Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
பார்வைக் கோணங்கள்
- சுதா சந்தானம்|நவம்பர் 2011|
Share:
காலையில் எழுந்திருந்து வேலைகளை முடித்த மீனா, கொஞ்சம் இளைப்பாற உட்கார்ந்தாள். கணவனும் மகனும் வேலைக்குப் போய்விட்டனர். சமீபகாலமாக முதுகுத் தண்டில் ஏற்பட்ட வலி காரணமாக மருந்து சாப்பிடும் அவளை அவர்கள் ரொம்பத் தொந்தரவு செய்வதில்லை. சிறிது நேரம் கழித்துத் தனக்குத் தெரிந்த சுலோகங்களைச் சொல்ல கடவுள்முன் விளக்கு ஏற்றிவிட்டு உட்கார்ந்தாள் மீனா. ஏனோ சிலபேரைப் போல வீட்டு வேலைகளைச் செய்துகொண்டே சுலோகம் சொல்வது அவளுக்குப் பிடிக்காது. மனம் முழுவதும் இறைவன் நிரம்பி இருக்க, அனுபவித்துச் சொல்லுவாள்.

அன்றும் அப்படித்தான் அமர்ந்தபொழுது காலிங் பெல் அடிக்க, யாராய் இருக்கும் என்று நினைத்தபடியே வெளியில் வந்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் பெண் ரம்யா நின்றுகொண்டு இருந்தாள். முகம் வாடி இருக்கிறதே, முன்னறிவிப்பின்றி ஒரு கல்யாணம் ஆன பெண் தாய் வீட்டுக்கு வருவதை மீனவால் சாதாரணமான விஷயமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்ட மீனா, "வா, வா ரம்யா. வர்ரேன்னு ஃபோன்கூட பண்ணலையே" என்றாள் எதார்த்தமாக.

உடனே, "தோணிச்சு. வந்துட்டேன். நீ எப்படி இருக்கேம்மா" என்றாள். "பரவாயில்லை ரம்யா. ஒண்ணும் படுத்தலை. உள்ளே வா. களைப்பாக இருக்கிறாய் போல இருக்கே? காபி கலக்கட்டுமா?" என்றாள் மீனா. ரம்யா ‘ம்’ என்ற ஒற்றை ஒலியில் பதில் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் சென்றுவிட்டாள். கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு மகள் சென்றிருந்த போதிலும் அவள் அறையை அவளுக்கென்றே இன்றும் விட்டிருந்தனர். மீனாவின் கணவர் ரகுவுக்கு மகள் என்றால் கொள்ளை ஆசை. சில சமயம் கண்டிக்கவும் செய்வார். ஆனால் அவள் முகம் வாடினால் துடித்துத்தான் போவார்.

காபி கலந்துகொண்டே அவள் அறைக்கு வந்த மீனா, "இந்தா, முதலில் காபியைக் குடி" என்று கூறிவிட்டு எதிரில் அமர்ந்தாள். அவள், "கொஞ்சம் ஆறட்டும்மா. நான் குடிச்சிக்கிறேன்" என்று சொல்லிவிட்டுத் தான் கொண்டு வந்த பையில் ஏதோ தேடினாள். மீனா புரிந்து கொண்டாள். இவள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள். இருக்கட்டும். சற்றுப் போகட்டும். "கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் பூஜை பண்ணிட்டு வர்ரேன்" என்று சொல்லிவிட்டு சுலோகம் சொல்ல ஆரம்பித்தாள். மனம் குடும்பத்தை மறந்து இறைவனிடம் லயித்தது.

எல்லாம் முடிந்து வந்து பார்த்தபொழுது, ரம்யா படுத்துக்கொண்டு வெற்றிடத்தை வெறிப்பது தெரிந்தது. ஆசை மகள் அருகே சென்று அமர்ந்தாள். மெல்ல அவள் தலையை வருடினாள். களையான தன் தாயின் முகத்தையே சற்று நேரம் பார்த்த ரம்யா, "அம்மா, நீ டயர்டா இருக்கியா? உன் மடியில் தலை வெச்சுக்கட்டுமா?" என்றாள். அதற்காகவே காத்துக் கொண்டிருந்த மீனா, "இல்லயே. என்க்கொண்ணும் இல்லை. நீ இப்படி வா" என்று கூறி மகளை இழுத்து அவள் தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டாள். அம்மாவின் வாசனை என்றும்போல அன்றும் அவளை மயக்கியது. இத்தனை வயதிலும் அம்மா அழகுதான். அதில் ரம்யாவுக்கு ரொம்பப் பெருமை. அவள் மற்றப் பெண்களைப் போல இல்லாமல், அம்மா பெண்ணாகவே இருந்தாள். அம்மா மடியே தனக்கு எவ்வளவு ஆறுதல் தருகிறது! வியந்தாள்.

