Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | எங்கள் வீட்டில் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
தீபா ராமானுஜம்
ஓவியர் கோபுலு
- அரவிந்த் சுவாமிநாதன், ஓவியர் மணியம் செல்வன்|நவம்பர் 2010|
Share:
அரசியல் கார்ட்டூன், நகைச்சுவை, பத்திரிகை ஓவியம், விளம்பரம் எனப் பல துறைகளில் சாதனை படைத்த ஓவிய உலக ஜாம்பவான் கோபுலு. ஒரு காலத்தில் கல்கி, அமுதசுரபி, விகடன் என்று பல பத்திரிகைகளின் தீபாவளி மலர்களின் அட்டையையும் இவரது ஓவியங்கள் அலங்கரித்துள்ளன. கலைஞரின் 'குறளோவியம்', ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகள் ஆகியவற்றுக்கு இவர் வரைந்த ஓவியங்கள் வெகு சிறப்பானவை. பக்கவாதத்தால் வலது கை பாதிக்கப்பட்ட போதும், உழைத்துத் திறனைத் திரும்பப் பெற்ற மன உறுதி கொண்டவர். தேவன், மணியம், சில்பி ஆகிய பிரபலங்களின் நண்பர். தமிழக அரசின் கலைமாமணி விருது, காஞ்சிப் பெரியவர் வழங்கிய சித்ர ரத்னாகர விருது, முரசொலி அறக்கட்டளை விருது உட்படப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றவர். 86 வயதான கோபுலு அவர்களைத் தென்றலுக்காகச் சந்தித்த போது......

*****


கே: உங்களுக்கு ஓவியத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?

ப: என் அப்பா ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். நான் அவருக்கு ஆறாவது பையன். நான் பிறந்தது தஞ்சாவூர், வளர்ந்தது கும்பகோணம். 1929ல் என்னை தஞ்சாவூரில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். அங்கே ரத்தினவேலு என்ற ஒரு டிராயிங் மாஸ்டர் இருந்தார். அவர் நான் படம் வரைவதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தார். பின்னர் உயர்நிலைப் படிப்புக்காகக் கும்பகோணம் பள்ளியில் சேர்த்தார்கள். அங்கே குருசாமி ஐயர் என்ற ஓவிய ஆசிரியர் எனக்குள் இருந்த ஓவியத் திறமையைக் கண்டுபிடித்தார். பள்ளியில் படித்துக் கொண்டே ஓவியக் கல்லூரியிலும் சேர்ந்து படிக்க என் தந்தையிடம் சிபாரிசு செய்தார். படிப்பை முடித்ததும் முழுநேர ஓவியக் கல்லூரியில் சேர விரும்பினேன். வீட்டில் எதிர்ப்பு இருந்தது. அப்பாவுக்கு அது பிடிக்கவில்லை. ஏனென்றால் அந்தக் காலத்தில் சரியாகப் படிப்பு வராவிட்டால்தான் அதுபோன்ற பள்ளிகளில் சேர்ப்பார்கள். குருசாமி ஐயர் வந்துதான் அப்பாவைச் சமாதானப்படுத்தினார். எப்படியோ பிடிவாதம் பிடித்து ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன்.

கே: ஓவியக் கல்லூரி அனுபவம் எப்படி இருந்தது?

ப: ஓவியக் கல்லூரியில் படிக்க அந்தக் காலத்தில் மாதக் கட்டணம் நாலணாதான். குப்புசாமி ஐயர் என்பவர் முதல்வர். மிகவும் கெட்டிக்காரர், நல்லவர். ஐந்து வருடம் அங்கே கோட்டோவியம், தீட்டுதல், மாடலிங், என்கிரேவிங், எனாமலிங், சிற்பம், தறிவேலை, தச்சுவேலை என்று சகல துறைகளிலும் பயிற்சி பெற்றேன். எனக்குப் பள்ளியில் ஆசிரியராக இருந்த ரத்தினவேலு மேற்கொண்டு சில நுணுக்கங்களைப் பயில்வதற்காக, டிப்ளமா படிக்க அதே கல்லூரிக்கு வந்து சேர்ந்தார். அங்கே அவருக்கு நான் சீனியர்.

