Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
நாசர்
அனு நடராஜன்
டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன்
- வெங்கட்ராமன் சி.கே., மதுரபாரதி|டிசம்பர் 2010|
Share:
கனெக்டிகட்டின் கிளாட்ஸ்டன்பரியில் மாகாணப் பிரதிநிதி பதவிக்கு ரிபப்ளிகன் வேட்பாளராகப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றவர் தமிழ் அமெரிக்கரான டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன் (பார்க்க: தென்றல் ஆகஸ்ட் 2009). 'அரசியலுக்குப் புதியவர், பதவியில் இருப்பவரை அதிரவைத்தார்' என்று இவரது வெற்றியைப் பற்றி உள்ளூர்ப் பத்திரிகைகள் தலைப்புச் செய்தியில் அலறின. கனெக்டிகட் பொதுச்சபையில் மாகாணப் பிரதிநிதியாகப் பணியாற்றப் போகும் முதல் இந்திய-அமெரிக்கராவார் இவர். ஒரே மருத்துவரும் கூட. சமுதாய உணர்வு மிக்கவரான இவர் மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களும் சிகிச்சை பெறச் செய்ய 1999ல் 'பிரசாத் ஃபேமிலி ஃபவுண்டேஷ'னை நிறுவினார். கிளாட்ஸ்டன்பரி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உதவிநிதி வழங்குகிறார். நியூஸ்வீக்கின் Top Doctor in Connecticut, எல்லிஸ் தீவு கௌரவ பதக்கம், CAPI Lifetime Achievement Award, CT Immigrant And Refugee Coalition Award, Paul Maloney Distinguished Service Award ஆகிய விருதுகளை 2010ம் ஆண்டில் வாங்கியிருக்கிறார். ஆனால், இவற்றையெல்லாம் விட முக்கியம், மாகாணத்தின் அடிப்படைப் பிரச்சனைகளைக் கூர்ந்து ஆராய்ந்து, அவற்றைத் தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் எடுத்துச் சொல்லி வெற்றிபெற்ற இவரது முன்னுதாரணம் பொதுவாழ்வில் ஈடுபட நினைக்கும் இந்திய-அமெரிக்கர்களுக்கு ஒரு பாடம். இவற்றையெல்லாம் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் தென்றலுக்கான இந்தப் பிரத்தியேக உரையாடலில்......

***


தென்றல்: வாழ்த்துக்கள். அரசியலில் நுழைந்து கனெக்டிகட்டுக்கு, ஏன், அமெரிக்கா முழுமைக்குமே இந்திய-அமெரிக்கச் சமுதாயத்துக்கு ஒரு முன்னோடியாகத் துணிந்த உங்கள் சாதனை எங்களுக்குப் பெருமிதம் தருகிறது.
டாக்டர் பிரசாத்: நன்றி. உங்கள் இனிய வாழ்த்து எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

கே: உங்களுடைய வியக்கத் தக்க வெற்றியைக் குறித்த சில அம்சங்கள் வருங்காலத்தில் அரசியலில் கால் பதிக்க விரும்புவோருக்கு வழி காட்டுவதாக இருக்கும்.
ப: நிச்சயம். கேளுங்கள்.

கே: மாநில அளவில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எப்போது தோன்றியது?
ப: வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நிச்சயம் அரசியலில் நுழைவேன் என்பது எனக்குத் தெரிந்தே இருந்தது. எப்போது என்பதுதான் கேள்வி. இந்தியாவில் மருத்துவக் கல்லூரி நாட்களாகட்டும், அமெரிக்கா வந்த பின்னர் சமூக, கலாசார, தொழில்துறை அமைப்புகளாகட்டும், எல்லாவற்றிலும் நான் எதாவதொரு பதவிக்குப் போட்டியிடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

முதலில் தனி வாழ்வில், அடுத்துத் தொழில் வாழ்வில் நான் ஒரு நிலையை எட்டுவது அவசியமாக இருந்தது. அதைச் சாதித்ததும் பொதுவாழ்வில் ஈடுபடும் என் தீராக் காதலைச் செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன். சென்ற ஆண்டு, நவம்பர் 19 அன்று நான் என் 60 பிறந்த நாளைக் கொண்டாடியபோது, 10-12 நெருங்கிய குடும்பங்கள் வந்திருந்தன. அடுத்த பத்தாண்டுகள் நான் பொது வாழ்க்கையில் கடினமாக உழைக்கப் போகிறேன் என்று அன்றைக்கு அறிவித்தேன்.

