Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
'மங்கை மடவன்னம்' நாவலிலிருந்து ஒரு பகுதி
- கே. துரைசாமி ஐயங்கார்|ஜூன் 2011|
Share:
அத்தியாயம் 2: நரியைப் பரியாக்கிய நம்பெருமாள் செட்டியார்

நகை கண்டெடுக்கப்பட்டது

நேற்றிரவு மோகன விலாஸ் நாடகக் கொட்டகைத் தெருவில், ஒரு கம்மலின் ஒரு பாகம் கண்டெடுக்கப்பட்டு அடியில் காணப்படும் விலாசதாரரிடமிருக்கிறது. அதை இழந்தவர் நேரில் வந்து, அது தம்முடையதுதான் என்பதை திருப்திகரமாக மெய்ப்பிப்பார்களானால், உடனே மேற்படி நகை அவரிடம் கொடுக்கப்படும்.

இங்ஙனம்
நரி, பரி, பரி, நரி. நம்பெருமாள் செட்டியார்,
21, நாராயணன் தெரு,
மதறாஸ்

- என்று வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தை மேற்படி நரி, பரி, பரி, நரி. நம்பெருமாள் செட்டியாரே நூற்றுப் பதினைந்தாவது தடவை படித்து விட்டுப் பத்திரிகையைத் தமக்கு எதிரிலிருந்த மேஜைப் பெட்டியின்மேல் அலட்சியமாகப் போட்டார்.

செட்டியாருடைய வயது சுமார் முப்பதிருக்கலாம். அவருடைய திருமேனியின் சாயல், நெருப்புத் தணலைத் தண்ணீரால் சுத்தம் செய்த பிறகு ஏற்படும் நிறத்தைத் தோற்கச் செய்வதாய் காணப்பட்டாலும், அவர் துல்லியமான மஸ்லின் வஸ்திரத்தையும், மஸ்லின் சட்டையையும் அணிந்து, தலையில் ஜரிகைக் கரைத் தலைப்பாகையையும் அணிந்திருந்தார். அவருடைய இரண்டு செவிகளிலும் வெள்ளைக் கடுக்கன்கள் சுடர் விட்டெரிந்தன. அவர் தமது நெற்றியில் பளிச்சென்று தென்கலை நாமம் தீட்டிக் கொண்டிருந்தார். எனவே, இவ்வாறு அவருடைய உடம்பை அலங்கரித்துக் கொண்டிருந்த அதிக வெண்மையான பல வஸ்துக்கள், அவருடைய உடம்பின் கறுப்பு நிறம், தன் சுயநிலைமையை விடப் பன்மடங்கு அதிகமாய்க் கறுத்துத் தோன்றும்படிச் செய்தன. ஆனால், அவருக்கு தொந்தி முதலிய சதைப் பிதுக்கல்கள் அதிகமாய்த் தோன்றியிருக்கவில்லை யென்பது கண்கூடாகத் தெரிந்தமையால், அவர் ஒரே இடத்தில் சதாகாலமும் உட்கார்ந்திருந்தபடி வியாபாரம் செய்கிறவர் அன்று என்றோ அல்லது அவரிடம் அதிகமாய்ப் பணம் சேரவில்லை என்றோ நாம் சம்சயங்கொள்ள, அவருடைய மெல்லிய தோற்றம் இடங்கொடுத்தது.

அவர் இருந்த மேன்மாடி வீட்டின் கூடத்தில் தரையின் ஒரு பிரப்பம்பாய் விரிக்கப்பட்டிருந்தது. அதன்மேல் செட்டியார் உட்கார்ந்து, சுவரில் சார்த்தப்பட்டிருந்த ஒரு திண்டில் சாய்வதும், தமக்கெதிரில் இருந்த மேஜைப் பெட்டியின் மேல் இருந்த பத்திரிகையை எடுத்துப் பார்ப்பதும், அதை வைத்தபின் அதற்குப் பக்கத்தில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துத் தமது வடிவழகையும், அலங்காரத்தையும் பார்த்துப் பார்த்து ஆத்மதிருப்தி அடைந்து தமக்குத்தாமே புன்னகை செய்து கொள்வதுமாகயிருந்தார். அவர் உட்கார்ந்திருந்த கூடத்தில் வேறு எவ்விதமான பொருளும் காணப்படவில்லையாதலால், அவர் என்ன விதமான வர்த்தகம் நடத்தினாரென்பதை வெளித் தோற்றத்திலிருந்து அனுமானிக்க வகையில்லாதிருந்தது.

