Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
சிலருக்கு மட்டும் ஏன் இப்படி?
- சித்ரா வைத்தீஸ்வரன்|டிசம்பர் 2010|
Share:
அன்புள்ள சிநேகிதியே

என்னுடைய அருமை சிநேகிதியைப் பற்றிய ஒரு வருத்தமான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் காலேஜில் படிக்கும்போது ஏற்பட்ட நட்பு. 35 வருஷ சிநேகிதம். நாங்கள் எல்லாரும் நல்ல தமிழில் பேசிக் கொண்டிருக்கும் போது அவள் மட்டும் மலையாளம் கலந்த தமிழில் பேசுவதே ஒரு அழகாக இருக்கும். நல்ல உயரம். அதற்கேற்ற உடம்பு. மாநிறம்தான். ஆனால் அந்தக் கண்களில் இருந்த ஒரு கவர்ச்சியை யாரிடமும் இதுவரை நான் பார்த்ததில்லை. ஒரு ஃபியட் காரில் நாஜகுமாரி போல வந்து இறங்குவாள். எங்கேயோ இருக்கிறாள், நமக்கு ஒத்து வராது என்பது போல முதலில் அவளைப் பார்த்துக் கொஞ்சம் பொறாமைப்படுவேன். ஆனால் போகப் போக அவளுடைய சகஜமான பேச்சும், யாரைப் பற்றியும் குறை சொல்லாத குணமும் மிகவும் பிடித்துப் போய்விட்டன. நெருங்கிய சிநேகிதிகளானோம். 3 வருடம்தான் அந்த நட்பு. அப்புறம் அவளுடைய பணம், அழகுக்கு ஏற்ப ஒரு நல்ல மாப்பிள்ளை (அதுவும் அந்தக் காலத்தில் அமெரிக்கப் பையன் என்றால் கேட்கவே வேண்டாம்) கிடைக்க, பறந்து போய்விட்டாள்.

முதலில் கொஞ்சம் கடிதப் பரிமாற்றம் இருந்தது. பிறகு 2, 3 வருஷத்துக்கு ஒருமுறை வரும்போது பார்த்துக் கொள்ள முயற்சி செய்வோம். நான் படித்து வேலைக்குப் போய் 5 வருடங்களுக்குப் பிறகுதான் எனக்குத் திருமணம் ஆனது. என் வாழ்க்கைத் திசையும் மாறிப் போயிற்று. 3 குழந்தைகள் ஆகி என் வேலை, என் குடும்பம், அவள் வேலை, அவள் குடும்பம் என்று எத்தனையோ கடமைகள். இருந்தாலும் என் சிநேகிதியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். 5 வருடங்களுக்கு முன்பு என் குழந்தைகள் படித்து 2 பேர் இங்கேயே வேலை கிடைத்துத் தங்கிவிட நான் முதன்முறையாக அமெரிக்கா வந்தேன். என் சிநேகிதியை காண்டாக்ட் செய்து நிறையப் பேசினேன். மிகவும் ஆசையாக, அக்கறையாக என் குடும்பம் பற்றி விசாரித்தாள். நிறையப் பொது விஷயங்கள், காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் என்று பழைய நாட்களை நினைத்து அசை போட்டோம். நிறையச் சிரித்தோம். முதல் ட்ரிப்பில் நான் மேற்கிலும், அவள் தெற்கிலும் இருந்ததால் பார்த்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை. பையனிடம் எப்படி டிக்கெட் வாங்கச் சொல்வது என்று சிறிது தயக்கமாக இருந்தது. அப்புறம் 2 முறை வந்தேன். ஒருமுறை அவளை காண்டாக்ட் செய்ய முடியவில்லை. வாய்ஸ் மெயில் வந்து கொண்டிருந்தது. இன்னொரு ட்ரிப்பில் நான் மிகவும் பிஸியாக இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு பையனுக்குக் கல்யாணம் ஆகிப் பேரன் பிறந்த சமயம் அது.

இந்த தடவை எப்படியாவது அவளைப் பார்த்து விட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி எடுத்து, அவள் நம்பரைக் கண்டுபிடித்துப் பேசினேன். அதே சிரிப்பு. அவள் குரலைக் கேட்டாலே எனக்கு சந்தோஷமாக இருக்கும்.

"ஒன்று நீ இங்கே நான் இருக்குமிடத்திற்கு வர வேண்டும். இல்லாவிட்டால் நான் அங்கே வரப் போகிறேன்" என்று உரிமையோடு பேசினேன். வரப் பார்க்கிறேன் என்று சொன்னாளே ஒழிய வரவில்லை. சரி, அவளுக்கு என்ன பிரச்னையோ என்று நினைத்து அதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, என் பையனே, "அம்மா, நீங்கள் போய்விட்டு வாருங்களேன். சந்தோஷமாக இருந்துவிட்டு வாருங்கள்" என்று சொன்னபோது, நான் மிகவும் சந்தோஷமாக அவளுக்குப் போன் செய்தேன். அதை அவள் உற்சாகமாக வரவேற்காதது எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அவள் கணவருக்கு உடம்பு சரியாக இல்லையோ என்று யோசித்தேன். எனக்கு இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருந்ததால், இவளை எப்படிப் பார்ப்பது என்று நினைத்து, "சரி, எதற்கும் கேட்டு விடலாம்" என்று மறுபடியும் கூப்பிட்டேன்.