கே: சரி, கட்சி உங்களை வேட்பாளராக நிறுத்தியது எப்படி?
ப: ரிபப்ளிகன் வேட்பாளராக நான் நின்றேன். பொருளாதாரப் பொறுப்புணர்வு வேண்டும் என்பதை உறுதியாக நம்புகிறவன் நான். சற்றே கன்சர்வேடிவ் கூட. என்னை லிபரல் என்று சொல்லிக்கொள்ள முடியாது, ஆனால் அதே சமயம், நான் அல்ட்ரா-கன்சர்வேடிவ் ரிபப்ளிகன் அல்ல. பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளாகக் கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறேன், ஆனால் பெரிதாக எதுவும் செய்யவில்லை. பின்னொரு சமயத்தில் நான் வேட்பாளர் ஆக நிற்க விரும்புவேன், நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வெகுநாள் முன்னரே சொல்லி வைத்திருந்தேன்.

இந்த வருட ஆரம்பத்தில் நான் கட்சியை அணுகியபோது, என்னடா இவன் மாகாணத் தேர்தலுக்கு நிற்கிறேன் என்கிறானே என்று அவர்கள் கொஞ்சம் அதிர்ந்து போனது உண்மைதான். நகரத்தின் கல்வி வாரிய உறுப்பினர், நகரவை உறுப்பினர் என்று நான் ஏதும் பதவிகள் வகித்ததில்லையே.

கட்சியில் வேறொருவர் போட்டியிட விரும்பினார். அப்படியானால் முதல்நிலைப் போட்டி இருக்கும். "அப்படியே போட்டி இருந்தாலும், நான் நிற்கவே விரும்புவேன். ஏனென்றால் என்னைவிடச் சிறந்த வேட்பாளர் இல்லை" என்று நான் தெளிவாகக் கூறிவிட்டேன். கட்சியில் நிறைய யோசித்தார்கள், பேசினார்கள். எனது அதிர்ஷ்டம், மற்றொருவர் பிரைமரியில் நிற்க விரும்பவில்லை. நான் வேட்பாளர் ஆனேன்.

கே: அரசியலுக்குப் புதியவரான நீங்கள் வித்தியாசமாக என்ன செய்தீர்கள்?
ப: கல்வி வாரியம், நகரக் கவுன்சில் என்று படிப்படியாக வளராத நான் யோசித்தேன். என் பெயர் வெளியே அறியப்பட வேண்டும். ஆனால் 30 வருடங்களாக நான் கிளாட்ஸ்டன்பரியில் மருத்துவராகத் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறேன். அதனால் என்னிடம் வரும் குடும்பங்கள் என்னை நன்கு அறியும். எனது சிகிச்சையில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதற்காக, அவர்களது கட்சிச் சார்பை மீறி ஓட்டுப் போடுவார்களா, தெரியாது. ஆனால் அவர்கள் இருப்பது எனக்கு ஒரு பலம்.

அடுத்த ஆதாரம் நகரின் பிற மருத்துவர்கள். மாகாணத்துக்குப் போட்டியிடும் ஒரே மருத்துவர் நான் மட்டுமே-இந்தியரோ, இந்தியரல்லாதவரோ-எப்படியானாலும். என் வெற்றி மருத்துவர் சமுதாயத்துக்கு நல்லது என்பதால் அவர்கள் கட்சி எல்லைகளைத் தாண்டி எனக்கு வோட்டுப் போடலாம்.

மூன்றாவது ஆதாரம் இந்திய சமுதாயம்.

