Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | எங்கள் வீட்டில் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
Tamil Unicode / English Search
முன்னோடி
டாக்டர் வ.சுப. மாணிக்கனார்
- பா.சு. ரமணன்|நவம்பர் 2010|
Share:
செந்தமிழ்க் கல்லூரியாலும், சன்மார்க்க சபையாலும் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாராலும் பெருமை பெற்ற ஊர் மேலைச்சிவபுரி. வ.சுப்பிரமணியன் செட்டியார் - தெய்வானை ஆச்சிக்கு, ஏப்ரல் 17, 1917 அன்று மகவாகத் தோன்றினார் வ.சுப. மாணிக்கம். அருணாசலேஸ்வரர் மீது கொண்ட பற்றாலும், தாய்வழிப் பாட்டனாரின் பெயர் என்பதாலும் பெற்றோர்கள் அவருக்கு அண்ணாமலை என்று பெயர் சூட்டினர். பெற்றோர் இருவரும் அவரது இளமைப் பருவத்திலேயே தவறிவிடவே, தாய்வழிப் பாட்டி மீனாட்சியும், தாத்தா அண்ணாமலையும் மாணிக்கனாரை வளர்த்தனர்.

மாணிக்கனாரின் தொடக்கக் கல்வி திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தான். சன்மார்க்க சபையோடு தொடர்பு கொண்ட சைவ அறிஞர் நடேச ஐயர் இவர்மீது தனி அக்கறை கொண்டு பயிற்றுவித்தார். மாணிக்கனாரின் தமிழார்வம் சுடர் விட்டது. குடும்பச் சூழ்நிலை காரணமாக, பிற தனிகவணிகர் போலவே மாணிக்கனாரும் பர்மாவுக்குச் செல்ல நேர்ந்தது. ரங்கூனில் உறவினர் ஒருவர் கடையில் வணிகம் பயின்றார். ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். ஒருமுறை முதலாளி மாணிக்கனாரிடம், வாடிக்கையாளர் கேட்டால் ’தாம் இல்லை’ என்று பொய் கூறுமாறு வற்புறுத்தவே, மாணிக்கனார் பொய்கூற விரும்பாததால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். 1935ஆம் ஆண்டு, பதினெட்டாம் வயதில் தமிழகம் திரும்பினார்.

மேலைச்சிவபுரியில் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரையும், அ.நா. பழனியப்பச் செட்டியாரையும் சந்தித்தார். அது பெரும் திருப்புமுனை ஆனது. பண்டிதமணியின் துணையால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்வான் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ஆசிரியர்களாக விளங்கிய தமிழறிஞர்களான பண்டிதமணியார், நா.மு. வேங்கடசாமி நாட்டார், அ. சிதம்பரநாதன் செட்டியார், ரா. ராகவ அய்யங்கார், ரா. கந்தசாமி, மு. அருணாசலம் போன்றோரால் மாணிக்கனாரின் தமிழார்வம் அதிகரித்தது. முதன்மையான மாணவராகத் தேர்ச்சி பெற்றதாலும், சிறந்த ஆய்வு மாணவராகப் பணியாற்றியதாலும் தாம் பயின்ற பல்கலைக் கழகத்திலேயே அவருக்கு விரிவுரையாளர் பணி கிடைத்தது. அதே காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். பட்டம் பெற்றார். 1945ல் நெற்குப்பையைச் சேர்ந்த ஏகம்மை ஆச்சியுடன் திருமணம் நடந்தது.

1948ல் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் பணியாற்ற மாணிக்கனாருக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்று அங்கு தமிழ்ப் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். அங்கே தமிழ் ஆராய்ச்சித் துறையைத் தோற்றுவித்தார். தமிழ்ச் சங்கத்தை நிறுவி, பல அறிஞர்களை வரவழைத்து உரையாற்றச் செய்தார். பல கருத்தரங்குகளிலும், சொற்பொழிவுகளிலும் கலந்துகொண்டார். போட்டிகள் நடத்தி மாணவர்களையும், சிறார்களையும் இலக்கியத்தில் ஈடுபாடு கொள்ள வைத்தார். இவற்றோடு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் எம்.ஓ.எல்., ஏம்.ஏ. ஆகிய பட்டங்களையும் பெற்றார். பின்னர் தமிழில் அகத்திணைக் கொள்கைகள் என்ற தலைப்பில் முதுநிலை ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றார். அழகப்பா கல்லூரியின் முதல்வராக உயர்ந்த மாணிக்கனார் பல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மாணிக்கனாரை மீண்டும் பணியாற்ற அழைக்கவே, அதன் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். அதே பல்கலையின் இந்தியமொழிகள் துறை முதன்மையர் பொறுப்பையும் வகித்தார்.