"ஏன் ரம்யா, மாப்பிள்ளை டின்னருக்கு வருவாரா?"

"இல்லம்மா. நான் திடீர்னு கிளம்பினதால அவருக்கு ஃபோன் பண்ணினேன். அவர் கொஞ்சம் பிசி. வாய்ஸ் மெசேஜ் பண்ணிட்டு வந்துட்டேன்." சற்று நேரம் இருவரும் மெளனமாக அவரவர் சிந்தனை வசப்பட்டு இருந்தனர்.

ஹாலில் ஃபோன் ஒலித்தது. ரம்யா, "நீ இரும்மா. நான் போய் அட்டெண்ட் பண்றேன்" என்று சொல்லிவிட்டுப் போனாள். ஹாலில் ஃபோனை எடுத்த ரம்யா, "ஹலோ, ஆன்ட்டீ எப்படீ இருக்கீங்க? ம்...ம்... நான் நன்னா இருக்கேன் ஆன்ட்டி" என்று பேசுவதில் இருந்து வந்த அழைப்பு தன் தோழி கமலாவிடம் இருந்துதான் என்று புரிந்து கொண்ட மீனா எழுந்து தன் புடவையை நீவி விட்டுக் கொண்டு தலைப்பைச் சரி செய்துகொண்டே மகளிடமிருந்து ஃபோனை வாங்கிக்கொண்டாள்.

நெருங்கிய தோழிகள் என்றாலும் மீனாவுக்கும் கமலிக்கும் நிறைய கருத்து வேற்றுமைகள் இருக்கத்தான் இருந்தன. ஆனால் இருவரும் இன்றுவரை நல்ல நட்புடன் பழகி வந்தனர். சற்று நேரம் அவளுக்கு ஆறுதல் கூறி, அவள் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இருந்து பின் ஃபோனை வைத்தாள் அம்மா.

அதுவரை, தன் அம்மா பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்த ரம்யா, அம்மாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, "ஏம்மா, ஆன்ட்டி ஏதாவது ப்ராப்ளத்துல இருக்காளா என்ன?" என்று கேட்டாள்.

மீனா, "பெரிசா எடுத்துக்கலைன்னா அது ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை. பெரிசா நினைச்சா ப்ராப்ளம்தான்" என்றாள்.

ரம்யா, "என்னம்மா, புதிர் போடறா மாதிரி பேசற" என்று சொல்லிவிட்டு ஆவலுடன் தன் தாயின் மங்களகரமான முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஆமாம் ரம்யா. கமலா சிறுவயசு முதலே ஒரே பெண்ணா வளர்ந்துட்டாள். சில பேர் தனியாக வளர்ந்தாலும் வயசு முதிர முதிர, பிறருடன் சேர்ந்து வாழ்வதில் உள்ள இனிமையை உணர்ந்து மாறுகின்றனர். ஆனால் கமலா, தன் கூட்டுக்குள் தானே ஒடுங்கிக் கொள்கிறாள். முதலில் மாமியார், மாமனார் இவர்களை விட்டுவிட்டு வந்தவள், இப்பொழுது, தன் கணவனிடமே உன் வேலை என் வேலை என்று பிரித்துப் பார்க்கிறாள்."
"இந்தக் காலத்தில எல்லாம் அவங்கவங்க வேலையை அவங்கவங்கதாம்மா செஞ்சுக்கறாங்க. அம்மா-பிள்ளைன்னாலும், கணவன்-மனைவின்னாலும், ஸ்பேஸ் கொடுத்துத்தான் வாழறா. அதனால ஆன்ட்டி அப்படி நினைக்கிறாளோ என்னவோ."

