Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
நல்லவன்
- செ.கணேசலிங்கன்|ஏப்ரல் 2007|
Share:
Click Here Enlargeகொம்பனித் தெருச் சந்தி வட்டத்திலிருந்து கோல்பேஸ் வழியே திரும்பும் நடைபாதையில் இடதுபுறமாக 50 யார்ட் நடவுங்கள். அதிலே ஒரு நிழல் மரம்; மரத்திலே வண்டிகளின் இரைச்சலுக்கு அஞ்சாத பறவைகள்; நிலமெங்கும் அவைகளின் எச்சங்கள்; அவற்றின் நடுவே மரத்தடியில்தான் முனிசாமி இருப்பான்.

அவனருகே பழைய கறள் பிடித்த ஒரு இரும்புப் பெட்டி; அதற்குள்ளேதான் பத்து ரூபாவும் பெறாத அவன் சொத்துக்கள் அனைத்தும் இருக்கும். மற்றோர் புறத்தில் ஒரு கிழிந்த சாக்கு; அதற்குள்ளே மிருகத் தோல் துண்டுகளும், பழைய செருப்புகள், சப்பாத்துகள் மட்டும் காணலாம். அவன் தொழிலிற்குரிய முதலீடு அவ்வளவுதான். அதிகாலை ஏழு மணி தொடக்கம் மாலை ஏழு மணி வரையும் முனிசாமியை அவ்விடத்தில் காணலாம். வெயிலோ, மழையோ அவனை அசைத்துவிட மாட்டா.

ஒல்லியான நடுத்தர உயரம்; பொது நிறம்; ஒடுக்கமான முகம். எண்ணெய் காணாது செம்பட்டை நிறம் பெயர்ந்த வாராத தலை மயிர்; வெற்றிலைக் காவி படிந்த பல் வரிசை; அழுக்கடைந்த பெனியன்; பார்த்ததும் சிங்களவன் என மதிக்கத்தக்கதாக அரையிலே ஒரு சாரம்; ஒரே உடையோடு மூன்று மாதங்களுக்காவது அவனைக் காணலாம். அவன் முகத்தில் மட்டும் எவ்விதமான வேதனைக் குறியையும் எப்போதும் காண முடியாது. சரளமாக எவரோடும் பேசுவான். அப்படித்தான் முதல்நாளே என்னோடு பேச ஆரம்பித்தான்.

என்னிடம் உள்ளது ஒரே ஒரு பஞ்சாப் சப்பாத்து. அன்று அதன் வார் அறுந்து விட்டது. குதி ஏற்கனவே தேய்ந்திருந்தது. மற்றும் சில திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தன. செருப்பை அணிந்து கொண்டு, அதைக் கடுதாசியில் சுற்றிக் கொண்டு அன்று புறப்பட்டேன். புகை வண்டியால் இறங்கியதும் அவற்றைச் சரிப்படுத்த யாரிடம் கொடுக்கலாம் என்ற நோக்கத்தோடு நடைபாதை வழியே நடந்தேன். அந்த மரத்தடியில் அவன் கடையை விரித்தபடி உட்கார்ந்திருந்தான்.

சப்பாத்துக்களை எடுத்துக் காட்டினேன். செய்ய வேண்டிய திருத்தங்களையெல்லாம் சொன்னேன். 'எவ்வளவு பணம் கேட்கிறாய்?' என்று அவனைக் கேட்டேன். வழியிலே நானும் ஓர் திட்டம் போட்டுக் கொண்டுதான் அன்று சென்றேன். இரண்டு ரூபாவிற்குக் குறையாது எவனாவது முதலில் கேட்பான். நான் ஒரு ரூபாவில் ஆரம்பித்து ஒன்றரை ரூபாவோடு சரிப்படுத்திவிட வேண்டும் என்பதே என் முடிவு. 'முப்பது சதம் கொடுங்க துரை. அதெல்லாம் அசலாய்ச் செய்து தருவேன்' என்றான். நான் திகைப்படைந்தேன். யாரோ ஒரு பிழைக்கத் தெரியாத முட்டாள் என்று முடிவு கட்டிக் கொண்டேன்.