அப்போதெல்லாம் விகடனின் தீபாவளி மலரைப் படிக்க அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். மாலியின் ஓவியங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவர் மாதிரியே ஓவியம் போட ஆரம்பித்தேன். ஒருமுறை அவர் ஓவியக் கல்லூரிக்கு வந்தார். அவரைப் பார்த்து எனது ஆர்வத்தையும், அவரது ஓவியத்தின் மீது இருந்த ஈடுபாட்டையும், அவரிடம் பணியாற்ற வேண்டுமென்ற என் ஆசையையும் சொன்னேன். 'படிப்பை முடித்து விட்டு வா, பார்க்கலாம்' என்றார். 1941ல் அரசுத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றேன். பின்னர் சென்னைக்குச் சென்றேன்.

கே: சென்னை வாழ்க்கை எப்படி இருந்தது?

ப: எனது நண்பர் “கேட்டை” என்ற ஓவியர் சென்னையில் இருந்தார். புரசைவாக்கத்தில் உள்ள அவரது அறையில் தங்கினேன். அந்த வீடு ஆர்.கே. நாராயண் தங்கியிருந்த வீடு. வீட்டுக்குச் சொந்தக்காரர் பரணீதரனின் தந்தை டி.என். சேஷாசலம். சிறந்த தமிழறிஞர். தனது பணத்தையெல்லாம் தமிழுக்காகவே செலவழித்தவர். நிறையக் கதை, கட்டுரைகள் எழுதுவார். நாடகங்கள் போடுவார். ஆங்கில நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவார். பங்கஜா லாட்ஜ் என்ற ஒன்று அருகே இருந்தது, மாதம் 7 ரூபாய்க்கு இரண்டு வேளை சாப்பாடு, ஒரு வேளை டிபன் கிடைக்கும். சாப்பாடெல்லாம் ரொம்பச் சுவையாக இருக்கும். அங்கிருந்தபடி நான் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

கே: முதல் ஓவியம் எப்போது வெளியானது?

ப: ஒருநாள் விகடன் அலுவலகத்துக்குப் போய் மாலியைப் பார்த்தேன். ஓவியம் எதுவும் கொண்டு போகவில்லை. “ஏன் வெறுங்கையோடு வந்தாய்? படம் ஏதாவது போட்டுக்கொண்டு வந்திருந்தால் தானே பார்க்கலாம்” என்றார். கொஞ்சம் பயந்து கொண்டே இரவோடு இரவாகச் சில ஓவியங்களை வரைந்து எடுத்துக்கொண்டு மறுநாள் சென்றேன். “நல்லா இருக்கு. இன்னும் நிறையப் போடு. நான் வாய்ப்புத் தருகிறேன். சமயம் வரும்போது உன்னை விகடனில் சேர்த்துக் கொள்கிறேன்” என்றார். பின்னர் சில ஓவியங்களை வரைய வாய்ப்பளித்தார். அவை அந்த ஆண்டு தீபாவளி மலரில் வெளியாயின. ஜோக் போடுவியா என்று கேட்டார். நானும் கார்டூன்களை வரைந்து கொடுத்தேன். அது விகடன் அட்டைப்படத்தில் வெளியானது.

கே: அப்போது எப்படி ஃபீல் பண்ணினீர்கள்?

ப: முதல் குழந்தையைப் பார்க்கும் தாய் போன்ற பரவசம் எனக்கு இருந்தது. வீட்டில் ஏதும் கவலைப்படவில்லை. பட்டணத்தில் ஏதோ குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறான் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். அப்போது போர்க் காலம் வேறு. சென்னையிலிருந்து பலரும் வெளியேறி, சொந்த ஊர்களுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு சில மாதங்கள் சென்னையில் இருந்துவிட்டு, பின்னர் கும்பகோணத்திற்குப் போய்விட்டேன்.