இந்த மூன்றுமே முக்கியம், ஆனால் வெற்றி பெற இவர்கள் மட்டுமே போதாது என்று எனக்குத் தெரியும். அதனால் ஒரு வலுவான பிரசாரத்தைத் தொடங்கினேன். பிரச்சனைகளின் அடிப்படையில் ஆன பிரசாரம். வாராவாரம் வீட்டில் கூடி சரியாகத் திட்டமிட்டோம்.
கே: நீங்கள் எந்தப் பிரச்சனைகளை மக்கள்முன் வைத்தீர்கள்?
ப: இப்போதுள்ள நிலையில் கனெக்டிகட் மாநிலம் பொருளாதாரப் பொறுப்புணர்வோடு செயல்படவில்லை. அது மாற வேண்டும். அதைப்பற்றி நான் பேசும்போது "நாம் வீட்டிலும், தொழிலிலும் பொறுப்புணர்வோடு இருக்கிறோம். என்னிடம் 15 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு நான் பொறுப்பாளி. சென்ற 2, 3 வருடங்களில் நான் சற்றே பெல்ட்டை இறுக்கியிருக்கிறேன். ஏன், என்னால் செலவு செய்ய முடியாதென்பதால் அல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு இருந்தது போல இன்றைக்குப் பொருளாதார நிலை இல்லை. அதற்கேற்ப நாம் மாறியாக வேண்டும். மாகாண நிர்வாகம் ஏன் இதை உணரவில்லை?" என்று கேட்பேன். மக்கள் இதைப் புரிந்துகொண்டார்கள்.

என்னுடைய அஞ்சல்வழிப் பிரசாரத்திலும் சரி, நேரில் வீடு வீடாகப் போகும்போதும் சரி, இதை நான் ஒரு வேகத்தோடு சொல்லும்போது மக்கள் அதை நன்கு ஏற்றுக்கொண்டார்கள்.

இரண்டாவது பிரச்சனை கனெக்டிகட்டில் வேலை வாய்ப்புக் குறைவு. 30 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு நான் வந்தபோது, கனெக்டிகட் சரியான காரணங்களுக்காக உச்சத்தில் இருந்தது. ஒன்று, எல்லோரும் இங்கே வர விரும்பினார்கள். இரண்டாவதாக, இங்கே வரி கிடையாது. மூன்றாவதாக, இத்தனை அரசாணைகள் (mandates) கிடையாது.

இப்போதும் நாம் உச்சத்தில்தான் இருக்கிறோம், தவறான காரணங்களுக்காக. மக்கள் வேலை செய்ய விரும்பும் மாகாணங்கள் 50ல் நமது இடம் 47! இங்கேயிருக்கும் வேலை வாய்ப்புகள் வெளிநாடுகளுக்குப் போகவில்லை, டெக்சஸுக்கு, கரோலினாஸ்களுக்கு, ஜார்ஜியாவுக்குப் போகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இன்றுவரை ஒரு லட்சம் வேலைகளை கனெக்டிகட் இழந்துள்ளது. 30,000 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இது கண்முன்னே தெரிகிறது. மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்னால் போன தெரு வழியே இன்றைக்குப் போனால், பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டதைப் பார்க்க முடிகிறது. இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்.

அடுத்தாற்போல, பெருகிவரும் மேண்டேட்டுகள். இதைச் செய் அதைச் செய் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் வியாபாரம் செய்ய முடியாது. சட்டங்கள் முக்கியம், நாம் சட்டத்தை மதிப்பவர்கள். ஆனால், கையில் விலங்கை மாட்டிக்கொண்டு எதையும் செய்ய முடியாது.

அடுத்து வருவது, மின்சாரக் கட்டணம். ஹவாயிக்கு அடுத்தபடி அமெரிக்காவில் மிக அதிக மின்கட்டணம் விதிக்கப்படிருப்பது இங்கேதான். கனெக்டிகட் ஒரு உற்பத்தி நகரம். வீடுகளையும் என்னைப் போன்ற மருத்துவ மனைகளையும் விடுங்கள். நான் பேசுவது தொழிற்சாலைகளைப் பற்றி. Pratt and Whitney, UTC போன்ற எஞ்சின் கம்பெனிகளாகட்டும், அல்லது கடற்கரையோரத்தில் உள்ள கடல்பொருள் உற்பத்திச் சாலைகளாகட்டும், மின்கட்டணத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பிராட் அண்ட் விட்னி வேற்று மாநிலத்துக்குப் போகிறது, இங்குள்ளவர்கள் வேலை இழக்கிறார்கள்.