மாணவர்களின் மனதை அறிந்து அதற்கேற்றவாறு பாடம் நடத்தும் பாங்கு, எளிமை, தூய்மை, நேர்மை போன்றவற்றை மாணவர்ளும் சக ஆசிரியர்களும் பெரிதும் மதித்தனர். சங்க இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சி, பல உரை நூல்களைக் கற்ற தெளிவு, ஆழ்ந்த புலமை, ஆராய்ச்சி அறிவு ஆகியவற்றால் அவரது வகுப்பு, மாணவர்களால் புறக்கணிக்க முடியாததாக இருந்தது. கம்பன், வள்ளுவன் பற்றியும் சிற்றிலக்கியங்கள் பற்றியும் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள், பல மாணவர்களுக்கு அவற்றை விரிவாக ஆய்வதற்கான ஆவலைத் தூண்டியது. கம்ப ராமாயணச் செம்பதிப்புப் பணியை சிறப்பாக நிறைவு செய்தார். பல்கலைக்கழகத்தின் புகழை நாடறியச் செய்தார்.

வ.சுப. மாணிக்கனார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு உயர்ந்தார். அப்பொறுப்பேற்று பல்வேறு சாதனைகளைச் செய்தார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டின் போது பல்கலைக்கழகத்தின் சார்பில் பல அரிய கண்காட்சிகளை அமைத்ததும், பல நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்ததும் ஆகும். பல்வேறு துறைகளை உருவாக்கினார். பல்கலைக்கழக நடைமுறைகள் அனைத்தும் தமிழிலேயே இருக்கவேண்டும் என ஆணை பிறப்பித்தது, சிறந்த தமிழ் அறிஞர்களைச் சிறப்புநிலைப் பேராசிரியராக அமர்த்தி தமிழ் ஆய்வுக்கு வழி செய்தது போன்றவை குறிப்பிடத்தக்கன. பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமையைச் சீர்செய்து, இரண்டு கோடிக்கு மேல் சேமித்துக்காட்டியது பாராட்டப்பெற்றது. “ஆட்சித்திறன் என்பது, தாம் சார்ந்த நிறுவனத்தை ஓர் அங்குலமேனும் உயர்த்துவது. வ.சுப.மா. துணைவேந்தராகப் பொறுப்பேற்றிருந்த காலம் கோபுரத்திற்குக் கலசம் வைத்தது போன்ற சிறப்புடைய காலமாகும்" என்கிறார் டாக்டர் தமிழண்ணல்.

65ஆம் வயதில் துணைவேந்தர் பொறுப்பிலிருந்து விடுபட்ட மாணிக்கனார், தமிழ் ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார். திருவனந்தபுரம் திராவிட மொழியியற் கழகத்தில் 'தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் ஓர் ஆய்வை மேற்கொண்டார். யாப்பின் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பின்னர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வல்லுநர் குழுவின் தலைவராக இருந்து அதன் செயல்முறைகளை வகுத்துக் கொடுத்தார். தொல்காப்பியம் குறித்து அவர் மேற்கொண்ட விரிவான ஆய்வு நூல் ’தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை’ என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப் பெற்றது. பல இதழ்களுக்குக் கட்டுரைகளும், ஆய்வு நூல்களும் தொடர்ந்து எழுதலானார். சிலம்பையும், மணிமேகலையையும் ஒப்புநோக்கி ஆராய்ந்த இவரது ‘இரட்டைக் காப்பியங்கள்’ நூல் தனிச் சிறப்பு வாய்ந்தது. இவர் எழுதிய தமிழ்க்காதல், நெல்லிக்கனி ஆகியவை சொற்சிறப்பும், பொருட் சிறப்பும் வாய்ந்தவை. குறிப்பாக வள்ளுவமும், தமிழ்க்காதலும் மிகச் சிறப்பானவையாகும்.
வள்ளுவத்தின் மீது பேரன்பு கொண்டு அதன் வழி நடந்த அவர், அதன் சிறப்பை விளக்கும் வகையில் வள்ளுவம், திருக்குறட் சுடர், உரைநடைத் திருக்குறள் போன்ற நூல்களையும், மாணிக்கக்குறள் என்ற கவிதை நூலையும் எழுதியிருக்கிறார். பல காப்பியங்களை, சங்க இலக்கியங்களை ஆய்வு செய்து காப்பியப் பார்வை, ஒப்பியல்நோக்கு, இலக்கியச்சாறு, சங்க நெறி, தொல்காப்பியக் கடல் போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய 'கம்பர்' என்னும் ஆய்வு நூல் தமிழக அரசின் சிறப்புப் பரிசு பெற்றது. அது தவிர ஆங்கிலத்திலும் Tamilology, A Study of Tamil Verbs, The Tamil Concept of Love போன்ற பல ஆய்வு நூல்களை எழுதியிருக்கிறார். மனைவியின் உரிமை, நெல்லிக்கனி, உப்பங்கழி, ஒரு நொடியில் போன்ற நாடக நூல்களையும் மாணிக்கனார் தந்திருக்கிறார்.