அவருடைய மேஜைப் பெட்டிக்கு மேல் இருந்த மூன்றாவது வஸ்து அவருடைய கைக்கடிகாரம், அவர் மாறிமாறி மணியைப் பார்ப்பதும், பத்திரிகை விளம்பரத்தைப் பார்ப்பதும், கண்ணாடியால் தமது திருமேனியழகைச் சரிபார்த்துக் கொள்ளுவதுமாய் இருந்ததைக் காண்போர், இம்மூன்று வேலைகளைத் தவிர அவர் கவனிக்கக்கூடிய அல்லது செய்யக்கூடிய காரியம் வேறு எதுவும் இந்த உலகில் இல்லையா என்று சம்சயிக்க அவருடைய செய்கை இடங்கொடுத்தது. அதுவன்றி, அந்தக் கூடத்தில் அவர் ஒருவரே காணப்பட்டார். வேறு குமாஸ்தாவோ, உறவினரோ, வேலைக்காரரோ காணப்படவில்லை. அந்த வீட்டின் கீழ்ப்பாகத்திலும் மனிதர் இருந்த குறிப்பு ஏற்படவில்லை.

அவர் அவ்வாறு உட்கார்ந்திருந்தது அந்தப் பத்திரிகை வெளியான மாலைக்கு மறுநாள் காலை சுமார் பத்து மணி சமயத்தில். அவர் யாருடைய வருகையையோ மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்தாரென்பது சில குறிகளால் தெரிந்தது. அந்தக் கூடத்திற்கு அடுத்தாற்போல் தாழ்வாரமும், முற்றப்பள்ளமும் இருந்தன. மேற்படி தாழ்வாரம் மேற்படி முற்றப்பள்ளத்தைச் சுற்றி நாற்புறங்களிலும் வளைத்துக் கொண்டிருந்தது. கூடத்தையடுத்திருந்த தாழ்வாரத்தின் ஒரு கோடியில் கீழே இறங்குவதற்கான படிக்கட்டொன்று காணப்பட்டது. அந்தப் படிக்கட்டு கீழ்ப்பாகத்தின் நடையில் போய் இறங்கியது. அதுவன்றி, முற்றப்பள்ளத்திற்கு அப்பாலிருந்த தாழ்வாரத்தின் ஒரு கோடியிலிருந்து கீழே சென்ற இன்னொரு படிக்கட்டு அந்த வீட்டுக் கீழ்ப்பாகத்தின் உள்பக்கத்தில் போய் இறங்கியது.

அவருடைய கவனமும், பார்வையும் முன்பக்கப் படிக்கட்டின் மீதே அடிக்கடி சென்றதாகையால் வீட்டின் வெளியிலிருந்து எவரோ வரவேண்டுமென்று நினைத்து, அவருடைய வருகையைச் செட்டியார் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார் என்பது சுலபத்தில் விளங்கியது. அதுவன்றி, எதிர்ப்புறத் தாழ்வாரத்திலிருந்த படிக்கட்டின் பக்கத்தில் அவருடைய பார்வையோ, கவனமோ செல்லவில்லையாதலால், அதிலிருந்தும் வெளியிலிருந்து வர வேண்டிய யாரோ மனிதருடைய வருகையை அவர் ஆவலோடு எதிர்பார்த்திருந்தாரென்பது நன்கு தெரிந்தது.