மருத்துவர் என்ற முறையில் எல்லோருக்கும் மருத்துவம் கிடைப்பதில் எனக்கு அக்கறை உண்டு. காப்பீடு என்பது காகித அளவில் இருக்கிறது. மெடிகேர், புதிய ஒபாமா-கேர், என்பவை போல இங்கு SustiNet சட்டமாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதைச் சட்டமாக்கிய பின்னால்தான் "ஓ மை காட்! நாம் எப்படி இதைச் சமாளிக்கப் போகிறோம்" என்று யோசிக்கிறார்கள். இந்தச் சட்டத்தால் நமக்கு எவ்வளவு செலவாகும் என்பதை முதலில் யோசிக்கவே இல்லை. இப்போது அதைக் கண்டறிய ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது. சட்ட வரைவில் என்ன எழுதியிருக்கிறது, அதற்கு ஆகப் போகும் செலவு என்ன என்பதெல்லாம் தெரியாமலேயே எப்படி அதில் கையெழுத்திட்டார்கள்?

கனெக்டிகட் மாகாணத்தில் போதிய செவிலியர்கள் இல்லை. போதிய மருத்துவர்கள் இல்லை. இன்றைக்கு இங்கிருக்கும் மருத்துவர்களில் நாற்பது சதவிகிதத்துக்கும் மேல் ஐம்பது வயதைத் தாண்டியவர்கள். எனவே சிகிச்சை செய்யும் நேர அளவைக் குறைத்துக் கொள்கிறார்கள். அந்த இடத்தை நிரப்பப் புதிதாக மருத்துவர்கள் வராவிட்டால் இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் என்ன ஆகும்?

இந்தப் பிரச்சனைகளை நான் கிளாட்ஸ்டன்பரி மக்களுக்கு எடுத்துக் கூறினேன்.

கே: சமூகத்தின் நாடியைச் சரியாகத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்கள். ஒரு சராசரி அரசியல்வாதி இவ்வளவு ஆழமாகப் பிரச்சனையை அலசியிருப்பாரா என்று சொல்ல முடியாது.
ப: ஒரு மருத்துவர் என்ற முறையில் பிரச்சனை என்ன என்பதைத் துல்லியமாகக் கண்டறிவதும் தெளிவுபடச் சொல்வதும் தானே என் வேலை. பலதுறைகளில் இருப்பவர்களும், CEOக்களும் CFOக்களும், என்ன நடக்கிறதென்றே புரியாத சாதாரணர்களும் என்னிடம் மருத்துவத்துக்கு வருகிறார்கள். சரியாக விளக்கிச் சொல்வது எனக்கு இயல்பாகவே இருக்கிறது.

ஒரு பிரச்சனையைப் படிப்பது வேறு. சரி, புரிந்துகொள்கிறார்கள். ஆனால், அதை ஒருவர் நேருக்கு நேர் விளக்கும்போது, மின்கட்டணம் ஆகட்டும் வேறொன்றாகட்டும், அதில் ஒரு பெரிய வித்தியாசம் ஏற்படுகிறது.

கே: உங்களுக்காக உழைத்த அணித் தொண்டர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.
ப: அடேயப்பா! பிரமாதமான டீம். உற்சாகம், தெம்பு, எவ்வளவு நேரம் என்று கடிகாரத்தைப் பார்க்காமல் உழைப்பவர்கள். அவர்கள் பார்க்க விரும்பாத ஒரே விஷயம் என் தோல்வியைத்தான் (சிரிக்கிறார்). "நாம் சேர்ந்து உழைப்போம், வாழ்நாள் முழுவதும் நண்பர்களா இருப்போம். ஆனா, நாங்க இங்க இருக்கறது எதுக்குன்னா, ஜெயிச்சுக் காட்ட!" அப்படீன்னு தெளிவா இருந்தாங்க.