'சரி திருத்தி வைத்துக் கொள். மாலையில் வருவேன். இங்கு இருப்பாய்தானே?' என்று கூறிவிட்டுத் திரும்பினேன். 'துரை' என்று அவன் கூப்பிட்டான். அவன் பக்கம் திரும்பினேன். 'கைவியளமாக ஏதாவது...' என்று இழுத்தான். அவன் கருத்தைப் புரிந்து கொண்டேன். காலையில் பீடி, தேனீருக்குக் கூட அவனிடம் பணமில்லை!

இருபத்தைந்து சத நாணயம் ஒன்றை வீசி விட்டு நான் நடந்தேன்.

மாலையில் இருட்டும் போதுதான் திரும்பினேன். அவன் அதே சிரிப்போடு வரவேற்றான்.

'துரை, உங்க கை நல்ல ராசிக் கை, இண்டைக்கு ரண்டு ரூபா உழைச்சு விட்டேன். இப்பதான் அவள் கறி வாங்கப் போறாள்' என்றான். 'உனக்கு மனைவி வேறயா' என்று என் வாய் உளறி விட்டது. 'புள்ளை கூட ஒண்டிருக்குத் துரை அதோ..' சுட்டிக் காட்டியபடி இளித்தான். திரும்பிப் பார்த்தேன். அவள் போய்க் கொண்டிருந்தாள். தோளிலே குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. நடுத்தரமான உடற்கட்டு; அள்ளி முடிந்த வரண்ட மயிர்; ஒரு சாதாரண நீலச் சேலை; இடதுகை குழந்தையின் தோளை அணைத்துக் கொண்டிருந்தது. அவள் அமைதியின் உருவமாக நடந்து கொண்டிருந் தாள். முகத்தைப் பார்க்க முடியவில்லை.

இடையிடையே அந்தத் தெரு நடைபாதை வழியே நான் போகும்போதெல்லாம் அவன் ஏதாவது வேலையில் ஈடுபட்டிருப்பான். என்னைக் காண நேர்ந்தால் ஒரு புன்னகை மட்டும் உதிர்ப்பான். அதன்மூலம் என்னைத் தனது வழமைக் காரனாக ஆக்கிவிட்டான், பாவம்! நான் என்ன செய்வது? என் சப்பாத்து அறுந்துவிட வில்லை.

2. ஏதோ ஒரு தமிழ்ப் படத்திற்கு இரண்டாவது காட்சிக்குச் சென்றிருந்தேன். முனிசாமி கலரிக் 'கியூ' வரிசையில் கடைசியில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு 'டிக்கெட்' கிடைப்பது சந்தேகம். என்னைக் கண்டதும் பல்லைக் காட்டினான். அன்று சப்பாத்துச் சரிப்பண்ணுவதில் எனக்குக் கிடைத்த இலாபம் ஞாபகம் வந்தது. அவனை அழைத்து என் பின்னே தொடரச் செய்தேன். 'டிக்கெட்' பெற்று உள்ளே அழைத்துச் சென்றேன். சினிமா ஆரம்பிக்க நேரமிருந்தது. அப்போது தான் அவன் தன் கதையைச் சொன்னான்.
இருப்பதற்கு வீடு இல்லை. ஒரு சந்து முனை ஓரத்தில் இரவில் மட்டும் சமையல் செய்வார்களாம். அன்றாடு கிடைப்பதைக் கொண்டு அரை வயிறோ கால் வயிறோ நிரப்புவது வழக்கமாம்.

இரண்டு ஆண்டுகளின் முன்னர் அந்த இடத்தில் செருப்புத் தைக்கும் தொழிலுக்குப் போட்டியில்லை. நல்ல உழைப்பு. இரவில் 'சொகுசாகத்' திரிந்தான். அப்போது தான் காளியம்மாவைக் கட்டிக் கொண்டான். பத்து ரூபாவிற்கு ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்திருந்தான். ஒரு ஆண்டு ஒரு வகையாகக் குடும்பம் நடத்தினர். மழை காலம் ஏற்பட்டதும் பிழைப்புக் குறைந்தது. போட்டியும் ஏற்பட்டது. வாடகை கொடுக்க முடியவில்லை. வெளி யேறினர். கையிலே ஒரு சிறுகுழந்தை. தெருக்கரை ஓரங்களிலேதான் தூங்கினர். 'காளியம்மாவிற்கு என் மேல் உயிர். கட்டிய மனைவியை அணைத்துக் கொண்டு படுப்பதற்குக் கூட இடமில்லை. இரவு பூராவும் தெருவெல்லாம் நடமாட்டம்' என்றும் அவன் சங்கோசமின்றிக் கூறினான். அதன் மேல் படம் ஆரம்பமாகிவிட்டது.