ஆனால் பொழுது போய்க் கொண்டிருந்ததேயன்றி, அவர் எதிர்பார்த்தபடி எவரும் வரவில்லையாகையால், அவருடைய ஆவலும், அலுப்பும் படிப்படியாகப் பெருகியதே பலனாய் முடிந்தது. அம்மாதிரி எவ்வித வேலையுமின்றி உட்கார்ந்திருந்தது அவருக்குப் பெரிதும் துன்பகரமாயிருந்ததாகையால், அவர் எழுந்து கூடத்தில் உலாவத் தொடங்கினார். அவருடைய உடம்பு மாத்திரம் அவ்விடத்தில் நடந்து கொண்டிருந்ததேயின்றி, அவருடைய பிரக்ஞை சிறிதும் அவ்விடத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. அந்தக் கூடத்தின் முன்பக்கத்துச் சுவரில் இரண்டு ஜன்னல்கள் இருந்தன. செட்டியார் கூடத்தில் அங்குமிங்கும் இரண்டு தடவை நடக்கிறதும், ஜன்னலின் வழியாக வெளிப்பக்கத்தில் தமது பார்வையைச் செலுத்தி அங்கிருந்த ரஸ்தாவைக் கவனிக்கிறதுமாயிருக்க, அப்போது ரஸ்தாவில் ஒரு மனிதர் வந்து திடீரென்று தம்மைப் பார்த்துச் சிரித்ததாகச் செட்டியார் உணர்ந்தாராதலால், அவர் சரேலென்று அப்பால் நகர்ந்து மறைந்துகொண்டு, “பூஜை வேளையில் கரடியை விட்டு ஓட்டுவது போல, இந்தச் சனியன் எப்படியோ இங்கே வந்து சேர்ந்தானே! இதுவரை உட்கார்ந்திருந்த நான் ஏன் எழுந்து நடந்தேன், இவனாலேயே என் வேலை கெட்டுப் போய்விடும் போலிருக்கிறதே! நான் இங்கே வந்து சைகை காட்டுவது சரியானதல்ல. அவன் தானாகப் போகிறவனுமல்ல. வடிகட்டின அசடு! ஒருவேளை பட்டவர்த்தனமாக இங்கே வந்து எதையாவது உளறுமோ என்னவோ தெரியவில்லையே” என்று தமக்குள்ளாகவே எண்ணமிட்டு அச்சங் கொண்டபடி திரும்பவும் அங்குமிங்கும் உலாவிய சமயத்தில், முன்புறப் படிக்கட்டின் வழியாக யாரோ மேலே ஏறி வந்த ஓசை உண்டாகவே, அவருடைய சம்சயம் நிச்சயப்பட்டுப் போயிற்று. அவருடைய மனதில் கோபமும் பதைப்பும் தோன்றலாயின. “நாம் எவன் வரக்கூடாதென்று நினைக்கிறோமோ அவன் அவசியம் வந்தே தீருகிறான்” என்று அருவருப்போடு எண்ணிய சமயத்தில், அவர் அப்படி நினைத்தது தவறென்று கூறி அவரை தண்டிப்பது போல, அவருடைய தலையின் மேல் பட்டென்று ஒரு சிறிய கல் வந்து மோதித் தரையில் விழுந்தது.
செட்டியார் திடுக்கிட்டு நடுங்கி மேல் பக்கம் நிமிர்ந்து பார்த்தார். எலி அல்லது அணில் போனதனால், சுண்ணாம்புக்கட்டி பெயர்ந்து தலையில் விழுந்திருக்குமோ என்ற சம்சயமே அவருக்கு அப்போது உண்டானதாகையால், அவர் அவ்வாறே மேலே பார்த்தார். ஆனால், மேல்புறம் முழுதும் தேக்கம் பலகையால் போர்த்தப் பட்டிருந்ததாகையால், செட்டியார் திகைத்துப் போய் கல்லைப் பார்த்தார். அதன் மேல் ஒரு காகிதம் சுற்றப்பட்டிருந்தது தெரிந்தது. அவர் ஆவலோடு பாய்ந்து கடிதத்தை எடுத்துப் பார்த்தார். அதில் அடியில் வரும் வாக்கியங்கள் இருந்தன:

நான் உன் கருத்தைத் தெரிந்து கொண்டேன். இதனாலெல்லாமா காரியம் பலிக்கப் போகிறது. இந்த முயற்சியில் ஓர் ஈ கூட சாகப் போகிறதில்லையாகையால், உனக்கு அற்பப் பயனும் உண்டாகப் போகிறதில்லை யென்று நான் உறுதிமொழி எழுதிக் கொடுப்பேன்.

என்று எழுதப்பட்டிருந்ததைப் படித்த செட்டியார் உடனே விரைவாக ஜன்னலண்டை ஓடி வீதிப்பக்கம் பார்த்தார். அந்தக் கடிதத்தை எழுதிப்போட்ட மனிதர் போய்க் கொண்டிருந்தது தெரியவே, அவர், “சனியன் ஒழியட்டும். வேறு யாராவது இங்கே இருக்கும்போது இந்தக் கடிதம் என் தலையில் விழாமல் இப்போது விழுந்ததும் ஒரு நன்மைதான்” என்று நினைத்தபடி இப்பால் திரும்ப, அப்போது பூனைபோல் ஓசையின்றித் தாழ்வாரத்தில் வந்து நின்ற ஒரு மனிதன், “உங்களுக்கு ஒரு தந்தியும், ஒரு பத்திரிகையும் வந்திருக்கின்றன” என்று கூறியபடி நிரம்பவும் வணக்கமாய் அவைகளை அவரிடம் நீட்டினான்.