கே: எப்படிப்பட்டவர்கள் உங்க டீமில் இருந்தார்கள்?
ப: இளைஞர்கள், நடுத்தர வயதினர், ஏன் 80 வயசுக்கு மேற்பட்டவர்கள் கூட. வெள்ளை அமெரிக்கர், ஆண், பெண் - எல்லா வகையினரும் இருந்தார்கள்.

கே: எப்படி மக்களைத் தொட்டீர்கள்?
ப: மூணு வழிகளில். முதலில் வீட்டுக்கு வீடு போய்க் கதவைத் தட்டிப் பிரசாரம். ரொம்ப சிரமம்தான். அலைந்ததில் நான் நிறைய எடை இழந்தேன். ஆனால் நிறைய நண்பர்களை, ஆதரவாளர்களைப் பெற்றேன். வீட்டிலே ஆள் இல்லேன்னா ஒரு துண்டுப் பிரசுரத்தை வைத்துவிட்டு வருவோம்.

ஆனால், நாங்கள் அவங்களைத் தேடிப் போனது அவங்களுக்குப் பிடித்திருந்தது. உடனே "என் வோட்டு உனக்குத்தான்" அப்படீன்னு யாரும் சொல்லிட மாட்டாங்க. ஆனால் தேர்தல் முடிவு அப்படி அவங்க சொல்ல நினைத்ததைக் காட்டுகிறது.

கே: அனு நடராஜன், காலம் சென்ற சூசி நாக்பால் ஆகியோருக்காக நானும் வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டியிருக்கிறேன். அதனால, அது எவ்வளவு சக்தி வாய்ந்ததுன்னு எனக்குத் தெரியும். அவங்களும் ஜெயிச்சுட்டாங்க.
ப: வீடு வீடாப் போறது மட்டுமில்லை. முக்கியமான தெருச்சந்திகளில் போய் நிற்பதும் உதவியது. இதை நானும் என் மனைவி கலாவும் தேர்தலுக்கு வெகுகாலம் முன்னரே தொடங்கிவிட்டோம். கூட்டுரோடில் நின்றுகொண்டு பதாகைகளைக் காண்பிப்போம். முதலில், யார் இவர்கள் என்று மக்கள் கேட்டார்கள். அவர்கள் அப்போது தேர்தலைப்பற்றி நினைக்கவில்லை, அதற்கு இன்னும் நாள் இருந்தது. இப்படி மூன்று தெருச்சந்திகளில் மாற்றி மாற்றிக் காலையிலும் மாலையிலும் நிற்போம். நாளாவட்டத்தில் நாங்கள் அங்கே இருக்கிறோமா என்று பார்க்கத் தொடங்கினார்கள். ஆதரவாக ஹார்ன் அடிப்பார்கள். கூர்ந்து கவனித்ததில் பெரும்பாலும் ஐந்து பேரில் நால்வர் எங்களுக்கு ஆதரவாக இருப்பது தெரிந்தது.

அஞ்சல்வழிப் பிரசாரமும் வலுவாக இருந்தது. நாங்கள் எதிரணி வேட்பாளரைப் பற்றிப் பேசவில்லை. சென்ற 4 ஆண்டுகளில் அவர் என்ன செய்தார், எப்படித் தனது கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தாரே தவிர, மாகாணத்தின் நன்மையைச் சிந்திக்கவில்லை என்ற ஆவணத்தை முன்வைத்தோம். மக்கள் வரிப்பணம் ஒரு டாலரில் 88 சென்ட்தான் வேலை செய்கிறது, மீதி 12 சென்ட் வாங்கிய கடனுக்கு வட்டியாகப் போய்விடுகிறது என்பதைக் காண்பித்தோம். இவற்றுக்காக நிறைய எக்ஸ்பெர்ட்களைக் கலந்து ஆலோசித்துச் செய்தோம்.

