Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சிரிக்க, சிந்திக்க
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
- டி. எஸ். பத்மநாபன்|ஏப்ரல் 2007|
Share:
Click Here Enlargeதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பது மிகப் பழைய மொழி. 'உண்மைதான். இடி, மின்னல், புயல் கூட வானத்தில்தான் தோன்றுகின்றன' என்று அலுத்துக்கொள்கிறார் ஒரு குடும்பஸ்தர். திருமணம் ஒன்றுதான் பகைவனோடு படுத்துக்கொள்ளும் ஒரே யுத்தம் என்று சொல்கிறார்கள்.

திருமணம் என்பது யாருடன் வாழலாம் என்பதைக் கண்டுபிடிப்பதல்ல, யாரில்லாமல் வாழமுடியாது என்பதை அறிவதுதான் என்கிறார் ஜேம்ஸ் டாப்சன். திருமணத்தைப் பற்றி இப்படிக் கேலியாக, நகைச்சுவையாக, உணர்வுபூர்வமாக பல விளக்கங்கள் இருந்தாலும் வெற்றிகரமான திருமணம் என்பது எது என்று அறுதியிட்டுக்கூற முடிவதில்லை. 'யாரோ ஒருவர் உனக்காகப் பிறந்திருக்கிறார்' என்று சொல்கிறார்கள். அந்தச் சரியான ஒருவரைக் கண்டுபிடிப்பது தான் வெற்றிகரமான திருமணம் என்று சொல்லலாமா?

முந்தைய தலைமுறைகளில் பெண் பார்ப்ப தென்று ஒரு சம்பிரதாயம். பெண்பார்க்க மாப்பிள்ளைப் பையனோடு அவனது பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், ஒன்றுவிட்ட அல்லது இரண்டுவிட்ட மாமாவோ சித்தப்பாவோ ஒரு வாய்ச்சவடால் பேர்வழி என்று ஒரு திருவிழாக் கூட்டமாகச் செல்வார்கள். பெண்வீட்டார் குடும்ப சகிதமாக ராஜமரியாதையோடு மாப்பிள்ளை வீட்டாரை ஒவ்வொருவராக 'வாங்க வாங்க' என்று வரவேற்பார்கள். யாராவது ஒருவரை விட்டுவிட்டால்கூட மாப்பிள்ளை வீட்டா ருக்குக் கோபம் வந்துவிடும். வந்தவர்களின் குதிரைவண்டிக்கான சத்தத்தைக்கூடப் பெண்வீட்டார்தான் கொடுக்கவேண்டும். பிறகு தொடங்கும் பெண்பார்க்கும் படலம்.

பெண் பட்டுப்புடவை, வளைகள் சலசலக்க நாணிக் கோணிக்கொண்டு உள்ளே நுழைவாள். வந்திருக்கும் அனைத்துப் பெரியவர்களையும் விழுந்து நமஸ்காரம் செய்வாள். பெண்ணுக்குப் பாடத் தெரியுமா, ஆடத் தெரியுமா என்று சம்பிரதாயமான கேள்விகள். பையனின் சகோதரி பெண்ணை அருகில் உட்கார வைத்துக்கொண்டு அவளோடு பேச்சுக்கொடுப்பதுபோல அவளது கூந்தலின் அளவு, சவுரி வைத்திருக்கிறாளா, திக்காமல் பேசுகிறாளா, காது கேட்கிறதா என நோட்டமிடுவாள். நடக்கச் செய்து கால்களில் ஏதும் ஊனமில்லையே என்று சோதனை வேறு. கூட வந்திருக்கும் மாமா அல்லது சித்தப்பா 'டேய்,சந்துரு, பொண்ணை இப்பவே சரியாப் பாத்துக்கோ, அப்புறம் வீட்டுக்கு வந்து நான் சரியாப் பாக்கல்லேன்னு சொல்லக் கூடாது' எனக் கூச்சலிடுவார். அந்த ஒரு நொடியில் கம்பனின் 'அண்ணலும் நோ¡க்கினான், அவளும் நோக்கினாள்' அரங்கேறும். பெண்ணைப் பொருத்தவரை அவளது பெற்றோர்கள்தான் அவள் யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நிச்சயிப்பார்கள். பையன்வீட்டார் சம்மதம் வேண்டும் அவ்வளவுதான்! இருவரும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வதற்குக்கூட வாய்ப்பில்லாமல் அடுத்த கட்டமான பஜ்ஜி, சொஜ்ஜிக்குத் தாவிவிடுவார்கள். வழக்கம் போல 'வீட்டுக்குப்போய்க் கடிதம் போடு கிறோம்' என்று மாப்பிள்ளை வீட்டாருக் கேயுள்ள தோரணையோடு கூறிவிட்டு, பிள்ளைவீட்டார் கிளம்புவார்கள். பிறகு திருமணம் தீர்மானிக்கப்படுவது, சீர், செனத்தி இவைகளைப் பொறுத்துத்தான்.