கே: விகடனில் வேலைக்குச் சேர்ந்தது எப்போது?

ப: கும்பகோணத்தில் சில மாதம் இருந்தேன். பின்னர் பம்பாயில் ஒரு விளம்பரக் கம்பெனியில் படம் போடும் வேலை கிடைத்தது. அது ஒரு நல்ல அனுபவம். கிட்டத்தட்ட ஒரு வருடம் அங்கே வேலை பார்த்தேன். அப்போதுதான் மாலி விகடனில் சேர்ந்து கொள்ளுமாறு என்னை அழைத்தார். பம்பாயில் பார்த்த வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தேன். 1945, ஜனவரி முதல் தேதி விகடனில் வேலைக்குச் சேர்ந்தேன்.

கே: விகடன் அனுபவம் குறித்துச் சொல்லுங்களேன்!

ப: நான் வேலைக்குச் சேர்ந்தபோது தேவன் எக்ஸிகியூடிவ் எடிட்டராக இருந்தார். அமரர் கல்கி, விகடனிலிருந்து பிரிந்து தனியாகச் சென்று கல்கி பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார். தேவனும், மாலியும் என்னை நிறைய உற்சாகப்படுத்தினார்கள். அந்தக் காலத்தில் நிறையக் கதைகள் வரும். மக்களும் ஆர்வத்தோடு படிப்பார்கள். இப்போதெல்லாம் டி.வி. பார்க்கவே நேரம் சரியாக இருக்கிறது. பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு வைத்து விடுகிறார்கள். ஜோக், அரசியல் கார்ட்டூன், ஆன்மீகம், வரலாறு சம்பந்தமான ஓவியங்கள் என்று நிறைய அனுபவம் விகடனில் எனக்குக் கிடைத்தது. அப்போது சம்பளம் 100 ரூபாய். ஒரு துணுக்குக்கு ஐந்து ரூபாய். அதுவே அட்டையில் வந்தால் 10 ரூபாய் கிடைக்கும். வாரத்தில் பத்து துணுக்கு வந்தால் ஐம்பது ரூபாய். அது அப்போது குடும்பம் நடத்தப் போதுமானதாகவே இருந்தது.
கே: மாலி, சில்பி, மணியம் இவர்களுடன் பழகிய அனுபவம் குறித்து...

ப: சில்பியும் நானும் ஒரேநாளில் ஒன்றாக வேலைக்குச் சேர்ந்தோம். மாலி எங்களுக்கு வழிகாட்டி. நன்றாக ஊக்குவிப்பார். பாராட்டுவார். சில்பியை கோயில்களுக்குப் போய் அங்குள்ளவற்றை வரையச் சொல்வார். என்னையும் கூட அனுப்புவார். சில்பியும், நானும் மிக நெருங்கிய நண்பர்கள். அதுபோல மணியம் மிகச் சிறந்த உழைப்பாளி. எனது நண்பர். பெரும்பாலும் கல்கி அலுவலகத்திலேயே இருப்பார். கல்கிக்காவே தன்னை அர்ப்பண்ணித்துக் கொண்டவர் என்று அவரைச் சொல்லலாம்.

கே: தேவன் உங்கள் நெருங்கிய நண்பர் அல்லவா?

