Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அஞ்சலி | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
தொடரும் பயணங்கள்
ஆப்பிள் பயணங்கள்
- தங்கம் ராமசாமி|அக்டோபர் 2011|
Share:
எங்கேயோ கிராமத்தில் காய்த்த என்னைப் பறித்து பெட்டியில் அடைத்து டிரக்கில் ஏற்றிக் கொண்டு வந்தனர். நானும் ஆடி ஆடிக் கொண்டு வந்தேன். ஷாப் ரைட்டில் என்னைக் கொண்டு வந்து சேர்த்தனர். யாரோ பேசிக் கொண்டே சென்றார். ஆப்பிளில் விடமின் ஏயும் சியும் இருக்கிறது. அயர்ன், கால்சியம் கூட இருக்கு என்றனர். தேங்க்ஸ் கிவிங் டே, கிறிஸ்துமஸ் நாட்களில் எங்களுக்கு மதிப்பும் கௌரவமும் அதிகம். எனக்குள் ஒரே குஷி. குழந்தைகளுக்கு 'கெர்டர்' ஆகவோ, ஆப்பிள் பையாகவோ ஆக்கிடுவாங்க என்று சந்தோஷமாய் இருந்தேன். இனிமேல்தான் என் கதை ஆரம்பம்.

காரில் வந்து கொண்டிருந்தான் கோபு. சிக்னலுக்காக காத்துக்கொண்டு இருக்கும்போது செல்போன் ஒலித்தது. 'சே, என்னடா இது' சலிப்புடன் எடுத்து காதில் வைத்துக் கொள்ளவும், "ஏய் லூஸ். சிக்னல்ல நிக்கறேன். போலீஸ் பார்த்தா டிக்கெட் குடுத்துடுவான். இப்போ என்ன அப்படி அவசரம்?" மனைவி ரமாவைக் கடிந்து கொண்டான். "ஒண்ணுமில்லங்க. வர்ற வழியில 'ஷாப்ரைட்'ல கொஞ்சம் ஆப்பிள் வாங்கிட்டு வந்துடுங்க" இது மனைவி ரமா.

"முட்டாள். தலைவலி மண்டையைப் பொளக்கிறது. இப்போ ஆப்பிள் வாங்க என்ன அவசரம்?"

"ஐயோ, ஏன் இப்படி கோவிச்சுக்கறீங்க. என் ஃப்ரெண்ட் லக்ஷ்மியோட பேரண்ட்ஸ் வந்திருக்காங்க. வெறும் கையோட எப்படிப் போய் பார்க்கறது? அதுதான்..."

"ஆமாம். வெறும் கை. வெங்காயக் கை. சரி சரி சிக்னல் வந்தாச்சு. போனை வை" கடுகடுத்தான்.

கோபமாக ஷாப்ரைட்டில் நுழையும்போது திரும்பவும் போன். "முட்டாள். என்ன வேணும்? சும்மா ட்ரபிள் பண்ணிட்டு..?"

"ஆப்பிள்ல ராயல் காலா, க்ரான்னி ஸ்மித், ஃப்யூஜி எம்பயர்னு வெரைட்டி.." கூறி முடிக்கு முன் "வை போனை. ஆப்பிள்னா ஆப்பிள்தான். சும்மா வளவளன்னு பேசிக்கிட்டு. ஏதோ வாங்கிட்டு வரேன் போதுமா?" பற்களைக் கடித்தான் கோபு.

நேரே ஆப்பிள் பக்கம் போனான். மேலும் கீழுமாய்ப் புரட்டி சிலதைப் பொறுக்கினான். அவற்றுள் ஒன்றாய் நானும் பைக்குள் சென்றேன். ஆஹா.. புதுசா மக்களைப் பார்க்கப் போகிறேம். ஒரே த்ரில் மனதில். பில் போட்டு முடித்து காருக்கு வந்து சேர்ந்தோம். வீடு வந்ததும் பையை ரமாவிடம் கொடுத்தான். அலட்சியமாய் ஃப்ரூட் பாஸ்கெட்டில் வைத்த ரமா, "என்னங்க நல்லதா வாங்கிட்டு வரக் கூடாதா? இத்துனூண்டு இருக்கே. நல்ல பெரிசா அவ்வளவு வெரைட்டி சொன்னேன்ல" மெல்ல முனகினாள்.

"இதுதானே எனக்குப் பிடிக்காத விஷயம். இப்ப என்ன இதுக்கு? எதையாவது குற்றம் சொல்றதே உன் வேலையாப் போச்சு" எரிச்சலுடன் கூறினான் கோபு.

நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். சாப்பாடு முடித்துக் கிளம்பினார்கள். ஆப்பிள் பையை எடுத்துக் கொண்டு காரில் போனார்கள். லக்ஷ்மி வீட்டிற்குப் போய்ச் சேர்ந்து பையை லக்ஷ்மி கையில் கொடுத்தாள் ரமா. "என்ன ரமா, இவ்வளவு ஆப்பிள் வாங்கிட்டு வந்திருக்கே. யாருமே திங்க மாட்டேங்குறாங்க. உம்" என்று அரை மனதுடன் வாங்கி உள்ளே வைத்தாள். எனக்கு மனம் வாடிச் சுருங்கியது. சிறிது நேரம் பேசி முடித்து கோபுவும் ரமாவும் கிளம்பிச் சென்றனர்.