அவனைக் கண்டு வியப்படைந்த செட்டியார், “ஓ, நீயா வந்தாய்! வேறே யாரோவென்றல்லவா நினைத்தேன். சரி, நீ போய் மறைவில் ஜாக்கிரதையாக இரு. நான் கூப்பிடும்போது வா” என்றார்.

அதைக் கேட்டுக்கொண்டு அந்த மனிதன் அவ்விடத்தை விட்டுப் போய்விட்டான்.

உடனே செட்டியார் அவசர அவசரமாகத் தந்தியின் உறையைக் கிழித்து உள்ளே இருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தார். அது கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது:

நீங்கள் குறிக்கும் மனிதர் இன்னார் என்பது எனக்குத் தெரியவில்லை. அந்த மாதிரி எத்தனையோ ஆசாமிகளுக்குக் கடிதங்கள் வருகின்றன. அவரவர்கள் வந்து தாம் இன்னார் என்று சொல்லிக் கடிதங்களைப் பெற்றுக் கொள்ளுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய அடையாளங்களையும் நாங்கள் கவனிப்பதும் சாத்தியமல்ல; அப்படி நாங்கள் செய்கிறதுமில்லை. நீங்கள் குறிக்கும் மனிதர் யார் என்பது தெரியவில்லை.

என்று எழுதப்பட்டிருந்த தந்தியைப் படிக்கவே செட்டியாருடைய முகம் விகாரமாக மாறியது. அவர் அதிருப்தியோடு உதட்டைப் பிதுக்கிக் கொண்டு, “இப்படித்தான் மறுமொழி வருமென்று நான் நினைத்தேன். மனம்போல் மாங்கல்யமாய் முடிந்தது” என்று நினைத்தபடி ஓய்ந்து கீழே உட்கார்ந்து திண்டில் சாய்ந்துகொண்டு தந்தியோடு கொடுக்கப்பட்ட பத்திரிகையைப் பிரித்துப் பக்கங்களைப் புரட்டலானார்.

அது பம்பாயில் வெளியாகும் பம்பாய் க்ரானிகல் என்னும் தினசரிப் பத்திரிகை. இந்தியாவில் ஒவ்வோர் இராஜதானியிலும் வெளியாகும் முக்கியமான பத்திரிகைகள் செட்டியாருக்கு வருவது வழக்கம். பெரிய பட்டணங்களின் வர்த்தக நிலவரங்களைப் பற்றிய தகவல்களையெல்லாம் தவறாமல் படித்து அவர் தெரிந்து கொள்வார். அதுவன்றி, திருட்டுக்கள், புரட்டுக்கள், போலீஸ் கோர்ட் விசாரணைகள் முதலிய திடுக்கிடும் சம்பவங்களைப் படிப்பதில் அவருக்கு சந்தோஷம் அதிகம். ஆகவே, அவர் 'பம்பாய் க்ரானிகல்' என்னும் பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டி தலைப்பு வாக்கியங்களைப் படித்துக் கொண்டே போக, அடியில் கண்ட செய்தி அவருடைய திருஷ்டியில் பட்டது.

பூனா
193... ஜூலை 18

இருபதாவது நூற்றாண்டின் புதிய அதிசயம்.

இந்த ஊரிலுள்ள இந்திய ஊழியர் சங்கத்தின் தலைமைக் காரியாலயக் கட்டிடத்தின் ஆண்டு விழாக் கொண்டாட்டம் மிக விமர்சையாய் நடத்தப்பட்டது. அப்போது சகுந்தலா பாய் என்னும் புனைபெயர் பூண்ட அமெரிக்க மங்கை ஒருத்தி எல்லோரும் பிரமிக்கும்படி நடனமாடியதன்றி, இடையிடையில் அதியாச்சரியகரமான பல ஜால வேடிக்கைகளையும் காட்டினாள். இதில் முதலாவது வேடிக்கை, ஒரு மனிதரை ஒரு பெட்டிக்குள் படுக்க வைத்து, அவரை இரண்டாய் அறுத்துக் காட்டி, மறுபடி அவரை உயிரோடு வரவழைப்பது. இதுபோலவே மற்ற வேடிக்கைகளும் வேறு எவராலும் இதுவரை செய்து காட்டப்படாதவைகளாய் மிகப் புதுமையாயிருந்தன. இந்த அமெரிக்க மாது ஹிந்துவாய் மாறி, அந்தந்த தேசத்துக்குத் தக்க பெயரைத் தரித்து அங்கங்கு இதே போல வேடிக்கைகள் காட்டுவதாய் தெரிகிறது. இவள் ஹரி கண்பத் நாயக் என்னும் ஒரு மஹாராஷ்டிரப் பிராமணரை மணந்து கொண்டிருக்கிறாள். அவரும் அவளுக்கு உதவியாக இருந்து வருகிறார். இந்த மடந்தை இதற்கு முன் மைசூர், கல்கத்தா, பரோடா முதலிய இடங்களில் வெவ்வேறு புனைபெயர்களை வைத்துக் கொண்டு ஜால வேடிக்கை காட்டியதாகத் தெரிகிறது.