ப: ஆம். தேவன் மிகவும் கண்ணியமானவர். ரொம்ப சென்சிடிவ் ஆன மனிதர். பிறர் மனம் புண்படுமாறு பேசுவதோ, நடப்பதோ கூடாது என்று நினைப்பவர். எனக்கு மிக நெருங்கிய நண்பர். நானும் அவரும் சகோதரர்கள் போலப் பழகினோம். ரொம்ப ஆத்மார்த்தமானவர். அவர் எழுதியதைப் போன்று வேறு யாராலும் எழுத முடியாது. சென்சிடிவ் ஆகவும் இருக்கும். சென்ஸ் ஆஃப் ஹ்யூமரும் இருக்கும். அந்தக் காலத்தில் ஒரு கேஸுக்கு என்னை ஜூரராக நியமித்தார்கள். அந்த அனுபவம் அவரது ஜஸ்டிஸ் ஜகன்னாதன் நாவலுக்கு வரைய எனக்கு உதவியது. தேவனுடைய ஸ்ரீமான் சுதர்சனம், கோமதியின் காதலன், கல்யாணி, மிஸ்டர் வேதாந்தம், சி.ஐ.டி. சந்துரு, மிஸ் ஜானகி, மைதிலி, மாலதி, மிஸ்டர் ராஜாமணி, ராஜியின் பிள்ளை, ராஜத்தின் மனோரதம் என்று பல தொடர்களுக்கு நான் ஓவியம் வரைந்திருக்கிறேன். 'ஐந்து நாடுகளில் ஐம்பது நாட்கள்' தொடருக்கு ஓவியம் வரைந்திருக்கிறேன். அவர் இளம் வயதிலேயே இறந்தது ஒரு பெரிய துரதிர்ஷ்டம்.

கே: அமெரிக்காவைப் பார்க்காமலேயே வாஷிங்டனில் திருமணத்திற்கு ஓவியம் வரைந்தது எப்படி?

ப: வாஷிங்டனில் திருமணம் தொடர் வெளியான காலத்தில் நான் அமெரிக்கா போனதில்லை. ஆனால் பின்னால் போயிருக்கிறேன். எனது பேரன்கள் அங்கே வசிக்கிறார்கள். நான் அமெரிக்கா பற்றிப் படித்திருந்ததும், புகைப்படங்களைப் பாத்திருந்ததும் அதுபற்றிய எனது கற்பனையும் தான் என்னால் அதை வரைய முடிந்ததற்குக் காரணம்.

கே: ஓவியத்துறையில் அப்போதும் இப்போதும் என்ன மாற்றத்தைக் காண்கிறீர்கள்?

ப: போர்க் காலத்தில் பிரஷ் கிடைக்காதபோது அணில்வால் மயிர் எடுத்து பிரஷ் தயாரித்து அதில் வரைந்தோம். அஜந்தா, சித்தன்னவாசலில் வரைந்தவர்கள் எல்லாம் வெளிநாட்டுச் சாதனங்களைக் கொண்டா ஓவியங்களை வரைந்தார்கள்? ஆனால் இன்றைய நிலைமையே வேறு. அப்போதெல்லாம் கோட்டோவியம் தான் பெரும்பாலும். படம் வரைந்து, அதைக் கேமிராவில் எடுத்து, சில விஷயங்கள் செய்து அதைக் கட்டையில் அடித்தால் அதுதான் பிளாக். பின் அதைப் பத்திரிகைக்கு ஏற்ற வேண்டும். இப்போதெல்லாம் விரல் அசைவில் எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது. அந்தக் காலத்தில் ஒரு சின்ன தவறு நிகழ்ந்தாலும், அதை ஆரம்பத்த்திலிருந்து மீண்டும் செய்தாக வேண்டும். இப்போது அப்படியில்லை. எல்லாம் கம்ப்யூட்டர் மயம்.

கே: பெண்கள் ஏன் இத்துறையில் அதிகம் இல்லை?

ப: அப்படிச் சொல்ல முடியாது. மாடர்ன் ஆர்ட், பெயிண்டிங்கில் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். பத்திரிகை ஓவியத்தில் கூட லலிதா போன்றவர்கள் நன்கு வரைகிறார்கள். ஆனால் அதிகம் பேர் இல்லை. காரணம் பணிச் சூழல். ஆண்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள துறை என்பதால் இருக்கலாம்.