தேர்தலுக்கு அரசு கொடுத்த 30,000 டாலரை ஏற்பதில்லை என்று தீர்மானித்தோம். அந்தப் பணம் பொது நிதிக்குப் போய்விடும், யாரும் தேர்தலுக்குப் பயன்படுத்த முடியாது. வேறு நிதித் தேவையை அது சரிக்கட்டலாம். எங்கள் பொருளாதாரப் பொறுப்புணர்வைக் காட்டுவதற்காக அப்படிச் செய்தோம். தேவையான நிதியை நாங்களே திரட்டிக் கொண்டோம்.

கே: பிரசார ஆலோசகர்கள் இருந்தார்களா?
ப: ஓரிருவரைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் கேட்ட தொகை எனக்குத் தலை சுற்றியது. 'நன்றி, வேண்டாம்' என்று சொல்லிவிட்டேன். ஏதோ செனடர் பதவி என்றால் அவர்கள் தேவைதான். மாநில அளவில் தாங்காது என்று புரிந்தது. "ஏன் இவ்வளவு சீக்கிரமாக அஞ்சல்களை அனுப்பினீர்கள்?", "இப்போதே போய்த் தெருச்சந்தியில் ஏன் நிற்கிறீர்கள்?" என்று என்னைக் கூப்பிட்டு ஃபோனில் கேட்பார்கள். "இருக்கட்டுமே. என் வழி அதுதான்" என்று நான் பதில் சொல்வேன். இப்படி அசாதாரணமான (out of the box) வழிகளைக் கையாண்டதால்தான் அசாத்தியம் என்று நினைத்தது சாத்தியம் ஆயிற்று.

கே: அசாத்தியம் என்று யார் சொன்னது?
ப: எல்லோருமேதான். பேப்பரையெல்லாம் நீங்கள் படித்திருக்க வேண்டுமே. "புதிய வேட்பாளர் DoA" (மருத்துவ பரிபாஷையில் Dead on Arrival), "போகாத ஊருக்கு வழி கேட்கும் வேட்பாளர்", "வாய்ப்பே இல்லாத வேட்பாளர்" என்றெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு எழுதின. நான் அதைப் பொருட்படுத்தவே இல்லை.

எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு எது தெரியுமா? சிலநாளுக்கு முன்னால் ஒருவர் என்னிடம் வந்தார். "டாக்டர், உங்களைப்பத்திப் பேப்பர்ல வந்ததையெல்லாம் படிச்சேன். அவங்க செஞ்ச தப்பு என்ன தெரியுமா? அவங்களுக்கு உங்களைத் தெரியாது. உங்க உற்சாகம், கடின உழைப்பு என்னன்னு அவங்களுக்குத் தெரியாது" என்றார்.

கே: வெற்றிக்குப் பிறகு?
ப: நவம்பர் 2ம் தேதி முடிவு வந்தது. பார்ட்டியெல்லாம் ஆன பிறகு, நடு இரவு இருக்கும். நாளைக் காலையில் அதே தெருச்சந்திக்குப் போய் "தேங்க் யூ" அட்டையோட நிற்கலாம்னு முடிவு செய்தோம். புதன்கிழமை காலை அதே 6 மணிக்கு மூணு கூட்டுரோடுக்கும் போனோம். ஒரு பேப்பர் என்ன எழுதிச்சுன்னு தெரியுமா? "ஜெயிச்சோமா தோத்தோமான்னே இந்த ஆளுக்குத் தெரியலை" அப்படீன்னு.

மறுபடியும், மாறுபட்ட சிந்தனை. அப்படிச் செய்ததனாலே எல்லோரும் எங்களைப்பற்றிப் பேசினார்கள். ரேடியோ Talk Show-வில் பலர் கேட்டதாக எங்களுக்குச் சொன்னார்கள். "இந்த டாக்டர், அவர் பேருகூடச் சொல்லக் கஷ்டமா இருக்கும், இந்தியப் பின்னணி கொண்டவர் என்றெல்லாம் விவரித்து ரேடியோவில் மக்கள் கூப்பிட்டு நான் வெற்றிக்குப் பின்னரும் தெருச்சந்தியில் அட்டையோடு நின்றதைக் கூறியிருக்கிறார்கள். அதைக் கேட்கச் சந்தோஷமாக இருந்தது.