இன்றும் இந்தப் பெண்பார்க்கும் படலம் தொடரத்தான் செய்கிறது. வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் வேலைபார்க்கும் ஆண்களுக்குப் பெண் தேடும் வைபவம் சற்றே வித்தியாசமானது. பிள்ளைவீட்டர் பெரும் பாலும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் விளம்பரம் கொடுப்பார்கள். வரும் நூற்றுக் கணக்கான பெண் ஜாதகங்களில், கல்வி மற்றும் ஜாதகப் பொருத்தங்கள் பார்த்து ஒரு பத்து வரனைத் தேர்ந்தெடுப்பார்கள். பின்னர் பையனின் பெற்றோர்கள் ஒரு முன்னோட்ட மாக அந்தப் பத்துவீடுகளுக்கும் சென்று பெண்ணைப் பார்த்துவிட்டு வருவார்கள். அந்தப்பத்திலிருந்து நாலு அல்லது ஐந்தைத் தேர்ந்தெடுத்து அந்தப் பெண்களின் புகைப்படத்தைப் பையனுக்கு அனுப்பு வார்கள். அமெரிக்க மாப்பிள்ளை ஒவ்வொரு பெண்ணிடமும், மின்னஞ்சல், தொலைபேசி யில் பேசி, அவற்றிலிருந்து சிறிது வடிகட்டு வான். இதில் முக்கியமான விஷயம், பையன் இந்தியா வரும்போது, தான் தேர்ந்தெடுத்த பெண்களில் ஒருவரை இறுதியாகத் தேர்வு செய்து, தான் வந்திருக்கும் மூன்று வார விடுமுறையில் திருமணத்தையும் முடித்துவிட வேண்டும் என்பதுதான். பையன் வீட்டு முடிவு வரும்வரை பெண்ணைப் பெற்றவர்கள் மனம் 'திக்திக்'கெனப் பரீட்சை முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி, சுயசம்பாத்தியம், சொந்தக் கால்களில் நிற்கும் திறமை இவையெல்லாம் இன்றைய பெண்களிடம் இருந்தாலும் கூட, திருமணம் என்ற உறவில் இன்னும் ஆணாதிக்கம்தான் மேலோங்கி நிற்கிறது. பிள்ளையைப் பெற்றவர்கள் ஏதோ கொம்பு முளைத்தவர்களைப் போலவும் பெண்கள் தராசில் ஒரு தட்டு கீழே நிற்பவர்கள் போலவும் பார்க்கும் மனப்பாங்கு இன்றும் நிலவித்தான் வருகிறது. திருமணம் என்ற பந்தத்தில் ஈடுபடும் பெண்கள் எவ்வளவுதான் சொந்தக்காலில் நின்றாலும் தாம் ஆண்களைச் சார்ந்திருப்பவர்களாகவே எண்ணும் மனப்பான்மை இன்னும் மாறவில்லை. ஆண், பெண் இருவரும் வேலை பார்த்தாலும், பெண்கள்தான் வீட்டுவேலைகளைச் செய்ய வேண்டும் என்பது போலவும் ஆண் களின் வேலை காரியாலயம் சென்று வரு வதுடன் முடிந்து விடுவது போலவும் எழுதப்படாத விதிகள் இன்னும் தொடர்கின்றன.

திருமணம் என்பது ஓர் ஆண் பெண்ணுடன் இணைந்து வாழ்வது மட்டுமல்ல, அதற்கும் மேலான ஒரு பந்தம். வெற்றிகரமான திருமணம் என்பது சமையல் குறிப்பு போன்றது. அது சுவையாக இருக்க வேண்டு மென்றால் அன்பு, பொறுப்புணர்ச்சி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல், அக்கறை, ஒற்றுமை இவ்வளவும் சரியான விகிதத்தில் இருக்கவேண்டும். ஒரு திருமணம் வெற்றி யடைவது ஆண், பெண் இருவர் கையிலும் தான் இருக்கிறது.
ஆந்த்ரி மரியசே என்பவர் 'மகிழ்ச்சியான திருமணம் என்பது எப்போதும் சிறிதாகத் தோன்றும் ஒரு நீண்ட சம்பாஷணை' என்று சொல்கிறார். பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமணங்கள் என்றில்லை, ஒருவரை ஒருவர் கலந்து மனம்விட்டுப் பேசி பிறகு நடக்கும் எல்லாத் திருமணங்களுமே வெற்றி அடைந்துவிடுவதில்லை. ஒருவரோடு ஒருவர் பேசும்போதே மற்றவர் தன்னைப்பற்றி உயர்வாக நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகக் கொஞ்சம் அதிகமாகவே ரீல் விடுவார்கள். இருவருமே இல்லாத பெருமை களையெல்லாம் சொல்லிக்கொள்வார்கள். குறைகளை மறைக்கும் பாசாங்கு இருக்கும். திருமணம் நடந்து வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய பிறகுதான் அவர்களது உண்மை யான உருவம் வெளிப்பட ஆரம்பிக்கும். வேற்றுமைகள் வெளிப்படும். நிழலுக்கும் நிஜத்துக்கும் உள்ள வித்தியாசங்கள் புரியும்போது 'எப்படி வாழ்நாள் முழுதும் இந்த உறவைத் தொடரப் போகிறோம்' என்ற கவலையும் வருத்தமும் ஏற்படும். ஒரு திருமணம் வெற்றிகரமாக அமைய உங்கள் துணையை அவர்களது குறை நிறைகளோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஏற்படவேண்டும். சின்னச்சின்ன விஷயங்களில் நீங்கள் உங்கள் துணையிடம் காட்டும் அக்கறையும் பரிவுமே உங்கள் வாழ்க்கையை மணக்கச் செய்யும்.

திருமணம் என்பது ஓர் ஆண் பெண்ணோடு இணைவது மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு பந்தம். ஓர் அறிஞர் கூறியதுபோல, 'வெற்றிகரமான திருமணம் என்பது சரியான துணையைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, சரியான துணையாக இருப்பதும்தான்.'

திருவள்ளுவர் சொல்வதும்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

என்னும் அறிவுரைதான்.

டி.எஸ்.பத்மநாபன்
Share: 
© Copyright 2020 Tamilonline