கே: உங்களைக் கவர்ந்த ஓவியர்கள் யார் யார்?

ப: புதிது புதிதாக நிறையப் பேர் வருகிறார்கள். இன்னும் வருவார்கள். கால மாற்றத்திற்கேற்ப எல்லோரும் நன்றாகவே செய்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஜ.ரா.சு., தனது அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை மூலம் ஜெயராஜை கௌரவித்தார். நானும் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினேன். இப்போது எல்லோருக்குமே படம் போடும் வாய்ப்பு குறைந்து விட்டது. ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு காம்பினேஷன் கிடைக்கிறது. சுஜாதாவுக்கு ஜெயராஜ் மாதிரி. அதுபோல மணியம் செல்வன் தன் தந்தையைப் போன்றே சிறந்த ஓவியர். கிராஃபிக்ஸ் வேலைகள் சிறப்பாகச் செய்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது. உயர்வு, தாழ்வு என்று இதில் எதுவும் கிடையாது.

கே: காஞ்சிப் பெரியவர், ஹரிதாஸ் கிரி போன்றோருடன் பழகிய அனுபவங்கள் குறித்து...

ப: காஞ்சிப் பெரியவர் ஒருமுறை என்னை அழைத்தார். ராமேஸ்வரத்தில் ஒரு மண்டபம் கட்டுகிறோம். குருபீடத்தில் இருந்தவர்களின் சிலைகளை அங்கே வைக்க இருக்கிறோம். நீங்கள் அதற்கு அடிப்படை ஓவியம் வரைந்து தாருங்கள் என்று கேட்டார். நானும் வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்துவிட்டு அவர் மிகவும் பாராட்டினார். ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக் கரைக்கு அருகே அந்த மண்டபம் இருக்கிறது. அதுபோல தென்னாங்கூரில் ஆலயம் அமைக்கும் போது, ஹரிதாஸ் கிரி சுவாமிகள் பக்த விஜயத்தில் இருக்கும் அத்தனை ஹரி பக்தர்கள் உருவத்தையும் ஓவியம் வரைந்து கொடுங்கள் என்று கேட்டார். வரைந்து கொடுத்தேன். அவருக்கும் திருப்தி.

கே: விளம்பரத்துறைப் பணிக்குச் சென்றது ஏன், அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்!

ப: பல வருடங்கள் விகடனில் பணியாற்றிய பின் இப்படிச் செய்தால் என்ன என்று தோன்றியது. அப்போது பத்திரிகை வாய்ப்புகள் மிகவும் குறைவு. விகடனில் இருந்து விலகினால் கல்கிக்குப் போவார்கள். கல்கியிலிருந்து விகடனுக்கு இல்லாவிட்டால் வேறாங்காவது. செடிகள் எல்லாம் ஒரே தொட்டியில் இருந்தால் வளராது. அதை எடுத்து வேறொரு தொட்டியில் வளர்த்தால் நன்கு வளரும். அது மாதிரிதான் வாழ்க்கையும். மும்பையில் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருந்ததால் அந்தத் துறையில் ஈடுபடலாம் என்று தோன்றியது. நானும் எனது நண்பருமாக 'அட்வேவ்' நிறுவனத்தை ஆரம்பித்தோம்.

நிறைய விளம்பரப் பணிகளைச் செய்தோம். அதில் டயர் விளம்பரத்திற்காக, தொடர்ந்து இரண்டு வருடம் ஜோக்ஸ் போட்டது குறிப்பிடத்தக்கது. 1972ல் ஆரம்பித்து 1994 வரை விளம்பர நிறுவனத்தில் பணியாற்றினேன். வயதாகி விட்டதாலும், ஸ்ட்ரோக் வந்து கைக்கு பாதிப்பு ஏற்பட்டதாலும், உடனிருந்த நண்பர் திடீரென இறந்து போனதாலும் அதிலிருந்து முழுவதுமாக விலகி ஓய்வில் இருக்கிறேன்.