"அது சரி ரம்யா. நானும் அந்த மாதிரி நிறைய கேள்விப்படறேன். அனா இவ பொழுது போகலைன்னுனா சொல்லிண்டு, மகளிர் மண்டலில சேர்ந்துண்டு, பாட்டு கத்துக்கறேன்னு அங்க இங்க சுத்திட்டு, வீட்டுக்கு வந்து டயர்டா இருக்கு, நான்தான் இதச் செய்யணுமான்னு இங்க சண்டை போடறா."

"அம்மா, நீ ஆன்ட்டியை சரியா புரிஞ்சுக்கலையோன்னு எனக்குத் தோணுது. பாட்டு கத்துக்கறது அவங்க ஃபேஷனா இருக்கலாம் இல்லையா?"

"இருக்கலாந்தான். ஆனா அதுக்குக்காக, வீட்ல வந்து ஒவ்வொரு வேலைக்கும் இதை நான் ஏன் செய்யணும், ஏன் நீங்களே செஞ்சுக்கக் கூடாதான்னு சண்டை போடறது இல்வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தும் ரம்யா. இவளை என்ன மதர் தெரெசா மாதிரி சேவையா பண்ணச் சொல்றேன். அவ வீட்டுக்கு, அவ கணவனுக்குத்தானே ஹெல்ப் செய்ய சொல்றேன். இதில கணக்குப் பாத்தா தாம்பத்யம் எங்கே ரசிக்கும். விட்டுக் கொடுத்து வாழறச்சேத்தான் இல்வாழ்க்கை ரசிக்கும். அப்படி டயர்டா இருந்தா அன்னிக்குப் பாட்டு கிளாஸ் போகாம இருக்கறதுதானே. அதை விட மாட்டேன்றா. வீட்ல புருஷன்கிட்டே சண்டை போடறா. அப்ப வீட்டோட தன்னைச் சேர்த்துப் பார்க்கலைன்னு தானே அர்த்தம்? அப்ப அவ கணவனுக்கு மட்டும் இவகிட்டே எப்படிப் பாசம் வரும்? விட்டுத்தான் போகும். முதல்லேயே பாத்து சரி செஞ்சுக்காட்டா, சின்ன விஷயத்தில் ஆரம்பிக்கற இந்த விரிசல் தெரியாமலே பெரிசா ஆகி விவாகரத்துவரை போயிடறது. அதுக்குத்தான் அவகிட்டெ பேசிண்டு இருக்கேன்."

ரம்யாவுக்கு ஏதோ புரிவதுபோல் இருந்தது. அவள் வாழ்க்கையிலும் இப்பொழுது அப்படித்தான் சிறுசிறு உரசல்கள் தோன்ற ஆரம்பித்து இருக்கின்றன. உண்மையில் இன்று அவள் தாய்வீடுவரை வந்ததே அப்படி ஏற்பட்ட சிறு சம்பவத்தின் கசப்பை மறக்கத்தான். ஆனால் இப்பொழுது லேசான வெளிச்சம் கண்ணுக்குத் தெரிவதை உணர்ந்தாள்.
கேமரா லென்ஸின் கோணத்தை மாற்றுவதினல் எப்படி ஒரு பொருள் நம் கண்ணுக்கு முன்பு தெரிந்தைவிட அழகாக மாறுகிறதோ அப்படி நம் பார்வையின் கோணத்தை மாற்றினால் எதுவும் அழகாகத் தோன்றக்கூடும் என்று தெரிந்தது.

தன் தாயை அன்புடன் பார்த்த ரம்யா, "அம்மா இன்னைக்கு நான் உனக்கு டிஃபன் பண்ணி தந்துட்டு கெளம்பரேன்" என்றாள் புன்சிரிப்புடன். சில சமயங்களில், நமக்கு சம்பந்தமே இல்லாத இருவர் உரையாடலோ, செய்தித்தாளில் வரும் செய்தியோ, நம்மையும் அறியாமலே நம்மைச் சிந்திக்க வைத்து மாற்றுகின்றன . தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து கொண்ட ரம்யா, மனம் லேசாகி, வாழ்க்கையைப் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கக் கிளம்பினாள். மகள் கொடுத்த சிற்றுண்டியுடன் அவள் முகத்தில் ஏற்பட்ட தெளிவையும் சேர்த்து ரசித்தாள் மீனா.

சுதா சந்தானம்,
மவுண்டன்வியூ, கலிஃபோர்னியா
Share: 
© Copyright 2020 Tamilonline