இந்த மாதிரி நடனத்தையும் ஜால வேடிக்கைகளையும் இதுவரையில் எங்கும் கண்டதில்லை என்று ஜனங்கள் ஏகமனதாகப் புகழுகிறார்கள். இம்மாதிரியான அற்புத வேலைகளை நாம் இந்தியர்கள் கற்று, இந்திய ஜனங்களை மகிழ்விக்கும் காலம் எப்போது வருமோவென்று எல்லோரும் ஏகமனதாகச் சொல்லிக் கொள்ளுகிறார்கள்.

(க்ஷ இடத்திற்குச் சென்றிருந்த நம் சொந்த நிருபர் எழுதியது)

என்று எழுதப்பட்டிருந்த செய்தியைப் படித்த செட்டியாருடைய உடம்பு தனக்குத் தானே திடுக்கிட்டு ஆடியது. அவருடைய முகம் விகாரமாக மாறிப் போயிற்று. அதுவரையில் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் பார்ப்பதும், சிந்தனை செய்வதுமாய் இருந்தவர், சடக்கென்று ஓய்ந்து மூக்கில் விரலை வைத்தபடி அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து விட்டார்.

அவ்வாறு கற்சிலை போல் சுமார் கால்மணி நேரம் உட்கார்ந்திருந்தார். அவர் வெளிப்பார்வைக்கு உயிரற்றவர்போல், காணப்பட்டாலும் அந்தச் செய்தி அவருடைய மனோ வேகத்தை அபாரமாக முடுக்கி விட்டதாகையால், அந்தக் கால் மணிக்குள் அவருடைய மனது பம்பாய், பூனா, கல்கத்தா, மைசூர் முதலிய இடங்களுக்கெல்லாம் பறந்து பிரயாணம் செய்து வட்டமிட்டுக் கொண்டிருந்ததாகையால், அவர் தம்மையும், தாமிருந்த இடத்தையும், தமது நிலைமையையும் முற்றிலும் மறந்து போனார். அவருடைய கண்கள் நன்றாகத் திறந்து எதிர்ப் பக்கத்தைப் பார்த்தபடி இருந்தனவானாலும், அவை எதிரில் இருந்த எந்த வஸ்துவையும் பார்க்கவில்லை. கண்களின் சக்தி பூர்த்தியாய் உட்புறம் திரும்பிப் போய் விட்டதாகையால், அவை குருடனுடைய கண்கள் போல் இருந்தன. அவருடைய மனம் எண்ணிய எண்ணங்களுக்குத் தக்கபடி, அவருடைய கைகள் அபிநயம் காட்டி நாட்டியமாடின.

அப்போது தமக்கு எதிரில் 'கலக்' என்று எவரோ சிரித்த ஓசையைக் கேட்டு செட்டியார் திடுக்கிட்டு நிமிர்ந்தார். அதுவரையில் எங்கேயோ போயிருந்த அவருடைய பிரக்ஞை சடக்கென்று திரும்பவே, அவருடைய முகமும் மற்ற அங்கங்களும் மறுபடி உயிர்களையும், ஊக்கத்தையும் அடைந்தன. அவருடைய கண்கள் உணர்ச்சி பெற்று எதிரில் ஒரு ஸ்த்ரீ நின்று கொண்டிருந்ததைக் கண்டன.

அவர், அவமானத்தினால் குன்றிப் போனாராலும், அதைக் காட்டிக் கொள்ளாமலும், தமது நிதானத்தை இழக்காமலும், அந்த அம்மாளைப் பார்த்து மிக மரியாதையாகப் பேசத் தொடங்கி, “யார் அம்மா நீ! இப்போது இங்கே யாரோ சிரித்த மாதிரி இருந்ததே! யார் சிரித்தது?” என்றார்.