அப்போதுதான் திடீரென்று ஞாபகம் வந்தது. அது அவளுடைய திருமண நாள் என்று. ஆசையாக, கேலியாக விஷ் செய்தேன். அவள் சிரித்துக் கொண்டே, "பரவாயில்லையே, ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறயே. ஆனால் உண்மையில் இன்று எனக்கு 'மறுவாழ்வு நாள்' என்றாள். எனக்குப் புரியவில்லை. "32 வருடம் கழித்து எனக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. இன்றைக்கு டிவோர்ஸ் பேப்பர்ஸ் வந்து விட்டது" என்றாள். எனக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. "என்ன உளறுகிறாய்" என்றேன். முதல் தடவையாக என் ஃப்ரெண்ட் அழுது அன்றுதான் நான் பார்க்கிறேன். போனில் அழுகைச் சத்தம்தான் வந்து கொண்டிருந்தது. அந்தக் கணவன் ஒரு பொஸஸிவ் மேன். பயங்கரக் கோபக்காரர். குழந்தைகளுக்காகப் பொறுத்துக் கொண்டிருக்கிறாள். இப்போது அவர்கள் செட்டில் ஆகி விட்டார்கள். "இனிமேல் பொறுத்துப் பிரயோஜனம் இல்லை என்று விலகிவிட்டேன். என்னால் இதற்கு மேல் முடியவில்லை" என்று அவள் திரும்பி அழ ஆரம்பித்தாள். "எப்போது கோபம் வரும், எதற்கு வரும் என்று தெரியாமல் திணறியிருக்கிறேன். இனிமேல் நன்றாக மூச்சு விட முடியும்" என்றாள். இவள் டிவோர்ஸ் கேட்டபோது முதலில் ஏதோ பயம் காட்டுகிறாள் என்று நினைத்துக் கேலி செய்தாராம் அவர். அப்புறம் கோபம் அதிகமாகிப்போய்க் கத்த ஆரம்பித்தாராம். இவள் மிகவும் சீரியஸாக இருக்கிறாள் என்று தெரிந்த பின்பு 'நான் மாறி விடுகிறேன்' என்று கெஞ்சிப் பார்த்தாராம். இவள் இசைந்து கொடுக்கவில்லை.
நான் அவளிடம் கோபித்துக் கொண்டேன். என்னிடம் எதையும் சொல்லாமல் இருந்ததற்காக. "நீயே உன் கணவர் மறைந்த துக்கத்தில் இருந்தாய். நான் எதற்கு என் கவலையை உன்மேல் ஏற்ற வேண்டும் என்றுதான் சொல்லவில்லை" என்றாள். உண்மைதான். எனக்கு ஆதரவு கொடுத்து, அன்போடு பார்த்துக்கொள்ள நல்ல அருமையான கணவர் வாய்த்திருந்தார். எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. பெரிய பையன் காலேஜில் இருக்கும்போதே, ஒரு விபத்தில் போய்விட்டார். அப்போது நினைத்தேன், "என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படிப் போராட்டமாகவே இருக்கிறது. என் தோழியைப் போல் இல்லாமல்" என்று.

டிசம்பரில் இந்தியா வருவதாகச் சொல்லியிருக்கிறாள். அப்போது மீட் பண்ணிக் கொள்ளுவோம். ஆனால் இன்னமும் புரிபடவில்லை. எப்படி 32 வருடம் சகித்துக் கொண்டிருந்தாள்? அப்படிச் சகித்துக் கொண்டிருந்தவளுக்கு ஏன் இன்னும் சில வருடங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது? ஏன் இந்தத் தன்மையை அவளே ஏற்படுத்திக் கொள்கிறாள்? "குழந்தைகளுக்காகப் பொறுத்துக் கொண்டேன்" என்கிறாளே, அந்தக் குழந்தைகளுக்கும் அந்தக் கோபக்கார அப்பாவைச் சிறுவயது முதலே பார்த்துப் பார்த்து என்ன பாசம் அவரிடம் உண்டாகியிருக்கும்? இப்போதெல்லாம் நம் ஊரிலேயே திருமணம் ஆகி 1-2 வருடங்களிலேயே அபிப்ராய பேதங்கள் ஏற்பட்டு டிவோர்ஸ் ரேட் அதிகமாகி விட்டது. எங்கள் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் முட்டி மோதி, எப்படியோ காலத்தைக் கடத்தி விடுகிறார்கள். குழந்தைகள் பெரியவர்களாகி வீட்டை விட்டு வெளியே போகும்போதுதான் அவர்களுக்குள் சண்டை குறைந்து அன்னியோன்னியமாகி விடுகிறார்கள். ஆனால், இவளோ இந்தச் சமயத்தில் ஏன் இந்த முடிவை எடுத்தாள்? தனிமை எவ்வளவு கொடுமை என்று எனக்கு நன்றாகத் தெரியும். அவ்வளவு நல்லவள். எப்படி அந்தக் கணவரை இத்தனை வருடம் பொறுத்துக் கொண்டாள்? அப்போதும் இழப்பு. இப்போதும் இழப்புதானே என்றெல்லாம் யோசிக்கிறேன். பைத்தியம் மாதிரி உளறுகிறேன் என்று நினைக்காதீர்கள். அவளுக்காக மனது மிகவும் வேதனைப்படுகிறது.

இப்படிக்கு
..............

அன்புள்ள சிநேகிதியே

இந்த இதழில் உங்கள் கேள்விகளுக்கு என் கருத்துக்களை எழுதும் நேரத்தில் நீங்கள் கிளம்பி விட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஏன் இப்படிச் சிலருக்கு வாழ்க்கை பறிபோய் விடுகிறது என்று ஒரு பெண்ணின் நிலையை நினைத்து, கணவன்-மனைவி உறவை நினைத்து நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது. என் எண்ணங்கள் அடுத்த இதழில்.

இப்படிக்கு
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Share: 




© Copyright 2020 Tamilonline