கே: "கடமையைச் செய், பலனை எதிர்பாராதே" என்ற கீதை வாசகம் எனக்கு நினைவுக்கு வருகிறது. செய்தே தீருவதென்ற உங்கள் வெறி உங்களுக்கு வெற்றியைத் தந்திருக்கிறது.
ப: உண்மைதான். ஆரம்பத்தில் என் மனைவி கலா, "நாமபாட்டுக்கு இருந்துட்டுப் போகலாமே. இந்தத் தேர்தல் எல்லாம் அவசியமா?" என்று கேட்டதுண்டு. ஆனால், அவரை என் பதில் திருப்திப்படுத்திய பின்னால் முழுக்க முழுக்க ஆதரவாகச் செயல்பட்டார். பிரசார நிர்வாகி ஒருமுறை அவரது குழுவினர் இறுதி ஐந்தாறு நாட்களில் 3500 ஃபோன் கால்கள் செய்ய வேண்டும் என்று கூறினார். "வேட்பாளரின் மனைவி பேசுகிறேன்" என்று சொல்வது எளிது என்பதால், பெரும்பாலான கால்களை அவரே செய்தார். அப்படிப் பேசியபோது பலபேர் "ஓ அவரா? அவரை நாங்கள் தெருச்சந்தியில் பார்த்தோமே. நாங்கள் அறிந்ததிலேயே மிகவும் கடின உழைப்பாளி. நிச்சயம் என் வோட் அவருக்குத்தான்" என்றெல்லாம் பதில் கிடைத்தது. அது மிகவும் உற்சாகமூட்டுவதாக இருந்தது.

கே: அடுத்து செய்யப்போவது என்ன?
ப: தேர்தல் வெற்றி என்பது முடிவல்ல, தொடக்கம். சொன்னதை எப்படிச் செய்வது என்பது முக்கியம். அதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது. ரிபப்ளிகன் கட்சித் தலைவர்களை நான் சந்தித்து விட்டேன். 37 பேர் இருந்த இடத்தில் தேர்தலுக்குப் பின்னால் 51 பேர் இருக்கிறோம். 1980க்குப் பிறகு மாகாணப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மருத்துவர் நான்தான். பொதுமக்கள் உடல்நலக் கமிட்டி என்பது போல எந்தக் கமிட்டியில் நான் இருப்பது என்பதற்கான என் கருத்தைக் கூறியிருக்கிறேன். 2011 ஜனவரி 5ஆம் தேதியன்று பதவியேற்போம்.

ஆக, என் கடின உழைப்பு இன்னும் முடியவில்லை. நான் ஏதோ ஒருநாள் அதிசயமல்ல. உள்ளூர் அரசியல்வாதி அப்படி என்னை நினைக்கலாம். நல்ல நண்பர் ஒருவர், இந்தியர் அல்ல, ஞாயிறன்று என்னைப் பார்க்க வந்தார். அவர் "நம்பிக்கை இழக்காதே. தடங்கல் வரலாம். பொதுவாழ்க்கையில் தொடர்ந்து நீடிக்க வேண்டும்" என்று கூறிவிட்டு, இரண்டாவது மூன்றாவது முறையும் தேர்தலில் நின்று நல்ல பொதுப்பணி செய்தவர்களின் பெரிய பட்டியல் ஒன்றைக் கூறினார். ஆத்மார்த்தமாக உழைக்கப் போகிறேன், அது நிச்சயம்.

கே: எங்களுக்கும் சந்தேகம் இல்லை. பொதுப் பணியில் ஒரு புதிய மைல்கல்லாக நீங்கள் இருப்பீர்கள். அதற்குத் தென்றல் தன்னால் ஆன ஆதரவைத் தரும். வாழ்த்துக்கள்.
ப: நன்றி.

ஆங்கிலத்தில்: சி.கே. வெங்கட்ராமன்
தமிழ் வடிவம்: மதுரபாரதி
More

நாசர்
அனு நடராஜன்
Share: 
© Copyright 2020 Tamilonline