சுமார் இருபது வயதடைந்திருந்தவளாய்க் காணப்பட்ட அந்த யௌவன மடந்தை நாணிக் கோணி நெளிந்து அபாரமான வெளி மயக்குக் காட்டிப் பேசத் தொடங்கி, “நான் இங்கே வந்து கால் மணியாகிறது. நீங்கள் கண்களைத் திறந்து என்னைப் பார்த்துக் கொண்டே ஏதோ ஜாடை காட்டினீர்களேயன்றி, நான் யார் என்பதையும் கேட்கவில்லை. நான் வந்து நின்றதையும் உணரவில்லை. யாராவது திருடர் வந்து எதையாவது எடுத்துக் கொண்டு போயிருந்தால் கூட, அது உங்களுக்குத் தெரிந்திருக்காது. கால் மணியாய் நீங்கள் அப்படியே செய்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்ததில், என்னை மீறிச் சிரிப்பு வந்துவிட்டது. நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது. கோபிக்க வேண்டாம்” என்று நிரம்பவும் வினயமாக மறுமொழி கூறினாள்.

செட்டியார் கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை யென்று வாதிக்கும் சுபாவமுடைய மனித வர்க்கத்தில் சேர்ந்தவராதலால், தமது அசட்டுத்தனத்தை ஒப்புக் கொள்ளாமல் நிரம்பவும் கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்து அதிகாரத் தோரணையாய்ப் பேசத் தொடங்கி, “நீ வந்ததை நான் பார்க்கவில்லை என்று நினைத்துக் கொண்டாயா? நீ எந்த க்ஷணம் இங்கே வந்தாயோ அப்போதே உன்னை நான் பார்த்தேன். இவ்வளவு யௌவனப் பருவமுடைய ஒரு பெண் அயலார் வீட்டிற்குள் எவரேனும் துஷ்ட புருஷர் இருப்பார் என்ற அச்சமோ, கிலேசமோ இல்லாமல் திடீரென்று நடுவீடு வரையில் வந்து நின்றதைக் கண்டவுடன் என் ஆச்சரியம் அளவில் அடங்காததாகி விட்டது. ரிஷி பத்தினிகளின் இருப்பிடமான இந்த இந்தியாவில் இப்படிப்பட்ட பெண்களும் இருக்கிறார்களா என்று நினைத்து நான் அப்படியே பிரமித்து உட்கார்ந்து விட்டேன். நீ யார் என்று கேட்கவேண்டுமென்று என் மனம் எண்ணியதாலும், இவ்வளவு துணிகரமான ஸ்த்ரீயிடம் எப்படி வாய் கொடுக்கிறதென்று கருதி, என் வாய் இந்தக் கால் மணியாய்த் தயங்கி இருந்திருக்கிறது. என் கண்கள் உன்னைப் பார்த்தபடி அப்படியே பிரமித்து நின்றுவிட்டன. என் நிலைமை இந்த மாதிரி ஆனதற்கு நீயே காரணமாயிருந்தும், போதாக்குறைக்கு நீ என்னைப் பார்த்துப் புரளியாகச் சிரிக்கிறாய்! நன்றாயிருக்கிறதம்மா உன் காரியம்! போனது போகட்டும். உன்னோடு வாத தர்க்கங்கள் செய்து கொண்டிருக்க எனக்கு இப்போது நேரமில்லை. இவ்வளவு தூரம் என் வீட்டையும், என்னையும் கௌரவித்து வந்த கண்ணியமான விருந்தாளி இன்னார் என்பதைத் தெரிந்து கொள்ளாமலும், அவருக்குத் தக்கபடி மரியாதை செய்யாமலும் இருப்பது என்மேல் பெரிய தவறாகும். ஆகையால் வந்த காரியத்தைச் சொல்லலாம். நீ சொந்தக்காரர் யாரையாவது தேடிக்கொண்டு வந்தாயா? இது செட்டியாருடைய வீடு. இதன் சொந்தக்காரருடைய பெயர் நரி, பரி; பரி, நரி. நம் பெருமாள் செட்டியார் என்பார்கள்” என்று நிதானமாகப் பேசினார்.

அவர் பேசிய தோரணையைக் கேட்ட அந்த மடந்தை அதற்குமுன் அவர் நடந்து கொண்ட மாதிரியையும் நினைத்து அவர் பித்துக்கொள்ளி மனிதராயிருப்பாரோ என்றும், அவர் வெளியிட்டிருந்த செய்தி சும்மா வேண்டுமென்றே நடத்தப்பட்ட வேலையாயிருக்குமோ என்றும் கருதி, தான் அவ்வளவோடு திரும்பிப் போய்விடலாமா என்று நினைத்தவளாய் ஈனஸ்வரத்தில் பேசத் தொடங்கி, “அப்படியானால் இந்த வீட்டின் சொந்தக்காரச் செட்டியார் இப்போது இங்கே இல்லையா?” என்றாள்.