நான் ஒரு கூடையில் சிவனே என்று இருந்தேன். மறுநாள் காலை லக்ஷ்மியின் பெற்றோர்கள் கோயிலுக்குப் போகக் கிளம்பினர். வீட்டின் ஊதுபத்தி மணமும் பூவின் வாசனையும் என்னைக் கவர்ந்தது. "லக்ஷ்மி, அதான் இவ்ளோ ஆப்பிள் இருக்கே. கோவிலுக்கு எடுத்துட்டுப் போகலாம். வேற வாங்க வேண்டாம்" என்று அவர்கள் சொல்ல, நானும் அவர்களுடன் ஆசை ஆசையாய்க் கிளம்பினேன். வழியில் லக்ஷ்மியின் கசின் சுதா வீடு. "அம்மா. இங்கேதான் சுதா இருக்கா. ஒரு நிமிஷம். இதோ செல்போன்ல சொல்லிடறேன். இறங்கி ஒரு ஹலோ சொல்லிட்டுப் போயிடலாம், சரியா?"

"சரிம்மா. குழந்தைங்க இருக்கிற இடம் வெறும் கையோட போகக் கூடாது. இதோ இந்த ஆப்பிளை எடுத்துக்க" பையுடன் எடுத்துக் கொண்டனர். ஆஹா... குழந்தைகளைப் பார்க்கலாம். மனம் துள்ளியது. லக்ஷ்மியின் கையிலிருந்து சுதா கைக்கு நான் மாறியவுடன் சுதா, "அடடே லக்ஷ்மி. நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே. நேத்து என் பையன் ரகு ஆப்பிள் சாப்பிட்டதுல உடம்பெல்லாம் தடித்து ஒரே அலர்ஜியாயிடுச்சி. உடனே டாக்டரிடம் ஓடினேன். கொஞ்ச நாளைக்கு ஆப்பிள் கொடுக்காதீங்கன்னு ஸ்ட்ரிக்டா சொல்லி மெடிசன் கொடுத்து இருக்கார். சாரிம்மா. அவன் கண்ணுல படறதுக்குள்ள எடுத்துட்டு போயிடுமா ப்ளீஸ்" லக்ஷ்மி கையிலேயே திரும்பக் கொடுத்தாள் சுதா.
லக்ஷ்மி மட்டுமில்லை. நானும் தோற்றுப் போய்விட்டேன். திரும்பக் கோயிலுக்கு வந்தாயிற்று. கோயிலுக்குப் போனதும் பையுடன் அர்ச்சனைப் பொருட்கள் வாங்கினார்கள். அர்ச்சகரிடம் கொடுத்து அர்சனை செய்தாயிற்று. அப்பாடா... கடவுளையாவது தரிசனம் செய்தோமே. மனம் ரொம்ப சந்தோஷப்பட்டது. லக்ஷ்மி பிரசாதம் வாங்கிக் கொண்டு, "ஆப்பிளை எல்லோருக்கும் கொடுத்துடுங்க" என்றாள்.

"நீங்களே கொடுத்திடுங்கம்மா. ரெண்டு நாளா சேவார்த்திகள் ரொம்ப வரலை. இதோ பாருங்க. இந்த மரப்பெட்டி நிறைய பழங்கள் போட்டு வச்சிருக்கோம். அப்படியேதான் இருக்கு..."

"பிரசாதம் வேண்டாம்னு சொல்லாத. வாங்கிக்கோ" அம்மா கூறவும், பை, லக்ஷ்மி கைக்கு வந்தது. பைக்குள் இருந்து கொண்டே நான் எட்டிப் பார்க்க ஆவலானேன். பிரதட்சணம் வர ஆரம்பித்தனர். நானும்தான். வழியில் லக்ஷ்மியின் ஃப்ரெண்ட் கலா குழந்தைகளுடன் வர, ஒருவரையொருவர் குசல விசாரிப்பு.

லக்ஷ்மியின் அம்மா, "கலா, அர்ச்சனை பண்ணினோம். இந்தா ப்ரசாதம்" இரண்டு ஆப்பிளை எடுத்து கலாவின் கைகளில் கொடுத்தார். நான் கலாவின் பையன் கைக்குப் போய்விட்டேன்.

இரண்டு பையன்களில் ஒருவன், முன்னால் இருந்த மற்றவனிடம் "ஏய், கேட்ச்" என்று என்னைத் தூக்கிப் போட, அவன் பிடிக்க முடியாமல் நான் அபிஷேகத் தண்ணீர் விழும் தொட்டிக்குள் போய் விழுந்தேன். "என்ன இது. கோயிலுக்குள் விளையாட்டு?" குழந்தைகளைத் திட்டினாள் கலா. பையன் என்னை எடுக்க முயற்சித்தான். "ச்சீச்சி, யக்கி, டோண்ட் டூ லைக் தட். வீட்டுக்கு வா. வேற தரேன்" என்று தரதரவென்று குழந்தைகளை இழுத்துக் கொண்டு போய்விட்டாள். நான் மனதுக்குள் அழுதவாறு வெகு நேரம் கிடந்தேன். சிறிதுநேரம் கழித்து க்ளீன் செய்யும் ஆள் வந்து என்னை எடுத்து கார்பேஜ் பையில் போட்டுக் கட்டிவிட்டான். இதுதான் என் கதை. அமெரிக்க ஆப்பிளின் கதை. இதே இந்தியாவாக இருந்தால் எனக்கு என்ன கௌரவம், மரியாதை, மதிப்பு இருந்திருக்கும்! எல்லாம் என் நேரம். நான் அமெரிக்கா வந்ததற்கு யாரைக் குற்றம் சொல்ல?

தங்கம் ராமசாமி,
நியூ ஜெர்ஸி
More

தொடரும் பயணங்கள்
Share: 
© Copyright 2020 Tamilonline