கே: ஸ்ட்ரோக்கிலிருந்து மீண்டது எப்படி?

ப: திடீரென்று ஒருநாள் இரவு எனக்கு ஸ்ட்ரோக் வந்து வலது கை முழுவதுமாகச் செயல்படாமல் போய்விட்டது. அப்புறம் மருத்துவமனையில் சேர்த்தார்கள். டாக்டர் செரியன் தான் மருத்துவம் பார்த்தார். உங்கள் வலது கைதான் பாதிப்படைந்திருக்கிறது. ஆனால் உங்கள் மூளை எப்போதும்போல் விழிப்புடன்தான் இருக்கிறது. அதனால் நீங்கள் இடது கையால்கூட ஓவியம் வரையலாம்; உங்களால் முடியும் என்று சொல்லி ஊக்குவித்தார். நானும் அதன்படி மெல்ல மெல்லப் பழகி இடது கையாலேயே வரைய ஆரம்பித்தேன். தினமும் ஐந்து படம் போட்டேன். பின்னர் மெல்ல மெல்ல வலது கை சரியானது.

கே: உங்கள் வாரிசுகள் யாரும் இந்தத் துறையில் உள்ளார்களா?

ப: இல்லை. எனக்கு ஒரே மகன். அவர் கோடக்கில் 25 வருடம் இருந்தார் . தற்போது டெல்லியில் மோசர் பேயரில் பிரசிடெண்டாக இருக்கிறார். அவருக்கு 57 வயது. பேரன்களில் ஒருவர் கொலம்பியா பல்கலையில் படித்து தற்போது நியூயார்க்கில் இருக்கிறார். இரண்டாவது பேரன் சியாட்டலில் மைக்ரோசாஃப்டில் பணிபுரிகிறார். வாரிசுகள் யாரும் ஓவியத் துறைக்கு வரவில்லை.

கே: தற்போதைய உங்கள் வாழ்க்கை பற்றி...

ப: கல்கி ஆசிரியரிடம் முன்பு ஒருமுறை சொன்னேன், கடந்த 65 வருடங்களாக டெண்டுல்கர் மாதிரி தொடர்ந்து விளையாடி அவுட் ஆகாமல் இருக்கிறேன். அதனால் நானே ரிடயர்மெண்ட் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என்று. என் wrist சரியாக வேலை செய்யவில்லை. கைக்குக் கொஞ்சம் rest வேண்டும். அதனால் mind-ஐ arrest செய்து வைத்திருக்கிறேன். தற்போது முழு ஓய்வில் இருக்கிறேன். ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் படிக்கிறேன். நிறைய எழுதுகிறேன் பாம்பே ஜெயஸ்ரீ, மதுரை மணி ஐயர், மகாராஜபுரம் சந்தானம் என்று இசையை ரசிக்கிறேன். மாலை நேரத்தில் மனைவியுடன் கடற்கரைக்குச் சென்று ரிலாக்ஸ் செய்து விட்டு வருகிறேன்.

கே: உங்கள் 85 வருட வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது என்ன நினைக்கிறீர்கள்?

ப: கடவுள் நமக்கு நல்ல பிறவியைக் கொடுத்திருக்கிறார். வீணையைப் போல அதை நல்லபடியாக மீட்டினால் நல்ல சங்கீதம் வரும். இல்லாவிட்டால் வெறும் சப்தம்தான் வரும். எல்லோருக்கும் பயன் தரும். முக்கியமாக, யாரையும் நோகடிக்கக் கூடாது. நாமும் நன்றாக இருக்க வேண்டும். பிறருக்கும் அது பயன் தருவதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் வாழ்க்கை.