அதைக் கேட்ட நரி, பரி, பரி, நரி. நம்பெருமாள் செட்டியார், அசட்டுப் புன்னகை செய்து, “என்ன அம்மா நீ வந்தது முதல் என்னை மென்மேலும் அவமதிக்கிறாயே! நீ என்னை அவமதித்தது இது மூன்றாவது தடவை. என் உத்தரவில்லாமல், என் வீட்டிற்குள் வந்தது முதல் தப்பு. என்னைப் பார்த்துப் புரளியாகச் சிரித்தது இரண்டாவது தப்பு. இப்போது நான் இந்த வீட்டின் சொந்தக்காரனாக இருக்க அருகதையற்றவன் என்று நினைப்பது போலப் பேசுவது மூன்றாவது தப்பு. அயலார் வீட்டிற்கு வந்து ஒரு யௌவனப் பெண் இப்படியும் நடந்து கொள்ளலாமா? உனக்கு இன்னமும் சந்தேகமிருந்தால் இன்னொருமுறை சொல்லுகிறேன். என்னைத்தான் இந்த வீட்டின் சொந்தக்காரரான நரி, பரி; பரி, நரி. நம்பெருமாள் செட்டியார் என்று இந்த ஊர் ஜனங்கள் கருதுகிறார்கள். அது உனக்கு இஷ்டமில்லையா? இப்பேர்ப்பட்ட அபூர்வமான கண்ணியமான விருந்தாளியோடு இப்போது பேசி அதனால் உள்ளுக்குள் மட்டற்ற ஆனந்தம் அடைகிறவரே நரி, பரி; பரி, நரி. நம்பெருமாள் செட்டியார். இவ்வளவு அருமையான, அழகான விருந்தாளி எதைக் கேட்பதானாலும், இரட்டிப்புச் சந்தோஷத்தோடு கொடுக்க அவர் ஆயத்தமாயிருக்கிறார். வந்த விருந்தாளி வாயைத் திறந்து கேட்க வேண்டியதே தாமதம்” என்று மிக நிதானமாகக் கூறினார்.

அதைக் கேட்கவே அந்த மடந்தைக்கு மறுபடி சிரிப்பு வரும்போல் இருந்தாலும், அவள் அதை அடக்கிக்கொண்டு, “இந்த வீட்டில் இருக்கும் நரி, பரி; பரி, நரி. நம்பெருமாள் செட்டியாரிடம் ஒரு கம்மலின் ஒரு பாகம் இருப்பதாகவும், அதன் சொந்தக்காரர் வந்து பெற்றுக் கொள்ளலாமென்றும், பத்திரிகைகளில் விளம்பரம் வந்திருக்கிறது. அதற்காக நான் வந்தேன்” என்றாள்.

செட்டியார்: அவ்வளவுதானே! அதற்குமேல் அதிகமொன்றுமில்லையே. நல்ல வேளை; நான் தப்பினேன். அப்படியானால் அந்த நகை உன்னுடையதா?

வந்தவள்: எந்த நகை?

செட்டியார்: (வியப்போடு புன்னகை செய்து) நகையின் சொந்தக்காரருக்கே, தான் வாங்க உத்தேசித்து வந்தது இன்ன நகை என்பது தெரியாது போலிருக்கிறதே இது பெரிய தமாஷாய்த் தானிருக்கிறது? அப்படியானால் நீ நகையை வாங்கிக் கொண்டு போகும் உத்தேசத்துடன் வரவில்லை என்பது நிச்சயமாகிறது. உண்மையில் யாரம்மா நீ? எதற்காக நீ இங்கே வந்தாய்? அந்த நகை உனக்குச் சொந்தமல்லவானாலும், வேறு வகையில், அதற்கு நீ சொந்தக்காரியாகி, அதை வாங்கிக் கொண்டு போகலாமென்று வந்தாயா?

வந்தவள்: கம்மலின் ஒரு பாகம் உங்களிடம் இருப்பதாய் உங்கள் விளம்பரம் சொல்லுகிறது. நீங்கள் நகை என்கிறீர்கள். உங்களிடம் இருப்பது முழு நகையா, நகையின் ஒரு பாகமா என்பது தெரியவில்லை. அதனால் நான் எந்த நகை என்று கேட்டேன். அதைத் தெரிந்து கொள்ளாமல் தாறுமாறாகப் பேசுகிறீர்களா?