3. மழைகாலம் ஆரம்பமாகிறது. ஒரு மாதமாக முனிசாமியை அந்த மரத்தடியில் காண வில்லை. திடீரென ஒருநாள் கண்டேன். நோயினால் பீடிக்கப்பட்டவன் போல் காணப்பட்டான். அவன் என்னைக் காணவில்லை. அறுந்து போயிருந்த என் செருப்பை மறுநாள் எடுத்து வந்தேன். சில நிமிஷங்களில் கட்டித் தருவதாகக் கூறினான். அவன் வேலை செய்வதைப் பார்த்தபடி நின்றேன்.

'நெருப்புக் காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரியில் கிடந்தேன். மருந்துத் தண்ணியைத்தான் சும்மா ஊத்தினாங்க. ஏதோ பழங்களும், மோல்டர் மாவும் குடிக்கும்படி அந்த டாக்குத்தர் கூறினாராம். கொஞ்ச நாள் நினைவில்லாமலே கிடந்தேன். காளியம்மா ஒரு கடவுள் துரை. அவள்தான் ஏதோ ஒரு வகையாகக் கஷ்டப்பட்டு உழைச்சு என்னையும் குழந்தையையும் காப்பாற்றினாள்' என்று அவன் அன்பு கனிந்த குரலில் கூறினான். அவன் பார்வை கீழே பதிந்திருந்தது. அவன் கண்களில் அன்பு நீர் சுரந்திருப்பதை அப்போதும் நான் கண்டேன்.

'இன்பத்திலே மட்டும் உதவ முன் வருபவள் வேசி; துன்பத்திலே உதவுபவள்தான் மனைவி - பெண் தெய்வம்' என்றோர் கருத்துரை அன்று பூராவும் என் மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

4.அடுத்த மாதச் சம்பளத்தில் புதுச் சப்பாத்தி வாங்கி விட்டேன். வீடும் மாறி விட்டேன். அந்த வழியே போக வேண்டிய அவசியமும் எற்படவில்லை. இடையே விடுமுறையில் ஒரு மாதம் வெளியூர் சென்றிருந்தேன். திரும்பிய பின்னர் ஒருநாள் அவ்வழியே செல்ல நேரிட்டது. மரத்தடியில் முனிசாமியைக் காணவில்லை. 'மடையன், மழையில் நனைந்திருப்பான். மீண்டும் காய்ச்சல் வந்திருக்கும்' என்ற எண்ணத்தோடு சென்றேன். பின்னர் அவனைப் பற்றியே மறந்து விட்டேன்.

வெள்ளவத்தையில் நாடக விழா நடந்து கொண்டிருந்தது. 'மனிதன்' நாடகத்தை என் நண்பன் வேலாயுதத்திற்குக் காட்ட வேண்டும் என விரும்பினேவன். அழைத்துச் செல் விடு சென்றேன்; காணவில்லை. அவன் ஒரு மெடிக்கல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவன். பெரியாஸ்பத்திரியில் இருப்பான் என்ற துணிவுடன் சென்றேன். விசாரித்து அவன் பணியாற்றும் 'வாட்'டுக்குச் சென்றேன். பயங்கர நோயாளர் பகுதி அது. மேக நோயால் வருந்தும் பலரின் அனுங்கல் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. நண்பன் ஒருவருக்கு ஊசி மருந்து ஏற்றிக் கொண்டிருந்தான். அருகே ஒருவன் அனுங்கியபடியே கிடந்தான். முகத்தைப் பார்த்தேன். திகைத்தேன்! முனிசாமி! அருகில் சென்றேன். 'இது என்ன முனிசாமி' என்று என் நா உளறி விட்டது.

அவன் கண்களில் நீர் நிறைந்ததைக் கண்டேன். வெட்கத்தினால் தலையைத் தாழ்த்தியபடியே தழதழத்த குரலில் பதில் கூறினான். 'துரை, என்னைக் கெட்டவனென்று எண்ணி விடாதீங்க. நான் நல்லவன். என் பெண்சாதியைத் தவிர ஒரு பெண்ணையும் தொட்டதில்லேங்க!'

செ.கணேசலிங்கம்
Share: 
© Copyright 2020 Tamilonline