வியக்கத்தக்க பல சாதனைகள் செய்திருந்த போதிலும் கூட, அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக, கனிவாக நம்மோடு உரையாடிய கோபுலு அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
சந்திப்பில் உதவி: ஓவியர் மணியம் செல்வன்

தஞ்சை அரண்மனையில்...

தஞ்சாவூரில் எங்கள் வீட்டுக்கு அருகேதான் அரண்மனை இருந்தது. அங்கே அரச பரம்பரையினர் வசித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் எனக்கு நண்பராக இருந்தார். அவர்மூலம் அரண்மனையின் உள்ளே இருக்கும் கூடகோபுரத்தைச் சென்று பார்த்திருக்கிறேன். அதுபோல அரண்மனையில் அற்புதமான, பிரமாண்டமான பல பெயிண்டிங்குகள் இருந்தன. ராமர் பட்டாபிஷேக ஓவியம் மிக அற்புதமான ஒன்று. அரண்மனையில் இருட்டு மகால் என்ற ஒன்று இருக்கும். அங்கேயும் நிறைய பெயிண்டிங்குகள் இருக்கும். அதையும் சென்று வேடிக்கை பார்ப்போம். அவை எல்லாம் கூட ஒருவிதத்த்தில் எனக்கு ஓவியம் வரைவதற்கான இன்ஸ்பிரேஷனாக இருந்தது என்று சொல்லலாம்.

கோபுலு

*****


புதுமை விரும்பி சாவி

என் நண்பர்களில் சாவி குறிப்பிடத்தகுந்தவர். மறக்க முடியாதவர். இறுதிவரை எனக்கு நண்பராக இருந்தார். அவர் ஒரு புதுமை விரும்பி. மற்றப் பத்திரிகைகள் செய்யாததைத் தான் செய்ய விரும்புவார். எப்போதும் பார்த்தாலும் பத்திரிகை பற்றியே யோசிப்பார். நல்ல உழைப்பாளி. பண்பானவர். நானும் சாவியும் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறோம். அவர் எழுத்துக் கண்ணோடு ஒன்றைப் பார்ப்பார். நான் ஓவியக் கண்ணோடு பார்ப்பேன். அப்படி உருவானதுதான் “இங்கே போயிருக்கிறீர்களா?” தொடர். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. அவர் நடத்திய பத்திரிகைகளுக்கு விளம்பர வேலையும் செய்திருக்கிறேன். அதுபோல மணியனுக்கும் நிறைய வரைந்திருக்கிறேன். அவர் இதயம் பேசுகிறது ஆரம்பித்தபோது அதற்கு நிறைய விளம்பரங்கள் வாங்கிக் தந்து உதவியிருக்கிறேன்.

கோபுலு

*****


கலைஞர், மாறன், நான்

கலைஞருக்கு என் ஓவியங்கள் மிகவும் பிடிக்கும். அவர் கேட்டுக் கொண்டபடி பொன்னர்-சங்கர் தொடருக்கு ஓவியம் வரைந்தேன். அதுபோல, முரசொலி மாறன் என்மீது மிகுந்த அன்பு கொண்டவர். என் கைராசி மீது அவருக்கு அளவற்ற நம்பிக்கை. 'குங்குமம்' இதழ் ஆரம்பித்தபோது நான்தான் அதைக் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைக்க வேண்டுமென்றார். அதுபோல சன் டி.வி. லோகோவும் அவர் வேண்டுகோளின்படி நான் உருவாக்கிக் கொடுத்ததுதான். மாறன் மிகவும் நல்ல மனிதர். நல்ல நண்பர். அவரும் கலைஞரும் இணைந்து முரசொலி அறக்கட்டளை விருதை எனக்கு வழங்கி கௌரவித்தனர். அவர்களுடைய நட்பெல்லாம் கிடைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.

கோபுலு
More

தீபா ராமானுஜம்
Share: 
© Copyright 2020 Tamilonline