாடும் திறமையால் பிறமொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் பிரகதி. ஹிந்திப் பாடல்களை நன்றாகப் பாடும் பாடகர்களைத் தேர்வு செய்யும் 'ஜெய் ஹோ' போட்டியில் கலந்து கொண்டு முதல் இடத்தைப் பெற்றிருக்கிறார். அதன்மூலம் பிரபல ஹிந்தி பின்னணிப் பாடகர் சுக்வீந்தர் சிங்குடன் அமெரிக்காவில் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார். ஆங்கில பாப் இசைப் பாடல்களைப் பாடித் தன் பள்ளியில் நடைபெற்ற 'ஹாப்கின்ஸ் காட் டேலன்ட்' போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஏழு வயது முதல் க்ளீவ்லாண்ட் ஆராதனை நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்வதுடன், அங்கே போட்டியிலும் கலந்து கொண்டு வென்றிருப்பது பிரகதியின் இசைத் திறமைக்குச் சான்று. விரிகுடாப் பகுதித் தெலுங்கு சங்கம் நடத்திய 'ஸ்பாதனா' ஜூனியர் இசைப் போட்டியில் பரிசு வென்றிருக்கிறார். இப்பகுதியின் ஒரு வானொலி நடத்திய போட்டியிலும் பஞ்சாபிப் பாடலைப் பாடி பரிசு வென்றிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் நடைபெறும் டிசம்பர் மாத இசை விழாவில் தவறாது பங்கேற்றுத் திறமையை நிரூபித்து வருகிறார்.

தமிழ்நாடு எப்படியிருக்கிறது என்று கேட்டால் முதலில் கஷ்டமாக இருந்தது. தற்போது நன்கு பழகிவிட்டது என்கிறார் பிரகதி. நண்பர்கள் ஊக்குவிப்பும், உறவினர்களின் அரவணைப்பும் மிகவும் துணையாக இருக்கிறது என்று கூறும் இவர், 'பனித்துளி' படத்துக்கு டைட்டில் பாடலைப் பாடியது தனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாகக் கூறுகிறார். கர்நாடக இசை, மெல்லிசை, ஹிந்துஸ்தானி என்று பல பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டு வியந்த படத்தின் இசையமைப்பாளர் அஜ்மல் பைஜான் முற்றிலும் மாறுபட்ட ஒரு பாடலைப் பிரகதிக்குத் தந்திருக்கிறார். "கலக்கு" என்ற அந்தப் பாடலை மிகக் கலக்கலாகப் பாடி அசத்தியிருக்கிறார் பிரகதி. அது ஒரே நாளில் ரெகார்டிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கலக்கலான அந்தப் பாடலை நீங்கள் இங்கே கேட்கலாம்:படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது கடவுள் வாழ்த்துப் பாடியவரும் பிரகதிதான். இப்போது தன் கவனமெல்லாம் இசையில்தான் என்று கூறும் பிரகதி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு நடுவர்களாக இருக்கும் மனோ, சித்ரா, சுபா, குரலிசைப் பயிற்றுநர் அனந்த் வைத்தியநாதன் ஆகியோர் கூறும் ஆலோசனைகளும் பாராட்டுக்களும் தனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன என்கிறார். இசையமைப்பாளர்கள் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சரத் பாராட்டியது மிகவும் உற்சாகமளிப்பதாகக் கூறும் இவர், சக போட்டியாளர்கள் வேற்றுமையில்லாமல் பழகுவதும், உற்சாகமளிப்பதும், நட்புப் பாராட்டுவதும் மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார். அவர்கள் வேறு நாட்டிலிருந்து வந்தவள் என்று என்னைக் கருதாமல், தங்களில் ஒருவராக நினைப்பதும், பழகுவதும், சிலர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற நேர்ந்தாலும் கூட தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நட்புக் காட்டுவதும் தனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது என்கிறார். தன்னால் தமிழ் மற்றும் கன்னடம் சரளமாகப் பேச முடியும் என்றும், சில வருடங்கள் சம்ஸ்க்ருதம் கற்றதால் ஹிந்தி மற்றும் கர்நாடகப் பாடல்களின் வரிகளைச் சரியாக உச்சரிக்க முடிகிறது என்றும் சொல்கிறார்.
தந்தை குருபிரசாத், தாயார் கனகா இருவருமே இவரது இசைக்கு மூலகாரணமும் ஆதரவும் ஆவார்கள். இருவரும் நன்கு பாடக் கூடியவர்கள் என்பது பிரகதிக்கு மிகப் பெரிய பலம். முன்னர் சிங்கப்பூரில் வசித்தபோது குருபிரசாத், பிரகதியின் அக்காவுக்கு இசை சொல்லிக் கொடுக்க, குழந்தைப் பருவத்திலிருந்தே அதைக் கேட்டு வளர்ந்திருக்கிறார் பிரகதி. தாயார் கனகா குருபிரசாத் விரிகுடாப் பகுதியின் பல நாடகங்களில் நடித்தவர், சிறப்பான நடிப்புக்குப் பாராட்டப் பெற்றவர். தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வந்து மகளின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். பிரகதியின் மூத்த சகோதரி பெர்க்கலி பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். அவர் ஹிந்து அமெரிக்க ஃபவுண்டேஷன் நடத்தும் இளம் இந்தியத் தலைவர்கள் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் பாராளுமன்றத்தில் செனட்டர்களின் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். அபாரமான பேச்சாளரும் தலைமைப் பண்பும் ஆளுமையும் உடையவர்.