செட்டியார்: இந்த மறுமொழி உன் வாயிலிருந்து வர வேண்டுமென்று எதிர்பார்த்தே நான் இப்படிக் குளறலாய்ப் பேசுகிறேன். ஏனென்றால், நீ இழந்தது இன்ன நகை என்பது உன் வாயிலிருந்தே வரவேண்டுமென்பதுதான் என் கருத்து. நான் நகை என்றால் நீ நகையின் பாகம் என்று திருத்துகிறாயா இல்லையா என்று உன்னை ஆழம் பார்த்தேன். ஆனால் அந்தப் பொருள் இன்னதென்பதை இன்னம் நீ சொல்லவில்லை.

வந்தவள்: நான் இழந்தது ஒரு கம்மலின் திருகு.

செட்டியார்: அது எந்த இடத்தில் காணாமல் போயிற்று?

வந்தவள்: மோகன விலாஸ் நாடகக் கொட்டகைத் தெருவில்.

செட்டியார்: நீ அதை இழந்தபோது எவ்வளவு மணி இருக்கும்?

வந்தவள்: நான் அந்தக் கொட்டகைக்கு வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன். அங்கே பெரிய கலகமாய் விட்டது. நான் என் வீட்டிற்கு விரைவாகத் திரும்பிப் போனேன். காலையில் பார்த்ததில் ஒரு கம்மலில் திருகு இல்லை. நான் போனபோதோ அல்லது அவசரமாய் ஓடி வந்தபோதோ, அது அந்தத் தெருவில் விழுந்திருக்கலாமென்ற சந்தேகம் எனக்கு உண்டாயிற்று. அதற்காக வந்தேன்.

செட்டியார்: அந்தக் கம்மலைக் கொண்டு வந்திருக்கிறாயா? கொண்டு வந்திருந்தால் எடு.

வந்தவள்: (தன்னிடம் இருந்த திருகில்லாக் கம்மலொன்றைக் கொடுத்தபடி) இதன் திருகுதான் காணாமல் போய்விட்டது என்றாள்.

செட்டியார் அதை வாங்கித் தமது மேஜைப்பெட்டிக்குள் மறைவாக வைத்துக் கொண்டு தம்மிடமிருந்த திருகை எடுத்து அதைக் கம்மலில் போட்டுப் பார்த்தார். திருகு சுரையில் நுழையவில்லை. ஆகவே, அந்தத் திருகு அவளுடைய கம்மலைச் சேர்ந்ததல்லவென்று அவர் உடனே நிச்சயித்துக் கொண்டார். ஆனாலும் அவருடைய மனதில் மிகுந்த ஆச்சரியம் உண்டாகத் தொடங்கியது. மோகன விலாஸ் நாடகக் கொட்டகைக்காரருடைய வீட்டிற்குப் பெண் வேஷத்துடன் சென்ற மனிதருடைய காதிலிருந்து ஒரு திருகு விழுந்ததென்பது ஆண்டாளம்மாளுடைய கடிதத்தால் தெரிந்தது. அதுவன்றி, அதே இரவில், இவளும் அந்தக் கொட்டகைக்காரருடைய வீட்டுக்குச் சென்ற பெண் போலவே கம்மலின் திருகை இழந்தாளென்ற செய்தி அவருக்கு ஆச்சரியமாயிருந்தது. ஒரே இரவில் நாடகக் கொட்டகையில் சம்பந்தப்பட்ட இருவருடைய கம்மலின் திருகுகள் காணாமல் போயின என்னும் ஒற்றுமை நம்பத்தகாததாயிருந்தது. உண்மையிலேயே தற்செயலாக அந்தப் பெண்ணும் தனது திருகை இழந்திருப்பாளா அல்லது போலீசாரிடம் ஒரு திருகு அகப்பட்டுக் கொண்டிருந்ததென்பதைக் கேட்டு, அதைப் பற்றியே தாம் விளம்பரம் வெளியிட்டிருப்பதாக நினைத்து, தான் அதை அபரிக்க வேண்டுமென்ற கருத்துடன் அந்தப் பெண் வந்திருப்பாளா என்னும் சந்தேகங்கள் செட்டியாருடைய மனதில் உதித்தன.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
Share: 




© Copyright 2020 Tamilonline