"தனித் தமிழ் இயக்கத்துக்கு வித்திட்டவர் மறைமலை அடிகள்; அதை வளர்த்தவர் தேவநேயப் பாவாணர்; அது மென்மேலும் வளர்ந்து தழைத்தோங்கச் செய்தவர் டாக்டர் வ.சுப. மாணிக்கனார்" என்பது அக்காலத் தமிழறிஞர்களின் கூற்று. தமிழின் வளர்ச்சி பற்றியே சிந்தித்து தமிழின் சிறப்புக்களைப் பற்றியே ஆய்வுகள் மேற்கொண்ட மாணிக்கனார், தம்மிலும் மூத்த அறிஞர், சான்றோர் பெருமக்கள் மீது பேரன்பும், பெருமதிப்பும் கொண்டவர். மதுரை காமராஜர் பல்கலையில் தாம் துணைவேந்தராகப் பணிபுரிந்தபோது ’பண்டிதமணி அரங்கு’ என்பதனை அங்கே நிறுவி, தன் ஆசானின் பெருமையை பலர் அறியச் செய்தார். தம்மீதுமிகவும் அன்பு பாராட்டிய வள்ளல் அழகப்பரின் பெருமையை ’கொடைவிளக்கு’ என்னும் கவிதை நூலில் படிப்போர் உள்ளம் உருகும் வண்ணம் பதிவு செய்திருக்கிறார். தமிழகப் புலவர் குழுவிற்கும், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்திற்கும், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை கணேசர் செந்தமிழ்க் கல்லூரிக் குழுவுக்கும் தலைவராக இருந்து இவர் ஆற்றிய பணிகள் பல.

"பயனில சொல்லாப் பாவலன் என்றும், நயனுள மொழியும் நாவலன்" என்றும், "தீவினை, செய்யாச் செம்மல் செந்தமிழ்ப் பெம்மான், பொய்யா மாணிக்கப் புலவன்" என்றும் கவிஞர் முடியரசன் வ.சுப.மாணிக்கனாரைப் போற்றியிருக்கிறார். தமிழ்வழிக் கல்விக்காகக் குரல் கொடுத்த மாணிக்கனார் தேவார, திருவாசகப் பாடல்கள் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். அவை சிதம்பரத்தில் அம்பலம் ஏற மிகவும் உறுதுணையாக இருந்தார். இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை ’செம்மல்’ என்னும் பட்டத்தையும், குன்றக்குடி ஆதீனம் ‘முதுபெரும்புலவர்’ என்னும் பட்டத்தையும் வழங்கினர். 1979ல் தனது பொன்விழாவைக் கொண்டாடிய அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மாணிக்கனாருக்கு ’மூதறிஞர்’ என்னும் பட்டத்தை வழங்கி சிறப்புச் செய்தது. காந்திய நெறியைப் பின்பற்றி வாழ்ந்ததால் ’தமிழ்க் காந்தி’ என்றும், ‘தமிழ் இமயம்’ என்றும் இவர் போற்றப்பட்டார்.

தமிழுக்குத் தொல்காப்பியமும், வாழ்வின் உயர்வுக்குத் திருக்குறளும், உயிர்த் தூய்மைக்குத் திருவாசகமும் எனக்கு வழி காட்டிய தமிழ் மறைகள் என்று கூறும் மாணிக்கனார், பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப்பற்றிய திருத்தமான சிந்தனைகள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல் போன்றவற்றையே தாம் கண்ட முன்னேற்ற நெறிகளாகக் குறித்திருக்கிறார்.

எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாது, தன்னை புகைப்படம் எடுத்தலைக் கூட விரும்பாது வாழ்ந்த மாணிக்கனார், சைவத்தையும் தமிழையும் தனது இரு கண்களாகக் கருதியவர். புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்த அவர், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஏப்ரல் 25, 1989 அன்று காலமானார். அப்போது அவர் கையில் இருந்த நூல் திருவாசகம்.

அவரது மறைவிற்குப் பின் தமிழக அரசு அவருக்குத் திருவள்ளுவர் விருது வழங்கிச் சிறப்பித்ததுடன், அவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது. அவரது மகன்கள் தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி ஆகியோரும் தந்தையைப் போன்று தமிழார்வலர்களாகளே. தென்றல், மாதரி, பொற்றொடி ஆகிய மூன்று பெண்மக்களும் மாணிக்கனாருக்கு உண்டு. தந்தையின் நினைவாக மாணிக்கனார் அறக்கட்டளையை நிறுவி அவரது வாரிசுகள் தமிழ்ப்பணி, சமுதாயப் பணி ஆற்றிவருகின்றனர்.

இலக்கணம், இலக்கியம், சமயம், உரைநடை எனத் தமிழின் அனைத்துத் துறைகளிலும் சீரிய பங்காற்றியிருக்கும் டாக்டர் வ.சுப. மாணிக்கனார், தமிழார்வலர்கள் எண்ணி எண்ணிப் போற்றத் தகுந்த, பெருமைக்குரிய முன்னோடிகளுள் ஒருவர்.

(நன்றி: டாக்டர் வ.சுப. மாணிக்கம்; முனைவர் இரா. மோகன், சாகித்திய அகாதெமி வெளியீடு)

பா.சு. ரமணன்
Share: 
© Copyright 2020 Tamilonline