தற்போது படிப்பதற்காக சென்னையில் நல்லதொரு பள்ளியைத் தேடிக் கொண்டிருக்கும் பிரகதியிடம், எந்த மாதிரிப் பாடல்கள் பாடுவதில் உங்களுக்கு விருப்பம் என்று கேட்டால், கன்னத்தில் குழிவிழ அழகாகச் சிரித்து "எப்போதும் எங்கேயும் பாடும் வாய்ப்புக் கிடைக்கும்போது பாட வேண்டும். பாடிக் கொண்டே இருக்க வேண்டும்" என்று சொல்லி ஒரு கணம் அமைதி காத்து பின் உடனே, "உற்சாகமாக இருக்கத் திரை இசைப் பாடல்கள் பாட வேண்டும். என்னை நான் அமைதிப் படுத்திக்கொள்ள நினைக்கும் போது ஹிந்துஸ்தானி இசை பாட வேண்டும். நண்பர்களுடன் கூடி இருக்கும் சந்தோஷத் தருணங்களில் மேற்கத்திய இசை பாட வேண்டும், சவால்களைச் சந்திக்கும் போது வீணை வாசிக்க வேண்டும். ஏனென்றால் நான் இன்னும் அதில் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது." என்கிறார் தன்னடக்கத்துடன். கர்நாடக இசையில் தஞ்சாவூர் கல்யாணராமனும், திரையிசையில் ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவனும் பிரகதியின் முன்மாதிரிகள்.

சூப்பர் சிங்கர் போட்டியில் பிரகதி வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் ரசிகர்களின் வாக்களிப்புக்கு மிக முக்கிய பங்கிருக்கிறது. தமிழகத்தில் வசிக்கும் பிற போட்டியாளருடன் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் அவர் மிகக் கடுமையான போட்டியைச் சந்திக்க நேரிடும். மொழித் திறமையும் இசைத்திறமையும் ஒருசேரப் பெற்ற பிரகதி குருபிரசாத் பல சாதனைகள் நிகழ்த்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெறப்போவது நிச்சயம்.

பிரகதியின் பல்வகைப் பாடல்களை இங்கே கண்டு ரசிக்கலாம்: youtube.com

(தகவல் உதவி: திருமுடி துளசிராமன், ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா)

பா.சு. ரமணன்
More

விசாலினி குமாரசாமி
Share: 
© Copyright 2020 Tamilonline